Published:Updated:

`என் தனிமைச் சிறையைத் தோற்கடிக்கின்றன உன் கடிதங்கள்!’ - சிறையிலிருந்து பேராசிரியர் சாய்பாபா

`என் தனிமைச் சிறையைத் தோற்கடிக்கின்றன உன் கடிதங்கள்!’ - சிறையிலிருந்து பேராசிரியர் சாய்பாபா
`என் தனிமைச் சிறையைத் தோற்கடிக்கின்றன உன் கடிதங்கள்!’ - சிறையிலிருந்து பேராசிரியர் சாய்பாபா

டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையில் பணியாற்றியவர் பேராசிரியர் ஜி.என் சாய்பாபா. பழங்குடி மக்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்துச் செயல்பட்டவர். 90 விழுக்காடு செயல்படாத உடலையும், பல்வேறு உடல் உபாதைகளையும் கொண்ட மாற்றுத்திறனாளி. தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்புகொண்டிருந்ததாகக் கூறிக் கைது செய்யப்பட்டவர். சிறையிலிருக்கும் தன் கணவரை விடுவிக்கப் போராடி வரும் அவரது மனைவி ஏ.எஸ் வசந்தகுமாரி, சாய்பாபா தனக்காக எழுதிய கவிதையை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிந்திருக்கிறார். அந்தக் கவிதையின் தமிழாக்கம்...

இந்தச் சிறை இருளில்
உடைந்திருக்கும் எனது இதயத்தின் இடுக்கிலிருந்து
வழியும் ரத்தத்தின் ஒளியில்
உனது கடிதங்களை வாசித்துக்கொண்டிருக்கிறேன்

உனது அழகிய விரல்களால்
சேர்த்துச் சேர்த்து எழுதப்பட்ட எழுத்துக்களின் வளைவையும்
வார்த்தைகளுக்கும், வரிகளுக்கும் இடையிலிருக்கும்
சிறு இடைவெளியையும் உற்றுப் பார்த்து
உனது நம்பிக்கைச் செய்தியை வாசித்துக் கொண்டிருக்கிறேன்

உனது அன்பின் மையை ஊற்றி
நீ எழுதி அனுப்பியிருக்கும் வரிகளில்
உன் முக பாவங்களை வாசித்துக்கொண்டிருக்கிறேன்

பசித்திருக்கும் இந்த மூளைக்கு
உன் ஒற்றை வார்த்தை, மில்லியன் செய்திகளைச் சொல்கிறது
இந்த வார்த்தைகள், உன் உணர்வின் வாசனையைக் கடத்துகிறது

ஆமாம். காதலே
கிறுக்கலான உனது கடிதம்தான் பிடித்திருக்கிறது
கம்ப்யூட்டரில் டைப் செய்து அச்சிடப்பட்ட கடிதங்கள் அல்ல
உன் கடிதங்கள்தான் உன்னைப்போல் பேசுகின்றன
அதுதான் உன்னைப்போல் நடந்துகொள்கிறது
உன் கைகளின் அசைவை அதுதான் எனக்குக் காட்டுகிறது

தணிக்கையிலிருந்து தப்பிக்கும்
உன் எழுதப்படாத கடிதங்களை
தலையணைகளற்ற என் தலைக்கு அடியில் 
பரப்பிவைத்து, கண்களை மூடி
உயிருக்குள்ளே படித்துக் கொள்கிறேன்

உனதன்புக் கடிதங்களில் மூழ்கி
தனிமைச் சிறையின் நோக்கத்தை, வேலையை
தோற்கடித்துக் கெடுத்துக் கொண்டிருக்கிறேன்.

ஜி.என் சாய்பாபா
மே 18, 2018.

பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா விடுவிக்கப்படுவதற்கான சாத்தியங்கள், அதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளைக் குறித்து அவரிடம் கேட்டபோது, ``ஆதிவாசிகளைப் பற்றி, அவர்களது உரிமைகளைப் பற்றி, சிறுபான்மையினரின் பாதுகாப்பைப் பற்றி யார் பேசினாலும், அவர்களுக்கு நக்சல் முத்திரை நிச்சயம். நானும் என் கணவரும்கூட அப்படித்தான். மாற்றுத்திறனாளியான என் கணவர் சாய்பாபா செய்த ஒரே விஷயம், நில உரிமைகள் பறிக்கப்பட்டுத் துன்புறுத்தப்படும் பழங்குடிகளுக்காகப் பேசியதுதான். கடைக்கோடி மனிதனின் கேள்விக்குப் பதிலளிக்க முடியாத இந்த அரசு, புத்தகம் வைத்திருப்பவர்களையெல்லாம் கோழைத்தனமாகக் கைது செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவரை விடுவித்துவிடமுடியாதபடி எல்லாவிதமான வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறது அரசு” என்றார் ஏ.எஸ் வசந்தகுமாரி.