Published:Updated:

`டெல்லியில் கமல் - ராகுல் சந்திப்பு..!' கூட்டணிக்கு அச்சாரமா..?

`டெல்லியில் கமல் - ராகுல் சந்திப்பு..!' கூட்டணிக்கு அச்சாரமா..?
`டெல்லியில் கமல் - ராகுல் சந்திப்பு..!' கூட்டணிக்கு அச்சாரமா..?

`டெல்லியில் கமல் - ராகுல் சந்திப்பு..!' கூட்டணிக்கு அச்சாரமா..?

துரையில் நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி, 'மக்கள் நீதி மய்யம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். கட்சியின் கொடியையும் அந்தக் கூட்டத்தில் அவர் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தன் கட்சியின் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். மேலும், தனது கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவும் விண்ணப்பித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, டெல்லி சென்று, தேர்தல் ஆணைய அதிகாரிகளை நேற்று சந்தித்து விளக்கம் அளித்தார். அதன் பின்னர், ஜூன் 19-ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியைச் சந்தித்தார். அன்றைய தினம், ராகுல்காந்தி பிறந்தநாள் என்பதால் இந்தச் சந்திப்பு பரபரப்பாகப் பேசப்பட்டது. இருவரும் பரஸ்பர நலம் விசாரித்துக் கொண்டதுடன், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் ஆலோசித்தனர்.

இதுகுறித்து, ராகுல்காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், `கமலுடனான இந்தச் சந்திப்பு அர்த்தமுள்ளதாக இருந்தது. அரசியல் களத்தில் இரண்டு கட்சிகளும் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து பேசினோம். தமிழக அரசியல் நிலவரம் குறித்துப் பேசினோம்' என்று குறிப்பிட்டு இருந்தார். இந்தப் பதிவுக்கு கமல் நன்றி தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து கமல் இன்று, டெல்லியில் சோனியா காந்தியைச் சந்தித்தார். ''இருவரும் அரசியல் நிலவரம் குறித்துப் பேசினோம். தேர்தல் கூட்டணி குறித்து எதையும் பேசவில்லை'' என்று இந்தச் சந்திப்பு குறித்து கமல் கூறியுள்ளார். 

கமல் - சோனியா சந்திப்பு குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''மக்களால் புறந்தள்ளப்பட்ட கட்சி காங்கிரஸ். அது பழைய புத்தகம். அக்கட்சியின் தலைவர்களைக் கமல் சந்தித்துள்ளதால் எந்தப் பயனும் அவர்களுக்கும் இல்லை; மக்களுக்கும் ஏற்படாது'' என்றார். தமிழக அமைச்சரும் அ.தி.மு.க மூத்த தலைவருமான டி.ஜெயக்குமார், ''கமல் யாரை வேண்டுமானலும் பார்க்கட்டும். அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். நாங்கள் மக்களோடு மக்களாக இருக்கிறோம். கமல், யாரைப் போய் பார்த்தாலும் ஒன்றும் நடந்து விடாது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஆகியோரையும்கூட அவர் பார்க்கலாம். அது, அவரது விருப்பம்'' என்றார்.

தமிழக அரசியலில் தி.மு.க-வுடன் சேர்ந்துதான் காங்கிரஸ் கட்சி, பொதுவானப் பிரச்னைகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அந்த அணியில் இருக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் அகில இந்திய அளவில் மோதல் இருந்து வருகிறது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் அல்லாத கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சில மூத்த தலைவர்கள் பேசி வருகிறார்கள். எனவே, ஒவ்வொரு மாநிலத்துக்கும் வெவ்வேறு கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியை வைத்துக்கொள்ளவும் காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றன. அதேநேரத்தில், ஆம் ஆத்மி கட்சியோடும் கமல் நெருக்கமாக இருந்து வருகிறார். 2017-ம் ஆண்டு செப்டம்பரில் சென்னை வந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் கமலை சந்தித்துப் பேசினார். அதுபோல, கேரளா சென்று அந்த மாநில முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்தார். இதெல்லாம் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

ஆனால், கமல் கணக்கு வேறுமாதிரியாக இருக்கிறது. அதாவது அனைத்துக் கட்சிகளுடனும் இணக்கமாக இருக்கவே அவர் விரும்புகிறார். நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டவர்கள்தான் வெற்றிபெற்று ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பதை அவர் உணர்ந்து இருக்கிறார். தேர்தல் நேரத்தில் கட்சிகள் அணி மாறும்போது மக்கள் நீதி மய்யம் தலைமையில் ஓர் அணியை அமைக்க முயன்றால், அப்போது கமலின் இந்த இணக்கம், கைகொடுக்கும் என்பதற்காகவே அனைத்துக்கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார் என்கிறார்கள் அவருடைய கட்சி நிர்வாகிகள். தேர்தலை முன்வைத்து காய் நகர்த்தத் தொடங்கிவிட்டார் கமல்.

அடுத்த கட்டுரைக்கு