இந்தமுறை இளையராஜா, பி.சி. ஸ்ரீராம், லெனின் என்று பெரும்படையுடன் வருகிறார். அவரது அடுத்த படமாக ‘சாசனம்’ அறிவிக்கப்பட்டிருக்கிறது. செட்டிநாட்டு வாழ்வை செல்லுலாய்டில் சித்திரிக்கப்போகிற முதல் படமாக இது அமையக்கூடும். ராஜா அண்ணாமலைபுரத்தில், திரும்பிய பக்கமெல்லாம் செம்பருத்திப் பூக்கள் சிரிக்கிற வீட்டில், இயக்குநர் மகேந்திரனைச் சந்தித்தோம். "ஒவ்வொரு பொழுதும் விடியறது ஒரு புதுப் புத்தகம் விரியற மாதிரி. பொழுது முடியறதுக்குள்ள அதை எவ்வளவு தூரம் படிக்க முடியுமோ அதை முடிச்சிடணும்னு நினைக்கிறேன்.... சினிமா நான் திட்டமிட்டு வந்த விஷயமில்லை. இது எனக்கு விதிக்கப்பட்டதுனு நினைக்கிறேன். Life is like a snooker game நாம நினைக்கறது ஒண்ணு நடக்கறது ஒண்ணுன்னு. ஆனா, அந்த சர்ப்ரைஸ் அல்லது ஷாக்தானே வாழ்க்கையோட சுவாரஸ்யமே...” என்று சிரிக்கிறார் மகேந்திரன்.

“அந்த ஞாபகங்கள் இன்னும் இருக்குதா...?”
“மறக்க முடியுமா என்ன...? ‘முள்ளும் மலரும்’ என்னோட முதல் படம். அப்புறம் உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, ஜானி.... இப்படி ஒவ்வொண்ணையும் ரசிச்சு ரசிச்சு செய்தேன். இயற்கையின் அழகை நானும் எடுத்துக் காட்டினேன். என்னைப் பாதிச்ச சின்னச் சின்ன விஷயங்களைத் தொடுத்தது மட்டும் தான் நான் செய்த வேலை. அந்த வயசுல எனக்குக் கிடைக்காத பெற்றோர் பாசம் Parental Love தான் என்னோட உதிரிப்பூக்களுக்கு ஆதாரம். நாம எல்லோருமே அன்புக்கு ஏங்கற குழந்தைகள்தானே!”
"சினிமால நீங்க என்ன சொல்ல ஆசைப்பட்டீங்க?"
"ஜானி படத்துல 'நீ அநாதை இல்லை. அன்பு காட்ட ஆள் இல்லாதவன் அநாதை’னு ஒரு டயலாக் உண்டு. அதை நான் நம்பறேன். அன்பைத் தவிர, வேறு எந்த செய்திகளும் என்னிடமில்லை. அன்பைத் தவிர, வேறு எதுவும் செய்திகளே இல்லை. என் படங்கள்,எல்லாவற்றிலும் அன்புதான் பிரதானமாக இருந்தது."
"சந்தோஷம் தர்ற விஷயங்கள்னு எதைச் சொல்வீங்க..?"
"சினிமாங்கற மீடியத்தை நான் பயன்படுத்திக்கிட்ட விதம்தான் என்னோட சந்தோஷம் அதோட அட்டகாசமான வில்லனா இருந்த ரஜினியை, நான் சரியாப் பயன்படுத்தின ரெண்டு படங்கள், சரத்பாபு மாதிரி ஒரு சாஃப்ட் ஹீரோ அஞ்சு - சுஹாசினினு நான் கண்டெடுத்த சின்னப் பொண்ணுங்க, அசோக்குமார், பாலுமகேந்திரா ஆகிய நல்ல காமிராமேன்கள்னு, தமிழ் சினிமால நம்ம பங்களிப்பும் கொஞ்சம் கொஞ்சம் உண்டுங்கறது... பெரிய சந்தோஷம்தானே! ஏதோ சில விஷயங்களுக்கு அட்லீஸ்ட் நாம ஒரு ஆரம்பமா இருந்தா போதும் மற்றதெல்லாம் தானா நடக்கும்...."
"சக்லஸ்ஃபுல் டைரக்டரா இருந்த நீங்க, மெள்ள விலகிப்போனதற்கு என்ன காரணம்...?"
"நேரடியாவே கேளுங்க. எனக்கும் நிறையப் பேரு போல மது அருந்தற பழக்கம் உண்டு. அது என்னோட பர்சனல் விஷயம்னு நான் நினைச்சேன். அப்படியில்லேனு பிறகு புரிஞ்சுது. என்னைப் பற்றி குடிகாரன் அது இதுனு. நிறையப் பரப்பினாங்க. அதுல பல செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவை. திட்டமிட்டுச் சில பேர் அதைச் செய்தாங்க. அதுல எதைச் சாதிக்க விரும்பினாங்களோ... இப்பவும் சொல்றேன்... யாரும் யாருடைய உணவையோ உணர்வையோ பறிக்க முடியாது.... எனக்கு யார் மீதும் வருத்தம் கிடையாது. எது குறித்தும் புகார் கிடையாது.”

“உங்க பார்வையில இன்னிக்குத் தமிழ் சினிமா எப்படியிருக்கு?”
"டெக்னிக்கல் எக்ஸ்லென்ஸ்தான் நிறைய. மணிரத்னம், ஷங்கர் மாதிரி சில டைரக்டர்கள் இதுல கில்லாடியா இருக்காங்க. மேற்கத்தியத் தாக்கங்கள் நிறைய இருக்குது. இன்றைய தமிழ். சினிமா, இந்தியா முழுக்க பிஸினஸ் ஆவுது. நல்ல விஷயம்தான். ஆனா, நேஷனல் தரத்துக்குப் படமெடுப்பதற்கும் நேஷனல் மார்க்கெட்டுக்குப் படமெடுப்பதற்கும் வித்தியாசம் உண்டு. பெரும்பாலும் மார்க்கெட்டுக்குப் பண்ற படங்கள் தான் இப்போ வருது. இருந்தாலும், ஒரு நம்பிக்கை எனக்கிருக்கு. சமுத்திரக்கரையில ஊத்துத் தோண்டினா நல்ல தண்ணி கிடைக்கிற அதிசயம் மாதிரி அப்பப்போ நல்ல படங்கள் வரும். அந்த மாதிரி தாகம் கொண்ட இளைஞர்கள் சினிமாவுக்கு வரணும்.”
"திரும்பிப் பார்க்கையில் உங்களுக்கு என்ன தோணுது..?”
“நிறைவா இருக்கு. நான் ஒரு வழிப் போக்கன் மாதிரிதான் உணர்கிறேன். தட்டுத் தடுமாறி பாதை தெரியாம நடந்தேன். திடீர்னு பிரகாசமான வெளிச்சங்கள். சோலைகள்... வழியில் வந்தன. அப்புறம் மலைப்பாதை. நடக்கச் சிரமமா இருந்தாலும், மேலே உயரே... உச்சிக்கு என்னைச் சுமந்த பாதைகள். அது மாதிரிதான் என் பாதையில ஒரு பாலைவனம் எதிர்ப்பட்டதும்! நடந்துட்டிருக்கேன்... பாலைவனத்துலயும் சோலைகள் வரும். வழிப்போக்கனுக்கு எல்லாமே ஒண்ணுதான்...”
“இப்போ நீங்க எடுக்கப்போகிற ‘சாசனம்’ எதைப் பற்றிச் சொல்லப் போகுது?”
“செட்டிநாட்டுக் கலாசாரம்கறது அதன் பின்னணி. வேற்றுக் கிரகங்களில் மனிதன் இருக்கிறானா என்பதை விஞ்ஞானம் விசாரிக்கிற இந்த நேரத்தில் உன் பக்கத்திலேயே நீ கவலைப்படுவதற்கு ஒரு சகோதர மனிதன் இன்னும் இருக்கிறான்கறதுதான் கதை. அதுவும் அன்பைப் பற்றித்தான் பேசப்போகுது அதைத் தவிர, வேற எதுவும் எனக்குத் தெரியாது.”
“சினிமா தவிர உங்க வாழ்கையில..?''
“ம்ஹும்.. சொல்லப் போனா வாழ்க்கையே ஒரு சினிமாதான். ஆனா இது One time Projection. இதுல மட்டும் செகண்ட் ஷோ கிடையாது. அப்படிப் பார்க்கையில நாம எல்லாமே சினிமாக்காரங்கதான்!”
“எப்படி நினைவு கொள்ளப்பட வேண்டுமென விருப்பம்...?”
“அது அவசியமில்லைனு தோணுது. நல்ல சிற்பம் செதுக்கறவன், அது கீழே தன் பெயரை எழுத வேண்டியதில்லை. பின்னால வர்றவங்க பார்க்க, சிற்பம் மட்டும் இருந்தாப் போதும். காத்துல எழுதுன பாட்டு மாதிரி கரைஞ்சு போயிடணும்னு ஆசைப்படறேன்.”
- ரா. கண்ணன்
படம்: கே. ராஜசேகரன்
(13.04.1997 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)