Published:Updated:

அழியா புகழ் போராளி

‘சே’ யின் புதிய புகைப்படங்கள்

புரட்சியின் அடையாளமாகவும் சோஷலிசத்தை விரும்புகிற, உலக இளைஞர்களால் எழுச்சி நாயகனாகவும் கருதப்படுகிற சே குவேரா கொல்லப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்போது வெளிவந்துள்ளன. உடல் முழுவதும் ரத்தக்கறை, கை மற்றும் மார்புப் பகுதிகளில் துப்பாக்கித் தோட்டாக்களின் தடங்கள், திறந்தபடி இருக்கும் கண்களால் ஊடறுக்கும் பார்வை என அதிரவைக்கின்றன அந்தப் படங்கள்.  

அழியா புகழ் போராளி

 1967, அக்டோபர் 9ம் தேதி, அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவுப் பிரிவினரால் பொலிவியாவின் காட்டுப் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார், புரட்சி நாயகன் எர்னஸ்டோ சே குவேரா. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இப்போது வெளியிட்டுள்ளார் இமானல் அர்டிகா. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் இவர். இந்தப் படங்களை எடுத்தவர், ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்தின் நிருபரான மார்க் ஹட்டன். 1967ம் ஆண்டு, சே குவேரா கொல்லப்பட்டபோது வெளிவந்த புகைப்படங்களுக்கும் தற்போது வெளியிடப்பட்டுள்ள படங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் தென்படுகின்றன. கறுப்பு மேலாடை அணிந்துள்ள சே குவேராவின் உடல் முழுவதும் ரத்தக் கறைகள் உள்ளன. அவரது மார்பில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த தடயங்கள் தெளிவாகத் தெரிகின்றன.

இதுகுறித்து அர்டிகா விளக்கம் அளித்துள்ளார்.  ''1960களில் பொலிவியாவில் என் உறவினர் லூயிஸ் என்பவர் போதகராக இருந்தார். அவர் மூலமாகத்தான், இந்தப் புகைப்படங்கள் என் தந்தையின் திருமணப் பரிசாகக் கிடைத்தன. அப்போதுகூட, சே குவேரா பற்றி லூயிஸ் ஏதும் சொல்லவில்லை. ஒருநாள் நானே நினைவுபடுத்திப் பார்த்தபோது, சே குவேராவின் உடல் வித்தியாசமான கோணங்களில் படம் பிடிக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். அந்தப் படங்கள் கறுப்பு வெள்ளையில் இருந்தன. மேலும், 67ல் உலகுக்குக் காட்டப்பட்ட புகைப்படங்களில் சே குவேராவின் உடலில் மேலாடை இருக்காது. ஆனால், இந்தப் படத்தில் கறுப்பு நிற கோட் அணிந்திருக்கிறார். அப்போதைய கெடுபிடியான சூழலில், இந்தப் புகைப்படங்களை எடுத்த ஹட்டன், மத போதகரான லூயிஸிடம் கொடுத்துள்ளார். இவ்வளவு நாட்களாக, பொக்கிஷமாகப் பாதுகாத்த புகைப்படங்களுக்கு வரலாற்று சிறப்பும் இருந்திருக்கிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை'' என்கிறார் அர்டிகா.

அழியா புகழ் போராளி

இவரது புகைப்படத் தொகுப்பில், பொலிவியா அரசுக்கு எதிரான போரில் முக்கிய அங்கம் வகித்த ஒரே பெண் போராளியான டமாரா பங்கியின் (டானியா என்றும் அழைக்கப்படுபவர்) முகம் சிதைந்த உடல் ஸ்ட்ரெச்சரில் வைக்கப்பட்டுள்ள புகைப்படமும் அடங்கும். டமாரா பங்கி உளவாளியாக இருந்து சே குவேராவுக்கு பெரிதும் உதவியவர். பின்னாளில், 'சே’யின் கெரில்லா படையுடன் தன்னை இணைத்துக்கொண்டு பொலிவியாவை சர்வாதிகாரிகளிடமிருந்து மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். நயவஞ்சகர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டார் டமாரா பங்கி. சொற்ப அளவேயிருந்த சே குவேராவின் கெரில்லா படையை எதிர்த்து அமெரிக்கா உதவியுடன் பொலிவிய அரசு நடத்திய தாக்குதலில் குண்டடிபட்டு பிடிப்பட்ட சே குவேராவை உயிரோடு விட்டால் பிரச்னை வரும் என்பதற்காக அடுத்தநாளே அமெரிக்காவின் நெருக்கடியின் காரணமாக பொலிவிய ராணுவம் சுட்டுக்கொன்றதாகவும் தகவல் உள்ளது. கடைசிக்கட்ட உக்கிர போரில் கெரில்லா படையினர் சுற்றிவளைக்கப்பட்டு மரணத்தைத் தழுவக் காத்திருக்கும் நிலையிலும்கூட, எதிராளிகளை நோக்கி சே குவேராவிடம் வந்த இறுதி வார்த்தைகள், 'பயப்படாமல் எங்களை சுடு'' என்பதுதான். புரட்சியாளர்களின் வீரம் அது.

'சே’யின் புதிய புகைப்படங்களின் உண்மைத்தன்மையை சோதித்த நிபுணர்கள், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியாத வகையில் இந்தப் புகைப்படங்கள் அச்சிடப்பட்டு உள்ளதாகக் கூறினர்.

எத்தனை ஆண்டுகளானாலும் அழிக்க முடியாதது, சே குவேராவின் புகழ்.

நா.இள.அறவாழி

அடுத்த கட்டுரைக்கு