Published:Updated:

ஆபரேஷன் விஜய்... ராணுவ வீரர்களின் தியாகம்... வாஜ்பாயின் கண்ணீர்க் கவிதை!

ஆபரேஷன் விஜய்... ராணுவ வீரர்களின் தியாகம்... வாஜ்பாயின் கண்ணீர்க் கவிதை!
ஆபரேஷன் விஜய்... ராணுவ வீரர்களின் தியாகம்... வாஜ்பாயின் கண்ணீர்க் கவிதை!

கார்கில் போர் - ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் `பரம் வீர் சக்ரா’ விருது வாங்கிய பெருமை பொங்கிய தருணம் அது. அந்த மாபெரும் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர், இன்று நம்மைவிட்டுப் பிரிந்திருக்கும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்.

`ஆபரேஷன் விஜய்.' இந்தப் பெயரை ஒவ்வோர் இந்தியனும் மறக்கவே முடியாது. 1999-ம் ஆண்டு அத்துமீறி இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் படைகள் கார்கில் பகுதியை முற்றுகையிட்டன. பாகிஸ்தான் பிடியிலிருந்து கார்கிலை மீண்டும் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக நடத்தப்பட்ட போரே கார்கில் போர். இந்த அதிரடி நடவடிக்கைக்கு வைக்கப்பட்டப் பெயர்தான், `ஆபரேஷன் விஜய்'. கார்கில் யுத்தத்தில் இந்தியா வெற்றி பெற்றதையடுத்து பாகிஸ்தான் படைகள் புறமுதுகிட்டு ஓடின. ஒவ்வோர் இந்தியனுக்குள்ளும் `பரம் வீர் சக்ரா’ விருது வாங்கிய பெருமை பொங்கிய தருணம் அது. அந்த மாபெரும் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர், இன்று நம்மைவிட்டுப் பிரிந்திருக்கும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்.

1999-ம் ஆண்டின் மே மாதத்தின் ஒரு நாளில், அண்டை நாடான பாகிஸ்தான் ராணுவத்தினர், அழகு மிகுந்த கார்கிலுக்குள் காலடி எடுத்து வைத்தபோதுதான், அனைவருக்கும் கார்கிலைப் பற்றிய விவரம் தெரிய வந்தது. இந்தக் கார்கில் பகுதி, சுமார் 9,000 அடி உயரத்தில் ஸ்ரீநகரிலிருந்து 215 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியை நாட்டின் பிற பகுதிகளோடு இணைக்கும் சோஜிலா பாஸ் வழிச்சாலை, வருடத்தில் ஆறு மாதங்களுக்கு மேல் மூடியே இருக்கும். இதனால், கார்கில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் இந்திய நாட்டின் தொடர்பிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டிருக்கும். இந்த இடத்தைப் பற்றியும் அதன் விவரங்கள் பற்றியும் அறிந்துகொண்ட பாகிஸ்தான் ராணுவத் தளபதி, அந்தப் பகுதியைத் தங்களின் கட்டுக்குள் கொண்டுவர நினைத்து முற்றுகையிட்டார். கார்கில் மட்டுமல்ல... அதைச் சுற்றியுள்ள கக்சார், ஹர்ட்ராஸ், திராஸ், படாலிக் போன்ற பகுதிகளும் பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. நிலைமை, அப்போதுதான் இந்திய ராணுவத்துக்குப் புரிய ஆரம்பித்தது. ஆனாலும், பாகிஸ்தான் வசமுள்ள பகுதிகளைக் கைப்பற்றுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. 

கார்கில் மற்றும் திராஸ் மலைத்தொடர், பாகிஸ்தானிலிருந்து ஏறும்போது சாய்வாகவும், இந்தியாவிலிருந்து ஏறும்போது செங்குத்தாகவும் இருக்கும். போர்க் கருவிகள், மலையேறும் கயிறுகள், மருந்துப் பொருள்கள், உணவுப்பொருள்கள் என 20 கிலோவுக்கும் மேலான பொருள்களைச் சுமந்துகொண்டு செங்குத்தான மலைப்பகுதிகளில் இந்திய ராணுவத்தினர் ஏற வேண்டும். அதுவும், மேலிருக்கும் எதிரி நாட்டு ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினால் ஓடி ஒளிவதற்குக்கூட இந்திய வீரர்களுக்கு இடமில்லாத நிலை. எங்கு பார்த்தாலும் பனி போர்த்திய பாறைகள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், மரணம் என்பது எதிரிகளால் மட்டும் நிகழக்கூடியது அல்ல... கார்கில் மற்றும் திராஸ் மலைத்தொடரில் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் என்பது சர்வசாதாரணம். இங்கு ஒவ்வொரு முறை மூச்சுவிடும்போதும் குளிர்காற்று ஊசிபோல் இதயத்தைக் குத்தும். உடுத்தியிருக்கும் ஆடை நமக்கே தெரியாமல் லேசாகக் களைந்திருந்தால் போதும்... 'உறைகடி (Frostbite)' ஏற்பட்டு மரணம் உண்டாகும் அபாயம் நேரிடும். பனிக்காற்றில், திசை தெரியாமல் சித்தப்பிரமையே பிடித்துவிடும். இவை தவிர, மலையேறும்போது சிறு கவனம் தவறினாலும் பல்லாயிரம் அடி ஆழமுள்ள செங்குத்தான மலையிலிருந்து கீழே விழுந்து உயிர்துறக்கும் நிலை உருவாகும். ராணுவ வீரர்கள் மரணத்தை நுனிநாக்கில் சுவைத்துக்கொண்டு செல்லும் போர்ப்பயணம் அது. உண்மையைச் சொல்லப்போனால் கார்கில் போரிலும் சரி... அதற்கு முந்தைய யுத்தங்களிலும் சரி... இப்போதிருக்கும் எல்லைப் பாதுகாப்பின்போதும் சரி... யுத்தங்களின்போது உயிரிழந்த ராணுவ வீரர்களைவிட இயற்கையைச் சமாளிக்க முடியாமல் இறக்கும் ராணுவ வீரர்களே அதிகம். 

இத்தனை இடையூறுகளும் அப்போதிருந்த இந்தியப் பிரதமர் வாஜ்பாய்க்கு நன்றாகத் தெரிந்திருந்தது. இருந்தாலும், இந்தியாவின் மானம் போய்விடக் கூடாது. கார்கில் மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப் பகுதிகள் மீண்டும் நமக்குச் சொந்தமாக வேண்டும் என்று வாஜ்பாய் கொடுத்த துணிச்சல் மிக்க உணர்வுதான், நம் வீரர்களை வீறுகொள்ள வைத்தது; நம் நாட்டுக்காகச் சண்டைபோடவைத்து பாகிஸ்தான் படையினரை மண்ணைக் கவ்வச் செய்தது. இந்தப் போரில் இந்தியா வெற்றிபெற்று கார்கில் மீண்டும் நமக்குச் சொந்தமானது. இந்தப் போருக்காக (ஆபரேஷன் விஜய்) பல பிரச்னைகளையும் வாஜ்பாய் அப்போது சந்திக்க நேர்ந்தது. ஆனால், அனைத்தையும் முறியடித்து கார்கிலைப் பெற்ற சரித்திரித்தில் இடம்பிடித்தார் வாஜ்பாய். கார்கிலை மீட்டபிறகு அங்கு பயணம் மேற்கொண்டார் வாஜ்பாய். கார்கில் மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப் பகுதிகளின் இயற்கை அமைப்பைப் பார்த்து வியந்த அவர் போர் புரிந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகம் குறித்தும் போற்றுகிறார். 

சியாச்சின் சிகரம் சென்றபோது ராணுவ வீரர்களின் தியாகத்தைப் பற்றி வாஜ்பாய் இப்படி ஒரு கவிதையை எழுதுகிறார்.

"என்னை இவ்வுயரங்களில் தங்கவிடாதே...
இவ்வுயரங்களின் மேல்
மரங்களும் புற்களும்கூட வளர மறுக்கும்!
இப்பனிப் பிரதேசங்கள் நிறமற்றவை...
ஏனெனில், இங்கு அனைத்தும் வெண்மைதான்...
பனி மற்றும் மரணமும்கூட!"

'அமர் ஜவான்களை' சந்திக்கத் தனது கவிதையுடன் தற்போது பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் இந்தக் கார்கில் நாயகன்!

அடுத்த கட்டுரைக்கு