Published:Updated:

விரட்டியடிக்கப்பட்ட மக்கள்... விட்டுப் போகாதப் பூனைகள்... இது திடீர்நகர் அவலம்!

விரட்டியடிக்கப்பட்ட மக்கள்... விட்டுப் போகாதப் பூனைகள்... இது திடீர்நகர் அவலம்!
விரட்டியடிக்கப்பட்ட மக்கள்... விட்டுப் போகாதப் பூனைகள்... இது திடீர்நகர் அவலம்!

விரட்டியடிக்கப்பட்ட மக்கள்... விட்டுப் போகாதப் பூனைகள்... இது திடீர்நகர் அவலம்!

பாலை கொடுத்துப் பழக்கப்படுத்தப்படாத பூனை, தண்ணீரையே விரும்பிக் குடிக்கும். குடிக்கத் தண்ணீரும் இல்லையென்றால்.... இருக்கவே இருக்கிறதே தமிழக அரசு மதுபானக்கடை! 'என்ன பாஸ் சொல்றீங்க... பூனை மது குடிக்குமா?' இது ஆச்சர்ய செய்தியல்ல... அவலச் செய்தி. சென்னையின் கூவம் நதிக்கரையோரம் குடியிருந்த மக்களை ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் விடாப்படியாக சென்னையை விட்டு வெளியேற்றியது மாநகராட்சி. அவர்களும் வேறுவழியில்லாமல் சென்னையின் ஒதுக்குப்புறத்துக்கு இடம்பெயர்ந்தார்கள். ஆனால், அவர்கள் வளர்த்த செல்லப் பிராணியான பூனைகள் அந்த இடத்தை விட்டுப் பிரிய மனமில்லாமல் அங்கேயே சுற்றி வருகின்றன. தனது எஜமானர்கள் இருந்தபோது உணவுத் தேவையை எளிதாகப் பூர்த்தி செய்துகொண்ட பூனைகள், தற்போது எஜமானர்கள் இல்லாமல், காய்ந்த வயிற்றோடு உணவைத் தேடியும், குடிக்கத் தண்ணீரைத் தேடியும் சாலைகளில் சுற்றித் திரிகிறது. ஆனால், இவை உண்பதற்கும் குடிப்பதற்கும் சாப்பாடும் தண்ணீரும் கிடைத்தபாடில்லை. அதனால் அதே இடத்தில் இருக்கும் அரசு மதுபானக் கடையில் குடிக்கவரும் குடிமகன்கள் விட்டுச் செல்லும் சரக்குகளை ருசிக்கத் தொடங்கிருக்கின்றன அந்தப் பூனைகள். உணவில்லாமல் ஏற்கெனவே பல பூனைகள் இறந்துவிட்டன. இப்போதும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பூனைகள் சாலையில் சுற்றித் திரிந்து வருகின்றன. சென்னை கிரீம்ஸ் சாலையில் இருக்கும் திடீர்நகரில்தான் இந்த அவலம்.

கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில், சென்னையின் கூவம் நதிக்கரையோரம் இருந்த குடியிருப்புகளை அதிரடியாக அகற்றியது சென்னை மாநகராட்சி. அப்படி அகற்றப்பட்ட இடங்களில் ஒன்றுதான் சென்னை கிரீம்ஸ் சாலையில் இருக்கும் திடீர்நகர். சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் சுமார் மூவாயிரம் குடும்பங்கள் வசித்துவந்தன. இவர்கள் அனைவரையும் கடந்த அக்டோபர் மாத இறுதியில், சென்னையின் ஒதுக்குப்புறமாக உள்ள காரப்பாக்கத்துக்குச் செல்ல மாநகராட்சி அலுவலர்கள் உத்தரவிட்டனர். மக்கள் அந்த இடத்தை விட்டுச் செல்ல மறுப்பு தெரிவிக்கவே... வலுக்கட்டாயமாக மாநகராட்சி அலுவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

கையில் கிடைத்த பொருள்களுடன் தங்களின் விதியை நொந்துகொண்டு அனைவரும் அந்த இடத்தைவிட்டு வெளியேறினர். ஆனால், அவர்கள் வளர்த்துவந்த பூனைகளோ அந்த மக்களுடன் செல்லாமல், அங்கேயே தங்கிவிட்டன. தற்போது இந்த இடத்தில் சுமார் 50- க்கும் மேற்பட்ட பூனைகள் உலாவருகின்றன. இதில் அவலம் என்னவென்றால், ஆக்கிரமிப்பு என்று சொல்லி அத்தனை மக்களையும் வெளியேற்றிய மாநகராட்சி, பல ஆண்டுகளாக அந்த இடத்திலேயே இயங்கி வரும் மதுபானக்கடையை மட்டும் அகற்றவில்லை. திடீர் நகர் மக்கள் இருந்த பகுதிகள் தற்போது மதுபானக் கடையின் பாராக (BAR) மாறிவிட்டது. உணவையும், தண்ணீரையும் தேடியலைந்த பூனைகள் குடிமகன்கள் விட்டுச் செல்லும் கறி, சிப்ஸ் போன்ற ஸ்நாக்ஸ்களை உணவாக உட்கொண்டும், பிளாஸ்டிக் கப்புகளில் மிச்சமிருக்கும் மதுவினை குடித்துக்கொண்டும் உலா வருகின்றன. 

மதிய நேரத்தில், கையில் பிஸ்கட் பாக்கெட் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுடன் பூனைகளைப் பார்க்க கிரீம்ஸ் ரோடு கிஷோர் மற்றும் பெட்டி ரவி ஆகியோர் வந்தனர். தண்ணீரைப் பிளாஸ்டிக் கப்பில் ஊற்றியவர்கள், பிஸ்கட்டுகளை பேப்பரில் கொட்டியபடியே "டே தம்பிகளா இங்க வாங்க" என்று கூப்பிட்டவுடன், பல பூனைகள் அவர்களை நோக்கி விரைந்து வந்தன. அவர்களிடம் பேச்சுக்கொடுத்தோம். 
"இந்தப் பூனைகள் எல்லாமே இங்க இருந்த சனங்கதான் வளத்தாங்க. அரசாங்க ஆபிஸர்ஸ் வந்து சனங்களை வெளியேறச் சொல்லிட்டாங்க. பாவம் பல வருஷம் இங்க இருந்த சனம் எல்லாம் கையில கிடச்சத எடுத்துக்கிட்டு போயிட்டாங்க. போகும் போது ஆசை ஆசையா வளத்த கோழி, நாய், பூனை எல்லாத்தையும் எடுத்துட்டுப் போனாங்க. பூனைக்கு ஒரு குணம் இருக்கு சார். அது ஆரம்பத்துல இருந்து எங்க வளருதோ... அந்த இடத்த விட்டு அவ்வளவு சீக்கிரம் வெளி இடத்துல போய் அண்டாது. அதேமாதிரிதான் இந்தப் பூனைகளும் இங்கயே தங்கிடுச்சுங்க. சிலர் வேணாம்னு விட்டுட்டுப் போயிட்டாங்க. 

ஆரம்பத்துல நிறைய பூனைகள் இருந்துச்சி... சாப்பாடு கிடைக்காதது, மத்த விலங்குகளோடு சண்டை போட்டது, ரோட்டில் கார் - பைக்ல அடி பட்டது பலவகையில நெறைய பூனைங்க செத்துப்போச்சி. இப்ப இங்க அம்பது பூனை வரைக்கும் இருக்கும். நாங்களும் இதே ஏரியா தான். வேலை இல்லாத நாள்ல எப்பவாச்சம் வருவோம். நாங்க கொடுக்கிறதத் தின்னுட்டு எங்கப் பக்கத்துலேயே படுத்துக்கும். மத்த நாள்ல இங்க குடிக்க வர்றவங்க சைட் டிஷ்ல மீதியைப் போட்டுட்டுப் போயிருவாங்க... அதத் தின்னுட்டும் வாழ்ந்துக்கிட்டு இருக்குதுங்க. இப்ப கப்ல மிச்சம் இருக்குற சரக்கையும் சில பூனைகள் குடிக்க ஆரம்பிச்சிருக்கு. சிலர் அதைப் பாத்ததும், பூனையைத் துரத்தி விட்ருவாங்க. சிலர் கண்டுக்காத மாதிரியே போயிடுவாங்க. ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு பூனைய ஏதோ ஒரு விலங்கு கடுமையாத் தாக்கியிருக்கு. அது தாக்குனதுல பூனைக்கு நல்ல அடி. கண்ணுலாம் காயம். நாங்க என்ன சார் பண்ண முடியும்...?

எப்பயாச்சும் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வந்து தரமுடியும். அதுக்கு மேல எங்களால என்ன பண்ண முடியும்? இந்தப் பூனைகளை ஏதாவது 'விலங்குகள் நல அமைப்பு' எடுத்துட்டுப் போச்சினா நல்லா இருக்கும் சார்... இல்லனா செல்லப் பிராணி வேணும்னு சொல்றவங்க. ஆளுக்கு ஒண்ணாப் புடிச்சிட்டுப் போயி வளத்தாகூட இதுக எல்லாம் பொழச்சிக்கும் சார்" என்றனர் அக்கறையுடன்.

அடுத்த கட்டுரைக்கு