Published:Updated:

இடம், பொருள், ஆவல்: ஒரு சிப்பாய் மெட்ராஸின் கவர்னரான கதை!

தாமஸ் மன்றோ
News
தாமஸ் மன்றோ

நிர்வாகம், கல்வி, காவல்துறை எனப் பல்வேறு துறைகளில் தாமஸ் மன்றோ செய்த சீர்திருத்தங்கள் இன்றுவரை இந்திய நிர்வாகத்தில் நடைமுறையாக இருக்கிறது.

Published:Updated:

இடம், பொருள், ஆவல்: ஒரு சிப்பாய் மெட்ராஸின் கவர்னரான கதை!

நிர்வாகம், கல்வி, காவல்துறை எனப் பல்வேறு துறைகளில் தாமஸ் மன்றோ செய்த சீர்திருத்தங்கள் இன்றுவரை இந்திய நிர்வாகத்தில் நடைமுறையாக இருக்கிறது.

தாமஸ் மன்றோ
News
தாமஸ் மன்றோ
சென்னை தீவுத்திடலைக் கடப்பவர்கள் வங்கக்கடலைப் பார்த்தபடி கம்பீரமாக குதிரையில் அமர்ந்திருக்கும் மன்றோவைப் பார்த்திருக்கலாம். ராஜகம்பீரமாக நிற்கும் சேனம் பூட்டாத குதிரையில் அமர்ந்தபடி வாளேந்தி இருக்கும் மன்றோவின் சிலை சென்னையின் பிரதான வீதியொன்றில் அமைந்ததெப்படி? இந்தியா சுதந்திரமடைந்து 76 ஆண்டுகளுக்குப் பிறகும் மன்றோவைப் பற்றிப் பேச அப்படி என்னதான் இருக்கிறது? ஸ்காட்லாந்தில் பிறந்த ஒருவரை மறைந்து 194 ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவுகூறுமளவுக்கு அப்படி அவர் என்ன செய்திருக்கிறார்?
தாமஸ் மன்றோ
தாமஸ் மன்றோ

பிரிட்டிஷ் ராணுவத்தில் படைவீரனாக இந்தியாவில் வந்திறங்கி, ராஜதானியின் கவர்னராக உயர்ந்தவர் மன்றோ. இரும்பு இதயம் கொண்ட வெள்ளையர்களில் மன்றோ இளகியவர். எளிய மக்களின் துயரங்களை உணர்ந்து அவர்கள் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டுவந்தவர். நிர்வாகம், கல்வி, காவல்துறை எனப் பல்வேறு துறைகளில் அவர் செய்த சீர்திருத்தங்கள் இன்றுவரை இந்திய நிர்வாகத்தில் நடைமுறையாக இருக்கிறது.

1761-ம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பிறந்தார் மன்றோ. நான்கு சகோதரர்கள், இரண்டு சகோதரிகளோடு பிறந்த மன்றோவை சிறு வயதிலேயே அம்மை நோய் தாக்கியது. அதன் விளைவாக செவித்திறன் பறிபோனது. தாத்தா தையல் கலைஞர்... அப்பா புகையிலை வியாபாரி... மன்றோவுக்கு ராணுவத்தில் சேர்வது சிறுவயது முதலே கனவாக இருந்தது. தொழில் நசிவு, வறுமை, அப்பாவின் எதிர்ப்பு என எல்லா இடர்களையும் கடந்து, 1779-ம் ஆண்டு தன் 18 வயதில் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்தார். பிரிட்டிஷ் ராணுவத்தின் அங்கமாக 1780 ஜனவரி 15ம் தேதி மெட்ராஸில் வந்திறங்கினார் மன்றோ.

மெட்ராஸ்
மெட்ராஸ்

அத்தருணத்தில் ஹைதர் அலிக்கு எதிராக பெரும் யுத்தம் தொடங்கியிருந்தது பிரிட்டிஷ் படை. ஹைதர் அலியின் மறைவுக்குப் பிறகு திப்பு சுல்தானை இலக்கு வைத்தது பிரிட்டிஷ் படை. இந்த இரண்டு போர்களிலும் பங்கேற்றார் மன்றோ. இரண்டு போர்களையும் முன்னின்று நடத்திய கவர்னர் கார்ன் வாலிஸின் கவனத்தை ஈர்த்தார் மன்றோ, "இவன் இந்தியாவை நிர்வகிக்க தகுதியானவன்" என்று தீர்மானித்த கார்ன் வாலிஸ், மன்றோவை ராணுவத்திலிருந்து விடுவித்து சிவில் பணிக்கு மாற்றினார். சேலம், தர்மபுரி, ஊத்தங்கரை, திருப்பத்தூர் பகுதிகளை உள்ளடக்கிய பாராமஹால் பிரதேசத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மன்றோவுக்கு வழங்கினார். 12 ஆண்டுகள் களமுனையில் நின்று யுத்தம் செய்த மன்றோ, ராணுவச் சீருடை களைந்து நிர்வாக அதிகாரியானார்.

பொறுப்பேற்கும் முன்பு, மக்களின் வாழ்க்கை முறையை அறிந்துகொள்ள விரும்பிய மன்றோ, கிராமம் கிராமமாக தன் குதிரையில் பயணித்தார். அக்காலத்தில் பிரிட்டிஷ் அரசு, மக்களிடம் நிலத்தீர்வை வரியை வசூலிக்கும் உரிமையை ஜமீன்தார்களிடமும் நிலச்சுவான்தாரர்களிடமும் வழங்கியிருந்தது. பிரிட்டிஷ் நிர்வாகம் நிர்ணயித்ததை விட அதிகமாக மக்களிடம் வரியை உறிஞ்சிய இந்த இடைத்தரகர்கள், வசூலான வரியில் பெரும்பகுதியை தாங்கள் சுருட்டிக்கொண்டு ஒரு பகுதியை மட்டுமே பிரிட்டிஷ் நிர்வாகத்துக்குத் தந்தார்கள். வரி கட்டமுடியாத மக்களின் நிலங்களைப் பறித்து தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டிருந்தார்கள். இந்த ஜமீன்தாரி அவலத்திலிருந்து மக்களை விடுவிக்க நினைத்த மன்றோ, "இனி அதிகாரிகளே மக்களிடம் நேரடியாக வரி வசூலிப்பார்கள்... ஜமீன்தார்களுக்கு இடமில்லை" என்று அறிவித்தார். இந்த வரியை வசூலிக்க கலெக்டர் என்ற நிர்வாகப் பதவியையும் உருவாக்கினார். அவர் உருவாக்கிய கலெக்டர் பதவியே சிறிதும் பெரிதுமாக மாற்றத்துக்குள்ளாகி இன்றுவரை நடைமுறையில் இருக்கிறது. ரயத்துவாரி முறை என்றழைக்கப்படும் இந்த வரிவசூல் முறையால் மக்கள் நிம்மதியடைந்தார்கள்.

நிலத்தீர்வை வரி
நிலத்தீர்வை வரி

அதன்பின் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் பணியாற்றினார் மன்றோ. சென்ற இடத்தில் எல்லாம் மக்களின் அபிமானத்தைப் பெற்றார்.

மன்றோவின் நிர்வாகப் பகுதியிலிருந்த மந்திராலயம் ஸ்ரீராகவேந்திரர் ஆலயத்துக்கு 17ம் நூற்றாண்டில் அரசு கொஞ்சம் நிலங்களை வழங்கியிருந்தது. அந்த நிலங்களை மீட்கும் பொறுப்பை மன்றோவுக்கு வழங்கியது பிரிட்டிஷ் நிர்வாகம். மந்திராலயம் சென்ற மன்றோ, அங்கிருந்த சூழலையும் மக்களின் நம்பிக்கையையும் உணர்ந்து, 'நிலம் மந்திராலய நிர்வாகத்திடம் இருப்பதே சரியானது' என்று பிரிட்டிஷ் அரசுக்கு அறிக்கையளித்தார். அந்த நிலத்துக்கு வரி வசூலிக்கவும் தேவையில்லை என்று அவர் பிறப்பித்த உத்தரவு மெட்ராஸ் அரசு கெஜெட்டில் பதிவாகியிருக்கிறது. பிறரின் மத உணர்வை மதிக்கும் மகத்தான குணம் கொண்டிருந்த மன்றோ திருப்பதி கோயில் மதிய நிவேதனத்திற்கு என சித்தூர் பகுதியின் சில கிராமங்களின் வருவாயை ஒதுக்கித் தந்தார். அவர் காணிக்கையாக வழங்கிய பெரிய கொப்பரையில்தான் திருமலையில் இப்போதும் பொங்கல் வைக்கப்படுகிறது. ‘மன்றோ கங்கலம்’ என்று அந்தக் கொப்பரையை அழைக்கிறார்கள் பக்தர்கள். மன்றோ பணியாற்றிய ஆந்திர மாநில பகுதிகளில் அவரை நினைவுகூறும் வகையில் இன்றும் குழந்தைகளுக்கு `மன்றோலய்யா', ‘மன்றோலம்மா' என்று பெயரிடும் வழக்கம் இருக்கிறது.

தாமஸ் மன்றோ
தாமஸ் மன்றோ

பிற பிரிட்டிஷ் அதிகாரிகளைப் போல அன்றி மக்களுக்கு நெருக்கமானவராக இருந்தார் மன்றோ. அதற்காகவே தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைக் கற்றுக்கொண்டார். ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கெல்லாம் தன் குதிரையில் பயணம் செய்து அந்த மக்களின் பிரச்னைகளை அறிந்து தீர்வு தந்தார். பல கிராமங்களுக்கு நிரந்தரமான குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தந்தார்.

இந்தியாவில் 28 ஆண்டுகள் பணியாற்றிய மன்றோ, தன் 46-வது வயதில் சொந்த ஊருக்குத் திரும்பினார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மெட்ராஸ் திரும்பிய மன்றோ, மாவட்ட நிர்வாகம், நிதித்துறை ஆகியவற்றைச் சீர்திருத்தும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மன்றோவின் நிர்வாகத் திறனை உணர்ந்த ஆங்கிலேய அரசு, 1820-ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் கவர்னராக அவரை நியமித்தது. காவல்துறையிலும் நீதித்துறையிலும் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டார் மன்றோ.

இந்தியாவின் நவீனக் கல்விமுறை உருவாகக் காரணமாயிருந்த முன்னோடிகளில் தாமஸ் மன்றோவும் ஒருவர். மெட்ராஸ் மாகாணத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்விமுறை குறித்த முதல் கணக்கெடுப்பு மன்றோவால் தான் நடத்தப்பட்டது. ஆசிரியர் பயிற்சிக்கென மெட்ராஸ் பாடநூல் கழகத்தை உருவாக்கியது, பெண் கல்வியை உறுதி செய்தது என மன்றோ செய்த புரட்சிகள் சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கு விதையாக இருந்தன. அவர் தொடங்கிய ஆசிரியர் பயிற்சிப் பள்ளியே பின்னாளில் மெட்ராஸ் உயர் பள்ளியாக மாறி, மாநிலக் கல்லூரியாக உயர்ந்தது.

மாநிலக் கல்லூரி
மாநிலக் கல்லூரி

மன்றோ, தன் காதல் மனைவி வில்ஹெல்மினா மீது மிகுந்த நேசம் கொண்டிருந்தார். மன்றோவின் பல சீர்திருத்தங்களுக்குப் பின்னால் வில்ஹெல்மினாவே இருந்ததாக வரலாற்றாசிரியர்கள் எழுதுகிறார்கள். மன்றோ கவர்னராக இருந்த காலக்கட்டத்தில் வில்ஹெல்மினாவுக்கும் மகன் காம்பெலுக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார் மன்றோ. தானும் மனைவியின் அருகில் இருக்க விரும்பினார். பதவியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி பிரிட்டிஷ் அரசுக்குக் கடிதம் எழுதினார். ஆனால் அவரை இழக்கவிரும்பவில்லை பிரிட்டிஷ் நிர்வாகம். ‘இந்தியாவின் கவர்னர் ஜெனரல் பதவி தருகிறோம்' என்றது. ஆனால், மன்றோ ஏற்றுக்கொள்ளவில்லை. தனது இறுதிக்காலத்தை மனைவியின் அருகிலும் தாய்நாட்டிலும் கழிக்க விரும்பினார்.

அப்போது மன்றோவுக்கு 65 வயது. பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற மன்றோவின் கோரிக்கையை பிரிட்டிஷ் நிர்வாகம் தள்ளிப்போட்டுக்கொண்டே போனது. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான மன்றோ, மனமாற்றத்துக்காக பயணம் ஒன்றை மேற்கொள்ள விரும்பினார். பணிக் காலத்தில் தான் மிகவும் நேசித்த கடப்பா பகுதிக்கு ஜூலை 1827-ல் பயணப்பட்டார். அங்கு காலரா நோய் பரவிக்கொண்டிருப்பதால், செல்ல வேண்டாம் என மன்றோவுக்கு ஆலோசனை கூறப்பட்டது. "ஒரு கொடுநோயால் மக்கள் தவிக்கும்போது ஓர் அதிகாரி தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது அழகல்ல..." என்று சொன்ன மன்றோ, கடப்பாவுக்குப் பயணித்தார். கிராமம் கிராமமாகப் போய் மக்களுக்கு ஆறுதல் சொன்னார். மருத்துவர்களை உற்சாகப்படுத்தி சிகிச்சையை விரைவுபடுத்தினார். கடப்பாவின் புத்தேகொண்டா என்ற பகுதியில் மன்றோ முகாமிட்டிருந்தபோது மன்றோவையும் காலரா தாக்கியது.

புத்தேகொண்டா
புத்தேகொண்டா

நோயின் தீவிரம் வீரியமாக, எங்கோ பிறந்து கடல் கடந்து வந்து இந்த மண்ணையும், மக்களையும் உயிருக்குயிராய் நேசித்த சர் தாமஸ் மன்றோவின் உயிர், 1827 ஜூலை 6-ம் தேதி பிரிந்தது. அவரின் உடல், கடப்பாவில் உள்ள கூட்டி என்ற பகுதியில் உள்ள ஆங்கிலேயர்களின் கல்லறையிலேயே அடக்கம் செய்யப்பட்டது. ஜூலை 9ம் தேதி மன்றோ இறந்த செய்தி செயின்ட் ஜார்ஜ் கோட்டையை எட்டியதும், கோட்டைக் கொடி சூரிய அஸ்தமனம் வரை அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இறந்துபோன மன்றோவின் வயதைக் குறிக்கும்வகையில் கோட்டையின் கொத்தளத்திலிருந்து 65 முறை பீரங்கிகள் முழங்கின. மன்றோவின் மரணம் இந்திய மக்களை உலுக்கியது. 1831-ல் அவர் உடலின் சில பகுதிகள் மெட்ராஸுக்குக் கொண்டுவரப்பட்டு கோட்டையிலுள்ள புனித மேரி தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அவருக்காக பிரமாண்டமான இரங்கல் கூட்டம் நடந்தது. மக்களை நேசித்த, மக்களும் நேசித்த தாமஸ் மன்றோவுக்கு மெட்ராஸில் சிலை வைக்க வேண்டும் என்று அந்த இரங்கல் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பொதுமக்கள் பங்களிக்க, அன்றைய மதிப்பில் சுமார் 8 ஆயிரம் பிரிட்டிஷ் பவுண்டுகள் வசூலாகின. 6 டன் எடை கொண்ட வெண்கலச் சிலையில் உயிர் பெற்றார் மன்றோ. 1839 அக்டோபர் 23 அன்று சிலை திறப்பு விழா நடைபெற்றது. அன்று மெட்ராஸ் மாகாணத்துக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டது.

மன்றோ  சிலை
மன்றோ சிலை

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, அடிமைச்சின்னமாக இருக்கும் பிரிட்டிஷாரின் சிலைகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுக்க எழுந்தது. சென்னையில் இருந்த பல பிரிட்டிஷ்காரர்களின் சிலைகள் அகற்றப்பட்டு அருங்காட்சியகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. 1957-ல் சிப்பாய்க் கலக நூற்றாண்டின்போது, மன்றோ சிலை இருக்கும் இடத்துக்கு சில அடிகள் தள்ளியிருந்த வெலிங்டன் பிரபுவின் சிலைகூட அகற்றப்பட்டது. ஆனால், மன்றோ இன்றளவும் நிலைகொண்டு நிற்கிறார்.

மன்றோவின் வழித்தோன்றகள் இப்போதும் சென்னைக்கும், அவர் ஆட்சி செய்த இடங்களுக்கும் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

மன்றோவின் வழித்தோன்றகள்
மன்றோவின் வழித்தோன்றகள்
தீவுத்திடலைக் கடக்கும்போது ஒரு நிமிடம் உங்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு மன்றோவின் முகத்தை சற்று கூர்ந்து பாருங்கள். தன் மனைவியையும் மகனையும் பார்க்காமலே மறைந்துபோன ஒரு குடும்பத்தலைவனின் ஏக்கமும் தவிப்பும் தெரியும்!