Published:Updated:

`உங்கள் மறதிக்கு நாங்கள் நரபலியா?’ - துப்புரவுத் தொழிலாளர்களின் கேள்விக்கு என்ன பதில்?

`உங்கள் மறதிக்கு நாங்கள் நரபலியா?’ - துப்புரவுத் தொழிலாளர்களின் கேள்விக்கு என்ன பதில்?
`உங்கள் மறதிக்கு நாங்கள் நரபலியா?’ - துப்புரவுத் தொழிலாளர்களின் கேள்விக்கு என்ன பதில்?

மலத்தையும், குப்பைகளையும் அள்ளி வரும் சிறு தொகையில், சாப்பிட முடியாமல் சாராயத்தையே அதிகம் குடிக்கும் நிலைக்குத் தள்ளப்படும் தொழிலாளர்களுக்கு எதையாவது சொல்லி சமாதானப்படுத்த நம்மிடம் வார்த்தைகள் இருக்கிறதா?

சென்னையை அடுத்த பெருங்குடியில் ஒரு வீட்டில் உள்ள கிணற்றின் கழிவை தூர்வாரச் சென்ற ஆறுமுகம், குமார் என்ற இரண்டு தொழிலாளர்கள், விஷவாயு தாக்கியதில் சமீபத்தில் இறந்தனர். பாதுகாப்புக் கவசங்கள் எதுவும் அளிக்கப்படாமல், அவர்கள் கிணற்றில் இறங்கியதாலேயே உயிரிழந்ததாகக் காரணம் சொல்லப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, 38 வயதான துப்புரவுத் தொழிலாளியான எஸ்.சுப்ரமணி தனது வீட்டு மேற்கூரையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். நகரத்தின் தெருக்களை நாள் விடாமல் கூட்டிப் பெருக்கிய பிறகும்கூட, வேலைக்கு வைத்த ஒப்பந்ததாரரும் நகராட்சி நிர்வாகமும் அவருக்குச் சம்பளத்தை இழுத்தடித்த காரணத்தால், தன் இரண்டு குழந்தைகளுக்கும் பள்ளிக் கட்டணம் கட்ட முடியாமல் தவித்திருக்கிறார்.

காலணி அணியாத காரணத்தாலும் பள்ளிக்கட்டணம் கட்டாத காரணத்தாலும் பள்ளிக்கு வெளியே நிற்கவைக்கப்பட்ட 10 வயது தர்ஷனை சமாதானப்படுத்தியிருக்கிறார் சுப்ரமணி. மகனை சமாதானப்படுத்த எண்ணிய அவருக்கு, துணிச்சலையும் சமாதானத்தையும் ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை. சுப்ரமணியின் இறப்பைத் தாங்கிக்கொள்ள முடியாத, அவரைப் போன்ற 7,000 நகரத் தூய்மைப் பணியாளர்கள் அதிகாரிகள் முன்பாகத் திரண்டிருக்கிறார்கள். உயிரோடிருந்த சுப்ரமணி, உள்ளூர் எம்.எல்.ஏ முதல் கர்நாடக மாநிலக் காங்கிரஸ் தலைவர் வரை சந்தித்து மனுக்களாகக் கொடுத்திருக்கிறார். சம்பளத்தைக் கொடுத்துவிட உதவுமாறு ஆற்றாமையுடன் பேசியிருக்கிறார். சுப்ரமணியின் இறப்பால் எழுந்திருக்கும் கொந்தளிப்பின் வெம்மையை ஆற்றுவதற்காக, கொடுக்கப்படாத சம்பளப் பணத்தையெல்லாம் கொடுத்துவிடுமாறு 27 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது அரசு.

"உயிர் போவதற்கு முன்பு மதிப்பு தெரிவதில்லையா? ஒரு வாரத்தில் வரும் மனித மறதிக்காக அவ்வப்போது நரபலி கொடுக்க வேண்டுமா?" என்று கோபத்துடனும் இயலாமையுடனும் பெயர் சொல்லாமல் பேசினார் நகராட்சி கழிப்பறைக் குப்பைகளைச் சுத்தப்படுத்தும் தொழிலாளி ஒருவர்.

இந்த ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி, விஷவாயு தாக்கி உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கான நீதிக்காகவும், அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட வேண்டிய 10 லட்ச ரூபாய் வழங்கப்பட வேண்டுமெனவும் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தியவர், துப்புரவுத் தொழிலாளர்களுக்கான சங்கமான சஃபாய் கரம்சாரி அந்தோலனின் நிறுவனர் பெஸ்வாடா வில்சன். 

பணியின்போது துப்புரவுத் தொழிலாளி ஒருவர் இறக்க நேரிட்டால், அவர்களின் குடும்பத்துக்கு அளிக்கப்பட வேண்டிய 10 லட்சம் பெறும் வழிமுறைகளைப் பற்றி கேள்விக்குப் பதிலளித்த வில்சன், மிகுந்த வேதனையோடு இப்படிச் சொன்னார்...

“அந்த 10 லட்ச ரூபாயை வாங்குவதற்குள் நீங்கள் பத்து முறை செத்தாக வேண்டும். எஃப்.ஐ.ஆர், இறப்புச் சான்றிதழ், உடற்கூறியல் அறிக்கைகள், அடையாள அட்டை, செய்தித்தாள் துணுக்குகள் எனப் பல ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். சமூகத்தின் கடைசி அடுக்கில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களிடம் போய் அந்தச் சீட்டைக் கொண்டு வா... இந்தச் சீட்டைக் கொண்டு வா... என்று கேட்டு அவ்வளவு சீக்கிரமாகப் பெற்றுவிட முடியாது. இத்தனை ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு போய் அளித்தால்தான், நிவாரணத்திற்கான விண்ணப்பத்தையே உங்களால் கண்களில் பார்க்கமுடியும். இறந்தவர்களின் எல்லாக் குடும்பத்துக்கும் 10 லட்சம் ரூபாய் கிடைப்பதில்லை. சிலருக்கு 3 லட்சம், மற்ற சிலருக்கு அதிகபட்சமாக 6 லட்சம். குறிப்பிட்ட கால அளவில், எங்களிடம் இருக்கும் தரவுப்படி, 1,790 பேர்களில் 169 பேருக்குத்தான் நிவாரணத் தொகை கிடைத்திருக்கிறது” என்றார்.

தற்கொலை செய்துகொண்டால்தான், தன் குடும்பம் வாழ முடியும் என்று இனிமேல் நினைக்கத்தொடங்கிவிடுவார்கள் இல்லையா என்று சொல்லிய அந்தத் தொழிலாளி இன்னொன்றையும் எளியக் கன்னடத்தில் சொன்னார். ``பலநேரங்களில் எங்களுக்குத் துடைப்பம் கூடக் கொடுக்கமாட்டார்கள். பயன்படுத்தி வீசப்பட்ட சானிட்டரி நாப்கின்கள், அழுகிப்போன உணவு, குழந்தைகளின் கழிவுகள், கூர்மையான பிளேடுகள் எனச் சகல நோய் மூலங்களையும் கைகளில் அள்ளுவோம்.”

மலத்தையும் குப்பைகளையும் அள்ளி வரும் சிறு தொகையில், சாப்பிட முடியாமல் சாராயத்தையே அதிகம் குடிக்கும் நிலைக்குத் தள்ளப்படும் தொழிலாளர்களுக்கு எதையாவது சொல்லி சமாதானப்படுத்த நம்மிடம் வார்த்தைகள் இருக்கிறதா?

அடுத்த கட்டுரைக்கு