சினிமா
தொடர்கள்
Published:Updated:

கடந்து போக கற்போம்!

சித்தார்த்தா
பிரீமியம் ஸ்டோரி
News
சித்தார்த்தா

காற்றுக்கு வாழைமரங்கள் சாய்வதில் வியப்பில்லை; ஆனால், ஆலமரமே சாய்ந்தால் எப்படி?

காபிடே அதிபர் வி.ஜி.சித்தார்த்தாவின் இழப்பை இப்படித்தான் அதிர்ச்சியோடு பார்க்கிறது தொழில்முனைவோர் சமூகம். கடந்த வாரம், நேத்ராவதியின் கரையில் கண்டெடுக்கப்பட்ட சித்தார்த்தாவின் உடலும், இறுதியாகக் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அவர் விட்டுச்சென்ற கடிதமும் பல்வேறு விவாதங்களைத் தொடங்கியிருக்கின்றன. இந்த தேசத்தில் தொழில்முனைவோர்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா? இவ்வளவு பெரிய அரசியல் பின்புலமும் அனுபவமும் இருந்தும்கூட சித்தார்த்தாவை அந்தப் பாலத்திலிருந்து தள்ளியது எது?

கடந்து போக கற்போம்!

தன்னுடைய முடிவுகளுக்குக் காரணமாக, கடிதத்தில் பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டிருக்கிறார் சித்தார்த்தா. அவற்றில் மிக முக்கியமானவை மூன்று. முதலாவது, பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் தங்களுடைய பங்குகளை சித்தார்த்தாவைத் திரும்ப வாங்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தியது; இரண்டாவது, வருமான வரித்துறை அதிகாரி ஒருவரால் தரப்பட்ட அழுத்தம்; மூன்றாவது, “வேண்டுமென்றே யாரையும் ஏமாற்றவில்லை, ஒரு தொழில்முனைவோராக நான் தோல்வியடைந்துவிட்டேன்” என்ற ஒப்புதல். இதில் முதல் இரண்டு விஷயங்கள், “எளிதாகத் தொழில் தொடங்குவதற்கான நாடாக இந்தியா இருக்கிறது” எனச் சொல்லும் அரசின் முழக்கங்களுக்கே நேரெதிராக இருக்கின்றன. சித்தார்த்தாவின் மரணம் இந்தப் பிரச்னைகளை மீண்டும் பேசும் சூழலைத் தொடங்கிவைத்திருக்கிறது.

“வருமான வரித்துறையினருக்கு நிர்ணயிக்கப்படும் இலக்குகளை அடைய அவர்கள் மிக மோசமான அணுகுமுறையைக் கையாள்கின்றனர். நேர்மையான தொழில்முனைவோர்களைக்கூட சட்டத்தின்பேரால் அச்சுறுத்துகின்றனர். இந்த வரித் தீவிரவாதம் (Tax Terrorism) பல ஆண்டுகளாக இருக்கிறது. இதைச் சரிசெய்வேன் என்றுதான் 2014-ல் மோடி அரசு வாக்குறுதி கொடுத்தது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக அதற்காக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்கிறார் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மோகன்தாஸ் பை. “ஒவ்வோர் ஆண்டும் வருமான வரித்துறையினருக்கு நிர்ணயிக்கப்படும் வரி இலக்குகளை அடைய, துறைசார்ந்த அதிகாரிகள் இதுமாதிரியான நடவடிக்கைகளில் இறங்குகின்றனர். ஒருவேளை அவர்கள் இப்படிச் செய்யவில்லை என்றால் அவர்கள் பணிமாறுதல் செய்யப்படுவார்கள்.

கடந்து போக கற்போம்!

இப்படியொரு நிலையை உருவாக்கிவிட்டு நாம் அதிகாரிகளை மட்டுமே குறைசொல்லிவிட முடியாது” என்கிறார் மோகன்தாஸ்.

இந்த வரிச் சிக்கல்கள் சித்தார்த்தா போன்ற ஜாம்பவான்களுக்கு மட்டுமே அல்ல; சின்னச் சின்ன தொழில்நிறுவனங்கள் வைத்து நடத்தும் சிறு மற்றும் குறு தொழில்முனைவோர்களுக்கும் உண்டு. எந்த ஜி.எஸ்.டி வரிவிதிப்பை எளிமைப்படுத்தும், வரி முறைகேடுகளைத் தடுக்கும் என அரசு சொன்னதோ, அதுவே வணிகர்களுக்குச் சுமையாகிப்போனது அடுத்த சோகம். இதிலிருக்கும் தொழில்நுட்ப மற்றும் நிர்வாகச் சிக்கல்களை, கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி குறித்துச் சமர்ப்பிக்கப்பட்ட தன் முதல் அறிக்கையிலேயே தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது சி.ஏ.ஜி.

இதற்கடுத்து, தொழில்முனைவோர்களுக்கு இருக்கும் சிக்கல் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாதது. இங்கே தொழில் தொடங்குவதைவிடக் கடினம், அதிலிருந்து முறையாக சட்டப்படி வெளியேறுவது. இந்தியாவில் தொழிலதிபர் ஒருவர் தோல்வியடைந்துவிட்டால் அந்த நிலையிலிருந்து மீள்வது மிக மிகக் கடினம். நியாயமாகத் தொழில்செய்து தோற்றுப்போன தொழிலதிபர்களுக்கும், தொழிலில் திட்டமிட்டே முறைகேடு செய்பவர்களுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. இங்கே தோல்வியடைந்து கடனில் விழும் அத்தனைபேரும் மல்லையாக்களோ நிரவ் மோடிகளோ அல்லர். ஆனால், இந்த வித்தியாசங்களை அதிகாரிகள் கொஞ்சமும் பார்ப்பதில்லை எனக் குமுறுகின்றனர் தொழில்முனைவோர்கள். சித்தார்த்தா போன்ற ஆலமரங்கள் சாயும்போதுதான் அதன் அதிர்வுகள் தெரியவருகின்றன.

“ஒரு நிறுவனம் வெற்றியடைந்தால் அதற்கான எல்லாப் புகழையும் அதன் நிறுவனருக்கே தருவதும், ஒருவேளை அது தோல்வியடைந்துவிட்டால் எல்லாப் பழியையும் அவர்மீதே சுமத்துவதும்தான் நம் நாட்டிலிருக்கும் மிகப்பெரிய சிக்கல். இந்த அழுத்தமே பல தொழில்முனைவோர்களுக்குப் பெரிய சிக்கலை உண்டாக்குகிறது. உண்மையில் ஒரு நிறுவனம் வென்றால் அதற்கு அதன் நிறுவனர் மட்டுமே காரணமல்ல; அதன் முதலீட்டாளர்கள், பணி யாளர்கள் என அத்தனைபேரின் கூட்டு உழைப்பு அது. அதேபோல தோல்வியடைந்தால் அது நிறுவனரின் பிழை மட்டுமே அல்ல. காரணம், அத்தனை முடிவுகளையும் அவர் மட்டுமே எடுப்பதில்லை. எல்லா விஷயங்களையும் தனது நலனுக்காக மட்டுமே செய்வதில்லை. நிறுவனத்தின் நலன்கருதிதான் செய்கிறார். அப்படியென்றால் அதன் தோல்விக்கும் அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது” என்கிறார் வைத்தீஸ்வரன், இந்தியாவின் முதல் இ-காமர்ஸ் தளமான ‘இந்தியா பிளாசா’வின் நிறுவனர். அந்நிறுவனத்தின் தோல்விக்குப் பிறகு சித்தார்த்தாவைப் போலவே பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகி, தவறான முடிவுகளுக்குச் சென்று பின் மீண்டுவந்தவர்.

அதேபோல், தொழில் வாழ்க்கையில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து மீண்டு, இப்போது வெற்றிகரமான தொழில்முனைவராக இருக்கும் ‘கேப்ளின் பாயின்ட் பார்த்திபன்’, ``90-களின் இறுதியில் பெங்களூரில் தொழில்தொடங்க நினைத்த பல இளைஞர்களுக்கு முதல் அலுவலக முகவரி காபிடேயின் கஃபேக்கள்தான்.

தொழில் நிமித்தமாக முதலீட்டா ளர்களைச் சந்திக்க, சின்னச் சின்ன அலுவலக கெட் டு கெதர்களுக்காக எனப் பல இளைஞர்க ளுக்கு சந்திப்புகளின் சங்கமமாக இருந்தவை இந்த கஃபேக்கள். இன்றைக்கும் பெங்களூரின் கோரமங்களா, இந்திரா நகர் போன்ற அதிமுக்கியமான இடங்களில் இருக்கும் கஃபேக்களில்தான் நாளைய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான பல ஐடியாக்கள் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

என்ன, அப்போது காபிடே மட்டும்தான். இப்போது கூடவே ஸ்டார்பக்ஸ் போன்ற இன்னும் பல கஃபேக்களும் இணைந்திருக்கின்றன. ஆனால், அந்த கஃபே கலாசாரம் மாறவே இல்லை. நாடு முழுக்கவே பரவியிருக்கிறது. காபிடே போல, இன்னும் பல நூறு கஃபேக்கள் உதயமாகலாம்.

ஆனால், விதை சித்தார்த்தாவுடையது. வெற்றிபெற்ற தொழில்முனை வோராக மட்டுமன்றி, டீ குடிக்கும் பழக்கமே அதிகமுள்ள இந்தியாவிலேயே ஒரு வெற்றிகரமான காபி வணிகத்தை உருவாக்கலாம்; உழைத்தால் அதையே உலக அளவில் பெரிய பிராண்டாக மாற்றலாம்; ஒரே ஒரு காபியில் எவ்வளவோ நடக்கலாம் என, பல இளம்தொழில்முனை வோர்களுக்குப் பெரிய இன்ஸ்பிரேஷனாகவும் இருந்தவர். காபிடேயின் கஃபேக்களில் நடந்துகொண்டிருக்கும், தொடர்ந்து நடக்கவிருக்கும் அந்த இளைஞர்களின் பிசினஸ் மீட்டிங்குகளே அவருக்கான அஞ்சலி.

அரசு இயந்திரங்களால் தொழில்முனைவோர்கள் சந்திக்கும் சிக்கல்கள் இப்போதேனும் பொதுவெளிக்கு வந்திருக்கின்றன என்பதே நமக்கான ஆறுதல்” என்கிறார்.

மேலும், “கஷ்டப்படும்போதெல்லாம் இதுவும் கடந்துபோகும் என்கிற எண்ணம் நமக்குக் கட்டாயம் வரவேண்டும். மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனத்தைத் தொடங்கி, அதை வெற்றிகரமாக நடத்திக்கொண்டி ருந்தபோது ஏற்பட்ட சில பிரச்னைகளால் என் தொழிலே நிர்மூலமானது. தோல்வியின் நெருக்குதல்கள் திரும்பிய பக்கமெல்லாம் விரட்டிவந்து என் கழுத்தை நெரித்தன. இதுவும் கடந்துபோகும் என்பதில் எனக்கு முழுமையான நம்பிக்கை இருந்ததால், அந்தக் கஷ்டமான நிலையை என்னால் சிரமப்பட்டுக் கடந்துவர முடிந்தது.

கடந்து போக கற்போம்!

பிசினஸ் என்று வந்துவிட்டால், பிரச்னைகள் வரத்தான் செய்யும். முக்கியமாக, பணப்புழக்கம் என்கிற பிரச்னை அடிக்கடி வந்து உங்களைச் சோதனை செய்யும். அதாவது, உங்களிடம் பெரிய அளவில் சொத்து இருக்கும். ஆனால், அதை விற்று, பணமாக்கி, தரவேண்டியவர்களுக்குத் தரமுடியாத நிலையில் இருப்பது துர்பாக்கியமான நிலைதான். இது மாதிரியான பிரச்னைகளுக்குத் தீர்வே இல்லை என்று சொல்ல மாட்டேன். நம்பிக்கையுடன் கொஞ்சம் யோசித்தால், நிச்சயம் கடந்துவர முடியும்.

பிசினஸில் நீங்கள் சந்திக்கும் எந்தக் கஷ்டமாக இருந்தாலும் அதை உங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் சக நண்பர்களுடன் பேசுங்கள். உங்கள் சுயகௌரவத்துக்கு இழுக்கு என்று நினைத்து, உங்கள் மனபாரத்தை உங்களுக்குள்ளேயே புதைத்து வைக்காதீர்கள். சித்தார்த்தாவின் மரணத்திலிருந்து இளம்தொழில்முனைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இவை.

நமக்கு எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் அதுதரும் வலியைவிட மரணம் தரும் வலி குறைவாக இருக்கும் என்று நாம் நினைக்கவே கூடாது. வாழ்க்கைப் பயணத்தில் மரண மானது நம்மைத் தேடிவரலாமே தவிர, நாம் அதைத் தேடிப் போவது கூடவே கூடாது!’’ என்கிறார் பார்த்திபன்.

ஒரு வணிகத்தின் வெற்றி தோல்வியை உலகச் சந்தை, அரசின் பொருளாதாரக் கொள்கை என்று எவ்வளவோ தீர்மானிக்கலாம். ஆனால் நம்முடைய மன உறுதியைத் தீர்மானிக்கும் விஷயம் ஒன்றே ஒன்றுதான், அது ‘இதுவும் கடந்துபோகும்’ என்ற தெளிவான மனம்தான்.