Published:Updated:

எதிர்கால சந்ததிக்கு வாழ இடம் கிடைக்குமா...? - ஸ்டெர்லைட் போராளிகளின் கலந்துரையாடல்!

எதிர்கால சந்ததிக்கு வாழ இடம் கிடைக்குமா...? - ஸ்டெர்லைட் போராளிகளின் கலந்துரையாடல்!
எதிர்கால சந்ததிக்கு வாழ இடம் கிடைக்குமா...? - ஸ்டெர்லைட் போராளிகளின் கலந்துரையாடல்!

ந்தப் பகுதியில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் அவர் மயக்கமடைகிறார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள், உறவினர்கள். அங்கு, அந்தப் பெண்ணைச் சோதனை செய்யும் மருத்துவர்கள், ``வயித்துல இருக்குற குழந்தைக்கு தொப்புள்கொடியில பாதிப்பு ஏற்பட்டிருக்கு. தாய் மாசடைஞ்ச காத்தைச் சுவாசிச்சதாலும், மாசடைஞ்ச தண்ணீரைக் குடிச்சதாலுமே குழந்தைக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கு'' என்று அங்கிருந்த உறவினர்களிடம் குழந்தை பாதிப்புக்கான காரணத்தை எடுத்துச் சொல்வதோடு... ``குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும்'' என்றும் மருத்துவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். அதைக் கேட்டு உறவினர்கள் அதிர்ச்சியடைகின்றனர். இது, கதையல்ல... உண்மையாய் நடந்த சம்பவம். ஆம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் தூத்துக்குடியில் நடந்த உண்மைச் சம்பவம்தான் இது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடச்சொல்லி கடந்த 40 நாள்களுக்கும் மேலாக அந்தப் பகுதி மக்கள் இரவுபகலாகப் போராடி வருகிறார்கள். ஆனால், இதைப் பற்றித் தமிழக அரசு கொஞ்சம்கூடக் கண்டுகொள்ளவில்லை. எதையும் போராட்டத்தின் மூலமே வெற்றிபெற முடியும் என்பதை நன்குணர்ந்திருக்கும் நம் மக்கள், அதை ஜல்லிக்கட்டின் மூலம் நிறைவேற்றிக் காட்டினர். இப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் தொடர்கிறது. அந்த ஆலையை இழுத்து மூடவேண்டும் என்ற நோக்கில் கருத்தரங்கு, கலந்துரையாடல் உள்ளிட்டவற்றைப் பொதுமக்கள் நடத்திவருகின்றனர். இதுபோன்ற ஒரு கலந்துரையாடல் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. 

இதில் நீதியரசர் ஹரிபரந்தாமன், சூழலியல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராம், ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்புக்குள்ளானவர்கள், சென்னையில் பணிபுரியும் தூத்துடியைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக... இந்த மக்கள் போராட்டத்தை மக்கள் மத்தியில் எப்படிக் கொண்டுபோய்ச் சேர்ப்பது; ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியிருக்கும் மக்களின் நிலை என்ன போன்றவை இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டது. இந்தக் கலந்துரையாடல் நிகழ்வின்போதுதான் அந்த ஊரில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு ஏற்பட்ட... அதாவது, மேற்சொன்ன குழந்தையின் கதையைக் கண்ணீருடன் பகிர்ந்துகொண்டார், வெள்ளத்தாயி.

``பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை பலருக்கும் மூச்சுத்திணறல், கேன்சர், தோல்நோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு  மரணம் அடைந்திருக்கிறார்கள். ஆனால், தற்போது தாயின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைகளும் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இனி, எங்கள் சந்ததி எப்படி இந்த மண்ணில் தழைத்தோங்கும்? எங்களுக்கு பணம், வளர்ச்சி எதுவும் வேண்டாம். நல்ல காற்று, நல்ல தண்ணீர், நல்ல உணவு கிடைத்தாலே போதும். வேறு எதுவும் வேண்டாம். எங்கள் சந்ததிகள் இந்தப் பூமியில் வாழ இடம் வேண்டும். கையறுந்த நிலையில் நாங்கள் இருக்கிறோம் எங்களுக்கு உதவுங்கள்'' என்று வெள்ளத்தாயி, சொல்ல... அதைக் கேட்டுக்கொண்டு இருந்தவர்களுக்கும் கண்ணீர் பெருக்கெடுத்தது.

``தினம்தினம் எழுந்திருக்கும்போது குழந்தைகளுக்கு ஒவ்வொரு பெற்றோரும் பால், காபி போட்டுக் கொடுப்பார்கள். ஆனால், எங்கள் ஊரில் தூங்கி எழுந்துவரும் குழந்தைகளுக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்துவருகிறோம். பெற்றவர்களுக்குச் சந்தோஷமே குழந்தைகள் சுறுசுறுப்பாக விளையாடுவதைப் பார்த்துத்தான் வரும். ஆனால், எங்கள் ஊர் குழந்தைகளின் உடல்நலம், அவர்கள் விளையாட முடியாத அளவுக்குதான் இருக்கிறது. எண்ணற்ற பேர் கேன்சராலும், தோல் நோயாலும் பாதிப்படைந்துள்ளார்கள் என்பது ஒருபுறம் என்றால், மறுபுறம்,  பலர் மரணமடைந்திருக்கிறார்கள். இது, எதையுமே இந்த அரசு கண்டுகொள்ளவில்லை; ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை. 

அதிகாரிகள் ஆய்வு செய்தோம் என்று சொல்லி ஸ்டெர்லைட் ஆலைகளுக்கு உதவிக்கரமாக இருக்கிறார்கள். அவர்கள், `தண்ணீரையும், மண்ணையும் ஆய்வுசெய்தோம். அவைகள் நன்றாகத்தான் இருக்கிறது. இதனால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை' என்று சான்று தருகிறார்கள். ஆனால், அவர்கள் ஆய்வுசெய்வது கையுடன் கொண்டுவந்த தண்ணீரையும், மண்ணையும்தான். ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் இப்படித்தான் ஆய்வு செய்துவிட்டுச் சான்று கொடுக்கிறார்கள். உண்மையில் ஆய்வு செய்யவேண்டும் என்றால், எங்கள் நிலத்தடி நீரையும், எங்கள் மண்ணையும் எடுத்து ஆய்வுசெய்ய வேண்டும். அதிகாரிகள் மக்களுக்காக வேலை செய்த காலம் எல்லாம் போய்விட்டது. 

இப்போது அரசியல்வாதிகளுக்காகவும், கார்ப்பரேட் முதலாளிகளுக்காகவும்தான் வேலை செய்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடியபோது எல்லாம் ஏதாவது ஒரு வகையில் அந்தப் போராட்டத்தைத் திசை திருப்பினார்கள். இப்போது எங்கள் போராட்டம் வலுபெற்றிருக்கிறது. எங்களின் தற்போதைய தேவையெல்லாம் எங்களின் சந்ததியினர் நலமாக வாழத் தகுந்த இடத்தை உருவாக்குவது மட்டுமே. அதற்காகப் போராடிக்கொண்டே இருப்போம். ஸ்டெர்லைட் ஆலையை மூடும்வரை இனி நாங்கள் ஓயமாட்டோம்'' என்றனர், தூத்துக்குடி போராட்டக்களத்திலிருந்து வந்தவர்கள். ஜல்லிக்கட்டைப் போன்றே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் போராட்டம் வலு பெற்றிருக்கிறது.