Published:Updated:

அடிப்படை வாதங்களின் மோதல்

அடிப்படை வாதங்களின் மோதல்

பிரீமியம் ஸ்டோரி
அடிப்படை வாதங்களின் மோதல்

மத அடிப்படைவாதத்துக்கும் உலக போலீஸ்காரனாக தன்னை நினைத்துக்கொண்டிருக்கும் ஓர் ஏகாதிபத்திய அடிப்படை வாதத்துக்குமான மோதல்தான், கடந்த பல ஆண்டுகளாக உலகக் கொந்தளிப்பாக மாறிக்கொண்டு இருக்கிறது. எந்த ஒன்றின் பக்கம் நின்றும் ஆதரிக்க இயலாதவாறு இரண்டுமே கொடூரத்திலும் கொடூரமாக தங்களை அடையாளப்படுத்தி வரும் சூழலில், 'இரண்டையுமே எதிர்க்க வேண்டும்’ என்று வலுவான வாதங்களை வைக்கிறார் தாரிக் அலி.

அடிப்படை வாதங்களின் மோதல்

பிறப்பால் அவர் பாகிஸ்தானி. 'முஸ்லிம் அல்லாத முஸ்லிம்’ என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர். தந்தை, தாய் இருவருமே இடதுசாரிச் சிந்தனை கொண்டவர்கள். அதனால், இளமையிலேயே நாத்திகராக வளர்க்கப்பட்ட தாரிக் அலி, இஸ்லாம் பற்றியும் முறைப்படி படித்தவர். ஆக்ஸ்போர்ட் கல்வி அவரது சிந்தனையை உலகமயப்படுத்தியது. பத்திரிகையாளனாக இருந்ததால், அவரது பயணங்கள் சிந்தனையைச் செழுமைப்படுத்தியது. இப்போது அவர் இருப்பது லண்டனில். இவரது மனைவி சூசன் வாட்கின்ஸ், புகழ்பெற்ற 'நியூ லெஃப்ட் ரிவ்யூ’ இதழின் ஆசிரியர்.

செப்டம்பர் 11, 2001 தாக்குதலைத் தொடர்ந்து அடிப்படை வாதங்கள் குறித்து நிறைய எழுதத் தொடங்கினார் தாரிக் அலி. மத அடிப்படை வாதம், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கான மோதல் குறித்த தகவல்களை திரட்டியபோது, 'கடந்த காலம் நிகழ்காலத்தை அரிக்கிறது. எதிர்காலத்தை அழுகிப்போக வைக்கிறது. அரசியல், மதவாத உலகின் விஷமான பனியால் விழுங்கப்படுகிறது’ என்ற முடிவுக்கு வந்தார். அதனாலேயே இந்தப் புத்தகத்தை எழுதினார். ஜெருசலேம், எண்ணெய் போர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், காஷ்மீர், அமெரிக்கா பற்றி விரிவான விமர்சனப் பதிவுகள் இந்தப் புத்தகம் முழுக்க இருக்கின்றன.

'மத அடிப்படைவாதிகள், அமெரிக்காவை அதன் மேலாண்மை அதிகாரத்துக்காகத்தான் எதிர்க்கிறார்கள்’ என்று சொல்லும் இவர், 'மதம் எழுச்சி பெற்றதற்கு ஒரு பகுதி காரணம், புதிய தாராளவாதத்தின் உலகளாவிய கட்சிக்கு வேறு மாற்று கண்டுபிடிக்க முடியாததால்தான்’ என்றும் மிகச் சரியாகவே சொல்கிறார்.

இந்த உலகளாவிய சிக்கலுக்குள் இருக்கும் இந்தியா என்ன செய்ய வேண்டும்? ''அமைதி முயற்சியின் பொறுப்பு இந்தியாவிடம் உள்ளது. அதுதான் பிரதேசத்தில் வலிமையான நாடு. அதன் தலைவர்கள், உலகமயமான நிதிக்கும் அதன் ஏகாதிபத்திய தலைவர்களுக்கும் நாடுகளைப் பிளவுபடுத்துவதுதான் இயல்பான சுபாவமே தவிர இணைப்பதல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதனைத் தடுப்பதற்குப் பிரதேச ரீதியிலான கூட்டும், புதிய வகை ஆளுமையும் தேவை'' என்று எச்சரிக்கிறார் தாரிக் அலி.

அடிப்படைவாதிகள், ஆக்கிரமிப்பாளர்கள் - இரண்டையும் எதிர்த்து சிந்திக்கத் தூண்டுகிறது இந்தப் புத்தகம்.

- புத்தகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு