Published:Updated:

அடைபட்ட கதவுகளின் முன்னால்...

அடைபட்ட கதவுகளின் முன்னால்...

பிரீமியம் ஸ்டோரி
அடைபட்ட கதவுகளின் முன்னால்...

மகனுக்குத் தாலாட்டுப் பாடிய ஒரு தாயின் போர்ப் பாட்டு இது. எல்லாத் தாயும் தன் பிள்ளைகளை சில ஆண்டுகாலம்தான் சுமப்பார்கள். 24 ஆண்டுகளாகச் சிறையில் சுமக்கும் தாய் அற்புதம் அம்மாள்.

''சிறையின் கொடும் தனிமையிலும் எனக்குப் போராடுவதற்கான சக்தி என் அம்மாவிடம் இருந்து கிடைக்கிறது. வெயில் மழையைப் பொருட்படுத்தாது எனக்காக நீதிமன்றத்திலும் சிறையிலும் ஏறி இறங்கும் அம்மாதான் என் சக்தியின் வற்றாத உறைவிடம். நான் தளரும் போதெல்லாம், ஒருக்கால் தூக்கு மரத்தின் கீழே நிற்க வேண்டி வரும்போதும்கூட அம்மாவின் முகம் எனக்கு வலிமை தரும். நான் தூக்கில் ஏற்றப்பட்டால் தோற்றுப்போவது என் அம்மாவாகத்தான் இருப்பார்கள். அதுமட்டும்தான் என் துயரம்'' - அற்புதம் அம்மாளின் கம்பீரம் பேரறிவாளனின் இந்த வரிகளில்தான் இருக்கிறது.

அடைபட்ட கதவுகளின் முன்னால்...

'எங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியாதது மனித வெடிகுண்டைச் செய்தது யார் என்பதுதான்’ என்று சொல்கிறார் ஒரு சி.பி.ஐ அதிகாரி. 'பேரறிவாளன் வாக்குமூலத்தை நான்தான் மாற்றினேன். அவர் சொன்னதை எழுதாமல் விட்டது எனது தவறுதான்’ என்று சொல்கிறார் இன்னொரு சி.பி.ஐ. அதிகாரி. 'ராஜீவ் கொலையில் சுமார் 40 லட்சம் ரூபாய் புழங்கியிருக்கிறது. இதனை இந்தியாவில் கையாண்டது யார் என்பதை நாங்கள் விசாரிக்கவில்லை’ என்கிறார் ஓய்வுக்குப் பிறகு ஒரு நீதிபதி. இப்படிப்பட்ட அடுக்கடுக்கான பலவீனத்தின் உச்சமான ஒரு வழக்கில், அடைபட்டுக் கிடக்கிறார் பேரறிவாளன். அவரது அம்மா, தன் மகன் 1991 ஜூன் மாதம் 10-ம் தேதி பிடிபட்டுப் போனது முதல் இன்று வரையிலான கொடுங்கனவான நீதிப் போராட்டத்தை விவரிக்கும் புத்தகமே இது. பத்திரிகையாளர் அனுசிரீ, அற்புதம் அம்மாளிடமும் தொடர்ச்சியாகப் பேசி மலையாளத்தில் எழுதிய கட்டுரைகளை, யூமா.வாசுகி தனது கதாபூர்வமான மொழி நடையில் மொழிபெயர்த்துள்ளார். மகனை சி.பி.ஐ. கைது செய்த நாளில் இருந்து, குடும்பம் என்ற பாதுகாப்பான மேலோட்டில் இருந்து வெளியேறி (இது அற்புதம் அம்மாளின் வார்த்தைகள்!) தனி மனுஷியாய் மகனை மீட்கக் கிளம்பினார் அற்புதம். தனது ஒரு மகனுக்காக மட்டுமல்ல.. மரண தண்டனை பெற்ற எல்லாருக்குமான பாசம் கலந்த வீரக்குரல் இது.

'என் மகன் தெரியாமல் தவறு செய்துவிட்டான். அவனை மன்னித்து விட்டுவிடுங்கள்’ என்று இந்தத் தாய் கேட்கவில்லை. 'என் மகன் நிரபராதி. அவனை விடுதலை செய்யுங்கள். நான் வேண்டி நிற்பது இரக்கத்தை அல்ல. நீதியை’ என்று கேட்கிறார் அற்புதம். ''நான் இப்போதும் நீதியின் மீதும் சட்டத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்'' என்று சொல்கிறார் அறிவு.

அறிவுக்கு விடுதலை கொடுக்கும் அற்புதத்தை என்று காட்டும் நீதி?

- புத்தகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு