Published:Updated:

"இந்த அரசு மக்களை தெருச் சண்டைக்கு இழுக்கிறது!" - ஆதவன் தீட்சண்யா

"இந்த அரசு மக்களை தெருச் சண்டைக்கு இழுக்கிறது!" - ஆதவன் தீட்சண்யா
News
"இந்த அரசு மக்களை தெருச் சண்டைக்கு இழுக்கிறது!" - ஆதவன் தீட்சண்யா

`பெட்ரோல் விலையேற்றம், பணமதிப்பிழப்பு, ஸ்டெர்லைட் படுகொலை என அத்தனை கோபமும்தான் சமூக வலைதளமெங்கும் எதிப்புக் குரலாக ஒலிக்கிறது

`பாசிசம்', இரு தினங்களாக சமூக வலைதளமெங்கும் விரவிக்கிடக்கும் வார்த்தை. சென்னையிலிருந்து விமானத்தில் தூத்துக்குடிக்குச் சென்றார் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். அதே விமானத்தில் அவருடன் பயணித்த தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி ஷோபியா, ``பாசிச பா.ஜ.க ஒழிக... மோடி ஒழிக..!'' என்று கைகளை உயர்த்தி முழக்கமிட்டார். பிறகு, தூத்துக்குடி விமானநிலையம் வந்தவுடன் மீண்டும் கைகளை உயர்த்தி தமிழிசையைப் பார்த்து ஷோபியா முழக்கம் எழுப்பியுள்ளார். இது ஒரு வாக்குவாதமாக  மாறியது.

பிறகு தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில், மூன்று பிரிவுகளின்கீழ் ஷோபியா கைதுசெய்யப்பட்டார். `15 நாள் நீதிமன்றக் காவல்' என அழைத்துச் சென்றார்கள். பிறகு, நிபந்தனையற்ற ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். தூத்துக்குடி விமானநிலையத்தில் ஷோபியா  என்கிற பெண் எழுப்பிய முழக்கத்துக்கு ஆதரவாக,  சமூக வலைதளம் மூலம் மக்கள் அதை டிரெண்டாக்கினர். இதுவரையில், பொதுமக்கள் யாரும் வெளிப்படையாக அரசை இவ்வாறு கண்டித்ததில்லை. `பாசிசம்' என்ற சொல், எதன் பொருட்டு இந்த அரசுடன் இணைத்துப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பார்ப்போம். 

20-ம் நூற்றாண்டில்தான் `பாசிசம்' என்ற வார்த்தை மக்கள் மத்தியில் அறிமுகமாகியது. அதற்கு முன்னர் அந்தச் சொல்லாடல் பெரிய அளவில் புழக்கத்தில் இல்லை. நாடுகளுக்கிடையேயான போர் மட்டுமே அந்தக் காலத்தில் நடந்தது. ஆனால், 20-ம் நூற்றாண்டில் குறிப்பிட்ட ஓர் இனத்தை வெறுத்து அவர்களை அழிக்கும் எண்ணம் பரவ ஆரம்பித்தது. அந்த எண்ணம்தான் `பாசிசம்' என பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது. இன அழித்தொழிப்பு என்ற சிந்தனை தோன்றிய காலத்தில்தான், `பாசிசம்' என்ற சொல் பரவலானது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

யூத இனத்தை வெறுத்த, அழித்தொழிக்க நினைத்த ஹிட்லரும் `பாசிஸ்ட்' என்றே விமர்சிக்கப்ட்டார்.  இத்தாலியின் முசோலினியும் பாசிஸ்ட் என விமர்சிக்கப்பட்டவர்தான்.  ``பாசிச பா.ஜ.க என எழுப்பப்பட்ட அந்தக் குரலுக்கு, சமூக வலைதளங்களில் ஏன் ஆதரவு கிடைத்தது?'' என, எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவிடம் கேட்டோம்...

``பெட்ரோல் விலையேற்றம், பணமதிப்பிழப்பு, ஸ்டெர்லைட் படுகொலை... என அத்தனை கோபமும்தான் சமூக வலைதளமெங்கும் எதிர்ப்புக்குரலாக ஒலிக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள எளிய மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நுழைந்து அரசு ஏற்படுத்திய பாதிப்பே, இந்தக் கோஷங்களுக்குக் காரணம்" என்று ஆதங்கத்துடன் பேசத் தொடங்கினார்.

``பல நாள்களாக மக்கள் தனக்குள் அடக்கிவைத்திருந்த ஆதங்கமே இது. பணமதிப்பிழப்பின்போது வரிசையில் நின்று பலர் இறந்தனர். மக்கள் தங்களின் பணத்தை ஏதோ திருட்டுப்பணம்போல நினைக்கும் அசாதாரணச்சூழல் அப்போது கட்டமைக்கப்பட்டது. அந்தப் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு முன்பாகவே, பெட்ரோல் விலை ஏறிக்கிடக்கிறது. இதற்கெல்லாம் அரசு என்ன விளக்கம் கொடுத்து மக்களைச் சமாதானப்படுத்தும்? இதுபோன்ற வாழ்வாதாரச் சிக்கலில் மக்கள் சிக்கிக்கிடக்கும்போது, அவர்கள் இதைச் சாப்பிடக் கூடாது, இங்கு பயணம் செய்யக் கூடாது என வற்புறுத்தப்படுகிறார்கள். இவையெல்லாம்தான் மக்களை `பாசிசம்' என்ற சொல்லைச் சொல்லவைக்கின்றன.

இந்தச் சம்பவத்தில் `மாநில பா.ஜ.க தலைவர் தமிழிசையைப் பார்த்து ஒரு பெண் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது' என்கின்றனர் பலர். இது தவறான கருத்து. அந்தப் பெண்ணும் பொதுமக்களும் விமர்சித்தது, தனிநபரை அல்ல; தமிழிசை அவர்கள் தலைவராக உள்ள கட்சியின் கருத்தியலை. மக்கள், மனதில் நீண்டகாலம் அடக்கிவைத்திருந்த ஆதங்கமே இப்போது வெடித்திருக்கிறது. பேசுவதற்கான, எழுதுவதற்கான உரிமையை மறுத்து, மக்களை தெருச்சண்டைக்கு இழுக்கிறது இந்த அரசு.

இன்னும் சொல்லப்போனால், அன்றைய தினம் தமிழிசை அவர்கள் பங்கேற்றது என்ன நிகழ்ச்சியில் என்பதையும், ஷோபியாவின் தந்தை அளித்த புகாரில் செய்யப்பட்ட சிறு திருத்தமும்தான் இந்தச் சம்பவத்தை வேறொரு பார்வையில் பார்க்கவைக்கின்றன. மக்களை நிம்மதி இழக்கச்செய்யும் எந்த அரசையும் மக்கள் விமர்சிக்கத் தயங்க மாட்டார்கள் என்பதையே நாம் புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார்.