Published:Updated:

``வேங்கைப்புலி மன்னனடா… வீரர்களின் தலைவனடா!" அண்ணாவை பாடலில் புகுத்திய கருணாநிதி

இசையமைப்பாளர் சுதர்சனம், ஏ.வி.மெய்யப்ப செட்டியாரிடம்... ‘‘வேறு டியூனைத் தேர்ந்தெடுக்கலாம்’’ என யோசனை கூறியிருக்கிறார். ஆனால், கருணாநிதியோ... அதே டியூனில் ஒரு பாட்டு எழுதி அனைவரது பாராட்டையும் பெற்றார்.

``வேங்கைப்புலி மன்னனடா… வீரர்களின் தலைவனடா!" அண்ணாவை பாடலில் புகுத்திய கருணாநிதி
``வேங்கைப்புலி மன்னனடா… வீரர்களின் தலைவனடா!" அண்ணாவை பாடலில் புகுத்திய கருணாநிதி

‘ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தில் சூரியனுக்கு அஸ்தமனமே இல்லையாம்’ என்கிறது ஒரு பழமொழி. அதாவது, உலகம் முழுவதும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் இருப்பதை எடுத்துரைப்பதே அதன் பொருள். அதுபோலத்தான் தி.மு.க தலைவர் மு.கருணாநிதிக்கும் அகிலம் முழுவதும் உடன்பிறப்புகள் உள்ளனர். எழுதுகோலுக்கு என்றும் ஓய்வு அளிக்க விரும்பாதவர், முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதி. அதனால்தான் கவிப்பேரரசு வைரமுத்து, கருணாநிதியின் கலையுலகப் பொன்விழா மலரில் இப்படி வாழ்த்தியிருப்பார். 

‘உன்னை வாழ்த்துகிறேன்
வாழ்த்துக்கும் வயதுக்கும்
சம்பந்தம் இல்லை...

கடவுளை,
வள்ளுவன் வாழ்த்தலாம்...
கலைஞரை,
வைரமுத்து
வாழ்த்தக் கூடாதா?

வாழ்த்துகிறேன்...
ஆயின்,
எதை வாழ்த்த?

உன் விரல்கள் தாங்கும்
எழுதுகோலையா?
இல்லை,
எழுதுகோல் தாங்கும்
விரல்களையா?

எதனையும் வாழ்த்தலாம்...
எழுதுகோலே
உன் விரலாய்ப் போனதால்!’

இப்படி, கருணாநிதியை வாழ்த்திய கவிஞர் வைரமுத்துதான் அவர் வைத்திருந்த பேனாவை... அவரிடமிருந்து அன்புப் பரிசாகப் பெற்றுக்கொண்டார்.  

சிலம்பொலி செல்லப்பனார் கவிதை!

கவிஞர் வைரமுத்து மட்டுமல்ல... இன்னும் பல வைரக்கற்கள் கருணாநிதியையும் அவருடைய எழுத்துகளையும் என்றும் வாழ்த்திக் கொண்டுதான் இருக்கும். ‘வயசானாலும், உன் அழகும்... ஸ்டைலும் மாறவேயில்லை’ என்று நடிகர் ரஜினிகாந்த்தைப் பார்த்து ரம்யாகிருஷ்ணன், ‘படையப்பா’ படத்தில் சொல்வார். ஆம். அதுபோலத்தான் கருணாநிதியுடைய எழுத்தும் எழுத்தின் நடையும் என்றும் மாறாது. தமிழுலகின் கலைமகனும் திருவாரூரின் திருமகனுமான கருணாநிதி, திரைத் துறையில்... கதை, திரைக்கதை, வசனம், பாடல், தயாரிப்பு எனப் பல பரிமாணங்களில் பயணித்தவர். இப்படி எழுத்துச் சிகரத்தில் பல முகடுகளைப் பார்த்த கருணாநிதி, திரைப்படப் பாடல்கள் எழுதுவதிலும் புலமை பெற்றவர். அவர் எழுதிய பாடல்கள் இன்றும் காலத்தால் அழிக்க முடியாதவை. அவருடைய திரைப்படப் பாடல்கள் பற்றி செந்தமிழ்ச் சான்றோர் சிலம்பொலி செல்லப்பனார் எழுதிய கவிதைதான் இது.

‘பூ வரிகள் புயல் வரிகள் கலைஞர் தந்த
புகழ் வரிகள் திரைப்பாடல் வரிகள் காதில்
தூவிவிட்ட சங்கீத விதைகள் நெஞ்சைத்
தொடுகின்ற ஒவ்வொன்றும் இனமானத்தை
ஈவு வைத்துக் கொண்டிருக்கும் சொற்களுக்கு
இசை வந்து குடை பிடிக்கும் உச்சரித்த
நாவெல்லாம் களிநயத்தில் தோயும் கேட்போர் 
நரம்பெல்லாம் பகுத்தறிவு வெள்ளம் பாயும்!’  

சிலம்பொலி செல்லப்பனார் சொன்னதுபோல், அவருடைய பாடல்களில் பகுத்தறிவு வரிகள் குடிகொண்டிருந்தன. ‘மந்திரி குமாரி’ படத்தில் அவர் எழுதிய, ‘என்னருமைக் கன்னுக்குட்டி…’ எனும் சமூகச் சீர்திருத்தப் பாடல் எல்லோரையும் ஈர்த்தது. அதேபோல், ‘பூம்புகார்’ படத்தில் இடம்பெற்ற, ‘வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்…’ எனும் பாடல் வாழ்க்கைத் தத்துவத்தை அழகாக உணர்த்தியது. ‘காகித ஓடம் கடலலை மீது போவதுபோலே மூவரும் போவோம்…’ எனும், ‘மறக்க முடியுமா’ படப் பாடல்... ஏழையின் சோகத்தை எடுத்துக் காட்டியதுடன், அது என்றுமே மறக்க முடியாத பாடலாக அனைவருடைய நெஞ்சிலும் குடிகொண்டுவிட்டது.

‘‘டியூனுக்குச் சரியாக வருகிறதா?’’

இந்தப் பாடல் பிறந்தது பற்றி ஒரு சுவையான சம்பவம்... இசையுலகில் இணைந்து கொடிகட்டிப் பறந்த விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் பிரிந்த பிறகு... ராமமூர்த்தி மட்டும் தனியாக இசையமைத்த படம்தான் ‘மறக்க முடியுமா.’ இந்தப் படத்தின் பாடல் ஒன்றுக்கு, பிற கவிஞர்கள் எழுதிய வரிகள் டியூனுக்கு சரியாக வரவில்லை. அந்த நேரத்தில், ரிக்கார்டிங் தியேட்டரில் பாடல் பதிவு எப்படி நடக்கிறது என்பதைப் பார்வையிடச் சென்ற கருணாநிதி, விஷயத்தைக் கேள்விப்பட்டார். கொஞ்ச நேரம் அங்கிருந்தவர், பின்பு, சாப்பிட வீட்டுக்குச் சென்று விட்டார். அங்கு சென்ற அவர், உடனே போனில் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, ‘‘நான் இரண்டு வரிகளைச் சொல்கிறேன். அது உங்கள் டியூனுக்குச் சரியாக வருகிறதா’’ என்று கேட்டிருக்கிறார். அது எல்லோருக்கும் மிகவும் பிடித்துப்போனதுடன், அந்தக் காட்சிக்குப் பொருத்தமாகவும் இருந்திருக்கிறது. சாப்பிட்டு முடித்துவிட்டு மீண்டும் ரிக்கார்டிங் தியேட்டர் சென்ற கருணாநிதி, அதன் முழுப் பாடலையும் ராமமூர்த்தியிடம் கொடுத்திருக்கிறார். அதைப் பார்த்த அத்தனை பேரும் அதிசயித்துப் போனார்களாம். அப்படிப் பிறந்த பாடல்தான் இன்றும் தேனாய்த் தித்திக்கிறது.

‘வெல்க காஞ்சி! வெல்க காஞ்சி! வெல்க வெல்கவே…’ என்ற ‘காஞ்சித்தலைவன்’ படப் பாடல், பின்பு... தணிக்கைக் குழுவின் தலையீட்டால், ‘வெல்க நாடு வெல்க நாடு…’ என்று மாறிப்போனது. அதில், ‘அஞ்சுகத்தின் கோலமொழிச் சத்தமும்…’ என்ற வரியில் தன் அன்னையாரின் பெயரை இணைத்து அழகுசேர்த்தவர் கருணாநிதி. அதனால்தான் அவர், ‘கலை’ஞர். மேலும், ‘வேங்கைப்புலி மன்னனடா… வீரர்களின் தலைவனடா’ என்று அறிஞர் அண்ணாவின் புகழையும் அதில் புகுத்தியிருப்பார். 

‘‘வேறு டியூனைத் தேர்ந்தெடுக்கலாம்!’’

‘பராசக்தி’ படத்தில் ஒரு முக்கியக் காட்சிக்கான பாட்டு எழுத வேண்டியிருந்தது. ‘‘ஒரு பிரபல இந்தி டியூனைத் தழுவி அந்தப் பாடல் அமைய வேண்டும்’’ என்று ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் விரும்பினாராம். இதற்காக, அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாக விளங்கிய இரண்டு பாடலாசிரியர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால், அது சரியாக அமையவில்லையாம். உடனே இசையமைப்பாளர் சுதர்சனம், ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரிடம்... ‘‘வேறு டியூனைத் தேர்ந்தெடுக்கலாம்’’ என யோசனை கூறியிருக்கிறார். ஆனால் கருணாநிதியோ... அதே டியூனில் ஒரு பாட்டு எழுதி அனைவரது பாராட்டையும் பெற்றார். கருணாநிதி எழுதிய, ‘பூமாலை நீயே புழுதி மண்மேலே’ எனத் தொடங்கும் அந்தப் பாடல்தான் இன்றும் காலந்தொட்டும் கனியாய் இனிக்கிறது.

‘ஒரே ரத்தம்’ எனும் படத்தில், ஒரு சமூகத் தொண்டனின் சவ ஊர்வலத்துக்காக ஒரு பாடலை எழுதியிருப்பார். அது, ‘ஒரு போராளியின் பயணமிது... அவன் போராடிப் பெற்ற பரிசு இது’ என்று அதில் உண்மையை உணர்த்தியிருப்பார். ‘மக்கள் ஆணையிட்டால்’ என்கிற படத்தில், ‘ஆற அமர கொஞ்சம் யோசிச்சுப் பாரு... அடுத்துவரும் தலைமுறையைச் சிந்திச்சுப் பாரு’ என்ற விழிப்பு உணர்வை அதில் விதைத்திருப்பார். ‘வீணையில் எழுவது வேணு கானமா... திருவாவடுதுறையின் தோடி ராகமா...’ என்று ‘பெண் சிங்கம்’ படத்தில் பாடல் எழுதி மறைந்த இசைச் சக்கரவர்த்திக்கு இசையஞ்சலி செலுத்தியிருப்பார்.

55 சதவிகிதம் சமுதாயப் பாடல்கள்!

இப்படி கருணாநிதி எழுதிய பாடல்களில் 20-க்கும் மேற்பட்டவை எழுத்து வடிவத்தில் உள்ளவை. அதேபோல், சில பாடல்கள் இசைப்பா உருவில் உள்ளவை. மேலும், இவருடைய பாடல்களில் தமிழ் இலக்கியம் கூறும் ஐந்து வகைப் பாடல் யுக்திகளும் பொருந்தி இருக்கும். 10 வரிகள் முதல் 30 வரிகள் கொண்டவையாக இவருடைய பாடல்கள் இருக்கும். கட்டுப்பாடுகள் நிறைந்த திரைத் துறையில் தம்முடைய முற்போக்குக் கருத்துகளை விதைத்தவர் கருணாநிதி. பகுத்தறிவுக் கருத்துகள், மூடநம்பிக்கை முழக்கங்கள், தமிழ்ப்பற்று... சமூக மேம்பாட்டுச் சிந்தனைகள் போன்றவற்றைத் தம் பாடல்களில் அதிகம் பதிவு செய்திருப்பார். குழந்தைகளைக் கோழைகள் ஆக்கக் கூடாது எனும் கருத்தை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு முன்பே, கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். ‘‘கலைஞருடைய பாடல்களில், 45 சதவிகிதம் காதல் பாடல்களாகவும், 55 சதவிகிதம் சமுதாயக் கண்ணோட்டம் மிகுந்த பாடல்களாவும் உள்ளன’’ என, ‘அறிஞர்கள் பார்வையில் கலைஞர்’ எனும் நூலில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘உபயோகப்படுத்திக் கொள்க!’

தமது இசையில் முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதியின் முத்தான பாடலும் இடம்பெற வேண்டும் என்ற ஆவல்கொண்ட இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரின் அனுபவம் இது: ‘‘எனது இசையில் கலைஞர் அவர்கள் பாடல் எழுத வேண்டும் என பேராவல் கொண்டு அவரை அணுகினேன். அந்த நேரம் சில அரசியல் காரணங்களால், அவர் சிறையிலிருந்தார். அப்போதும்கூட அவர் சிரமம் பார்க்காமல், சில நிமிடங்களுக்குள், ‘சுருளு மீசைக்காரனடி வேலுத்தம்பி’ எனும் பாடலை எழுதித் தந்தார். அத்துடன் ஒரு குறிப்பையும் எழுதியிருந்தார். அதில், ‘தேவை எனில்... திருப்தி எனில் இந்தப் பாடலை உபயோகப்படுத்திக் கொள்க’ என்றிருந்தது. அதைப் பார்த்ததும் நான் நெக்குருகிப் போனேன்.’’

இப்படி, தன் எழுத்துகளில் வைரமாய் ஜொலித்த அவர், ‘அம்மையப்பன்’, ‘நாம்’, ‘ராஜா ராணி’, ‘ரங்கோன் ராதா’, ‘குறவஞ்சி’, ‘பூமாலை’, ‘தூக்கு மேடை’ ‘மதுரை மீனாட்சி’ உட்பட பல படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார். உலகத் தமிழர்களால் இன்னொரு தமிழ்த் தாய் வாழ்த்தாய் மலர்ந்துகொண்டிருக்கும், ‘செம்மொழியாம்…’ என்று தொடங்கும் பாடல், சங்கம் வளர்த்த தமிழ் மொழிமீது கருணாநிதிக்கு இருந்த தணியாத தாகத்தால் உருவானது. இந்தப் பாடலில் கருணாநிதி தேர்ந்தெடுத்து எழுதிய தங்க வார்த்தைகள் அனைவரின் பாராட்டையும் பெற்றது. 

'பாட்டுக்கொரு புலவன் பாரதி' என்றால், கலையுலகுக்கு இந்தக் ‘கலைஞன்(ர்)!’ என்பது சாலப்பொருந்தும்.