மகாராஷ்டிரா, கர்நாடகா இடையிலான எல்லை பிரச்னை கடந்த 50 ஆண்டுகளாக ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் சூடுபிடித்துள்ளது. கர்நாடகாவில் இருக்கும் பெலகாவி எனப்படும் பெல்காமை மகாராஷ்டிராவோடு இணைக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா கோரி வருகிறது. சமீபத்தில் இரு மாநிலங்களும் இப்பிரச்னையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளன. அமித் ஷா இரு மாநில முதல்வர்களையும் சந்தித்து பேசினார்.
அதோடு கர்நாடகாவின் பெல்காமில் இரு மாநில வாகனங்களும் தாக்கப்பட்டன. மேலும் திங்கள் கிழமை மராத்திய அமைப்புகள் பெல்காமில் போராட்டத்தில் ஈடுபட்டன. அவற்றின் மீது போலீஸார் தடியடி நடத்தினர். மகாராஷ்டிரா எம்.பி.சைரியசீல் பெல்காமிற்குள் நுழைய முயன்றார். அவரும் தடுத்து நிறுத்தப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தவ் தாக்கரேயின் சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத், ``இந்தியாவிற்குள் சீனா நுழைந்தது போல் கர்நாடகாவிற்குள் நாங்கள் நுழைவோம்" என்று தெரிவித்துள்ளார். மேலும், ``இப்பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகிறோம். ஆனால் கர்நாடகா முதல்வர் தீயை பற்றவைப்பது போல் நடந்து கொள்கிறார்.

எனவே நாங்கள் இந்தியாவிற்குள் சீனா நுழைந்தது போல் கர்நாடகாவிற்குள் நுழைவோம். இதற்கு யாரது அனுமதியும் எங்களுக்கு தேவையில்லை. மகாராஷ்டிராவில் பலவீனமான அரசு இருக்கிறது. எனவே இந்த அரசால் எந்த வித முடிவையும் எடுக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார். சஞ்சய் ராவத்தின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே இரு மாநில எல்லைப்பிரச்னை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதோடு, மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரிலும் இப்பிரச்னை எதிரொலித்தது. எதிர்க்கட்சித் தலைவர் அஜித் பவார் இப்பிரச்னையை எழுப்பி, அமைச்சர் அமித் ஷா தலையிட்ட பிறகு ஏன் கர்நாடகவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார்.