நீலகிரி மாவட்டம், ஊட்டி நகருக்கு மிக அருகில் இருக்கிறது ஹெல்க்ஹில் வனப்பகுதி. இந்த வனத்தையொட்டியே குடியிருப்புகளும் உள்ளன. மேலும், சிறப்பு வாய்ந்த ஹெல்க்ஹில் முருகன் கோயிலும் இந்தப் பகுதியில் அமைந்திருக்கிறது. நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

வனத்தையொட்டிய பகுதி என்பதால் கரடி, சிறுத்தை, காட்டுமாடு போன்ற வன விலங்குகள் எல்லையோர பகுதிகளில் அவ்வப்போது உலவி வருகின்றன. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக சிறுத்தை ஒன்று கோயிலுக்கு அருகில் உள்ள பாறையின் மீது மாலை வேளையில் வந்து அமர்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து தெரிவித்த நீலகிரி கோட்ட வனத்துறையினர், ``ஹெல்க்ஹில் வனத்தில் தற்போது வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில சமயங்களில் வனவிலங்குகள் எல்லைப் பகுதிக்கு வருகின்றன.

குறிப்பிட்ட இந்த சிறுத்தையால் தற்போது வரை மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வனத்துக்குள் அத்துமீறி நுழைய வேண்டாம். சிறுத்தையை பார்க்கச் செல்லவோ, புகைப்படங்கள் எடுக்க முயற்சி செய்யவோ வேண்டாம். பாதுகாப்புடன் கோயிலுக்கு வந்து செல்லவும்" என்றனர்.