Published:Updated:

``அம்பேத்கரிஸ்டுகளும் மார்க்ஸியர்களும் கைகோக்க வேண்டும்!'' - ஜிக்னேஷ் மேவானி

``அம்பேத்கரிஸ்டுகளும் மார்க்ஸியர்களும் கைகோக்க வேண்டும்!'' - ஜிக்னேஷ் மேவானி

``அம்பேத்கரிஸ்டுகளும் மார்க்ஸியர்களும் கைகோக்க வேண்டும்!'' - ஜிக்னேஷ் மேவானி

``அம்பேத்கரிஸ்டுகளும் மார்க்ஸியர்களும் கைகோக்க வேண்டும்!'' - ஜிக்னேஷ் மேவானி

``அம்பேத்கரிஸ்டுகளும் மார்க்ஸியர்களும் கைகோக்க வேண்டும்!'' - ஜிக்னேஷ் மேவானி

Published:Updated:
``அம்பேத்கரிஸ்டுகளும் மார்க்ஸியர்களும் கைகோக்க வேண்டும்!'' - ஜிக்னேஷ் மேவானி

நேர்காணலுக்கு ஒப்புதல் தந்து, தேநீருடன் காத்திருந்த ஜிக்னேஷ் மேவானியிடம் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில்கள் கிடைத்தன. 

``உங்களது பள்ளி, கல்லூரி நாள்கள் குறித்த செய்திகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்...''

``நான் கலைக் கல்லூரி மாணவனாக இல்லாமல்போயிருந்தால், இன்று நான் இருக்கும் நிலையை நிச்சயம் அடைந்திருக்க மாட்டேன். நாடகமும், கலையும், கவிதையும் என் வாழ்க்கையில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த உலகில் கவிதைகள் படைக்கப்படாமல்போயிருந்தால் நான் நிச்சயமாகச் செயற்பாட்டாளனாக மாறியிருக்க மாட்டேன். அந்த அளவுக்குக் கவிதைகளின் தாக்கம் எனக்குள் உண்டு. முதலாம் வகுப்பிலிருந்து, பன்னிரண்டாம் வகுப்பு வரையில் நூலக வசதியில்லாத, விளையாட்டு மைதானங்கள் இல்லாத, எந்தவித கலைவடிவத்துக்கு அறிமுகம் ஏற்பட வாய்ப்பில்லாத அரசுப் பள்ளிகளில்தான் படித்தேன். அஹமதாபாத்தின் ஹெச்.கே கலைக் கல்லூரியில் படித்தபோது எனக்குக் கிடைத்த இரண்டு பிராமணப் பேராசிரியர்களின் துணையுடன் பலரை வாசிக்கும், பல கலைகளுக்கு அறிமுகமாகும் வாய்ப்பைப் பெற்றேன். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாழ்வில் எதைப் பற்றியும் தெரிந்துகொள்ள முடியாத இந்தத் தலித் மாணவன் ஜிக்னேஷுக்கு, வான்காவையும், ஃபைசையும், சாப்ளினையும், காலிப்பையும், கிப்ரானையும், ஆனந்த் பட்வர்தனையும் அவர்கள்தான் எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். எனது தத்துவார்த்தப் பின்புலத்தின் வேர் அங்குதான் வளர்ந்தது. கலைக்கு, தத்துவத்தைக் கற்றுத்தரும் சக்தி இருக்கிறது. அந்த வகையில் இப்படிப் பல கலைகளை ஒருங்கிணைத்து சமூகநீதித் திருவிழாவை நடத்தும் குழுவைப் பார்த்து பெருமகிழ்ச்சியடைகிறேன். நண்பர் ரஞ்சித், சத்தமில்லாமல் மிகப்பெரிய காரியத்தைச் செய்துகொண்டிருக்கிறார். என்றைக்காவது ஒரு நாள், அரசியலிலிருந்து நான் விலக நேர்ந்தால், மக்களோடு இணைந்திருக்க நிச்சயம் நான் கலையைத்தான் தேர்ந்தெடுப்பேன்.''

``ஊக்கப்படுத்திய பேராசிரியர்களைப் பற்றிச் சொல்லுங்கள்...''

``என் முக்கியப் பேராசிரியர்கள் இருவர், பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான். நான் தலித்தாகப் பிறந்தது எப்படிக் குற்றமில்லையோ, அதுபோல அவர்களும் பிராமணக்  குடும்பத்தில் பிறந்ததும் அவர்களின் பிழையல்ல. அவர்களின் மனதில் துளியும் பிராமணீயமில்லை. இதைச் சொல்லும் இந்த வேளையில், முக்கியமான ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். சாதி யாரையும் விட்டுவைப்பதில்லை, தலித்துகளில் உள்ள உட்சாதி பிளவுக்கு அதுதான் காரணம். இங்கே பறையர்கள், அருந்ததியர்கள் மீதும், தெலங்கானாவின் மாலாக்கள் ,மாதிகாக்கள் மீதும், சமார்கள், புத்கர்களின் மீதும் கொண்டிருக்கிற பார்வை, பார்ப்பனியம்தான். நமக்கு நாமே சொல்லிக்கொள்ளவேண்டிய கலாசாரச் செய்தி ஒன்று இருக்கிறது. சாதியவாதமும் மனுதர்மமும் தலித்துகள் உட்பட அனைத்துச் சாதிகளையும் தாக்கியிருக்கின்றன. சாதியத்தைப் பற்றிய இந்தத் தெளிவான புரிதல் மிக ஆழமாகச் சாதி ஒழிப்புப் போராளிகளிடம் உருவாக வேண்டும்.''

``90-களில் உருவான தலித் இலக்கியங்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் உருவாக்கத்துக்கு விதை போட்டிருக்கின்றனவா?''

``தலித் இலக்கியங்கள்குறித்து கருத்து சொல்வதற்கு, எனக்கு அதில் ஆழமான அறிமுகமில்லை. ஆனால், தலித்துகளிடம் தலித் இலக்கியங்கள் நன்றாகவே போய்ச் சேர்ந்திருக்கின்றன என்றே நினைக்கிறேன். உதாரணமாக, எனக்கு முந்தைய இரண்டு தலைமுறை ஆள்களுக்கு ஜோசப் மேக்வான் எழுதிய `அங்களியாத்' குஜராத்தி நாவல் பிரசித்தமானது. இந்த நாவல், `step child' என்னும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவிலும் குஜராத்திலும் ஓரளவுக்குத் தலித் இலக்கியங்கள் வரவேற்பு பெற்றிருக்கின்றன. ஆனால், இலக்கியங்கள் எல்லோரிடமும் பரவலாகுவதில் குறைபாடு இருக்கிறது.''

``தீவிரமாக இயங்கிவந்த தலித் இயக்கங்களின் தலைமைகள், ராம்விலாஸ் பஸ்வான், ராமதாஸ் அதாவ்லே போன்றே பா.ஜ.க பக்கம் சென்றிருக்கின்றன. மும்பையில் `பீம் சக்தி... சிவ் சக்தி' போன்ற முழக்கங்களோடு சிவசேனையோடு கூட்டணி அமைத்த தலித் இயக்கங்களின் போக்கை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

``சில தலித் தலைவர்கள், `பாபாசாகேப் அம்பேத்கர், காங்கிரஸைத்தான் எதிர்த்தார்; பா.ஜ.க-வை அல்ல’ என்று மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அம்பேத்கர், காங்கிரஸை எதிர்த்தார்தான். ஆனால், அதைவிட நூறு மடங்கு அதிகமாக ஆர்.எஸ்.எஸ்-ஸின் பாசிசக் கருத்துகளை எதிர்த்தார்; இந்துத்துவ மதவாதிகளை எதிர்த்தார். இதை அந்த மோசடிப் பேர்வழிகள், திட்டமிட்டுத் தங்களுடைய குறுகிய அரசியல் லாபத்துக்காகவும் சுயநலத்துக்காகவும் மறைக்கிறார்கள். தலித்துகளை வேறு யாரைவிடவும் அதிகமாக ஏமாற்றியது, போலி தலித் தலைமைகள்தாம். அவர்கள் தலித்துகளின் நலனை வெளிப்படுத்தும் அசலான பிரதிநிதிகள் அல்லர். ''

``தலித்துகளின் நிஜமான லட்சியங்கள் என எவற்றைக் குறிப்பிடுகிறீர்கள்?''

``ஒடுக்கப்படுகிற வேறெந்த சமூகத்தைப்போலவே, தலித்துகளின் லட்சியமும்கூட அடிமைத்தளையிலிருந்து விடுபடுவதுதான். ஆனால் பிரச்னை என்னவென்றால், தலித் இயக்கங்களின் பெரும்பான்மைப் போக்கை, நடுத்தரவர்க்க, உயர் நடுத்தரவர்க்க தலித்துகள் கைப்பற்றிவைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு, உழைக்கும் வர்க்கக் கண்ணோட்டம் கிடையாது.  அவர்களது செயற்பாடுகள் என்பது, பெரும்பாலும் இட ஒதுக்கீடு, பதவி உயர்வு பற்றிய கருத்தரங்குகளை நடத்துவதுதான்.  

எப்போதாவது கொடூரமான தலித் ஒடுக்குமுறை நிகழ்ந்தால் மட்டும் வீதிக்கு வருகிறார்கள். மற்றபடி  டிசம்பர் 6 மற்றும் ஏப்ரல் 14 கொண்டாடுவதை மையப்படுத்தியே இருக்கிறது. உழைக்கும் வர்க்க தலித்துகளின் நலன்கள் குறித்தெல்லாம் அவர்களுக்குக் கவலையே இருப்பதில்லை.  சாதி வன்முறைகளால் பாதிக்கப்படும் தலித்துகளில் 95 சதவிகிதம் பேர், வறுமையில் வாடுபவர்கள்தான். இங்கே சாதியும் வர்க்கமும் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதைத்தானே இது காட்டுகிறது.  சுயமரியாதைக்கான போராட்டத்தில் உணவு, உடை, இருப்பிடத்துக்கான கோரிக்கைகளைக் கைவிடக் கூடாதல்லவா?  அப்படிச் செய்தால், போலியான விடுதலை உணர்வை அது ஏற்படுத்தலாம். ஆனாலும், பொருளாதார ரீதியாக நீங்கள் பின்தங்கியே இருப்பீர்கள். 

`தலித் இயக்கங்களின் பெரும்பான்மைப் போக்கு,  புலனாகாத ஒன்றை எட்டி உதைத்து, யதார்த்தத்திடம்  உதை வாங்கியது' என்று ஆனந்த் டெல்டும்டே கூறுவார். எடுத்துக்காட்டாக, தலித்துகளில் பெரும்பான்மையினர் அமைப்பு சாரா தொழிலாளர்கள்தான். அவர்களது சுயமரியாதைக்கான போராட்டத்தில் சத்தான உணவு, நல்ல உடை, சுகாதாரமான இருப்பிடம், நிலவுரிமை போன்றவையும் சேர்ந்ததுதானே அவர்களது சுயமரியாதை. ஏழை தலித் ஒருவரைக் கோயிலுக்குள் அழைத்துச் செல்லும் குடிமைப் போராட்டத்துக்குப் பிறகும், அந்த ஊர் ஆதிக்கச் சாதிக்காரனின் நிலத்தைக் கூலியாளாகத்தான் வேலைபார்த்து வருவார் என்றால், நாம் சாதித்தது என்ன?  நாம் எதுவுமே சாதிக்கவில்லை என்று கூறவில்லை. அந்தக் கோயில் நுழைவு உரிமையோடு மட்டும் திருப்தி அடைந்துவிடக் கூடாது என்கிறேன்.

இந்த நாட்டில், வெறும் 20 ரூபாய்க்கும் குறைவான கூலியோடு  84 விழுக்காடு மக்கள் வாழ்கிறார்கள் என்று சொல்லப்படுகிறதே, அவர்கள் யார், தலித்துகள், பழங்குடியினர், இஸ்லாமியர்கள்தானே? 40 விழுக்காடு மக்களுக்கு உருப்படியான வீடு இல்லை. சால்களிலும் குடிசைகளிலும் சுகாதாரமற்ற இடங்களிலும் வாழ்கின்ற மக்கள் யார்? இந்தப் பிரச்னைகளிலிருந்து  விடுதலை பெறுவதுதான் தலித்துகளின் நிஜமான லட்சியம். `சாதி எதிர்ப்பா... வர்க்கப் போரா... எதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்?' என நீண்ட நெடுங்காலமாக அம்பேத்கரிஸ்டுகள் மற்றும் மார்க்ஸிஸ்டுகளுக்கு இடையே நீண்ட நெடும் தத்துவப் போராட்டம் நடந்துவருகிறது.  இரண்டும் கைகோத்து நடக்க வேண்டும் என்ற முடிவுக்குத்தான் நாம் வர வேண்டும். 

இதுதவிர, தலித்துகளுக்கு நிலவுரிமை வழங்கப்பட்ட பிறகும் தம் வீட்டுப் பெண்களை ஆணாதிக்கத்தோடு நடத்தினாலோ, நான் என் மனைவியிடமோ, காதலியிடமோ இனிமையாக நடந்துகொண்டு, சொத்து அனைத்தையும் என் பெயரிலேயே வைத்துக்கொண்டாலோ அதுவும் பிரச்னைதான். ஆக, முற்போக்குக் கலாசார இயக்கங்கள், பொருளாதார உரிமைகளுக்கான இயக்கங்கள் இரண்டும் இணைந்துதான் செயலாற்ற வேண்டும்.''

``உழைக்கும் தலித் மக்களின் நட்புச் சக்திகள் எவை?''

``ஏழைகளின் துயரங்களை அறிந்து, சாதிய, வர்க்கப் போராட்டங்களில் சேர்த்து எந்த இயக்கங்கள், கட்சிகள் முன்னெடுக்கின்றனவோ, அவையே ஒடுக்கப்படும் மக்களின் உண்மையான நட்புச் சக்திகள்.''

``பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மக்களையும் சேர்த்துதான் நண்பர்கள் எனக் குறிப்பிடுகிறீர்கள். அவர்களையும் எஸ்.சி மக்களையும் வர்க்கரீதியாக அணி திரட்டுவது எளிமையானதா? உழைக்கும் வர்க்கத்தினர், சாதி பார்ப்பதில்லையா?''

``ஆமாம். சாதி பார்க்கிறார்கள். ஏற்கெனவே கூறியதைப்போல இது ஒரு சாதிய சமூகம். அனைவருக்கும் பிராமணியக் கிருமித்தொற்று இருக்கிறது. ஆகவே, வர்க்கரீதியாக உழைக்கும் மக்களை அணி திரட்டுகிற அதே வேளையில், முற்போக்குக் கலாசார உள்ளடக்கத்தோடு தீண்டாமை ஒழிப்பு தொடர்பான வேலைகளையும், சாதி ஒழிப்புக்கான வேலைகளையும் அவர்களிடம் மேற்கொள்ள வேண்டும். இது கடினமான வேலைதான். ஆனால், இது ஒன்றுதான் வழி.''

``உங்கள் அரசியல் கண்ணோட்டம், தலித் பேந்தர்ஸ் இயக்கத்தைத் தழுவியதாக இருக்கிறது. உழைக்கும் வர்க்க தலித்துகளிடையே உங்கள் கண்ணோட்டத்துக்கு ஆதரவு இருக்கிறதா?''

``வரவேற்பு, அவநம்பிக்கை தருவதாக இல்லை. பெரும்வரவேற்பு கிடைத்துவிட்டது என்றும் சொல்ல முடியாது. கடந்த 20, 30 ஆண்டுகளாக மக்கள்  அடையாள அரசியலில் சிக்கிக் கிடக்கிறார்கள். நம்முடைய பொருளாதார உரிமைகள் சார்ந்த கோரிக்கைகளில் கவனம் செலுத்தத் தவறிவிட்டோம். மீண்டும் மக்களைச் சரியான பாதைக்கு அழைத்து வருவது கடினமான காரியம்தான். ஆகவே, எனக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை. நான் இந்தப் பாதையில் கடும் நெருக்கடியைச் சந்திக்கிறேன். குஜராத்திலும் அதற்கு வெளியேயும் சில தலித் அமைப்புகள், அமித் ஷாவுக்கு எதிராகப் பிரசாரம் செய்வதைவிட எனக்கு எதிராக அதிகம் பிரசாரம் செய்கிறார்கள். தொடர்ந்து உழைப்பது ஒன்றுதான் வழி. அதைத்தான் செய்கிறேன். மக்களுக்குத் தேவை, உரிமைகள்தான்; கொடியின் நிறமல்ல. மக்கள் உங்களைக் கைவிட மாட்டார்கள். 2019-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு, ஒவ்வோர் ஆண்டும் 500 கிராமங்களுக்குப் பயணம் செய்து மக்களைச் சந்தித்து, மேலும் மேலும் களச்செயற்பாட்டாளர்களை உருவாக்குவேன். இதைத் தொடர்ந்து செய்தால், நிச்சயமாக மாற்றம் வரும் என நம்புகிறேன். ''

`` `Accidental prime Minister' என்று ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார் அனுபம் கேர். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

``அது அவரது கருத்துரிமையை வெளிக்காட்டக்கூடிய ஒரு திரைப்படம். அதைப்போலவே Disastrous Prime Minister என்று மோடியின் கதாபாத்திரத்தை வைத்து ஒரு படம் எடுத்தால், அது ஷாரூக்கான், சல்மான்கான் படங்களைவிட மிக நன்றாக ஓடும்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism