Published:Updated:

வாரியாரைக் கலங்கடித்த கருணாநிதி! பராசக்தி கருணாநிதி - ஆரூர்தாஸ் பகிரும் நினைவலைகள் - 3

அன்றைக்கு ஏறத்தாழ எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முன்பு சம்ஸ்கிருத மொழியின் சந்துகளிலும் சந்தங்களிலும் ஒளிந்துகொண்டிருந்த தமிழ் மெள்ள மெள்ள வெளிவந்து எழுச்சியும் மறுமலர்ச்சியும் பெறத் தொடங்கியிருந்தது.

வாரியாரைக் கலங்கடித்த கருணாநிதி!  பராசக்தி கருணாநிதி - ஆரூர்தாஸ் பகிரும் நினைவலைகள் - 3
வாரியாரைக் கலங்கடித்த கருணாநிதி! பராசக்தி கருணாநிதி - ஆரூர்தாஸ் பகிரும் நினைவலைகள் - 3

``ஏரோட்டும் மக்கள் எல்லாம் ஏங்கித் தவிக்கையிலே
தேரோட்டம் ஏன் உனக்குத் தியாகராசா?" -

என்று எழுதிய அதே கலைஞர்தான் (கருணாநிதி) பின்னாளில் முதலமைச்சர் ஆன பிறகு, சில ஆண்டுகள் ஓடாமலே நிலையடியில் கீற்றுக் கொட்டகைக்குள் மறைந்திருந்த அகிலம் புகழ் ஆரூரின் ஆழித்தேரை, மனிதர்களைத் தவிர்த்துவிட்டு இயந்திரத்தைக்கொண்டு ஓடச்செய்து, மனுநீதிச் சோழ வரலாற்றின் மகிமையைத் தொடர்ந்தார் என்பது சிறப்புச் செய்தி.

அடுத்ததாக `சீரங்க நாதரையும் தில்லை நடராசரையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ?" 
பிளந்தாயிற்றா? - பிறகு

``துடுக்கு மிகக் கொண்டலைந்த துணிவு மிக்க ஆரியந்தான்
அடுக்குச் சொல் அண்ணாவால் அலறித்தான் சாகுதடா!"

``ஈரோட்டுப் பூகம்பத்தால்
இடியுது பார் ஆரியக்கோட்டை!"

அன்றைக்கு ஆரியத்தை இத்தகைய கடுஞ்சொற்களால் சாடிய அதே கலைஞர்தான், முதலமைச்சர் ஆன பிறகு, தமிழறிஞர் சுந்தரம் பிள்ளை இயற்றிய `மனோன்மணீயம்' குறுங்காப்பியத்திலிருந்து தேர்ந்தெடுத்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், `எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெருந்தமிழணங்கே' என்ற வரியை அடுத்து, ஏற்கெனவே அமைந்திருந்த `ஆரியம்போல் உலக வழக்கொழிந்து சிதையா' என்னும் ஒரு வரியை நீக்கிவிட்டு, `நின் சீரிளமைத்திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே' என்னும் வரியைச் சேர்த்து எம்.எஸ்.விசுவநாதனை இசை அமைக்கச் சொன்னார். அந்தக் குறிப்பிட்ட வரியை நீக்கியதற்குக் காரணம், `சம்ஸ்கிருத மொழித்தொடர்புள்ள ஒரு சாராரின் உள்ளங்களை வருத்தப்படச் செய்ய வேண்டாம்' என்ற கலைஞரின் பெருநோக்குதான் என்று நான் அறியப்பெற்றேன்.

அதுதான் அறிவின் முதிர்ச்சி; அவருடைய பிற்காலப் பரிபக்குவ நிலை!

மேலும் ஒரு சொற்றொடர்...

``ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள் - நீ
தேடிவந்த கோழையுள்ள நாடிதல்லவே!"

இளைஞரான கலைஞரின் இத்தகைய புதுப்புதுப் புரட்சிக் கருத்துகள் கொண்ட சொற்றொடர்களைப் படித்ததும் என் உள்ளத்தில் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டு, அவை மனப்பாடம் ஆகிவிட்டன. அதுபோல, எனக்கும் துடிப்பாக ஏதேனும் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

அந்தக் காலகட்டத்தில் திருவாரூர், தஞ்சை மாவட்டத்தின் திராவிடர்க் கழகக் கற்கோட்டையாகத் திகழ்ந்தது. எங்கள் ஊர் - காவிரியின் இக்கரையிலும் அக்கரையிலும் அமைந்துள்ள பவானி - குமாரபாளையம் போன்ற இரட்டை நகரங்களைக் கொண்டதாகும். ஓடம்போக்கி ஆற்றின் அக்கரையில் தென் திசையில் உள்ளது விஜயபுரம். அதுதான் ஊரின் வர்த்தக மையம். அங்கிருந்த அன்றைய பிரபல வணிகர்கள், வசதி படைத்தோர் அனைவரும் கதர் உடை அணிந்த காங்கிரஸ் கட்சிக்காரர்கள். வட திசையில் இருப்பது புராதன திருவாரூர் ஆகும். அதில், பிராமணர்களைத் தவிர்த்து, இளைஞர்கள் உட்பட பாதிப்பேருக்கு மேல் கருஞ்சட்டை அணிந்த திராவிடர்க் கழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கிடையில்தான் திருக்கோயில் - திருக்குளம் - தேர்கள் முதலிய தெய்விகச் சின்னங்கள்! அன்றைக்கு ஏறத்தாழ எழுபது எண்பது ஆண்டுளுக்கு முன்பு சம்ஸ்கிருத மொழியின் சந்துகளிலும் சந்தங்களிலும் ஒளிந்துகொண்டிருந்த தமிழ் மெள்ள மெள்ள வெளிவந்து எழுச்சியும் மறுமலர்ச்சியும் பெறத் தொடங்கியிருந்தது. அதற்கு மூல காரணகர்த்தாக்கள் மூவர்.

ஒருவர், தந்தை பெரியார். இன்னொருவர், பேரறிஞர் அண்ணா. மூன்றாமவர், `புரட்சிக் கவிஞர்' பாரதிதாசன்.

திராவிடர்க் கழகம் ஒன்றைத் தவிர, வேறு எந்தக் கட்சியும் தமிழகத்தில் தமிழ் வளர்ச்சியில் நாட்டம் செலுத்தவில்லை, அதனை அவ்வளவாகக் கண்டுகொள்ளவும் இல்லை என்பதுதான் அன்றைக்கு இருந்த அவல நிலை. அதனால்தான் சம்ஸ்கிருதம் தமிழின் சம்பந்தி ஆகி, சமபந்தி விருந்து அருந்தியது. எடுத்துக்காட்டாக, மகாராஜ ராஜஶ்ரீ, க்ஷேமம், உபயகுசலோபரி, அக்கிராசனர், அபேட்சகர், பிரத்தியேகம், பிரவேசம், உத்சவம், ஜலம், ஜனங்கள் போன்ற பலப்பல வடமொழிச் சொற்கள், அன்றாடப் பேச்சுத் தமிழில் பிரித்துப் பேச முடியாத அளவுக்கு இரண்டறக் கலந்திருந்தன. அவற்றை யாரும் பொருட்படுத்தவும் இல்லை.

இந்த நிலையில், அந்த நாள்களில் திருவாரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஒன்று சேர்ந்து, தமிழ் மாநாடு ஒன்று நடத்தினர். அதைக் கேலியாக விமர்சித்து கலைஞர் துண்டு அறிக்கை அச்சடித்து வெளியிட்டார். அதன் தலைப்பு இது...

`கசாப்புக் கடைக்காரர்களின் ஜீவ காருண்ய மாநாடு!' இதைப் படித்துவிட்டுக் காங்கிரஸார் கொதித்தனர், குதித்தனர். மாநாட்டில் திராவிடர்க் கழகத்தையும் பெரியாரையும், அண்ணாவையும், கருணாநிதியையும் திட்டுத்திட்டென்று திட்டித் தீர்த்தனர்.

மாசி மாதம் முடிந்து பங்குனி உற்சவம் தொடங்கி, ஊரில் ஒரு மாதம் முழுக்கக் கோலாகலத் திருவிழா நடைபெறும். அப்பொழுது ஆலயத்தின் உட்பிராகாரத்தில் அமைந்துள்ள ஆயிரங்கால் மண்டபக் கூடத்தில் அன்றாடம் இன்னிசைக் கச்சேரி, உபந்நியாசம், கதாகாலட்சேப நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அன்றைய பிரபல பாடகர்கள், வசனகர்த்தாக்கள் வந்திருந்து அவரவர் ஆற்றலைக் காண்பித்து, பக்தர்களைப் பரவசப்படுத்துவார்கள்.

வாலிப வயதிலிருந்த கிருபானந்தவாரியாரும் அவர்களில் ஒருவராவார். அவருடைய கதாகாலட்சேபத்தைக் கேலி செய்து கலைஞர் துண்டுப் பிரசுரம் வெளியிடுவார்.

ஒரு நாள் மாலை... ஆயிரங்கால் மண்டபத்தில் சைவத்திற்கும், அசைவத்திற்கும் உள்ள வேறுபாட்டை விளக்கிப் பிரசங்கம் செய்துகொண்டிருந்தார் வாரியார். அப்பொழுது அவர் கூறினார்...

``கத்திரிக்காய் சாப்பிடுவதால் கத்திரிச்செடி சாவதில்லை. வெண்டைக்காய் சாப்பிடுவதால் வெண்டைச் செடி சாவதில்லை. முருங்கைக்காயைப் பறிப்பதால் முருங்கை மரம் பட்டுப்போவதில்லை. மாமரமும் தென்னை மரமும் அவ்வாறே. ஆனால், இறைச்சி உண்பதால் ஒரு பிராணியோ, பறவையோ தன் உயிரை இழக்கிறது. தாவரங்கள் அப்படி அல்ல. அவை சாவது இல்லை!" என்றார்.

கூட்டத்திலிருந்த இளைஞர் கருணாநிதி எழுந்து, வாரியாரைப் பார்த்துக் கேட்டார்...

`சாமி, கீரையையோ கீரைத்தண்டையோ சாப்பிட வேண்டுமென்றால், அதை வேரோடு பிடுங்க வேண்டுமே. அப்போது அது செத்துவிடுமே! தாவரங்களுக்கும் உயிர் உண்டு அல்லவா?"

இளைஞர் கருணாநிதியின் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் வாரியார் தலையைக் கவிழ்த்துக்கொண்டு, தனது வலது கையை உயர்த்தி ஆசீர்வதிக்கும் பாவனையில் கூறினார், ``தம்பி, நீ பிழைத்துக் கொள்வாய்!"

இந்த விவரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு விழாவில் கலைஞர் கூறி, `தம்பி, நீ பிழைத்துக் கொள்வாய்' என்று வாரியார் என்னை வாழ்த்தினார். அவர் வாழ்த்தியபடி நான் பிழைத்துக்கொண்டேன்" என்றார்.

நினைவலைகள் தொடரும்...