Published:Updated:

"பலி அதிகம், உத்தரவிட்டது யார்?" - தூத்துக்குடி 'உண்மை கண்டறியும் குழு' அறிக்கை முழு விவரம்

தூத்துக்குடியை மறக்க நமக்கு நிறைய சம்பவங்கள் வந்துவிட்டன. ஆனால், தூத்துக்குடி இன்னும் துயரத்திலேதான் இருக்கிறது. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர், அந்த வலியிலேயே இறுதிவரை ஒருவார்த்தைகூட பேசாமல் இறந்து போனார். செல்வசேகருக்கு வயது 40. திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்கு அப்பா கிடையாது.

"பலி அதிகம், உத்தரவிட்டது யார்?" - தூத்துக்குடி 'உண்மை கண்டறியும் குழு' அறிக்கை முழு விவரம்
"பலி அதிகம், உத்தரவிட்டது யார்?" - தூத்துக்குடி 'உண்மை கண்டறியும் குழு' அறிக்கை முழு விவரம்

தூத்துக்குடியை மறக்க நமக்கு நிறைய சம்பவங்கள் வந்துவிட்டன. ஆனால், தூத்துக்குடி இன்னும் துயரத்திலேதான் இருக்கிறது. 

மே 23ம் தேதி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அந்த மனிதரைப் பார்த்தேன். ஒல்லியான தேகம். உடல் முழுக்கக் கொப்புளங்கள். வாய் கொஞ்சம் கோணல். அவர் உடலே அப்படித்தான். நான் அங்கிருந்த ஒரு மணி நேரமும் அவர் துடித்துக் கொண்டேயிருந்தார்.  மருத்துவர்கள் தொடர்ந்து வந்து வந்து அவரைப் பார்த்துக் கொண்டேயிருந்தார்கள். அவரை ஏன் ஐ.சி.யூவுக்குக் கொண்டு போகாமல் இங்கேயே வைத்திருக்கிறார்கள் என்ற கேள்வி எனக்கு எழுந்தது. அவர் படுக்கைக்கு அருகில், வெளிறிய முகத்துடன் ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். அவர் கதறும் போதெல்லாம், பதறியபடி ஓடிப்போய் மருத்துவரை அழைத்து வருவார். மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளிப்பதை மிரட்சியோடு தூரத்தில் நின்று பார்ப்பார். ஒரு மணி நேரத்தில் இது போல் 5 தடவைக்கும் மேலாக நடந்தது. அவர் வலியில் அரற்றுவது மொத்த வார்டிலும் எதிரொலித்தது. 

தூத்துக்குடியிலிருந்து சென்னை வந்ததும் அந்தச் செய்தி வந்தது. துப்பாக்கிச் சூடு அல்லாமல், போலீஸ் அடித்ததிலேயே ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அவர் பெயர் செல்வசேகர். நான் உயிரோடு முந்தைய நாள் பார்த்தவர். தூத்துக்குடி சாயர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வசேகர். அன்று போராட்டத்தின் காரணமாக, அவர் வேலை செய்யும் நிறுவனம் விடுமுறை அறிவிக்கிறது. திரும்ப வீட்டுக்குச் செல்வதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருக்கிறார். அங்கு வரும் சில போலீஸார், அவரைச் சரமாரியாகத் தாக்குகிறார்கள். வலியில் சுருண்டு விழுந்தவரின் நெஞ்சின் மீது காலால் மிதிக்கிறார்கள். 

உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர், அந்த வலியிலேயே இறுதிவரை ஒருவார்த்தைகூட பேசாமல் இறந்து போனார். செல்வசேகருக்கு வயது 40. திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்கு அப்பா கிடையாது. திருமணமாகாத இரண்டு சகோதரிகளும், அவரின் அம்மாவும் இனி என்ன செய்வார்கள்? இந்த மரணத்தை எண் 13 ஆக வெறுமன கடந்துவிட முடியுமா? 

இப்படி ஒவ்வொரு மரணத்துக்குப் பின்னணியிலும், குண்டு அடிபட்டவர்களின் பின்னணியிலும் ஏராளமான கதைகள் இருக்கின்றன. மறந்த தூத்துக்குடியை நினைவுபடுத்தத்தான் முதலில் இந்தக் கதையைச் சொன்னேன். 

``தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு" (National Confederation of Human Rights Organizations) சார்பாக, ஓர் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு கள ஆய்வுகளை முடித்துவிட்டு தற்போது அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். 

இத்தனை நாள்களில் தூத்துக்குடி குறித்த பல கதைகளைக் கேட்டிருந்தாலும், சில அதிர்ச்சிகரமான உண்மைகளை தகுந்த ஆதாரங்களோடு முன்வைக்கிறது இந்த அறிக்கை. 

1.  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட மே 22ம் தேதி அன்று காலை மக்கள் குடும்பம் குடுமபமாகப் பிள்ளை குட்டிகளுடன் ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் செல்லத் தொடங்கினர். அப்போது விவிடி சிக்னல் அருகே மக்களைத் தடுக்க மாடுகளை வாலை முறுக்கி, வெறியேற்றி மக்கள் கூட்டத்தை நோக்கி விட்டுள்ளனர். பல பெண்களும், குழந்தைகளும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

2. மில்லர்புரம், திரேஸ்புரம் போன்ற பகுதிகளிலிருக்கும் இளைஞர்களை கண்மூடித்தனமாக அடிப்பது, வீட்டுக்குள் புகுந்து கைது செய்யும் நடவடிக்கைகளைப் போலீஸ் மேற்கொண்டது. அவர்களிடமிருந்து தப்ப அந்தப் பகுதியைச் சேர்ந்த பல ஆண்களும், படகுகளில் கடலுக்குள் சென்று இரண்டு மூன்று நாள்கள் தங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. 

3. அரசு காட்டும் 13 யைத் தாண்டி 14 வதாக ஒரு மரணம் ஏற்பட்டது. ஒரு திருமணத்துக்காகப் பரோலில் வெளிவந்திருந்த ஆயுள் கைதி பாரத். மே 23 அன்று சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது காவல்துறையினரால் அடித்துத் தூக்கிச் செல்லப்பட்டார். காவல் நிலையத்தில் வைத்து அவரை உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளது போலீஸ். பின்னர், நீதிமன்ற ஆணையின் பேரில் பாளையங்கோட்டை சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சரியான சிகிச்சை இல்லாமல் மே 29 இரவு இறந்துவிட்டார். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்கிறது காவல்துறை. 

4. நூற்றுக்கணக்கான இளைஞர்களை கைது செய்து பல இடங்களில் கொண்டு போய் வைத்தது போலீஸ். தங்கள் பிள்ளைகளைக் காணாமல் பல குடும்பங்கள் அங்குமிங்கும் தேடி அலைந்தன. இவ்வாறு பலர் காணவில்லை என்பது குறித்து தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கரைஞர் சந்திரசேகர் ஒரு மனுத்தாக்கல் செய்கிறார். வழக்கை விசாரித்த நடுவர் பகவதி அம்மாள், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடியில் உள்ள காவல் நிலையங்களில் விசாரணை நடத்துமாறு விளாத்திக்குளம் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) காளிமுத்துவேலுக்கு உத்தரவிட்டார்.

அவர் ஆய்வு செய்தபோது வல்லநாடு துப்பாக்கிப் பயிற்சித் தளத்தில் 95 பேர் கடும் சித்ரவதையில் சிக்கி அடைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அவர்களில் 30 பேர் விடுவிக்கப்பட்டு 65 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 
முதன்மை நீதிபதி சாருஹாசினி உடனடியாக உயர்நீதிமன்றப் பதிவாளருடன் தொடர்புகொண்டு, அவரது அனுமதியோடு அப்போதே வழக்கை விசாரித்து, உடனடியாக அனைவரையும் விடுதலை செய்தார். அதன் பிறகு, காவல்துறை மீண்டும் 62 பேரை ஆஜர்படுத்தியது. அவர்களை சொந்த ஜாமினீல் விடுவிப்பதற்காக இரவு 12 மணி வரை நீதிபதி சாருஹாசினி காத்திருந்தும் கூட, அரசு வழக்கறிஞர் சரியான வகையில் ஒத்துழைக்காததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இப்போது வரை இன்னும் 30 பேர் சிறையில்தான் இருக்கிறார்கள். 

நீதிபதிகள் அண்ணாமலை, சாருஹாசினி, கமலம்மாள் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கலில் மிக்க கரிசனத்துடன் நடந்து  கொண்டார். 

5. துப்பாக்கிச் சூடு எந்த முறையான அனுமதியும், எச்சரிக்கையுமின்றி நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தன்று மாவட்ட கலெக்டர் ஊரில் இல்லை. அருகில் உயரதிகாரிகள் யாரும் இல்லை என்பதைக் காரணம் காட்டி, இரண்டு துணை தாசில்தாரர்களும், கோட்டக் கலால் துறை அதிகாரி ஒருவரும் சுடுவதற்கு ஆணையிட்டதாக ``முதல் தகவல் அறிக்கைகள்" (FIR) பதியப்பட்டுள்ளன. 

22-05-2018 இல் தூத்துக்குடி (சிப்காட்) காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரில் , தனி துணை வட்டாட்சியர் (தேர்தல்) சேகர் என்பவர் சுடுவதற்குத் தான் ஆணையிட்டதாகக் கூறியுள்ளார். 

அதே நாளில், தூத்துக்குடி (வடக்கு) காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரில் துணை வட்டாட்சியர் கண்ணன் என்பவர் சுட ஆணையிட்டதாக ஒப்புதல் அளித்துள்ளார். 

மே 23 அன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில், சுடுவதற்கு ஆணையிட்டது தூத்துக்குடி கோட்டக் கலால் அலுவலர் செள. சந்திரன் எனக் கூறப்படுகிறது. 

மக்கள் தடையை மீறி பேரணி நடத்திக் கைதாவது என முடிவு செய்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் அங்கு இல்லாமல் போனது என்பதும், இன்று பொய்யான எஃப்.ஐ.ஆர்கள் தயாரிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு தமிழகக் காவல்துறை மீதுள்ள கடைசித் துளி நம்பிக்கையையும் இழக்கச் செய்கிறது. 

மக்களை கொல்வதற்கான ஆணையிடலில் இத்தனை பொய்கள் உள்ளதற்கு அரசு முறையான விளக்கம் தர வேண்டும். 

இப்படியாக, பேராசிரியர் அ. மார்க்ஸ் தலைமையில் இயங்கிய இந்த உண்மை கண்டறியும் குழு பல விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளது. 
பல உயிர்களை பலியாக்கிவிட்டு, இன்னும் முழுமையான சட்ட நுணுக்கங்களை ஆராயாமல் இப்போதைக்கு ஸ்டெர்லைட்டை மூடி சீல் வைத்துவிட்டு ``ஸ்டெர்லைட் நாயகன்" என்ற பட்டத்தோடு சுற்றும் ஆட்சியாளரின் கரங்களில், ரத்தம் குடித்த இந்தத் தூத்துக்குடியின் கறை என்றும் அழியாமல் நிலைத்திருக்கும். 

அதை ``ஸ்டெர்லைட் நாயகனும்", ``ஜல்லிக்கட்டு நாயகனும்" உணர்வார்களா என்பது பெரிய கேள்விதான்.