
லைட் ஹவுஸ் திட்டத்தின் ஒவ்வொரு கட்டடத் தொகுப்பும் கேட்டட் கம்யூனிட்டி போல அமைந்துள்ளது.
‘லைட் ஹவுஸ்’ என்றால் நமக்குத் தெரிந்ததெல்லாம், துறைமுகத்தில் நின்றபடி கப்பல்களுக்கு வழிகாட்ட வெளிச்சம் தந்துகொண்டிருக்கும் கலங்கரை விளக்கம் மட்டும்தான். இப்போது ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்களின் `சொந்த வீடு’ கனவை நிஜமாக்குவதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது. ‘லைட் ஹவுஸ் புராஜெக்ட்’ என்ற வீட்டுவசதித் திட்டம். சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் மோடி, இந்தத் திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளைத் திறந்துவைத்து, பயனாளிகளுக்குச் சாவிகளை வழங்கினார்.

நகர்ப்புறங்களில் வாழும் ஏழை மக்களுக்கு வீட்டுவசதி ஏற்படுத்தித் தரும் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ எனப்படும் அனைவருக்கும் வீட்டுவசதி (நகர்ப்புறம்) திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்திவருகிறது. இத்திட்டத்தின்கீழ் சென்னைப் பெரும்பாக்கம் பகுதியில் உருவாகியுள்ளது ‘லைட் ஹவுஸ்’ எனப்படும் முன்னோடிக் குடியிருப்புத் திட்டம். நடுத்தர, ஏழை இந்தியர்கள் தங்கள் `சொந்த வீடு’ கனவை நனவாக்க வழிசெய்யும் இத்திட்டத்தைத் தமிழ்நாட்டில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (Tamil Nadu Urban Habitat Development Board - TNUHDB) செயல்படுத்துகிறது.
நூற்றுக்கணக்கான வீடுகள் கொண்ட பிரமாண்டக் குடியிருப்புகளைக் கட்டி முடிக்கப் பல ஆண்டுகள் ஆகின்றன. இந்தக் காலதாமதம், வீடு கட்டும் செலவையும் எகிற வைத்துவிடுகிறது. இதைத் தவிர்த்து, குறுகிய காலத்துக்குள் வீடுகளைக் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காக ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்ட நெறிமுறைகளின் கீழ், Global Housing Technology Challenge-India (GHTC-India) என்ற திட்டத்தைப் பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். 2021 ஜனவரியில் இதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 12 மாதங்களுக்குள் வீடுகளைக் கட்டி முடிப்பது இலக்கு. ஒரே நேரத்தில் சென்னை, லக்னோ, இந்தூர், ராஞ்சி, அகர்தலா, ராஜ்கோட் என ஆறு நகரங்களில் இது ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு நகரிலும் வெவ்வேறு நிறுவனங்கள், உலகின் வெவ்வேறு நாடுகளில் அமலில் உள்ள தொழில்நுட்பங்களைப் புகுத்தி வீடுகளைக் கட்ட ஆரம்பித்தன.

இந்த 6 நகரங்களில் 17 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு, முதலில் திறந்து வைக்கப்பட்டது சென்னை வீடுகள்தான். Precast எனப்படும் கட்டுருவாக்க கான்கிரீட் கட்டுமானத் தொழில்நுட்ப முறையில் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
செங்கல், சிமென்ட் இல்லாமல் வீட்டின் பகுதிகளான சுவர்கள், பலகைகள், படிக்கட்டுகள், நெடுவரிசை, பீம் போன்றவை தனியாக வேறொரு இடத்தில் செய்யப்பட்டு, அவை குடியிருப்புப் பகுதிக்குக் கொண்டுவந்து இணைக்கப்பட்டு முழு வீடாக உருவாக்கப்படுகின்றன. இதனால் குறைந்த செலவில், குறுகிய நேரத்தில் வீடுகள் ரெடியாகின.

‘‘இங்கு ரூ. 116.37 கோடியில், 1,152 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தரை மற்றும் 5 தளங்கள் என அமைந்த இத்திட்டத்தில் ஒவ்வொரு வீடும் 406 சதுர அடியில் ஹால், படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிவறைகளோடு அமைந்துள்ளன. ஒவ்வொரு குடியிருப்பிற்கும் மத்திய அரசின் மானியம் ரூ. 5.5 லட்சம், மாநில அரசின் மானியம் ரூ. 3.5 லட்சம், பயனாளிகளின் பங்களிப்புத் தொகை ரூ. 1.5 லட்சம் என மொத்தம் ரூ. 10.5 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. பெண்களுக்குக் குடும்ப நிர்வாகத்தில் முக்கியத்துவம் தருவதற்காக, வீடுகள் குடும்பத் தலைவியின் பெயரிலேயே வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியிருக்கிறது” என்கிறார், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாகப் பொறியாளர் கிருஷ்ணகுமார்.

லைட் ஹவுஸ் திட்டத்தின் ஒவ்வொரு கட்டடத் தொகுப்பும் கேட்டட் கம்யூனிட்டி போல அமைந்துள்ளது. அங்கன்வாடி, சிறுகடைகள், நியாயவிலைக் கடைகள், நூலகம், ஆவின் பாலகம் எல்லாம் உள்ளேயே அமைந்துள்ளன. பாதாளச் சாக்கடை வசதி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் மறுசுழற்சி முறை வசதி, மின்விளக்குகள், லிஃப்ட் போன்ற பயன்பாடுகளுக்குச் சூரிய மின்சக்தி, குடிநீர் வழங்கல், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளம் என இந்த லைட் ஹவுஸ் திட்டம், வீட்டுவசதித் துறையில் ஒரு புதிய தொடக்கம்.
இந்தக் கட்டுரையை வீடியோ வடிவில் காண கீழே இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/38BQMr4