Published:Updated:

அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்

அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்

பிரீமியம் ஸ்டோரி
அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்

நீதியரசர் கே.சந்துருவுக்கு அறிமுகம் தேவையில்லை. தனக்கு முன் உள்ள வழக்கை சட்டப்படி மட்டுமல்லாமல் நியாய, தர்ம, பண்பாட்டு, ஜனநாயக விழுமியங்களுடன் பரிசீலனை செய்யக்கூடிய நீதிபதி என்று பெயர் எடுத்தவர். அகில இந்திய அளவில் நீதிபதிகள் சின்னப்பரெட்டி, வி.ஆர்.கிருஷ்ணய்யர், பி.என்.பகவதி ஆகியோர் வரிசையில் இடம்பெறக் கூடிய தமிழக ஆளுமைகளில் ஒருவர் சந்துரு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய ஏழு ஆண்டு காலத்தில் சுமார் 96 ஆயிரம் வழக்குகளை ஆய்ந்து தீர்ப்பளித்த சாதனை இவருடையது. அதோடு அவருடைய சாதனை முழுமை அடைந்துவிடுவது இல்லை. எத்தனை வழக்குகளுக்குத் தீர்ப்பளித்தார் என்பதில் அல்ல, எத்தகைய எண்ணங்களை அதில் பிரதிபலித்தார் என்பதே முக்கியம். அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சில தீர்ப்புகள் குறித்து சுருக்கமாகச் சொல்லும் புத்தகம் இது.

வழக்கறிஞராக இருக்கும்போது மனித உரிமைகள், ஒடுக்கப்பட்டோர் விடுதலை, பெண்ணுரிமை, ஜனநாயக தன்மைகள் பற்றிப் பேசுபவர்கள், நீதிபதிகள் நாற்காலியில் உட்கார்ந்த பிறகும் அப்படி பேசுகிறார்களா என்பது கவனிக்கத்தக்கது. நீதிபதியாக ஆன பிறகும் சந்துரு, அதே பழைய சந்துருவாகவே இருந்தார் என்பதை இந்தத் தீர்ப்புகள் சொல்கின்றன.

அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்

பட்டியல் இனத்தவர் பௌத்த மதத்துக்கு மாறினாலும் அவருக்கு சலுகைகள் உண்டு என்று இந்தியச் சமூக அமைப்பு குறித்த சரியான புரிதல் உள்ள ஒருவரால்தான் சொல்ல முடியும். ''பட்டியலின மக்கள் இந்துக்களாயினும் பிற மதத்தைத் தழுவியோராயினும் அவர்களுக்கு இழைக்கப்படும் சாதிக்கொடுமைகள் ஒன்றே'' என்று சொன்னவர் சந்துரு.  தலித் பெண் ஒருவர் சத்துணவுக்கூட சமையல்காரராக இருப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் செய்யப்பட்ட தடங்கல்களுக்கு எதிராக அவர் அளித்த தீர்ப்பில், ''ஒரு தலித் சமையலர் சமைக்கும் உணவை உண்ணும் குழந்தைகள் எதிர்காலத்தில் அந்த மக்கள் மீது கடைப்பிடிக்கும் தீண்டாமை பற்றிய வழக்கம் ஒழிய உதவும்'' என்று கூறியிருக்கிறார். இட ஒதுக்கீடு என்பதைக்கூட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவருக்கான வேலைவாய்ப்பாகக் கருதிப் பார்க்காமல், அவர் வேலை பெறுவதன் மூலமாக சமூக சமன்மை சாத்தியம் ஆகிறது என்ற பார்வைதான் இவருக்கு அழுத்தமாக இருக்கிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள பத்துக்கும் மேற்பட்ட தீர்ப்புகளில் பொருத்தமாக டாக்டர் அம்பேத்கரின் சிந்தனைகளை மேற்கோள் காட்டுகிறார்.

சாதி, தீண்டாமை, வன்கொடுமை, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை போன்ற விஷயங்களில் தீர்ப்பளிக்கும்போது எத்தகைய எச்சரிக்கை உணர்வுடன் ஒரு நீதிபதி செயல்பட வேண்டும் என்பதை உணர்த்துகின்றன இந்தத் தீர்ப்புகள். இவை சட்ட நீதிக்கு மட்டுமல்ல, சமூக நீதிக்கும் நீதியரசர் சந்துருவின் அழிக்க முடியாத பங்களிப்புகள்.

- புத்தகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு