Published:Updated:

```முரசொலி' லோகோவை கலைஞர் ஏன் மாற்றினார்?" `பராசக்தி' கருணாநிதி - ஆரூர்தாஸ் பகிரும் நினைவலைகள் -2

திராவிடர் கழக ஈடுபாடும், கொள்கைகளும் எங்கள் இருவரையும் நண்பர்கள் ஆக்கின. ஏழாம் வகுப்பிற்கு வந்தபின்னர் பள்ளிப் பாடப் புத்தகங்களோடுகூட ஏனைய இலக்கிய, கவிதை நூல்களையும் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் என் உள்ளத்தில் வேர் விட ஆரம்பித்தது.

```முரசொலி' லோகோவை கலைஞர் ஏன் மாற்றினார்?" `பராசக்தி' கருணாநிதி - ஆரூர்தாஸ் பகிரும் நினைவலைகள் -2
```முரசொலி' லோகோவை கலைஞர் ஏன் மாற்றினார்?" `பராசக்தி' கருணாநிதி - ஆரூர்தாஸ் பகிரும் நினைவலைகள் -2

நான் ஆறாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்புக்கு வந்தேன். அப்போது அதே தெற்கு வீதியிலிருந்து `தியாகராஜ சுந்தரம்' என்ற மாணவர் வந்து, எனக்கு ஜூனியராக ஆறாம் வகுப்பில் சேர்ந்தார். அவர்தான் கலைஞரின் (கருணாநிதி) இளைய அக்காள் சண்முகசுந்தரம் அம்மாளின் மூத்த புதல்வரும், முன்னாளில் `நெடுமாறன்' எனவும், பின்னாளில் `மாறன்' எனவும் பெயர் மாற்றம் செய்துகொண்ட அமரர் `முரசொலி மாறன்'.

திராவிடர் கழக ஈடுபாடும், கொள்கைகளும் எங்கள் இருவரையும் நண்பர்கள் ஆக்கின. ஏழாம் வகுப்புக்கு வந்தபின்னர் பள்ளிப் பாடப் புத்தகங்களோடுகூட ஏனைய இலக்கிய, கவிதை நூல்களையும் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் என் உள்ளத்தில் வேர் விட ஆரம்பித்தது. பள்ளிக்கு எதிரில் இருந்த திரு.வி.கல்யாண சுந்தரனார் வாசக சாலை - நகராண்மைக் கழகத்தின் மாடியிலிருந்த `பெரியார் வாசக சாலை' ஆகிய நூலகங்களுக்குச் சென்று, பாரதியார், பாரதிதாசன் கவிதைகளையும், வடுவூர் துரைசாமி அய்யங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், ஜே.ஆர்.ரங்கராஜூ போன்றோரின் துப்பறியும் நாவல்களையும் படிக்கத் தொடங்கினேன். அவற்றுடன்கூட, வாராவாரம் வரும் அண்ணாவின் `திராவிட நாடு' இதழையும் தவறாமல் படித்து வந்தேன்.

அண்ணாவின் வித்தியாசமான தமிழ் நடையும், பாரதிதாசனின் புரட்சிக் கருத்துகள் நிறைந்த கவிதைகளும் என் உள்ளத்தை ஈர்த்தன. பாரதிதாசனின் `சஞ்சீவிப் பர்வதத்தின் சாரல்', `புரட்சிக்கவி', `அழகின் சிரிப்பு', `பாண்டியன் பரிசு', 'எதிர்பாராத முத்தம்', `குடும்ப விளக்கு', `இருண்ட வீடு' முதலிய குறுங்காப்பியங்களை விரும்பி திரும்பத் திரும்பப் படித்ததன் விளைவாக, அவற்றின் குறிப்பிடத்தக்க வரிகள் எல்லாமே எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டன. பிற நூல்களைப் படித்துக்கொண்டிருந்த நிலையிலிருந்து ஒரு படி முன்னேறி, `நாமும் எழுத வேண்டும்' என்ற மெல்லிய அரும்பு ஆசை என் மூளையில் முகிழ்த்தது. எழுதினேன். என்ன எழுதினேன்? ஏதேதோ எழுதினேன் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என்ற பெயரில். அவை நடைவண்டியைப் பற்றிக்கொண்டு நடைபயிலும் குழந்தையின் தளர் நடைபோன்றவை.

இந்த நிலையில், அதே 1942-ம் ஆண்டில் மு.கருணாநிதி, அவருடைய பதினெட்டாம் வயதில் `முரசொலி' இதழை அச்சில் ஏற்றினார். பதினெட்டே வயதில் ஒரு பத்திரிகையை ஆரம்பித்து, அதற்கு ஆசிரியராகவும் ஆன இளைஞர் அன்றைக்கு மு.கருணாநிதி ஒருவரே. அப்பொழுது எனக்கு வயது பதினொன்று. என்னைக்காட்டிலும் அவர் 7 வயது மூத்தவர். சினிமா கதை, வசனகர்த்தாவாகவும் அவர் எனக்கு 7 ஆண்டுகள் சீனியர். அவர் 1946-ல் திரைப்படத் துறைக்கு வந்தார்; நான் 1953-ல் அடி எடுத்து வைத்தேன். `நடமாடும் பல்கலைக்கழகம்' என்று அறிஞர் அண்ணாவால் போற்றப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனும், `சொல்லின் செல்வர்' என்று புகழ்பெற்ற ஈ.வெ.கி.சம்பத்தும் திருவாரூருக்கு வந்து, முரசொலி முதல் இதழ் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றியதாக எனக்கு ஒரு நினைவு இருக்கிறது.

தெற்கு வீதியில் கலைஞரின் வீட்டுக்கு எதிரில் இருந்த ஒரு பெட்டிக்கடையே முரசொலி அலுவலகமாக இருந்தது. அதில் ஒரு பையன் உட்கார்ந்து இதழ்களை விற்றுக்கொண்டிருப்பான். விலை ஏழு அணா என்று நினைவு. எட்டுப் பக்கங்கள் இருக்கும். `மு' என்ற முதல் எழுத்து மேலே நீட்டப்பட்டு `லி' என்ற கடைசி எழுத்தின் வளைவோடு இணைந்திருக்கும். முகப்பில் ஒரு வீரன் முரசைக்கொட்டுகின்ற பாவனையில் இரு கரங்களையும் உயர்த்திக்கொண்டிருப்பது போன்றதோர் ஓவியம் வரையப்பட்டிருக்கும். ஒவ்வோர் இதழிலும் முரசொலி என்ற பெயர் வெவ்வேறு வண்ணத்தில் வரும். அந்த எழிலார்ந்த எழுத்துகள் இன்னமும் என் கண்களில் இருக்கின்றன.

எங்கள் ஊரில் அன்றைக்கு `ஜீவன்' என்ற பிராமண ஓவியர் ஒருவர் இருந்தார். அவர் வரைந்து வடிவமைத்த சின்னம் அது. அந்தக் கண்கவர் `எம்ப்ள'த்தை (Emblem) கலைஞர் ஏன் மாற்றினார் என்று தெரியவில்லை. இன்றைக்கும் அந்த `லோகோ'வைப் பழைமை மாறாமல் அவ்வண்ணமே வைத்திருக்கலாம் என்பது என் கருத்து. அவ்வளவு அழகாக இருக்கும் அது! முரசொலியை நான் தவறாமல் வாங்கிப் படித்துவிட்டு, `திராவிட நாடு' இதழுடன் சேர்த்துப் பத்திரமாக வைத்திருப்பேன். முரசொலி இதழின் உள்ளே அவர் எழுதியிருக்கும் விஷயங்களைவிட, அதன் ஓரத்தில் எழுதியிருந்த புதிய சொற்றொடர்களை (Captions or Idioms) அதிகம் விரும்பிப் படிப்பேன். அவை எல்லாம் இன்றைக்கும் என் நினைவில் இருக்கின்றன. அவை இன்றைய நிலைக்கு ஏற்றதாகாது எனினும், அன்றைய இளமையில் அவர் கொண்டிருந்த எழுச்சியை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும்பொருட்டு சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். அது அடுத்த பாகத்தில்...

- நினைவலைகள் தொடரும்.