Published:Updated:

``நிலத்தைக் காப்பாத்த நினைச்சதுக்கு வழக்கா? அரசுதான் முதல் குற்றவாளி!'' - விவசாயி சந்திரகுமார்

``நிலத்தைக் காப்பாத்த நினைச்சதுக்கு வழக்கா? அரசுதான் முதல் குற்றவாளி!'' - விவசாயி சந்திரகுமார்

நாட்டோட தலைநகரத்துல, விவசாயிங்க அம்மணமா ஓடுனப்ப, அதை நெனச்சு உங்களுக்கு அவமானமா இல்லையா? என் நெலத்த, என் வாழ்க்கையைக் காப்பாத்திக்க நான் போராடுனா, உங்களுக்கு அவமானமா தெரியுதா. விடியற்காலைல நிலத்தை அளவீடு செஞ்சு பிடுங்கிட்டுப் போற அரசுதான் குற்றவாளி.

``நிலத்தைக் காப்பாத்த நினைச்சதுக்கு வழக்கா? அரசுதான் முதல் குற்றவாளி!'' - விவசாயி சந்திரகுமார்

நாட்டோட தலைநகரத்துல, விவசாயிங்க அம்மணமா ஓடுனப்ப, அதை நெனச்சு உங்களுக்கு அவமானமா இல்லையா? என் நெலத்த, என் வாழ்க்கையைக் காப்பாத்திக்க நான் போராடுனா, உங்களுக்கு அவமானமா தெரியுதா. விடியற்காலைல நிலத்தை அளவீடு செஞ்சு பிடுங்கிட்டுப் போற அரசுதான் குற்றவாளி.

Published:Updated:
``நிலத்தைக் காப்பாத்த நினைச்சதுக்கு வழக்கா? அரசுதான் முதல் குற்றவாளி!'' - விவசாயி சந்திரகுமார்

ஸ்டெர்லைட்டுக்காக நடந்த உயிர்பலியின் துயரம் மறைவதற்குள், அடுத்த வாழ்வாதாரப் பிரச்னைக்காகப் போராடுவதற்குத் தயாராகியிருக்கின்றன, தமிழகத்தின் ஐந்து மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்கள். `சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து `நிலமும், வீடும், கால்நடைகளும் போன பிறகு வாழ்க்கை என்ன வாழ்க்கை?’ என்னும் கேள்வியுடன் போராடும் விவசாயிகளிடம், தங்களின் வழக்கமான அதிகார அணுகுமுறையைக் கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கிறது காவல்துறை.

நில உரிமையாளர்களில் குறைந்த சதவிகிதத்தினர் மட்டுமே நிலத்தைத் தருவதற்கு மறுத்துவருவதாக அரசுத்தரப்பு தகவல் அளிக்கும் நிலையில், களத்தில் விவசாயிகளின் மனநிலை, வேறுவிதமாக இருக்கிறது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, காளியாப்பேட்டை, மாளகாப்பாடி, எம்.தாதம்பட்டி, முக்காரெட்டிப்பட்டி, மஞ்சவாடி இருளப்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் பேசியபோது, மண்ணைக் காப்பாற்றத் துடிக்கும் அவர்களில் ஒருவர்கூட, எவ்வளவு அதிகமான தொகைக்கும் நிலத்தைத் தரத் தயாராக இல்லை என்பது புரிந்தது.

நிலங்களின் ஒவ்வொரு மூலையிலும் நட்டுவைக்கப்பட்டிருக்கும் கறுப்புக் கொடிகள், விவசாயிகளின் மனக்கசப்பைச் சொல்லிக்கொண்டிருந்தன. அரியனூர் தொடங்கி மஞ்சுவாடி கணவாய் வரையிலான 37 கிலோமீட்டர் தூரமும், செழித்து வளர்ந்திருக்கும் பாக்கும், தென்னையும், நெற்பயிரும்தான் தங்களின் வாழ்வாதாரமாக இருக்கின்றன என்பதை ஒவ்வொருவரும் உறுதிப்படுத்துகிறார்கள். 

சென்ற 21-ம் தேதி பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா இருளப்பட்டி பகுதியில் நிலங்களை அளவீடு செய்து கல் நடுவதற்கு வந்திருந்த வருவாய்த் துறை அதிகாரிகளிடம், ``கல் நட வேண்டாம்'' என்று கேட்டிருக்கிறார் நிலத்தின் உரிமையாளர் சந்திரகுமார். வருவாய்த் துறை அதிகாரிகள் தங்கள் வேலையைத் தொடர்ந்துகொண்டே இருக்கையில், தன் மீதும் தன் குடும்ப உறுப்பினர்கள் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளித்துவிடுவதாக எச்சரிக்கை செய்திருக்கிறார் சந்திரகுமார்.

நம்மாழ்வாரை ஆதர்சமாகக் கொண்டவரான சந்திரகுமாரைச் சந்தித்து, ``அளவீடு நடத்த சம்மதித்தீர்களா?'' என்று கேட்டோம். 

``எரிஞ்சு சாவணும்கிற மனநிலையிலதான் இருந்தோம். சும்மா அரசாங்கத்தை மிரட்டுறதுக்காக இதை நாங்க சொல்லலை. எந்த ஒரு பச்சையும் கொடியும் வளரணும்னா ஒரு விதை வேணும்” பக்கத்தில் நிற்கும் மரத்தைக் காட்டி, ``யார் போட்ட விதையாலோதானே இந்த மரம் நிழல் குடுக்குது. எங்களையே எரிச்சிக்கத் தயாராதான் இருந்தோம். இந்தத் திட்டத்தை நிறுத்துறதுக்கு நாங்களே விதையா இருந்துட்டுபோறோமே” என்றவர் சமநிலை இழந்து பதற்றமடைந்தார்.

தேற்றிப் பேசவைத்ததும், ``காலையில 5 மணிக்கு வருவாய்த் துறை அதிகாரிகளும் போலீஸ்காரங்களும் வந்தாங்க. நில அளவீட்டுக்கு போலீஸ் எதுக்கு வருது? இந்த மாவட்டத்துல, ஒரு விவசாயிகூட நிலத்தைக் கொடுக்கத் தயாரா இல்லை. நாங்க என்ன திருட்டு நிலத்தையா வெச்சிருக்கோம்? எங்கக்கிட்ட எதையும் கலந்து பேசாம, இது என்ன கூத்து? காலையில 5 மணிக்கு பேட்டரி அடிச்சிக்கிட்டு வந்து, நில அளவீடு செய்ற இந்த அரசாங்கத்தை நாங்க எப்படி நம்புறது?” என்றார் சந்திரகுமார்.

வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும் காவல் துறையினருக்கும் கொலைமிரட்டல் விடுத்ததாகவும், அவர்களிடம் தகாத வார்த்தைகளைப் பேசியதாகவும், மாடுகளை வைத்துத் தாக்க முயன்றதாகவும் தன்மீது மூன்று வழக்குகள் பதிந்திருப்பதாகச் சொல்கிறார் சந்திரகுமார். இவரின் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து போலீஸார் அச்சுறுத்துவதாகக் கூறுகிறார்கள், சந்திரகுமாரின் உறவினர்கள்.

``போலீஸ்காரங்க என்னைக் கூப்பிட்டு, நான் தமிழ்நாட்டையே அவமானப்படுத்திட்டேன்னு சொல்றாங்க. விவசாயிங்க தீக்குளிச்சுச் செத்தா, உங்களுக்கு என்ன அவமானம்? நாட்டோட தலைநகரத்துல, விவசாயிங்க அம்மணமா ஓடினப்ப, அதை நினைச்சு உங்களுக்கு அவமானமா இல்லையா? என் நிலத்தை, என் வாழ்க்கையைக் காப்பாத்திக்க நான் போராடினா, உங்களுக்கு அவமானமாத் தெரியுதா? விடியற்காலையில நிலத்தை அளவீடு செஞ்சுப் புடுங்கிட்டுபோற அரசுதான் குற்றவாளி. மிரட்டி மிரட்டி நிலத்தை அளவீடு செஞ்சுட்டாங்க. ஆனா, என் நிலத்தை என் உயிர் போனாதான் என்கிட்டேருந்து வாங்க முடியும்” என்றார்.