Published:Updated:

மதுரை தெருக்களின் வழியே - 3: தமிழ் சினிமா காட்டும் மதுரையின் முகம் நிஜமானதா? வரலாறு சொல்வது என்ன?

தொலைதூரத்தில் இருந்து மதுரை நகரம்

தமிழ்த் திரைப்படங்களில் அண்மைக்காலமாக மதுரை என்றால் நீளமான அரிவாள், டாடா சுமோகார்கள், வெட்டி வீழ்த்தும் ரவுடித்தனம், பொறுக்கித்தனம், மது குடித்துவிட்டுச் சலம்புதல், அடிதடி எனப் புனையப்படும் கதையாடல் அபத்தமானது.

மதுரை தெருக்களின் வழியே - 3: தமிழ் சினிமா காட்டும் மதுரையின் முகம் நிஜமானதா? வரலாறு சொல்வது என்ன?

தமிழ்த் திரைப்படங்களில் அண்மைக்காலமாக மதுரை என்றால் நீளமான அரிவாள், டாடா சுமோகார்கள், வெட்டி வீழ்த்தும் ரவுடித்தனம், பொறுக்கித்தனம், மது குடித்துவிட்டுச் சலம்புதல், அடிதடி எனப் புனையப்படும் கதையாடல் அபத்தமானது.

Published:Updated:
தொலைதூரத்தில் இருந்து மதுரை நகரம்
மதுரை நகருக்கும் கலைக்குமான உறவு, சங்க காலத்தில் இருந்து தொடர்கிறது. நாட்டார் நிகழ்த்துக் கலைகள் திருவிழாக்களில் நடத்தப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரை பால நாடக சபா, மதுரை பால விநோதினி சபா என்ற பெயர்களுடன் நாடகக் கம்பெனிகள் வெவ்வேறு ஊர்களில் தொடங்கப்பட்டன. சங்கரதாஸ் சுவாமிகள் தொடங்கிவைத்த நாடகங்கள் இன்றளவும் மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நடத்தப்படுகின்றன.

சுண்ணாம்புக்காரத் தெரு என அழைக்கப்படும் நாடக நடிகர் சங்கத் தெருவைச் சுற்றிலும் நாடக நடிகையர், இசைக் கலைஞர்கள் இன்றளவும் வாழ்ந்து வருகின்றனர். வள்ளித்திருமணம், பவளக்கொடி, மதுரைவீரன், அரிச்சந்திரா மயானகாண்டம் போன்ற நாடகங்கள் கிராமப்புறத் திருவிழாக்களில் இரவு 11 மணிக்குத் தொடங்கி விடியவிடிய நடத்தப்படுகின்றன. ராஜபார்ட், ஸ்திரிபார்ட், பபூன், காமிக்பெண் என்ற முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் நாடகக் கலைஞர்கள் வெவ்வேறு ஊர்களிலிருந்து நாடகம் நிகழ்கின்ற ஊரில் கூடிப் பின்னர் நடிக்கத் தொடங்குகின்றனர். ஒரு கிராமத்தில் 'வள்ளித் திருமணம்' நாடகம் ஆண்டுதோறும் நிகழ்த்தப்பட்டாலும் நாடக நடிகையர் வேறுவேறு என்ற நிலையில், குறிப்பிட்டவர்கள் எப்படி நடிக்கின்றனர் என்பதுதான் முக்கியம். இத்தகைய நாடகங்களுக்கு இன்று இளைய தலைமுறையினரிடம் வரவேற்பு இல்லை.

நாடகம்
நாடகம்
For Representation Only

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருவிழாவில் 'வள்ளித் திருமணம்' நடத்தினால்தான் நன்கு மழை பெய்து, ஊர் செழிக்கும் என்பது கிராமத்தினரிடையே நம்பிக்கை உள்ளது. எனினும் திரைப்படப் பாடல் ஒலிக்க, அக்காட்சியை மேடையில் நடனக் கலைஞர்கள் ஆடிக்காட்டும் 'ஆடல் பாடல் காட்சி' இன்று மதுரையில் பிரபலமாக உள்ளது. நீளமான தலைமுடியுடன், ஜிப்பா அணிந்து, வித்தியாசமான தோற்றத்துடன் மதுரை நாடக நடிகர் சங்க வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிற 'ராஜபார்ட்' நடிகரின் கண்களின் முன்னால் பட்டாம்பூச்சி பறந்து கொண்டிருக்கிறது. மின்னொளியில் இரவு முழுக்கப் பாடி, தர்க்கம்செய்து பெற்ற கைதட்டல்கள் அவரைக் கனவுலகிற்கு இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மதுரை நகரத்தின் அடையாளமாக மேலவெளி வீதியில் அமைந்துள்ள விக்டோரியா ஹால் பழைமை கசியப் பிரகாசிக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட அந்த அரங்கில் பகல்வேளையில் நூலகமும் மாலைவேளையில் திரையரங்கமும் செயல்பட்டன. இன்று அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதியில் நூலகம் தனியாகச் செயற்படுகிறது. அந்தக் காலத்தில் மேலைநாடுகளில் தயாரிக்கப்பட்ட செவ்வியலான ஆங்கிலப் படங்கள் மட்டும் ரீகல் திரையரங்கில் திரையிடப்பட்டன. எழுபதுகளில் கல்லூரியில் பணியாற்றிய ஆங்கிலப் பேராசிரியர்கள், "ரீகல் திரையரங்கத்துக்குப் போய் ஆங்கிலப் படங்களைப் பாருங்கள். ஆங்கில அறிவு வளரும்" என ஆலோசனை கூறினர். கல்லூரி மாணவனாகிய நான் நண்பர்களுடன் சேர்ந்து ரீகல் திரையரங்கிறகுப் 'போய் பென்ஹர்', 'டென் காமெண்ட்மண்ட்ஸ்' போன்ற ஆங்கிலத் திரைப்படங்களை ஆர்வத்துடன் பார்த்தோம். பகலில் நூலகம், இரவில் தியேட்டர் எனச் செயல்பட்ட விக்டோரியா அரங்கு, ஒருவகையில் மதுரையின் அடையாளம்தான்.

மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றம்
மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றம்

மதுரை நகரில் ஞாயிற்றுக்கிழமை சந்தை, நாயடிச் சந்தை என இரு சந்தைகள் உள்ளன என்பது பலருக்கு வியப்பைத் தரும். பொதுவாகச் சந்தை எனப்படுவது, வாரத்தில் ஒருநாள் பல்வேறு வியாபாரிகள் கூடி, ஒரே இடத்தில் நடத்தப்படுவது. அன்றைய நாளில் மக்களும் திரண்டுபோய் தங்களுக்குத் தேவைப்படும் பொருள்களை வாங்குவது வழக்கம். மதுரை திலகர் திடலில் நிரந்தரமாகக் காட்சியளிக்கும் சந்தை முன்னர் ஞாயிறு, வியாழன் ஆகிய நாள்கள் மட்டும் நடைபெற்றன. பிற நாள்களில் அந்தத் திடலில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. இன்று எல்லா நாள்களிலும் சந்தை உண்டு. பழைய புதிய பொருள்கள் எது வேண்டுமானாலும் அங்குக் கிடைக்கும்.

மதுரை சந்தை
மதுரை சந்தை
UJ

வாகனங்களின் இன்ஜின்கள், இசைத்தட்டுகள், மேசை, ஷோ-கேஸ்கள், தாரா வாத்து, செல்ல நாய்க்குட்டிகள், பச்சிலை மருந்துகள், மரக் கதவுகள், இரும்புக் குழாய்கள், இயந்திர உதிரிப் பாகங்கள், சுத்தியல், ஸ்பானர் போன்ற கருவிகள், மண் பானைகள், கணினி என எந்தப் பொருள் வேண்டுமானாலும் அங்குப் பேரம் பேசி வாங்கலாம். பந்தயப்புறா, வண்ண மீன்கள், கின்னிக்கோழி, வான்கோழி எனப் பட்டியல் நீளும். மிகக்குறுகலான சந்துகளில் பொருள்கள் குவிந்து கிடக்கும் ஞாயிற்றுக்கிழமை சந்தையைச் சும்மா சுற்றி வந்தாலே மனம் நிறைவாக இருக்கும். பயன்படுத்தப்பட்ட பழைய பொருள்களும் புதிய பொருள்களும் விலை சல்லிசாகக் கிடைக்கும் என்பதற்காக அடிக்கடி சந்தைக்குப் போய்ச் சுற்றிப் பார்க்கும் வழக்கமுடையவர்கள் மதுரையில் கணிசமாக உண்டு. ஞாயிற்றுக் கிழமையன்று சந்தைக்கு முன்னரும் பக்கவாட்டிலும் விரிந்திருக்கும் தெருக்களில் கணினி, பென் டிரைவ், தொலைக்காட்சிகள், அலைபேசிகள் போன்ற மின்னணுப் பொருட்களுடன் பல்வேறு பழைய பொருள்களை மலிவான விலையில் பேரம் பேசி வாங்கிடலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எண்பதுகளின் தொடக்கத்தில் நாவலாசிரியர் பசிங்காரத்துடன் பேசிக் கொண்டிருந்தபோது, நாற்பதுகளில் மதுரையில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற விலை மகளிர் ஸ்தலங்களைப்பற்றிக் குறிப்பிட்டார். அவருடைய நாவலான 'புயலிலே ஒரு தோணி'யில் இடம்பெற்றுள்ள தாசி, விபசாரம் பற்றிய சித்திரிப்புகள் யதார்த்தம் என்று கூறினார். அன்றைய ஆண் மேலாதிக்கச் சமூகத்தில், பொருட்பெண்டிருக்கான உறவு செழிப்புடன் விளங்கியது. 'டாபர் மாமாக்கள்' என அழைக்கப்படும் தரகர்களின் மூலம் தாசித்தொழில் பரவலாக நடைபெற்றது. இத்தகைய உறவுகளினால் சொத்துக்களைத் தொலைத்த ஆண்களும், சீரழிந்து போன குடும்பங்களின் எண்ணிக்கையும் அளவற்றவை. இளமைக் காலத்தில் உடலை மூலதனமாக்கிப் பொருளீட்டும் பெண்கள், பின்னர் பாலியல் நோய்க்குள்ளாகி, சரியான மருத்துவம் இன்றி இறந்தவர் எண்ணிக்கை அதிகம்.

இத்தகைய சமூக அவலம், எழுபதுகளிலும் மதுரை லாட்ஜுகளில் கொடிகட்டிப் பறந்தது. 'தங்கும் விடுதி-விலைப்பெண்-தரகர்' என்ற முக்கோணத்தில் பழைமையான பரத்தைமைத் தொழில் நடந்தேறியது. ரீகல் டாக்கீஸ் எதிர்ப்புறம், டி.பி.கே. ரோடு, டவுன்ஹால்ரோடு போன்ற பகுதிகளில் இரவு எட்டு மணியளவில் மாமாக்கள் ஆள்தேடி அலைந்தனர். நான்கைந்து நண்பர்கள் சந்தித்தால் 'டாஸ்மாக்' போய் மது குடித்துப் போதையில் மிதப்பது போல, அறுபதுகளில் நண்பர்கள் கூட்டம் லாட்ஜுகளில் 'பறவைகள் பலவிதம்' எனப் பாடிக் களித்தனர். ஒப்பீட்டளவில் ஆண் - பெண் பாலியல் உறவைப் பொறுத்தவரையில் இன்றைய இளைஞர்களுக்கு நற்சான்று தரலாம்.

மதுரை மிட்லண்ட் சினிமாஸ்
மதுரை மிட்லண்ட் சினிமாஸ்
இரண்டாயிரமாண்டுப் பழைமையான நகரம் பண்பாட்டுரீதியிலும், அரசியல் ரீதியிலும் பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டுள்ளது என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு மதுரை நகரம். ஆனால் தமிழ்த் திரைப்படங்கள் சித்திரிக்கிற மதுரை பற்றிய பிம்பம் புனைவானது. தமிழ்த் திரைப்படங்களில் அண்மைக்காலமாக மதுரை என்றால் நீளமான அரிவாள், டாடா சுமோகார்கள், வெட்டி வீழ்த்தும் ரவுடித்தனம், பொறுக்கித்தனம், மது குடித்துவிட்டுச் சலம்புதல், அடிதடி எனப் புனையப்படும் கதையாடல் அபத்தமானது.

”ஏய் எங்ககிட்டேயே உன் வேலையைக் காட்டுறியா? நாங்க எல்லாம் அரிவாளை எடுத்தோம்... யோ யாருன்னு தெரியாமலே பேசிட்டுப் போறியே... என்னா நீ பாட்டுக்குப் போறே... மாமா நிக்கிறேன் இல்ல... மாமாவைக் கவனிச்சிட்டுப் போ... மாப்பிள்ளை நாம விட்ட உதார்ல ஆள் டர்ராயிட்டான்... அவன் பண்ணின வேலைக்குச் சங்கைக் கடித்துத் துப்பினால்...." இப்படியான மதுரை நகரத் தெருப் பேச்சுக்கள் கட்டமைக்கும் புனைவுகள் அளவற்றவை. 'நாங்க, எங்க' என்ற சொற்கள் மூலம் சலம்புகிறவர் உணர்த்த விரும்புவது, தான் ஒரு பெரிய கும்பலின் ஆள் என்று. தெருவோரத்தில் அமர்ந்து இதுபோன்று வீம்புப் பேசும் பேச்சுகளை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒரு காலகட்டத்தில் மதுரை நகரில் ரவுடிகள் வெவ்வேறு பகுதிகளில் 'உதார்' காட்டிக் கொண்டிருந்தனர். பாண்டி என்ற சொல்லுக்கு முன்னால் ஏதோ ஒரு ஒட்டுடன் மதுரை நகரில் வலம் வந்த ரவுடிகள் காலப்போக்கில் மறைந்து போயினர். சிலர் மதுரை நகரத் தெருவோரத்தில் குத்துப்பட்டுச் செத்துக் கிடந்தனர். மக்களைப் பயமுறுத்தி வாழும் ரவுடிகளின் காலம் என்பது மிகக்குறுகியது. வெறுமனே ரவுடி என்ற லேபிளுடன் வாழ்ந்த ரவுடிகள், இன்று அரசியல் வேஷம் பூசிக்கொண்டு, 'அண்ணன்கள்' ஆதரவில் மதுரை மக்களுக்குத் தந்து கொண்டிருக்கும் தொந்தரவுகள் அளவற்றவை.

மதுரை மத்திய சிறைச்சாலை
மதுரை மத்திய சிறைச்சாலை

மதுரையில் மீட்டர் வட்டி, கந்துவட்டி, டிஜிட்டல்வட்டி, டிஸ்கோ வட்டி, ரன்னிங் வட்டி, பொட்டல வட்டி எனப் பல்வேறு வட்டிகள் மூலம் கொள்ளையடிக்கும் ஆதிக்க சாதியினரின் வெற்றுச் சவடால் ஒருபுறம் வலுவாக உள்ளது. கக்கூஸ் காண்டிராக்ட், சைக்கிள் ஸ்டாண்ட் காண்டிராக்ட், பார் காண்டிராக்ட் என எடுத்து நடத்தும் சிலரின் பொறுக்கித்தனத்தினால் மதுரைவாசிகள் பாதிக்கப்படுகின்றனர். 'ஆ ஊ...' என்றால் சின்ன விஷயத்துக்காகக்கூட ஆயுதத்தைத் தூக்குகிற கூலிப்படையினர் மதுரையில் சிறிய அளவில் உள்ளனர். மதுரைக்குச் சுற்று வட்டாரத்தில் 30 மைல் தொலைவில் வாழ்கிற சிறு விவசாயிகள், வயலில் வேலை செய்கிற தொழிலாளர்கள் விவசாயம் பொய்த்ததினால் மதுரைக்குக் கூலியாட்களாகக் குடியேறுகின்றனர். 'கெட்டும் பட்டிணம் சேர்' என்ற சொல்வடைக்கு ஏற்ப இத்தகையவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்துள்ளது.

கிராமத்தினர் லாரிகளில் லோடுமேன்கள், மார்க்கெட்டுகளில் சுமை தூக்குபவர்கள், மாட்டுவண்டி ஓட்டுபவர்கள், ரிக்சா ஓட்டுபவர்கள், தெருவோரத்தில் கடை வைத்துச் சிறிய அளவில் வியாபாரம் செய்பவர்கள் என்று மாறுகின்றனர். அவர்களில் சிலர் அடியாட்களாக உருவெடுக்கின்றனர். மதுரைக்குப் புறத்தேயுள்ள பகுதிகளில் ஓட்டு வீடுகள் அல்லது குடிசைகளில் வாழ்கின்ற பலர் அன்றாடச் செலவு தொடங்கி, தெருவோரத்தில் சிறிய காய்கறிக் கடை நடத்துவதற்குக்கூட கந்து வட்டிக்காரர்களிடம் சிக்கிக் கொள்கின்றனர். ஒருமுறை அவர்களின் பிடியில் சிக்கிவிட்டால் அதிலிருந்து மீள்வது கடினம். லோக்கல் அரசியல்வாதிகள், சண்டியர்களிடம் தற்செயலாகத் தொடர்புகொள்ளும் சிலர் பிரியாணி, பிராந்தி, சிலநூறு ரூபாய்த்தாள்கள் மீது ஆசைப்பட்டுத் தெருச் சண்டியராக மாறுவதுடன், தங்களை வீரமிக்கவர்களாகக் காட்டிக் கொள்வதற்காக ‘ஏப்பை சாப்பை'களைப் போட்டுப் பொது இடங்களில் அடிக்கின்றனர். இத்தகையோர் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆண்ட பரம்பரை என்று சிலர் செய்கிற அலப்பறைகளுக்கும் மதுரையைப் பூர்வீகமாகக் கருதிப் பெருமையுடன் வாழ்கிறவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.

மதுரை திருவிழா - கஸ்த் 1909
மதுரை திருவிழா - கஸ்த் 1909
மதுரைக்காரர்கள் இயல்பிலே எல்லோருடனும் எளிதில் கலந்து உரையாடும் தன்மையினர். பிறருடன் பேசும்போது எடுத்தெறிந்து பேசுவது போல இருப்பினும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். இரண்டாயிரமாண்டு காலமாக நகரில் வாழ்கிற மதுரைக்கார்களுக்கு ஒருவகையான தெனாவெட்டு மனநிலை இயல்பிலே உண்டு. பகடி, கேலி, கிண்டல் என யாரை வேண்டுமானாலும் கேலி செய்கிற தன்மை மதுரைக்காரர்களிடம் பரவலாகக் காணப்படுகிறது. திரைப்பட நடிகர் வடிவேலுவின் உடல்மொழியும் பகடியும் வீராப்பும் கலந்த பேச்சும் ஒருவகையில் அடித்தள மக்களின் பிரதிபலிப்பு.

வெளியே வீராப்பாகப் பேசினாலும், பிறருடன் அனுசரித்துப் போக வேண்டுமென்ற எண்ணமுடையவர்கள் மதுரைக்காரர்கள். மதுரை நகரம் முழுக்க வியாபாரத்துடன் தொடர்புடையது; தொழிற்சாலைகள் எண்ணிக்கை மிகக்குறைவு. எனவே பொதுப்புத்தியில் சக மனிதர்களுடன் ஒத்திசைந்து வாழ்வது சரியானது என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. பல்வேறு சாதியினர் வெவ்வேறு பகுதிகளில் கணிசமாகச் சேர்ந்து வாழும்நிலை இருப்பினும் சாதிக் கலவரமோ, மதக் கலவரமோ மதுரையில் இல்லை. அண்மைக் காலமாக ஒவ்வொரு சாதியினரும் தங்கள் சாதிய அடையாளத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட பிளக்ஸ் போர்டு' மூலம் முயலுகின்றனர். என்றாலும், மதுரையில் சாதிய வெறுப்பு, மத வெறுப்பு போன்றவை பெரிய அளவில் இல்லை என்பதுதான் உண்மை.

வரலாறு என்பதே புனைவுதான். அதிலும் ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் என விவரிக்கும்போதே, அதில் எந்த அளவு உண்மை கலந்திருக்கும் என மனம் யோசிப்பது இயல்பு. பல்வேறுபட்ட பிரிவினர் பல மைல்கள் பரப்பில் 'மதுரை' என்ற அடையாளத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலத்துக்கெனத் தனித்த முத்திரையை உறுதியுடன் குறிக்கமுடியுமா என்பது கேள்விக்குரியது. எனினும் பொதுப்புத்தியில் ‘மதுரை' என்ற சொல் உருவாக்கும் புனைவுகள் அளவற்று விரிகின்றன. குறிப்பிட்ட நிலப்பரப்பில் வசிக்கின்றவர் தன்னை மதுரைக்காரராகக் கருதுவது முக்கியமானது.

மதுரை மக்கள்
மதுரை மக்கள்

எட்டுவயதுச் சிறுவன், சிறுமிகூட ஐம்பது வயதான ஆணை அண்ணே' என்றும் பெண்ணை அக்கா என்றும் அழைப்பது மதுரை மண்ணுக்கே உரித்தானது. பொதுவாகப் பெண்கள் பிற ஆண்களை உரிமையுடன் அண்ணே, தம்பி' என்று அழைக்கின்றனர். அதுபோல ஆண்கள் ‘தங்கச்சி, அக்கா' என்று சொல்கின்றனர். அக்கா, தங்கச்சி, தம்பி, அண்ணன்' என்ற உறவுச் சொற்களின் மூலம் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அன்புடன் பழகுவது மதுரைக்காரர்களின் தனித்துவம். இத்த்கைய உறவுச் சொற்களின் மூலம் சகமனிதர்கள் மீதான பிரியமும் நேசமும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி வெளிப்படுவது அற்புதமானது அல்லவா? அதுதான் மதுரை மண்ணின் மணம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism