Published:Updated:

பா.ஜ.க தலைவர் அமித் ஷாவுக்கு பெயர் மாற்றலாம் - வரலாற்று ஆய்வாளர் இர்ஃபான் ஹபீப் அதிரடி

குணவதி
பா.ஜ.க தலைவர் அமித் ஷாவுக்கு பெயர் மாற்றலாம் - வரலாற்று ஆய்வாளர் இர்ஃபான் ஹபீப் அதிரடி
பா.ஜ.க தலைவர் அமித் ஷாவுக்கு பெயர் மாற்றலாம் - வரலாற்று ஆய்வாளர் இர்ஃபான் ஹபீப் அதிரடி

மாநிலங்களின், நகரங்களின் பெயர் மாற்றங்களில் அதிக கவனம் செலுத்திவரும் பா.ஜ.க அரசு, பா.ஜ.க தலைவரான அமித் ஷாவின் பெயர் பாரசீக மொழிப் பின்புலம் கொண்டிருப்பதால் அதை மாற்றுவதைப் பற்றியும் யோசிக்கலாம் என வரலாற்று அறிஞர், பேராசிரியர் இர்ஃபான் ஹபீப் பேசியிருக்கிறார்.

பெயர் மாற்றங்களுக்குப் பின்னால் ஓர் இலக்கு இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், ``இஸ்லாமியப் பெயர்களைக் கொண்ட இடங்களின் பெயர்களை மாற்றுவதில் மும்முரம் காட்டிவரும் பா.ஜ.க அரசு, `குவாஜராத்ரா’ என்னும் பாரசீகப் பின்புலப் பெயரைக் கொண்டிருக்கும் குஜராத்தின் பெயரையும் மாற்றலாம். ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்துத்வ கொள்கையை தன்னுடையதாக பா.ஜ.க மாற்றிக்கொண்டிருக்கிறது. இஸ்லாம் சாராத எதையும் அகற்றிவிட்ட பாகிஸ்தானைப் போலவே, இந்துப் பெயர்கள் அல்லாத எல்லாவற்றையும் மாற்றி வருகிறார்கள். அதிலும், இஸ்லாமியப் பெயர்களை நீக்குவதில்தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள்” என்று பேசியிருக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ``மக்களின் விருப்பத்துக்கேற்ப அலகாபாத் நகரத்தின் பெயர் `பிரயாக்ராஜ்' என மாற்றம் செய்யப்படும்" என்று கடந்த மாதம் அறிவித்தார். இரண்டு நாள்களுக்கு முன்பு, உத்தரப்பிரதேசத்தின் ஃபைசாபாத்தை அயோத்தியா என பெயர் மாற்றம் செய்திருக்கிறார் ஆதித்யநாத். ``அயோத்தியா என்னும் பெயர் நமது மரியாதை, பெருமை, குலப்பெருமைக்கான குறியீடு. அயோத்திக்கு யாரும் அநீதி இழைக்க முடியாது. கடவுள் ராமனின் புகழ் இங்கு எப்போதும் இருப்பதை உறுதி செய்வேன்” என பெயர் மாற்றத்துக்கு விளக்கத்தையும் கொடுத்திருந்தார். 

2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம், முகல்சாராய் ரயில் நிலையம், தீன் தயாள் உபாத்யாயா ரயில் நிலையமாக மாற்றப்பட்டது. லக்னோவில் உள்ள ’ஹஸ்ரத்கஞ்ச் சவ்ராஹா’ பகுதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயரால் மாற்றம் செய்யப்பட்டு, ’அடல் செளக்’ என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.