Published:Updated:

"வாரியாரின் சிலையைத் திறந்துவைத்தவர் கலைஞர்!" பராசக்தி கருணாநிதி - ஆரூர்தாஸ் பகிரும் நினைவலைகள் - 4

அந்நாள்களில்  நாவல்கள், நாடகங்கள் மற்றும் திரைப்படத் தலைப்புகளில் இந்த 'அல்லது' என்பது பிரபலமாகவும், ஒரு ஃபாஷனாகவும் இருந்துவந்தது. ஒரு பெயருக்குப் பதிலாக இரண்டு பெயர்கள் வைத்து, அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஏதாவது ஒரு பெயரைக் கூறிக்கொள்ளலாம் என்பது பொதுப்படையான கருத்து.

"வாரியாரின் சிலையைத் திறந்துவைத்தவர் கலைஞர்!" பராசக்தி கருணாநிதி - ஆரூர்தாஸ் பகிரும் நினைவலைகள் - 4
"வாரியாரின் சிலையைத் திறந்துவைத்தவர் கலைஞர்!" பராசக்தி கருணாநிதி - ஆரூர்தாஸ் பகிரும் நினைவலைகள் - 4

ன்றைய அந்தச் சீர்திருத்தவாதி இளைஞர் கருணாநிதிதான் பிற்காலத்தில் தமிழக முதலமைச்சர் ஆன பின்பு, 'ஆன்மிகச் சொற்பொழிவாற்றிவிட்டு வாரியார் லண்டனிலிருந்து சென்னை திரும்பிக்கொண்டிருந்தபோது, விமானத்திலேயே உயிர் துறந்தார்' என்ற செய்தி கேட்டு, அடுத்த நொடி அவரது இல்லம் ஓடோடிச் சென்றார். பின், அவருடைய திரு உடலுக்கு மலர் வளையம் வைத்து, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய செய்தி அனைத்து நாளேடுகளிலும் வந்தது.

அது மட்டுமல்ல, திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த காங்கேயநல்லூர் ஆலயத்தில் அவரது திரு உருவச் சிலைத் திறப்பு விழாவில் தானும் கலந்துகொள்வதாகவும், தனது கரங்களினாலேயே வாரியாரின் சிலையைத் திறந்துவைப்பதாகவும் தெரிவித்து, அவ்வாறே செய்தார்.

அதுவும் எவ்வாறு? வெகுதொலைவில் தனது காலணிகளைக் கழற்றி வைத்துவிட்டு, வெறுங்காலுடன் நடந்து வாரியாரின் சிலை அருகில் சென்று, அதனைப் பக்தி சிரத்தையுடன் உணர்வுபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றினார் என்பது அவரது சிறப்பிற்குரிய செய்தி ஆகும். அப்போது அந்த ஆலயத்தில், அறிஞர் அண்ணா கூறிய 'மாற்றான் தோட்டத்து மல்லிகை' மணம் வீசியதை மக்களும், வாரியாரின் பக்தர்களும் நுகர்ந்து மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

எங்கள் உயர்நிலைப் பள்ளியின் மேற்குப்புற வளாகத்தையொட்டி வரிசையாகக் கட்டப்பட்டிருந்த ஓலைவேய்ந்த வகுப்பறைகளில் ஆறு, ஏழு, எட்டாம் படிவங்களை முடித்துக்கொண்டு, பிரதானக் கட்டடத்தின் கீழ்த்தளத்தில் அமைந்திருந்த ஒன்பதாம் வகுப்பிற்கு வந்தேன்.

எனது பிஞ்சு எழுத்துகள் சிறுசிறு கவிதை, கட்டுரை, கதைகளாக 'சுதேசமித்திரன்' நாளிதழிலும், அப்போது கும்பகோணத்திலிருந்து வந்துகொண்டிருந்த 'காவேரி' என்ற பிரபல மாத இதழிலும் பிரசுரமாகி, மற்ற மாணவர்களிடையே என்னைத் தனியாக அடையாளம் காட்டியது.

அத்துடன்கூட, கலைஞரைப் பின்பற்றி அவரை என் முன்னோடியாக மனதில் வரித்துக்கொண்டு, 'புரவி' என்னும் பெயரில் ஒரு கையேடு தொடங்கி, அதில் முழுவதும் நானே கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதினேன். எனது 'புரவி' மாணவர்களிடையே மட்டுமின்றி ஆசிரியர்கள் வரையிலும் பறந்து, நான் பாராட்டப்பெற்றேன்.

இத்தகைய இதர இலக்கியம், எழுத்து ஆர்வத்துடன்கூட, பாடப் புத்தகங்களையும் ஒழுங்காகப் படித்து, வகுப்பில் சிறந்த மாணவனாகவும் இருந்தேன். நான் சற்றுக் கூடுதல் நினைவாற்றல் கொண்டிருந்த காரணத்தால், படித்தவற்றை நன்கு மனப்பாடம் செய்துகொண்டு தேர்வில் வினாவிற்கேற்ற விடைகள் எழுதி, அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் அன்பும் அரவணைப்பும் அடையப்பெற்றேன்.

குறிப்பாகத் தமிழ்மீது அதிகப் பற்றும் ஆர்வமும் கொண்டிருந்ததால், என் தமிழாசிரியர் வித்துவான் மு.ரத்தின தேசிகரின் பாசத்திற்குப் பாத்திரமானேன். முறையாகத் தமிழ் பயின்று முழுமைபெற்ற புலவராகி, எங்கள் பள்ளிக்கே தமிழாசிரியராக வர வேண்டும் என்ற எனது இளமை லட்சியத்தையும் விருப்பத்தையும் அவரிடம் வெளியிட்டேன். அவ்வண்ணமே அவர், பள்ளி இறுதி வகுப்பான எஸ்.எஸ்.எல்.ஸி. தேர்வெழுதி முடித்ததும் என்னைத் தஞ்சாவூர் கரந்தட்டாங்குடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற தஞ்சைக் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் சேர்த்துவிடுவதாகக் கூறி, உற்சாகமும் ஊக்கமும் அளித்தார்.

அப்போது நாகப்பட்டினத்தில் 'ராயல் சோடா ஃபாக்டரி' உரிமையாளரும் தீவிர திராவிடர்க் கழகத் தொண்டருமான ஆர்.வி.கோபால் என்பவர், 'நாகை திராவிட நடிகர் கழகம்' என்ற பெயரில் ஒரு குழு அமைத்து, சமூகச் சீர்திருத்த நாடகங்களை நடத்திவந்தார். அவருக்காக மு.கருணாநிதி முதன்முதலாக, 'சாந்தா அல்லது பழனியப்பன்' என்ற நாடகத்தை எழுதி, அது அரங்கேற்றம் ஆகி நடந்துகொண்டிருந்தது.

அந்நாள்களில்  நாவல்கள், நாடகங்கள் மற்றும் திரைப்படத் தலைப்புகளில் இந்த 'அல்லது' என்பது பிரபலமாகவும், ஒரு ஃபாஷனாகவும் இருந்துவந்தது. ஒரு பெயருக்குப் பதிலாக இரண்டு பெயர்கள் வைத்து, அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஏதாவது ஒரு பெயரைக் கூறிக்கொள்ளலாம் என்பது பொதுப்படையான கருத்து.

எடுத்துக்காட்டாகச் சில பெயர்களை இங்குக் குறிப்பிடுகிறேன்.

'விமலா அல்லது விதவையின் கண்ணீர்'!
'இழந்த காதல் அல்லது சந்திரஹரி'!
'ராஜசேகரன் அல்லது ஏமாந்த சோணகிரி'!
'சூதாடி அல்லது வைஸ்ராய் கப்'! 

- இவை நாடகங்களின் பெயர்கள்.

'அரசூர் லக்ஷ்மணன் அல்லது அதியற்புதக் கள்வன்', 'கற்பகம் அல்லது மூன்று கறைகளின் மர்மம்'! - இவை நாவல்களின் பெயர்கள்.
அவ்வளவு ஏன், வி.சி.கணேசன் என்ற நாடக நடிகர் தந்தை பெரியாரின் வாயினால் 'சிவாஜி கணேசன்' என்ற பட்டம் பெறுவதற்குக் காரணமான, அறிஞர் அண்ணா எழுதிய அந்த நாடகத்தின் பெயர் 'சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்'!
கலைஞர் முதன்முதலாக எழுதிய 'சாந்தா அல்லது பழனியப்பன்' நாடகத்தைப் பார்த்ததிலிருந்து, அதைப்போல நாடகம் எழுத வேண்டும் என்ற எண்ணம், ஆர்வம் எனக்குள் ஏற்பட்டது.

அதற்குக் காரணம் அன்றைக்கு அவரை நான் உன்னிப்பாகக் கவனித்து வந்ததும், எனக்கு 'உந்துதல் விசை'யாக (inspiration) எடுத்துக்கொண்டதும்தான்.

தமிழ் எழுச்சிபெற்ற அக்காலத்தில் கலை - இலக்கியங்களில் கலைஞருக்கு அண்ணா உந்துதல் உணர்வு தந்தார் என்றால், என்னுடைய ஆரம்ப எழுத்து மற்றும் பிற்காலத் திரைப்படக் கதை வசனத்துறை ஈடுபாட்டிற்கு 'உந்துதல் விசை'யாக அமைந்தவர் கலைஞர்தான் என்பதை இன்றைக்கு, இந்த எனது எண்பத்து ஏழாவது (87) வயதில் மனந்திறந்து கூறிக்கொள்வதில் பெருமையும் பெருமிதமும் கொள்கிறேன்.

ஏகலைவன் துரோணாச்சாரியாரின் 'பிரதிமை'யைப் பிடித்து வைத்துக்கொண்டு அதையே தனது 'குரு'வாக பாவித்து 'வில்வித்தை' கற்றுக்கொண்டதைப்போல, கலைஞரிடம் குருகுலவாசம் செய்யாமலே அவரை என் மானசீக ஆசானாகக் கொண்டு நான் 'சொல்வித்தை' கற்றுக்கொண்டேன் என்றால், அது சற்றும் மிகையன்று.

'துரோணம்' என்றால் வில்; 'ஆசாரியன்' என்றால் குரு. வில்வித்தை கற்றுக்கொடுப்பதில் அவர் குருவாக விளங்கினார் என்ற காரணத்தினாலேயே அவருக்கு 'துரோணாச்சாரி' என்னும் சிறப்பு அடைமொழிப்பெயர் உண்டானது. அவரது இயற்பெயர் வேறு ஏதோ ஒன்று.

அப்படிப் பார்த்தால் கலைஞரை எனது 'பேனாச்சாரியார்' என்று குறிப்பிடலாம்.

நினைவலைகள் தொடரும்...