Published:Updated:

``உங்களால சாப்பிடவும் தூங்கவும் முடியுதா?’’ - துப்பாக்கிச் சூட்டில் உயிர்பிழைத்த கோபி

``உங்களால சாப்பிடவும் தூங்கவும் முடியுதா?’’ - துப்பாக்கிச் சூட்டில் உயிர்பிழைத்த கோபி
News
``உங்களால சாப்பிடவும் தூங்கவும் முடியுதா?’’ - துப்பாக்கிச் சூட்டில் உயிர்பிழைத்த கோபி

அந்தப் பொண்ணு யாரு எவருன்னு எனக்குத் தெரியாதுங்க. ஆனா, நாங்கல்லாம் யாருங்க? குடிமக்கள்தானே! ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைத் தமிழ்நாடே நடத்துச்சே. அப்போ யாருக்கும் எதுவும் தப்பா தோணலையா? கண்களைத் துடைத்தபடி கேட்கிறார், “டீவில இந்த காட்சிகளையெல்லாம் பாத்துட்டு, உங்களால சாப்பிடவும், தூங்கவும் முடியுதா.. ஆச்சரியமா இருக்குங்க எனக்கு...”

தாமிரபரணி படுகொலை, பரமக்குடி துப்பாக்கிச்சூடு எனத் தமிழ்நாட்டில் நடந்த படுகொலைகளை மீண்டும் கண்முன் நிறுத்தியிருக்கிறது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு. ``இந்தமுறை இந்தச் சம்பவம் `போலச்செய்தல்’ போன்று நடக்காமல், நவீன`உத்தி’களோடு நடத்தப்பட்டதாய்த் தெரிகிறது'' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். `இரண்டு நாள்களாக நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியானவர்களின் உடல்களை, ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை வாங்க மாட்டோம்' என உறவினர்கள் போர்க்கொடி தூக்க, மருத்துவமனையே பதற்றநிலையில் இருக்கிறது. இதில், காளியப்பன் என்கிற இளைஞர் சம்பவ இடத்திலேயே குண்டு துளைத்து இறந்துள்ளார். இறந்த உடலை பரிசோதனைகூட செய்யாமல், லத்தியால் தட்டி ``ஏய்... ரொம்ப நடிக்காத, எழுந்துர்றா!” எனத் தன் வீரத்தைக் காட்டியுள்ளனர் காவல் துறையினர்.

போராட்டத்தில் குண்டு துளைத்துப் பலியான மணிராஜின் இளைய சகோதரர் ரமேஷ் கண்ணனிடம் பேசினோம்...

``காலையில எல்லாரும் வீட்லதான் இருந்தோம். வீட்ல குழந்தைங்களோடு அண்ணன் விளையாடிட்டு இருந்தாங்க. அம்மா சாப்பிடச் சொன்னாங்க. சாப்பிடல...” மேற்கொண்டு பேச முடியாமல் திணறி, தொடர்ந்தார். ``போராட்டங்கள்ல தொடர்ந்து அவர் பங்கெடுத்துட்டு வந்தார். காலைலயும் போராட்டத்துக்குத்தான் கிளம்பியிருக்கார். அம்மா கேட்டப்போ, `அண்ணியைப் பார்த்துட்டு வரேன்'னு சொல்லிட்டுப் போனார். அண்ணி மூணு மாசம் கர்ப்பமா இருக்காங்க. அவங்களுக்கு என்ன பதில் சொல்லப்போறாங்க இவங்கல்லாம்?” என்று மனமுடைந்து அழுகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மரண ஓலங்கள் மட்டுமே கேட்கும் முத்து நகரில், `யாரிடம் இருக்கிறது கட்டுப்பாடு?', `மக்களைச் சுடும் அதிகாரம் யார் அளித்தது?' போன்ற கேள்விகள் ஓங்க, போராட்டக் களத்திலிருந்து உயிர்பிழைத்து, காலில் காயத்துடன் திரும்பியிருக்கும் கரூரைச் சேர்ந்த கோபியிடம் பேசினேன்.

``தூத்துக்குடி மட்டுமல்ல, வேற வேற நகரங்கள்ல இருந்தும் நிறைய பேர் வந்தாங்க. தூத்துக்குடி டவுன் பகுதிக்குக் கூட்டம் வந்தப்போ, கிட்டத்தட்ட ஏழாயிரம் பேருகிட்ட இருந்தாங்க. `கலெக்டர் ஆபீஸுக்குப் போய்தான் ஆகணும். என்ன நடந்தாலும் அங்க போகணும்'னுதான் மக்கள் எல்லாரும் முடிவுபண்ணியிருந்தாங்க. விவிடி சிக்னல்கிட்டயே காவல்துறை, பேரி கார்டெல்லாம் போட்டு தடுக்க ஆரம்பிச்சுடுச்சு. மக்கள், கலவரம் பண்றதா சில ஊடகங்கள் சொல்லுது. எங்களை முதன்முதல்ல தாக்கினதே போலீஸ்தான். அமைதியா நடந்து போனவங்களைத் தடுத்து தடியடி நடத்தியதுல அஞ்சு கிலோமீட்டருக்கு முன்னாடியே சிலருக்கு மண்டை உடைஞ்சுடுச்சு. அவங்க அவங்களைக் காப்பாத்திக்கிறதுக்காகச் சில பேர் போலீஸ் மேல கல்லெறிஞ்சாங்க. திரும்பவும் நடந்தபடியே ஒரு கிலோமீட்டர் தூரம் பயணிச்சோம். கண்ணீர்ப் புகைக்குண்டுகளைப் போட்டாங்க. மக்கள் கலையாம முன் நோக்கிப் போனாங்க. காவல்துறை வாகனங்களைக் கவிழ்க்கவும் செஞ்சாங்க. தீ வைக்கணும், காவல் துறையினரை அடிக்கணும்னு எங்களுக்கு எந்தத் திட்டமும் இல்லை. அவங்கதான் எல்லாத்தையும் திட்டம்போட்டு செஞ்சிருக்காங்க.

ஆட்சியர் அலுவலகத்துக்குப் போற வரைக்கும் இப்படி பேரிகார்டு அமைச்சுத் தடுத்துட்டு இருந்தவங்க, உள்ளே வந்ததும் உக்கிரமானாங்க. இப்படிக் கொலைவெறியோடு காத்திருப்பாங்கன்னு நாங்க யாருமே எதிர்பார்க்கலை. மக்களுக்கு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான உணர்வுதான் அதிகமா இருந்தது. போலீஸ் மேல வன்மம் காட்டுறதுக்கெல்லாம்  நாங்க வரலை. ஆட்சியர் அலுவலகத்துக்குள்ள உட்கார்ந்திருந்தவங்க மேல போலீஸ் தடியடி நடத்த ஆரம்பிச்சாங்க. திடீர்னு அவ்வளவு பெரிய கூட்டம் கலைஞ்சதும், கூட்ட நெரிசல் அதிகமாச்சு. எல்லாரும் ஓடினாங்க. நான், என்கூட வந்த அப்பு, பக்கத்துல வெனிஸ்டான்னு ஒரு பொண்ணு எல்லாரும் ஓடினோம். வெனிஸ்டா துப்பாக்கிக் குண்டு துளைச்சு கீழ விழுந்தாங்க. உடனே அஞ்சாறு பேரு சேர்ந்து அந்தப் பொண்ணைத் தூக்கி தண்ணி கொடுத்தாங்க. உள்ளே இறங்கவேயில்லை. போயிடுச்சு அந்தப் பொண்ணு. உள்ளங்கை தூரம்தான் எனக்கும் அந்தப் பொண்ணுக்கும். நான் எப்படிப் பொழச்சேன்னு தெரியலை. ஸ்னைப்பர் ஷூட் பண்ணியிருக்காங்கன்னு சொல்றாங்க. 

அந்தப் பொண்ணு யாரு எவருன்னு எனக்குத் தெரியாதுங்க. ஆனா, நாங்கல்லாம் யாருங்க? குடிமக்கள்தானே! ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைத் தமிழ்நாடே நடத்துச்சே. அப்போ யாருக்கும் எதுவும் தப்பா தோணலையா?” என்று நிறுத்தி, கண்களைத் துடைத்தபடி கேட்கிறார், ``இந்தக் காட்சிகளையெல்லாம் டீவியில பார்த்துட்டு உங்களால சாப்பிடவும் தூங்கவும் முடியுதா... ஆச்சர்யமா இருக்குங்க எனக்கு!” என்கிறார் கோபி.