Published:Updated:

"என் மனதில் பதிந்த வசனம் அதுதான்!" - பராசக்தி கருணாநிதி - ஆரூர்தாஸ் பகிரும் நினைவலைகள் - 6

திருவாரூரில் எந்த தியேட்டரில் `மந்திரிகுமாரி’ நாடகம் அரங்கேற்றம் ஆகியதோ, அதே தியேட்டரில் 1950-ல் அதன் திரைப்படம் வெளியாயிற்று. எனக்குத் தெரிந்து 68 ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைக்குத் தியேட்டரில் சினிமா பாட்டுப் புத்தகத்துடன்கூட, படத்தின் திரைக்கதை வசனப் புத்தகமும் விற்கப்பட்டது `மந்திரிகுமாரி' படத்தில்தான்!

"என் மனதில் பதிந்த வசனம் அதுதான்!" - பராசக்தி கருணாநிதி - ஆரூர்தாஸ் பகிரும் நினைவலைகள் - 6
"என் மனதில் பதிந்த வசனம் அதுதான்!" - பராசக்தி கருணாநிதி - ஆரூர்தாஸ் பகிரும் நினைவலைகள் - 6

`அபிமன்யு’ படத்துக்குப் பின்னர் திரும்பவும் கோவை ஜூபிடர் பிக்சர்ஸுக்குச் செல்லாமல் ஊரிலேயே தங்கிவிட்ட கலைஞர் (கருணாநிதி), ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி காவியத்தைத் தழுவி, `மந்திரிகுமாரி’ என்னும் பெயரில் நாடகம் எழுதி, அப்பொழுது திருவாரூரில் முகாமிட்டிருந்த அமரர் கே.என்.ரத்தினம் பிள்ளையின் ஶ்ரீதேவி நாடக சபாவுக்குக் கொடுத்தார். அந்நாடகம் திருவாரூரிலேயே அரங்கேற்றம் ஆகி, வெற்றிபெற்றது.

 "மு.கருணாநிதி எழுதிய மந்திரகுமாரி, `குண்டலகேசி’ காவியத்தைத் தழுவியது" என்று அடைப்புக்குள் குறிப்பிட்டு விளம்பரம் செய்தார்கள்.

இன்றைக்கும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது... நாடகத்தின் முதற்காட்சி `சக்ரவர்த்தியின் சபா மண்டபத்திலே...’ என்னும் வசனத்துடன் தொடங்கும்.

கலைஞர் இளமையிலேயே எழுத்துத் திறன் கைவரப் பெற்றிருந்த காரணத்தினால், நாடக ஆக்கம், திரைக்கதை அமைப்பு ஆகியவற்றில் நுட்பத்தையும் புதிய புதிய யுக்திகளையும் கையாண்டார்.

இந்த `மந்திரிகுமாரி' நாடகம்தான், பிறகு அமரர்கள் அ.மருதகாசி  – கவி.கா.மு.ஷெரீஃப் ஆகிய அன்றைய புகழ்பெற்ற பாடலாசிரியர்களின் பரிந்துரையின்பேரில் அதிபர் டி.ஆர்.சுந்தரத்தின் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் மூலம் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டுப் பெரும் வெற்றிபெற்றது.

அதற்கு முன் இல்லாத அளவுக்கு மு.கருணாநிதி என்ற இளம் கதை வசனகர்த்தாவுக்கு முழுப் புகழையும் அள்ளித் தந்த முதல் படம் `மந்திரிகுமாரி'தான் என்பேன். அதற்குப் பிறகுதான் 52-ல் `பராசக்தி'யும், 54-ல் `மனோகரா’வும் வந்தது.

திருவாரூரில் எந்த தியேட்டரில் `மந்திரிகுமாரி’ நாடகம் அரங்கேற்றம் ஆகியதோ, அதே தியேட்டரில் 1950-ல் அதன் திரைப்படம் வெளியாயிற்று. எனக்குத் தெரிந்து 68 ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைக்குத் தியேட்டரில் சினிமா பாட்டுப் புத்தகத்துடன்கூட, படத்தின் திரைக்கதை வசனப் புத்தகமும் விற்கப்பட்டது `மந்திரிகுமாரி' படத்தில்தான்!

பிற்காலத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதுவதற்காக சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவுக்குச் செல்லும் புதிய இளம் எழுத்தாளர்களுக்குக் கலைஞர் கைப்பட எழுதிய மந்திரிகுமாரி ஸ்கிரிப்டைக் கொடுத்து, அதை முழுவதும் ஒருமுறை படித்துப் பார்க்கச் சொல்வதை அவர்கள் வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தனர்.

அவ்வளவு நுட்பமாக `மந்திரிகுமாரி’ திரைக்கதை வசனத்தை கலைஞர் அமைத்திருந்தார். வளரும் புதிய இளம் கதை வசனகர்த்தாக்களுக்கு அது ஒரு வழிகாட்டி நூலாக இருந்தது. அதிலிருந்து சில முக்கியமான காட்சிகள், வசனங்களைத் தொகுத்துத் தனியாக ஒரு சிறு புத்தகமாகப் பாட்டுப் புத்தகத்துடன் சேர்த்து, தியேட்டரில் விற்றார்கள்.

அதை வாங்கிப் படித்தேன். ஒருமுறைக்கு இருமுறை படித்தேன். ஏற்கெனவே தமிழ்த்தாகத்துடன் தவித்துக் கொண்டிருந்த என்னை, கொக்கிப்போட்டு இழுத்த அந்தத் தமிழில் சொக்கிப்போய், அதைப்போல் நானும் சினிமாவுக்குக் கதை வசனம் எழுத வேண்டும் என்ற ஒரு சிறு விதையை என் உள்ளத்தில் ஊன்றிக்கொண்டேன். அப்போது எனக்கு 19 வயது.

இந்தக் காலகட்டத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே எனது பள்ளி இறுதி வகுப்புத் தேர்வெழுதி முடித்துத் தேறி, வேறு எந்த முயற்சியோ முன்னேற்றமோ இன்றி வீட்டில் `சும்மா’ இருந்தேன். 

என் தந்தை நிரந்தரமான கொடிய மூல நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் விழுந்துவிட்ட காரணத்தினாலும், எங்களுடையது நான்கு சகோதரர்கள், மூன்று சகோதரிகள் மற்றும் பாட்டி ஆகியோர் அடங்கிய ஒரு பெருங்குடும்பமாதலாலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, மேற்கொண்டு என் படிப்பைத் தொடரவோ அல்லது என் இளமை லட்சியக் கனவான தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து புலவர் பட்டம் பெறவோ இயலாத நிலை ஏற்பட்டுவிட்டது.

ஆகவே, என் கவனம் முழுவதும் நாடகம், சினிமாமீது மட்டுமே சென்றது.

சினிமாவுக்குக் கதை, வசனம் எழுதும் அளவுக்கு அந்தப் பத்தொன்பது வயதில் நான் பக்குவமடைந்து முழுமை பெற்றுவிட்டேனா என்னும் சந்தேகம் ஒருபுறம் இருந்தாலும், சந்தர்ப்பம் வாய்த்து அது எனக்குச் சாதகமாக அமைந்தால், எனது இளம் எழுத்துத் திறமையைக் கொண்டு நான் ஒரு சிறந்த கதை வசனகர்த்தா ஆகி, புகழடைய முடியும் என்னும் ஒரு `தளிர் தன்னம்பிக்கை’ என் உள்ளத்தில் துளிர்விட்டிருந்தது. அது வளர்வதற்கான சில சந்தர்ப்பச் சூழ்நிலைகள் உருவாகின.

எடுத்துக்காட்டாக –

`மந்திரிகுமாரி’ படத்தின் முதற்காட்சியில், கொள்ளைக்காரப் பார்த்திபன் (எஸ்.ஏ.நடராஜன்) வழிப்பறி நடத்திக் கொள்ளையடித்த பொருள்களுடன்கூட ஓர் இளம் பெண்ணைத் தன் குகைக்கு இழுத்து வரச் சொல்லி, ஒரு வசனம் பேசுவான்... “இதயப் பசிக்கு ஏற்ற உணவு! இழுத்து வாருங்கள் அவளை!”

வந்த அவளை வரவேற்று ஒரு வசனம்: ``வருக, வருக! வசந்த காலத்தின் இளந்தென்றலே, வருக! குங்கும நிறத்தழகி, கொத்தலர் பூங்குழலே! உன் ரத்தின அதரங்களைத் திறந்து, அத்தான் என்று சொல்.”

பதிலுக்கு அவள், ``கொள்ளைத் தலைவா! உன் கொடிய வார்த்தைகளை நிறுத்திக்கொள். நான் கண்ணகி மரபில் வந்தவள்; கற்பு தவறமாட்டேன். என் அத்தானுக்காகத் தாங்கிய உயிர் அவருக்காகவே போகட்டும்!” என்று அவனுடைய உடைவாளை உருவித் தன் நெஞ்சில் பாய்ச்சித் தற்கொலை செய்துகொண்டு விழுந்துவிடுவாள்.

அப்பொழுது பார்த்திபன் கூறுவான்: ``நான் ஒரு வண்டு! எத்தனையோ பூக்கள் உண்டு! இவள் போனால் இன்னொருத்தி.”
இந்த ஒரு வசனம் மட்டும் என் நினைவில் அழுத்தமாகப் பதிந்து நிலைபெற்றது. அந்தச் சமயத்தில் நான் எழுதிய `திரிசூலம்’ நாடகத்தில் எதிர்பாராமல் இதேபோல ஒரு காட்சி அமைத்திருந்தேன். `மந்திரிகுமாரி’யைப் பார்த்தபிறகு, என் நாடக வசனத்தை மாற்றி எழுதி, அதைப் பேசச் சொன்னேன்.

`நான் ஒரு வண்டு! எத்தனையோ பூக்கள் உண்டு! இவள் போனால் இன்னொருத்தி!' - கலைஞரின் இந்த வசனத்தை `இன்ஸ்பிரேஷனாக’ எடுத்துக்கொண்டு, இதே கருத்தை வேறு விதமாகச் சொன்னால் எப்படி இருக்கும் என்று சிந்தித்தேன். இப்படி ஒரு வசனம் பிறந்தது...

நினைவலைகள் தொடரும்...