Published:Updated:

கனடிய தமிழ் காங்கிரஸின் முன்னெடுப்பு... டொரொண்டோ தமிழ் இருக்கை! தமிழர்களின் கனவு நனவானது எப்படி?

டொரொண்டோ தமிழ் இருக்கை
டொரொண்டோ தமிழ் இருக்கை

உலகத்தில் 7000த்துக்கும் மேற்பட்ட மொழிகள் இருக்கின்றன. அவற்றில் 7 மொழிகள்தான் செம்மொழி அங்கீகாரம் பெற்றுள்ளன. தமிழ் உலகின் பழைமையான மொழி மட்டுமல்ல, தொடர்ந்து பயன்பாட்டிலும் இருந்து வருகிற மொழி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் ஒலிக்க வேண்டும் என்பது பாரதியாரின் பெருங்கனவு. ஆதிச்செம்மொழிகளில் ஒன்றாக விளங்கும் தமிழை உலகின் முதல்நிலை கல்விக்கூடங்களில் இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகள் நெடுங்காலமாகவே நடந்து வருகின்றன. அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உருவாக்கப்பட்டுவிட்டது. ஹூஸ்டன் பல்கலைக்கழகம், இங்கிலாந்தில் உள்ள லண்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ் இருக்கை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, கனடாவில் உள்ள டொரொண்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை தொடங்குவதற்கான பணி நிறைவடைந்துள்ளது.

புலம்பெயர் தமிழர்களுக்கு கௌரவமான வாழிடம் தந்து காக்கிற நாடுகளில் ஒன்று கனடா. இந்த நாட்டில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வசிக்கிறார்கள். கனடா தமிழ் காங்கிரஸ் அமைப்பு, அங்கிருக்கும் தமிழர்களை ஒருங்கிணைத்து பல்வேறு அறப்பணிகளைச் செய்து வருகிறது.
டொரொண்டோ தமிழ் இருக்கை
டொரொண்டோ தமிழ் இருக்கை

அந்த அமைப்பு, ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைவதற்கும் பங்களிப்பு செய்திருந்தது. அதன் தொடர்ச்சியாக கனடா முழுதிருக்கும் பிற தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து, டொரொண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. நயாகரா தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளின் பங்களிப்போடு தொடங்கப்பட்ட இப்பணி உலகத் தமிழர்கள், தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் பங்களிப்போடு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

டொரொண்டோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்கான கட்டமைப்பில் இறங்கியவர்களில் முக்கியமானவர் கனடா தமிழ் காங்கிரஸ் அமைப்பின் தலைவர் சிவன் இளங்கோ. ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கையின் இயக்குநராகவும் இருக்கும் அவரிடம் கனடிய தமிழ் சமூக வாழ்வியல் சார்ந்தும் டொரோண்டோ தமிழ் இருக்கை குறித்தும் உரையாடினேன்.

உங்கள் பூர்வீகம் இலங்கை... கனடா வந்தது எப்போது?

இலங்கை யாழ்ப்பாணத்தில் நாரந்தனை என்ற கிராமத்தில் பிறந்தவன். ஆரம்பக்கல்வியை ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையில் பயின்றேன். பிறகு யாழ்பாணம் இந்துக்கல்லூரி உயர்தரப் பாடசாலையில் படித்தேன். அதன்பின்பு பட்டயக் கணக்காளர் படிப்பை கொழும்பில் முடித்தேன். பிறகு கொழும்பிலேயே ஐந்தரை ஆண்டுகள் பணிபுரிந்தேன். திருமணம் செய்ததன் பின்பு, 2001-ல் கனடா வந்தேன். இங்கு மீண்டும் பட்டயக் கணக்காளர் படிப்பைப் படித்து இங்கு பதிவு செய்யப்பட்ட ஆடிட்டராக ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.

டொரொண்டோ தமிழ் இருக்கை
டொரொண்டோ தமிழ் இருக்கை

கனடிய தமிழ் காங்கிரஸ் என்ன மாதிரியான செயல்பாடுகளை மேற்கொள்கிறது?

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கனடாவில் செயல்படுகிறது கனடிய தமிழ் காங்கிரஸ் அமைப்பு. இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, உயிரிழந்த, காணாமல் போனவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று ஐ.நா சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் தொடர்ந்து குரல் கொடுத்தும் தீவிர செயற்பாடுகளில் இறங்கியும் வருகிறது. தவிர தமிழ் மொழி, கலை, கலாசார மேம்பாடு தொடர்பான பங்களிப்புகளையும் செய்து வருகிறது. 'தமிழ் தெருவிழா' ஒன்றை ஆண்டுதோறும் நடத்திவருகிறோம். ஒரு பிரதான வீதியொன்றை மூடி இரண்டு நாள்கள் அதில் நடத்துவோம். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்வார்கள். தமிழ்க் கலைகள் தொடங்கி அத்தனை பண்பாட்டுக் கூறுகளையும் அங்கே காணமுடியும். இந்திய துணைக்கண்டத்துக்கு வெளியே நடக்கும் மிகப்பெரிய நிகழ்வு அது. கோவிட் காரணமாக கடந்தாண்டு அதை நடத்தமுடியவில்லை. இவைதவிர, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான சில வேலைகளையும் செய்து வருகிறோம். சில சாரிட்டி நிகழ்வுகள் நடத்தி நிதி திரட்டி இலங்கையில் உள்ள பிள்ளைகளுக்குத் உதவுகிறோம். தமிழ்ப் பிள்ளைகளுக்கு தலைமைத்துவ பயிற்சிகள் தருகிறோம். கனட அரசு நிர்வாகத்துக்கும் தமிழ் மக்களுக்குமான பிரதிநிதிகளாக தமிழ் காங்கிரஸ் செயல்படுகிறது. தமிழ் சேர் இங்க். (Tamil Chair Inc.) உடன் கரம்கோத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த டொரொண்டோ தமிழ் இருக்கை, இந்த அமைப்பின் மிக முக்கியமான பணி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ் மக்களை கனடிய அரசு எப்படி நடத்துகிறது?

மிகவும் சிறப்பாக நடத்துகிறார்கள். கனடா பல்கலாசார நாடு. அவரவர் தங்களுக்கு விருப்பமான விடயங்களைச் செய்ய சுதந்திரம் இருக்கிறது. தமிழ் மக்கள் தொழிலதிபர்களாக இருக்கிறார்கள். தனித்துவமாக வாழ்கிறார்கள்.

சர்வதேச கல்வி நிறுவனங்களில் தமிழ் இருக்கை தொடங்குவதன் பலன் என்ன?

உலகத்தில் 7000த்துக்கும் மேற்பட்ட மொழிகள் இருக்கின்றன. அவற்றில் 7 மொழிகள்தான் செம்மொழி அங்கீகாரம் பெற்றுள்ளன. தமிழ் உலகின் பழமையான மொழி மட்டுமல்ல... தொடர்ந்து பயன்பாட்டிலும் இருந்து வருகிற மொழி. சர்வதேச ரீதியில் பல நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களில் இருக்கைகள் அமைவதன்மூலம் தமிழுக்கு பெரும் அங்கீகாரம் கிடைக்கிறது. மேலும் மொழி தொடர்பான ஆராய்ச்சிகள் நடக்கவும் வாய்ப்பாக இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் இது உதவும். தமிழ் பிள்ளைகள் மட்டுமின்றி வேறு மொழி பேசுபவர்களும் மொழியின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள தமிழ் இருக்கை உதவும்.

டொரொண்டோ தமிழ் இருக்கை
டொரொண்டோ தமிழ் இருக்கை

ஹார்வார்டு தமிழ் இருக்கையின் பணி தொடங்கிவிட்டதா?

ஹார்வார்டு தமிழ் இருக்கைக்கான பணியை 40 வருடங்களாக அமெரிக்காவில் இருக்கும் தமிழர்களான டாக்டர் ஜானகிராமனும் டாக்டர் திருஞான சம்பந்தமும் நிதியளித்து தொடங்கி வைத்தார்கள். பிறகு நாங்களும் அதில் இணைந்தோம். அதில் 11 இயக்குநர்கள் இருக்கிறாகள். அதில் நானும் ஒரு இயக்குநர். தமிழ் மொழி சார்ந்து தொடக்கக்கால கல்வி, இண்டர்மீடியட் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. இப்போது தமிழிருக்கைக்கான பேராசிரியரைத் தேர்வு செய்வதற்கான பணி இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. சங்க இலக்கியம் பற்றி ஆராய்ச்சிகளை முதன்மைப்படுத்தி அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கவிருக்கின்றன.

ஒரு பன்னாட்டுக் கல்வி நிறுவனத்தில் தமிழிருக்கை தொடங்க வேண்டுமென்றால் எவ்வளவு நிதி தேவைப்படும்?

அது ஒவ்வொரு கல்வி நிறுவனத்துக்கும் ஒரு மாதிரி அமையும். ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை அமைக்க 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்பட்டன. டொரொண்டோ பல்கலைக்கழகத்தில் அமைக்க 3 மில்லியன் கனடியன் டாலர்கள் தேவைப்பட்டன. நாங்கள் தருகிற பணத்தை முதலீடு செய்து அதில் வரும் தொகையைக் கொண்டு தமிழிருக்கையை இயக்குவார்கள். பேராசிரியர்களுக்கு சம்பளம் தர இந்தத் தொகைப் பயன்படுத்தப்படும். டொரொண்டோ கனடாவில் முதன்மையான பல்கலைக்கழகம். உலகிலேயே முதன்மையான 20 பல்கலைக்கழகங்களில் ஒன்று. இங்கு தமிழிருக்கை அமைவது நமக்கெல்லாம் பெருமிதம். 2018ம் ஆண்டு இதற்கான தொடக்கம் அமைந்தது. ஆரம்பித்த காலத்திலிருந்து பல நிகழ்ச்சிகளை நடத்தினோம். பல அன்பர்கள் ஆதரவு அளித்தார்கள். கொரோனாவால் நிதி சேர்ப்பு முயற்சிகள் சற்று தடைபட்டன. இணையவழியாக நிகழ்ச்சிகள் நடத்தினோம். அது சர்வதேச அளவுக்குச் சென்று சேர்ந்தன. நிறைய ஆதரவு கிடைத்தன. நாங்கள் எதிர்பார்த்த நிதி முழுமையாகக் கிடைத்துவிட்டது. உலகெங்கும் இருக்கும் தமிழ் உறவுகளுக்கு நன்றி!

டொரொண்டோ தமிழ் இருக்கை
டொரொண்டோ தமிழ் இருக்கை

டொரொண்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு தமிழகத்திலிருந்து போதிய உதவிகள் கிடைத்தனவா?

இந்தியாவிலிருக்கும் தமிழர்கள் இந்த முன்னெடுப்புக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்கள். தமிழக அரசு, சுமார் 173,000 கனடியன் டாலர் அளவுக்கு நன்கொடை செய்திருந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் 16,000 கனடியன் டாலர்கள் நன்கொடையளித்தார்கள்.

தமிழகத்திலிருந்து என்ன பங்களிப்பை எதிர்பார்க்கிறீர்கள்?

தமிழிருக்கை கனடாவில் இருந்தாலும் இதன் பலன் உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் அனைவருக்கும் சென்றடையும். எங்கள் இணையதளம் https://torontotamilchair.ca. நிதியளிக்க விரும்புபவர்கள் இங்கு சென்று அனுப்பலாம். தமிழ் இருக்கை அமைப்பதற்கான நிதி போதிய அளவுக்குக் கிடைத்துவிட்டது. மேற்கொண்ட பணிகளுக்கு நீங்கள் தரும் நன்கொடை உதவும்.

டொரோண்டோ பல்கலைக்கழக தமிழிருக்கை அமைக்கும் பணியில் கனடிய தமிழ் காங்கிரஸோடு கரம் கோர்த்து இயங்கும் நயாகரா தமிழ்ச்சங்கத்தின் நிறுவனர் நவீடா, நம் சென்னைப் பெண். சர்ச் பார்க், எம்.ஓ.பி மாணவி. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் மீடியா புரொடக்ஷன் முடித்தவர். இங்கிலாந்தில் உள்ள தமிழ் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்ட நவீடா, கனடாவில் பிஹெச்டி முடித்துவிட்டு பேஸ்புக் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிகிறார். பிரிட்டிஷ் இந்தியா தமிழ் ரேடியோவின் குளோபல் இன்ஸ்பையரிங் தமிழ் உமன் விருது பெற்றவர். இவர் தாத்தாவைப் பற்றிச்சொன்னால் இன்னும் நம் மனசுக்கு நெருக்கமாவார். நடிகர் நாகேஷின் பேத்தி!

"நயாகராவில் தமிழர்கள் நிறைய இருக்கிறார்கள். கனடிய தமிழ் காங்கிரஸ் வழிகாட்டுதலில் நிறைய பணிகள் செய்து வருகிறோம். தமிழ் வகுப்புகள், கலாசார நிகழ்ச்சிகள், மொழி மேம்பாடு என நிறைய வேலைகள் நடக்கின்றன. கனடிய தமிழ் காங்கிரஸோடு ஒருங்கிணைந்து, டொரோண்டோ தமிழ் இருக்கைப்பணியில் ஈடுபட்டது பெருமிதம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கரம் இணைந்து இதை நிகழ்த்தியிருக்கிறோம்" என்கிறார் நவீடா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு