Published:Updated:

‘செத்த அனத்தாம இருங்க தம்பி!’

உதயநிதி ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
உதயநிதி ஸ்டாலின்

போனமுறை நாம ஆட்சியில இருந்தப்ப, சினிமா கம்பெனி ஆரம்பிச்சு, உங்க படத்துக்காக மொத்த தியேட்டர்களையும் ப்ளாக் பண்ணுனீங்க.

‘செத்த அனத்தாம இருங்க தம்பி!’

போனமுறை நாம ஆட்சியில இருந்தப்ப, சினிமா கம்பெனி ஆரம்பிச்சு, உங்க படத்துக்காக மொத்த தியேட்டர்களையும் ப்ளாக் பண்ணுனீங்க.

Published:Updated:
உதயநிதி ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
உதயநிதி ஸ்டாலின்

குறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்த உதய் தம்பிக்கு,

வணக்கம்.


கட்சிப் பணிகளில் ‘தீவிரமா’ இருப்பீங்க. ஏன்னா, நீங்க பிறக்கும்போதே அரசியல்வாதியா பிறந்தவரு. அப்படி யார் சொன்னானு கேக்குறீங்களா? நீங்களேதான் சொல்லிக்கிறீங்க! ஆனாலும், இந்தக் கடிதத்தைக் கொஞ்சம் பொறுமையா உட்கார்ந்து படிச்சிருங்க. ஏன்னா, நான் உங்க தாத்தா காலத்து ஆளு. சொல்றதுல உண்மை இருக்கும். நிறைய பாத்தாச்சு தம்பி... ஆனாலும், நீங்க ரொம்ப பண்றீங்க!

ஆகஸ்ட் 7-ம் தேதி. உங்க தாத்தா சமாதிக்கு முன்னால, கால்கடுக்க உணர்ச்சிகரமா நின்னுக்கிட்டிருந்தோம். கட்சியோட மூத்த நிர்வாகிகள், கட்சிக்காகப் பலமுறை சிறைக்குப் போனவங்க, தொண்டர்கள்னு நிறைய பேர்... உங்க அப்பாவுக்காகக் காத்திருந்தோம். கார் கதவு திறந்தது, ஆர்வத்தோட பாத்தா... ஏதோ சினிமா ஷூட்டுங்குக்கு வர்றதப்போல பவுசா உங்க அப்பாகூட வந்து இறங்குனீங்க. வணக்கம் வைக்க எடுத்த கைய வளைச்சுப் பின்னால கொண்டுபோயிட்டேன்... கட்சிக்காக நாற்பது வருஷம் ரோடு ரோடா போஸ்டர் ஒட்டி கட்சி வளர்த்த நான், கருணாநிதிக்குப் பேரன்னு குறுக்கு வழியில வந்த உங்களை எப்படிக் கையெடுத்துக் கும்பிட முடியும்? சொல்லுங்க...

கட்சிப் பொறுப்புக்கு வந்ததுதான் குறுக்குவழின்னு பார்த்தா, கட்சி நிகழ்ச்சிகளுக்கு வர்றதும் அப்படித்தான் இருக்கு. உங்க அப்பா ஸ்டாலின் இப்படி ஒருமுறைகூட, உங்க தாத்தாவோட வந்து இறங்கினது இல்ல. ஆனா, நீங்க நயன்தாரா, ஹன்சிகா கூடல்லாம் ஒண்ணா நடிச்சுட்டதால அந்தத் தகுதி வந்துட்டதா நினைச்சுக்கிட்டீங்க. குழந்தையா நீங்க கைய கால அசைச்சதெல்லாம் கட்சிப்பணிக் கணக்குல சேராது... குச்சி மிட்டாய்க்கும் குருவி ரொட்டிக்கும் நீங்க அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுனதெல்லாம் கட்சி ஆர்ப்பாட்டக் கணக்குல வராது!

ஆரம்பத்துல அரசியலுக்கே வரமாட்டேன்னு நீங்க சத்தியம் செய்யாத குறையாகச் சொன்னீங்க. பிறகு நைஸா வந்தீங்க... அதக்கூடக் காமெடினு பொறுத்துக்கிட்டோம். ஆனா, சேர்ந்த கொஞ்ச நாள்லயே, உங்க அடிப்பொடிகள் வெச்சு, ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்கிட்டயும் “உதயா இளைஞரணிச் செயலாளரா வர ஆசைப்படுறோம்’னு மிரட்டி எழுதி வாங்கினீங்க... பொறுப்புக்கு வந்ததும், ‘சின்னவர்கிட்ட பேசுங்க... சின்னவர்கிட்ட பேசுங்க’னு உங்க அடிபொடிகள வெச்சு மூத்த நிர்வாகிகளை டார்ச்சர் பண்ணீங்க... சினிமாவுல நீங்க பண்ணதுதான் காமெடி... கட்சிக்குள்ள வந்து நீங்க பண்ணதெல்லாம் பயங்கர வில்லத்தனம் தம்பி!

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

ஆரம்பத்துல, உங்க தாத்தா, அப்பா போட்டோவோட சேத்து உங்க முகத்தையும் கட் அவுட்ல வெச்சாங்க. அதை தொண்டர் ஒருத்தர் தட்டிக்கேட்டார். ‘இனி இந்தத் தவறு நடக்காது’னு யோக்கிய சிகாமணி மாதிரி உத்தரவாதமெல்லாம் கொடுத்தீங்க. ஆனா, இப்ப உங்க மகன் போட்டோ போட்டு ஃப்ளக்ஸ் அடிச்சாக்கூட பார்த்து ரசிக்கிறீங்க. வாரிசு வெறி கொழுந்துவிட்டு எரியுதே தம்பி. போஸ்டர்ல, விளம்பரத்துல உங்க போட்டோ போடலைன்னா கட்சியவிட்டு ஒதுக்கிவைக்குறது, பொறுப்ப பறிக்கிறதுனு சின்னப்புள்ளத்தனமா பண்ணிட்டு இருக்கீங்க. அதான், படத்துக்குப் படம் ஆயிரக்கணக்குல போஸ்டர் ஒட்டுறாங்களே... இன்னும் அடங்கலையா உங்க விளம்பர தாகம்... போஸ்டர் மோகம்!

‘கட்சியில கடுமையா உழைச்சவங்க பல பேரு இருக்க, உதய்க்கு எப்படிப் பொறுப்பு கொடுக்கலாம்?’னு நியாயமான குரல் எழுந்தப்ப, நீங்க நடிச்ச படங்களைப் போட்டுக்காட்டி, ‘பாருங்க கட்சிக்கு எப்படி உழைச்சிருக்காரு சின்னவரு’னு அநியாயமா சொல்ல வெச்சீங்க. அதுகூட பரவால்ல, நாடாளுமன்றத் தேர்தல்ல நீங்க பிராசரத்துக்கு வந்ததுதான் வெற்றிக்குக் காரணம்னு ஒரு கதை கட்டுனீங்க பாருங்க. அப்போதான் தம்பி எனக்கு முதல் அட்டாக் வந்தது.

அதுலயும் தேர்தல் பிரசாரத்துல “அழகான வேட்பாளர் கிடைச்சுருக்காங்க... இந்தத் தொகுதி மக்கள் ரொம்பக் கொடுத்து வெச்சவங்க’’னு மொக்கையா சொல்லிட்டு, ஏதோ தத்துவம் சொல்லிட்ட மாதிரி ஒரு சிரிப்புச் சிரிச்சீங்க பாருங்க, நம்ம கட்சியும் அப்போ சிரிப்பா சிரிச்சுது. “அறிவானவங்க... அதைத்தான் அப்படிச் சொன்னேன்’’னு சமாளிச்சீங்க. உடனே, “தாத்தா கலைஞரைப் போலவே பேச்சுத்திறமை’’னு உங்க விசிலடிச்சான் குஞ்சுகளை வெச்சு ‘மூன்றாம் கலைஞர்’னு விளம்பரம் செஞ்சீங்க. நிச்சயமா சொல்றேன் உதய் தம்பி... மெரினாவுல உங்க தாத்தா கருணாநிதி அன்னிக்கு ஒருமுறை புரண்டு படுத்திருப்பாரு.

கட்சியில தலைவர்னு ஒருத்தர் இருக்கும்போதே, உங்க இஷ்டப்படி, உங்க எடுபிடிகளுக்குப் பொறுப்புக் கொடுக்குறது, சீட் கொடுக்குறதுன்னு உங்க அடாவடித்தனத்த பெருசா ஆரம்பிச்சுட்டீங்க. தேர்தல் பிரசாரத்துக்குப் போகும்போது, கட்சிக்கு நாப்பது வருஷம் நாயா உழைச்சவனை வேனுக்கு வெளியில தொங்கவிட்டுட்டு, நீங்க ஏ.சி-யில ஜம்முன்னு ரிலாக்ஸ் பண்ணுனீங்க. சுயமரியாதையும் அவமரியாதையும் தெரிஞ்ச தம்பி நீங்க... அருமையா பொழச்சுக்குவீங்க!

போனமுறை நாம ஆட்சியில இருந்தப்ப, சினிமா கம்பெனி ஆரம்பிச்சு, உங்க படத்துக்காக மொத்த தியேட்டர்களையும் ப்ளாக் பண்ணுனீங்க. விநியோகஸ்தர்கள்கிட்ட அடிமாட்டு வெலைக்கு மனசாட்சியே இல்லாம படத்தை டீல் பேசுனீங்க. சினிமாத்துறையைக் ‘காலி’ பண்ணீங்க... இப்போ கட்சிக்குள்ளேயும் அதைப் பண்ண ஆரம்பிச்சுட்டீங்க... நல்ல தொடக்கம் தம்பி!

ஏற்கெனவே தி.மு.க மகளிரணி இருக்கும்போது, இளைஞரணிக்குள்ளேயே ஒரு மகளிர் அணியை உருவாக்க நினைச்சீங்க பாருங்க... ராஜதந்திரங்களை கரைச்சுக் குடிச்சிட்டீங்க. ‘அமைதிப்படை’, ‘புதுப்பேட்டை’ பட ஹீரோக்களையெல்லாம் ரியல் லைஃப்ல மிஞ்சிட்டீங்க. ஒருவேளை இந்தமுறை ஜெயிச்சா, எங்க தலைவர் ஸ்டாலினை முதல்வராக விடுவீங்களா, இல்ல வேற ஏதாவது ப்ளான் இருக்கா? சீக்கிரம் சொல்லிடுங்க... ‘வருங்கால முதல்வரே’னு போஸ்டர் ரெடி பண்ணணும் பாருங்க. தொயரத்த!

காலம்காலமா இந்த இயக்கம் காப்பாத்திட்டு வர்ற கொள்கைகள ஒத்த பிள்ளையார் படம் போட்டு காலி பண்ணீங்க... உங்க அப்பா வயசுக்காரர ‘பிளேபாய்’னு சொல்லி வாங்கிக் கட்டிக்கிட்டீங்க... இனிமேலாவது வாயையும் கையையும் வச்சுகிட்டு செத்த அனத்தாம இருங்க தம்பி. எங்களுக்கப்பறம் வளர்ந்த குஞ்சு குளுவான்ட்டலாம் நீங்க பண்ற அலும்புக்கு சப்பைக்கட்டு கட்ட அவமானமா இருக்கு.

கடைசியா உங்களுக்குச் சொல்லிக்க ஒண்ணே ஒண்ணுதான் தம்பி... நாலு சினிமாப் படத்துல நடிச்சுட்டு, அதே மாதிரி ஸ்டண்ட் அடிச்சு அரசியல்லயும் ஜெயிச்சுடலாம்னு மட்டும் நினைச்சுடாதீங்க... மக்கள் உருவிட்டு ஓட விட்டுடுவாங்க. ஏற்கெனவே ஆட்சியில்லாம பத்து வருஷம் கேப்பு... வர்ற தேர்தல்லயும் கட்சிக்கு வெச்சிடாதிங்க ஆப்பு!

- இப்படிக்கு

குறுக்கு வழியில் பொறுப்புக்கு வராத தி.மு.க-வின் உண்மைத் தொண்டன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism