Published:Updated:

கிராமம் எனும் கனவு நிலம் - காந்தியும் மவோயிஸ்டுகளும்

கிராமம் எனும் கனவு நிலம் - காந்தியும் மவோயிஸ்டுகளும்
பிரீமியம் ஸ்டோரி
News
கிராமம் எனும் கனவு நிலம் - காந்தியும் மவோயிஸ்டுகளும்

க.காமராசன்

ன்று கிராமங்கள் குப்பை மேடுகளாக இருக்கின்றன. நாளை அவை சின்னஞ்சிறு ‘ஈடன் தோட்டங்’களாக விளங்கும்; அவற்றில் வசிப்பவர்கள் அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள்; அவர்களை யாராலும் ஏமாற்றவோ சுரண்டவோ முடியாது.

- காந்தி

இந்தியாவின் ஆயிரக்கணக்கான கிராமங்களில் காணப்படும் மூன்றாம் உலக வறுமையில்தான் இந்தியாவின் எதிர்காலம் பிறக்கப்போகிறது. நகரத்தின் துணையில்லாமலேயே, கிராமங்களின் உண்மையான கோபம், அரசதிகாரம் என்னும் திராட்சையைப் பறிக்கும். இவ்வாறு பறிக்கப்பட்ட திராட்சையிலிருந்து தயாரிக்கப்பட்ட புதிய இந்தியா எனும் மது உலகத்தையே மயக்கும்.

- யேன் மிர்தால்

கிராமம் எனும் கனவு நிலம் - காந்தியும் மவோயிஸ்டுகளும்

துருவங்களிடையே ஒற்றுமை

காந்தியின் 150-ம் ஆண்டு பிறந்த நாளை நினைவுகூரும்போது, மேலே உள்ள இரண்டு கூற்றுகளும் நினைவுக்கு வந்தன. முன்னது, காந்தியின் கூற்று; காந்தி இந்திய கிராமங்கள் மீது எந்த அளவுக்கு நம்பிக்கைகொண்டிருந்தார் என்பதற்கு எடுத்துக்காட்டு. காந்தியின் அளவுக்கு, இந்தியக் கிராமங்கள் பற்றிய கவிதாப்பூர்வமான நம்பிக்கையை வெளிப்படுத்தும் இரண்டாவது கூற்று, இந்திய மாவோயிஸ்ட்டுகளை ஆதரிக்கும் யேன் மிர்தாலின் கூற்று. யேன் மிர்தால் ஸ்வீடிஷ்காரர்; மாவோவிய ஆதரவாளர். இந்திய மாவோயிஸ்ட்டுகள் பற்றிய ஆழ்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் ‘Red Star Over India: As the Wretched of the Earth’ என்ற நூலின் ஆசிரியர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கிராமம் எனும் கனவு நிலம் - காந்தியும் மவோயிஸ்டுகளும்

இந்திய கிராமங்கள் பற்றிய இந்த இரு கூற்றுகளும் வியப்பை அளிப்பதற்குக் காரணம், காந்தியவாதிகளும் மாவோயிஸ்ட்டுகளும் இரு துருவங்கள். அவர்கள் இருவரது அரசியல் சொல்லாடல்களுமே இந்திய கிராமங்களை மையமாகக்கொண்டுள்ளன. அதுவும் அரை நூற்றாண்டு ‘சுதந்திர’ இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்கள் தீவிரமான சூழலியல் நெருக்கடிகளை முன்கொணர்ந்துள்ள வேளையில், நகரங்களைவிட ‘நெடுவாசல்’ முதல் ‘நந்திகிராம்’ வரையிலான கிராமங்கள் இந்திய தேச அரசின் ‘வளர்ச்சி’த் திட்டங்களை எதிர்த்துப் போராடி வருகிற நிலையில், அரசின் திட்டங்களை எதிர்க்கும் அத்தனை கிராமங்கள்மீதும் மாவோயிஸ்ட்டுகள் என்ற முத்திரை இடப்படும் தருணத்தில், இந்த இரு துருவங்களிடையே இந்த ஒற்றுமை கவனத்தை ஈர்க்கிறது. இதைப் பற்றி யோசித்துப் பார்த்தபோது, இந்திய அரசியல் சிந்தனை வரலாறே கிராமம் எனும் அரசியல் நிலம் பற்றியது எனத் தெரியவருகிறது.

இந்திய கிராமங்கள் மந்தகதியிலானவை; சோம்பேறித்தனத்தின் உறைவிடம்; மூடநம்பிக்கைகளின் கோட்டை என்பது காலனியக் கதையாடல். இந்தக் காலனியக் கதையாடலை காந்தி தலைகீழாக்கினார். இந்திய கிராமங்களை நிலைபேறான வாழ்வுக்கு ஆதாரமாகக் காட்டினார். நேரு முதலான தேசியவாதிகளும் பெரியார், அம்பேத்கர் முதலான சாதி எதிர்ப்புவாதிகளும் கிராமம் பற்றிய காந்தியின் சொல்லாடலை நிராகரித்தனர். பெருந்தொழில்மயமாக்கம், நகரமயமாக்கம் என்பவற்றின்மீது நம்பிக்கைகொண்டனர். மேற்கண்ட இரண்டு கூற்றுகளையும் மறுதலித்து, அதேவேளையில் ஒருவகையில் இணைவாக்கம் செய்து, இந்திய மாவோயிஸ்ட்டுகள் புதிய அரசியல் சொல்லாடலையும் செயல்பாட்டையும் முன்னெடுக்கின்றனர். இந்த அரசியல் சொல்லாடல்கள் வரலாற்றுத் தருக்கத்தை உட்கொண்டுள்ளன. இதைப் புரிந்துகொள்வது இந்திய அரசியல் சிந்தனை வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிக அவசியம்.

கிராமத்தை இதயமாகக் கொண்டுள்ள காந்தியம்

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (1869-1948) இந்திய நிலப்பரப்பில் ஆக அதிகமாகச் செல்வாக்குப் பெற்ற அரசியல் சிந்தனையாளர்; தலைவர்; இந்திய தேச அரசின் தந்தை. ஆயினும், அவரது சிந்தனைகள் இந்திய தேச அரசின் கொள்கை வகுப்பாளர்களால் நிராகரிக்கப்பட்டவை. இதற்குக் கசப்பான சாட்சியம் ஜே.சி.குமரப்பா. நிராகரிக்கப்பட்டமைக்குக் காரணம், காந்தியத்தின் இதயம் கிராமம்; கைத்தொழில்; சுயசார்பு.

காந்தியம் என்ற தத்துவம், அவரது தோற்றத்திலிருந்து தொடங்குகிறது. எளிய  ‘கிராமத்துக்காரன்’ தோற்றத்தைக் காரணக் காரியங்களோடு வரித்துக்கொண்டார். காந்தியின் தத்துவச் சிந்தனைகள் சத்தியாகிரகம் எனும் அரசியல் நடைமுறையிலிருந்து தொடங்குகின்றது. ‘எளிமையான கிராம வாழ்வில்தான் சத்தியத்தையும் அஹிம்சையையும் உணர முடியும்’ என்று சத்தியாகிரகத்தின் வேரையும் கிராம வாழ்விலிருந்து எடுக்கிறார் காந்தி. காலனி ஆதிக்கம், மேட்டிமை, அடிமைத்தனம் இப்படி அவர் காலத்து அனைத்துத் தீமைகளையும் நகரம் என்னும் அரசியல் நிலத்தோடுதான் தொடர்புபடுத்தி காந்தி சிந்திக்கிறார். பண்டைக்கால நகர அழிவின்போது தோன்றிய தீர்க்கதரிசிகளைப் போன்று ‘நகர’த்தை காந்தி விமர்சிக்கின்றார்.

கிராமம் எனும் கனவு நிலம் - காந்தியும் மவோயிஸ்டுகளும்

இந்தியாவின் ‘சுயராஜ்யம்’ என்பது பரிபூரண கிராமக் குடியரசுகளின் தொகுப்பு. இயந்திரத் தொழில் மயமாக்கல் நகரமயத்திற்கும், உடைமைக் குவியலுக்கும், சூழல் சீரழிவுக்கும் இட்டுச் செல்லும். ஆகவே இந்தியா, கிராமங்களின் வழியில் செல்ல வேண்டும்; கைத்தொழில்கள் வழி வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்திய கிராமங்கள்தாம் இந்தியப் பண்பாட்டின் உறைவிடம். இந்திய கிராமங்களில் தீண்டாமை, சாதி, கொடுமையான பிரபுகளின் ஆளுகை முதலான தீமைகள் இருந்தாலும், அவை எல்லாவற்றையும் ‘தருமகர்த்தா’ என்னும் முறையில், அதாவது சுயமாக அமைதி வழியில் நிகழும் மாற்றங்கள் வழி தீர்வு கண்டுவிட முடியும். இதுதான் காந்தியத்தின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை காந்திய சோசலிசவாதிகள் இன்னும் வலுப்படுத்தினர். காந்தியப் பொருளாதாரத்தின் எடுத்துரைப்பாளரான ஜே.சி.குமரப்பா, 1950-களின் தொடக்கம் முதற்கொண்டே காந்தியின் கிராமம் பற்றிய சிந்தனைகளை சீனாவோடும் மாவோவின் சிந்தனைகளோடும் தொடர்புப்படுத்தி வளர்த்தெடுக்க முயன்றது ஆர்வத்திற்குரிய ஒன்று.

ஆகவே, மேற்கு சென்ற அதே பாதையில் இந்தியா செல்லக் கூடாது என்று காந்தி விரும்பினார். ஆனால், காந்தியின் விருப்பத்திற்கு மாறாகத்தான் ‘இந்திய தேசம்’ சென்றது; சென்றுகொண்டிருக்கிறது. சுதந்திரப் போராட்டத்தில் சாத்தியமானதைப் போன்று, சுதந்திர இந்தியாவின் கட்டுமானத்தில் காந்தியவாதிகளால் முன்னிலைபெற முடியவில்லை. சுதந்திர இந்திய ‘தேசம்’ காந்தியை மட்டுமல்ல, காந்தியின் சிந்தனைகளையும் கைவிட்டது. தனது அலுவல் மையங்களில் காந்தியை வெறும் சிலைகளாகவும், சட்டகமிட்ட படங்களாகவும் நிறுவிக்கொண்டது.

காந்தியோடு முரண்படுகிற அம்பேத்கரும் பெரியாரும்

காந்தியத்தோடு முரண்பட்ட இரு முதன்மையான சிந்தனையாளர்கள், சாதி எதிர்ப்புவாதிகளான அம்பேத்கரும் பெரியாரும். காந்தி தனது சொல்லாடல்களில் இந்திய கிராமத்தை ‘லட்சிய நிலமாக’ உருவகித்தார். அம்பேத்கரும் பெரியாரும் எதார்த்தமான சாதி ஆதிக்கம் நிறைந்த இந்திய கிராமம் பற்றிய சொல்லாடல்கள்மூலம் காந்தியச் சொல்லாடல்களைக் கேள்விக்கு உட்படுத்தினர்.

கிராமம் பற்றியும் நவீன இயந்திரத் தொழில் பற்றிய காந்தியின் சிந்தனைகளோடும்தான் அம்பேத்கர் அதிகமாக மோதினார். நவீன நாகரிகம், இயந்திரத் தொழில் பற்றிய காந்தியின் விமர்சனங்கள் புதியவையே அல்ல; ரூசோ, ரஸ்கின், டால்ஸ்டாய் போன்றோருடையதே என்று அம்பேத்கர் வாதிட்டார். ‘இயந்திர சாதனங்களும் நவீன நாகரிகமும் பல தீமைகளைத் தோற்றுவிக்கின்றன என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்தத் தீமைகள் அவற்றுக்கு எதிரான வாதம் அல்ல. ஏனென்றால், இந்தத் தீமைகளுக்கு இயந்திர சாதனங்களும் நவீன நாகரிகமும் காரணமல்ல. தனிச் சொத்தையும் சொந்த ஆதாயம் தேடுவதையும் முழுமுதலாய்ப் புனிதம்கொண்டவை ஆக்கியுள்ள அநீதியான சமூக அமைப்பே காரணம். இயந்திர சாதனமும் நாகரிகமும் ஒவ்வொருவருக்கும் நன்மை பயக்கவில்லை என்றால், இயந்திர சாதனத்தையும் நாகரிகத்தையும் ஒதுக்கித் தள்ளிவிடுவது அல்ல பரிகாரம்; இந்த நன்மைகள் ஒரு சிலரால் அபகரித்துக்கொள்ளப்படாமல் அனைவருக்கும் போய்ச் சேரும் விதத்தில் சமூக அமைப்பை மாற்றியமைப்பதே பரிகாரம்.’ என்பது காந்திக்கு எதிரான அம்பேத்கரின் வாதம். காந்தியின் தருமகார்த்தா முறை ‘பித்தலாட்டம்’ எனச் சாடுகிறார் அம்பேத்கர். புதிய நகர வாழ்வில்தான் தீண்டாமையும் சாதியும் ஒழியும் என்பது அம்பேத்கரின் நம்பிக்கை எனத் தோன்றுகிறது.

‘கிராமப் புனருத்தாரணம்’ என்ற காந்தியத்தின் இதயத்தை அம்பேத்கரைப் போன்று பெரியாரும் தாக்கியுள்ளார். “கிராமம் என்கிற எண்ணத்தையும், பெயரையும், அதற்கு ஏற்ற பாகுபாட்டையும், பாகுபாட்டு முறையையும் வைத்துக்கொண்டு நீங்கள் என்னதான் கிராமச் சீர்திருத்தம் செய்தாலும் பறையன், சக்கிலி என்பவர்கள், எப்படி ‘அரிஜனன்’ ஆனானோ ஆதிதிராவிடன் ஆனானோ அதுபோன்ற மாற்றம்தான் ஏற்படுமே ஒழிய, பறையன் மற்ற மனிதர்களைப்போல மனிதனானான் என்கிற மாற்றம் எப்படி ஏற்படாதோ அதுபோல் கிராமச் சீர்திருத்தம் செய்யப்படுவதால், ‘நல்ல கிராமம்’ ஆயிற்று என்றுதான் ஏற்படுமே ஒழிய, மற்றபடியான நகரத்தன்மையும், நகர மக்கள் அனுபவிக்கும் உரிமையையும் அனுபவிக்க முடியவே முடியாது” என்று பெரியார் சாதி ஒழிப்புவாதத்தோடு தொடர்புபடுத்தி விமர்சனம் செய்தார். இயற்கை, செயற்கை என்ற பாகுபாடு பற்றியும் பூமியில் மனிதச் சமூக வரலாறு முழுவதும் செயற்கையால் ஆனது பற்றியும் வாதிட்டு பெரியார் காந்தியின் அடிப்படைச் சிந்தனைகளோடு முரண்படுகிறார்.

கிராமக் கைத்தொழில் என்பதையும் பெரியார், ‘கீழான தொழில், ஈனமான தொழில், கஷ்டமான தொழில், சரீர உழைப்பு அதிகமாகவும், பயன் மிக அற்பமாகவும் - குறையாகவும் - வாழ்வியல் இழிவாகவும்  இருக்கும்படியான தொழில் முறைகளை நாட்டில் இல்லாமல் செய்ய வேண்டும்.  அதுதான்,  நாட்டு முன்னேற்றமாகும்’ என்று விமர்சிக்கின்றார். இந்த வாதங்களின் தொடர்ச்சியாகப் பெரியார் ‘ருஷியாவைப் போன்று’ நகரம், கிராமம் என்று வேறுபாடு இல்லாத நிலை வரவேண்டும் என விரும்புகிறார்.

கிராமம் எனும் கனவு நிலம் - காந்தியும் மவோயிஸ்டுகளும்

காந்தியச் சிந்தனைக்கு அம்பேத்கரும் பெரியாரும் மிக முக்கியமான எதிர்நிலைகள். ஆயினும், இம்மூவரிடையேயும் ஓர் ஒற்றுமை உண்மை. அது, சுதந்திர இந்தியாவில் அவர்களுக்கும் அவர்கள் சிந்தனைகளுக்கும் அளிக்கப்பட்ட இடம். காந்தி இந்திய தேசிய அரசியலை உருப்படுத்தியவர்களில் மிக முக்கியமானவர். ஆயினும், காந்தியச் சிந்தனை, இந்திய தேசிய அரசியலில் கைவிடப்பட்டது. இந்திய தேசிய அரசியலின் மிக முக்கியமான ‘எதிராளி’ அம்பேத்கர். ஆயினும், அவர் இந்திய தேச அரசக் கட்டுமானத்தில் பங்குகொண்டவர். ‘இந்திய அரசியல் அமைப்பின் சிற்பி’ என்ற முள்கிரீடம் அவரைவிட்டு அகலுவதாகத் தெரியவில்லை. அம்பேத்கரின் சிந்தனைகளும் இந்திய தேச அரசின் பார்ப்பன நலன்களுக்கு முரண்பட்டு நிற்கின்றன. பெரியார் இந்திய தேசியத்தின், இந்திய தேச அரசின் முற்று முழுதான ‘எதிரி’.

கிராம அரசியலின் புதிய இணைவாக்கம் மாவோயிஸ்ட்கள்

காந்தி, அம்பேத்கர், பெரியார் ஆகிய அரசியல் சிந்தனை முகங்களோடு முரணும் உறவும்கொண்டவர்கள் இந்திய மாவோயிஸ்ட்டுகள். அவர்கள் காந்தியைப் போல் இந்திய கிராமத்தைத் தங்கள் அரசியல் லட்சியத்தின், செயல்பாட்டின் ஆதாரமாகவும் மையமாகவும் கொள்கின்றனர். ஆனால், காந்தியைப்போல் நிலைபேறான இந்தியப் பண்பாட்டின் உறைவிடமாக கிராமத்தைக் கருதவில்லை. மாறாக, பன்முகப் பண்பாட்டின் உயிர்ப்பாகவும் குறிப்பாக ஒடுக்கப் பட்டவர்களின் எழுச்சிக்கான தளமாகவும் கருதுகிறார்கள்.

அம்பேத்கர், பெரியார் முதலான சாதி ஒழிப்புவாதிகளோடு மாவோயிஸ்ட்டுகள் முற்றிலும் உடன்படுகின்றார்கள். அதேவேளையில், பெருந்தொழில் மயமாக்கலின் மூலமாகவும் நகர வாழ்வின் மூலமாகவும் சாதி அழிந்துவிடும் என்ற வாதத்தையும் நிராகரிக்கின்றனர். கிராம x நகர முரணை ஒழித்தல், உடல் உழைப்பு x மூளை உழைப்பு முரணை ஒழித்தல் என்ற நீண்ட பயணத்தின் அங்கமாக சாதி ஒழிப்பை முன்வைக்கின்றனர். இந்திய அரசியல் சிந்தனை வரலாற்றில், இந்த இணைவாக்கம் மிக முக்கியமானது. இந்த இணைவாக்கத்தில்தான் வரலாற்றிலும் சமகால அரசியலிலும் மாவோயிஸ்ட்டுகள், நிராகரிக்க முடியாத முக்கியத்துவம் பெறுகின்றனர்.

இந்திய தேச அரசின் வலிமையோடும், அதன் அரசியல்-கருத்துநிலை அணிதிரட்டலோடும் ஒப்பிடும்போது, மாவோயிஸ்ட்டுகள் கிள்ளுகீரைகள்தாம். மிகவும் பின்தங்கிய பழங்குடிப் பகுதிகளில், இந்திய தேச அரசுக்கு எதிராக அம்மக்களை அணிவகுத்து நிறுத்தி வெற்றிபெற்றுவிடலாம் என்று நினைப்பது கனவுதாம். ஆனால், அது இந்திய அரசியல் சிந்தனை வரலாற்றின் தருக்கப்பூர்வமான கனவு. இந்தக் கனவை ஏந்துவதால்தான், அவர்களோடு மிகவும் முரண்படுகிற உண்மையான காந்தியவாதிகள் கூட அவர்களுடன் உடன் நிற்கிற அதிசயத்தைக் காணமுடிகிறது.