Published:Updated:

அம்பேத்கரும் மோடியும் - சர்ச்சையான இளையராஜாவின் புத்தக முன்னுரை... இசைஞானி சொன்னதன் முழு விவரம் இதோ!

இளையராஜா

'மோடியும் அம்பேத்கரும்' என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதியுள்ள இளையராஜா, மோடி ஆட்சியின் பல திட்டங்கள் அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை என்றும் இருவரின் சிந்தனை மற்றும் செயலில் ஒற்றுமை உள்ளது என்றும் புகழ்ந்துள்ளார்.

அம்பேத்கரும் மோடியும் - சர்ச்சையான இளையராஜாவின் புத்தக முன்னுரை... இசைஞானி சொன்னதன் முழு விவரம் இதோ!

'மோடியும் அம்பேத்கரும்' என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதியுள்ள இளையராஜா, மோடி ஆட்சியின் பல திட்டங்கள் அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை என்றும் இருவரின் சிந்தனை மற்றும் செயலில் ஒற்றுமை உள்ளது என்றும் புகழ்ந்துள்ளார்.

Published:Updated:
இளையராஜா
புளு கிராஃப்ட் டிஜிட்டல் பவுண்டேசன் என்ற நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், 'மோடியும் அம்பேத்கரும்: சீர்திருத்தவாதியின் சிந்தனையும், செயல்வீரரின் நடவடிக்கையும் (Ambedkar & Modi - Reformer’s Ideas, Performer’s Implementation)' என்ற புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னரை எழுதியுள்ளதாக ட்வீட் செய்தது. இப்புத்தகம் மோடி மற்றும் அம்பேத்கருக்கு இடையான ஒற்றுமைகளையும், மோடி ஆட்சியில் இடம்பெற்றுள்ள அம்பேத்கரின் சிந்தனைகளின் வெளிப்பாடுகள் பற்றியும் எடுத்துரைப்பதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்புத்தகம் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று வெளியிடப்பட்டது.

இப்புத்தகத்தின்படி இதில் முன்னுரை எழுதியுள்ள இளையராஜா, மோடி ஆட்சியின் பல திட்டங்கள் அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது என்றும் பெண்கள், சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக விளிம்புநிலையில் உள்ள மக்களுக்காக பல நல்ல திட்டங்களை மோடி அரசு வகுத்துள்ளதாகக் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் மோடி ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட முத்தலாக் தடைச்சட்டம் போன்ற சட்டங்கள் மூலமாக நிகழ்ந்த சமூக மாற்றங்களை நினைத்து அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பார் என்றும் கூறியுள்ளார்.

இளையராஜா முன்னுரை எழுதிய 'அம்பேத்கர் மற்றும் மோடி' புத்தகம்
இளையராஜா முன்னுரை எழுதிய 'அம்பேத்கர் மற்றும் மோடி' புத்தகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும், "அம்பேத்கர், நரேந்திர மோடி ஆகிய இரண்டு ஆளுமைகளுக்கும் இடையிலான ஆச்சரியமூட்டும் ஒற்றுமைகளை இந்த நூல் மக்களுக்கு எடுத்துரைக்கும் என்று நம்புகிறேன். இருவருமே இந்தியாவுக்காக பெரிய கனவுகளைக் கண்டவர்கள். ஆனால் இருவருமே வெறுமனே சிந்திக்கிற வேலையை மட்டும் செய்தவர்கள் அல்ல, செயல்படுவதில் நம்பிக்கை கொண்ட எதார்த்தவாதிகள்” என்று கூறியுள்ளார்.

இதுபற்றி விரிவாக எழுதியுள்ள இளையராஜா, "சில ஆண்டுகளுக்கு முன், 'டாக்டர் அம்பேத்கர் இந்தியாவின் நதி நீர் மற்றும் பாசனம் தொடர்பான கொள்கையின் சிற்பி' என்று பிரதமர் நரேந்திர மோடி பேசிய செய்தியைப் படித்தேன். நீர் மற்றும் பாசனம் தொடர்பான சில முக்கிய நிறுவனங்களை உருவாக்குவதில் அம்பேத்கர் பெரும் பங்கு வகித்துள்ளார் என்பதை அறிந்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒருவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரைப் பற்றித் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. அவர் கொள்கைகளை உள்வாங்குவதும், அவரது சிந்தனைகளைச் செயல்படுத்துவதும் அதைவிட முக்கியமானது. ஒருவரது சிந்தனைகளுக்கு வரம்புகள் இல்லை, ஆனால் அதைச் செயல்படுத்துவதில் பல தடைகள் உள்ளன.

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அர்ப்பணிப்பும் ஆர்வமும் கொண்ட ஒரு உண்மையான தலைவர் மட்டுமே, தனது அடையாளத்தை விட்டுவிட்டு, தர்க்கரீதியாகவும் கவனமாகவும் செயல்பட முடியும். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணமும், டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்களும் ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளியைப் பற்றி இந்த நூல் கூறுகின்றது.

இளையராஜா எழுதிய முன்னுரையின் படம்
இளையராஜா எழுதிய முன்னுரையின் படம்

தொழில்துறையைப் பொறுத்தவரை பிரதமர் மோடியின் 'மேக் இன் இந்தியா' கொள்கை பல சாதனைகளைச் செய்துள்ளது. சமூக நீதி என்று வரும்போது பல சட்டங்கள் மற்றும் அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்புகள் மூலமாகவும், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஓபிசி ஆணையத்தை அமைத்தது மூலமாகவும் விளிம்பு நிலை மக்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்புகளை வலுப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி.

கழிவறைகள் கட்டுதல், வீடுகள் கட்டுதல் மற்றும் வங்கிக் கணக்குகள் தொடங்குதல் போன்றவற்றின் மூலம் ஏழைகளின் வாழ்க்கையை மாற்றுவதற்கான பெரிய அளவிலான முயற்சியை அவர் முன்னெடுத்துள்ளார். இதில் பயன்பெறும் பலர் ஏழைகளிலும் மிக ஏழைகள். சமூக ரீதியாக பின் தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள். மோடி அறிவித்த வீட்டுவசதி, சுகாதாரம், மின்சாரம், நிதித்துறை பங்கேற்பு ஆகிய திட்டங்களின் வெற்றிகள் கோடிக்கணக்கான ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிக்கின்றன" என்று கூறியிருந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மோடி ஆட்சியில் பெண்கள் வளர்ச்சியை மையப்படுத்தி பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்று கூறிய இளையராஜா இதைக் கண்டு அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பார் என்று கூறியிருந்தார்.

"சமீபத்தில் பெண்களின் திருமண வயதை உயர்த்தும் முடிவை பிரதமர் மோடியின் அரசு எடுத்ததாகச் செய்திகளில் படித்தேன். பெண்கள், குறிப்பாகக் கிராமப்புறப் பெண்கள் மேற்படிப்பைத் தொடர்வதற்கான சுதந்திரம் அளிக்கும் நடவடிக்கை இது. பெண்களின் முன்னேற்றத்துக்கான பிரதமரின் பணிகள் என்று கூறும்போது, இலவச கேஸ் இணைப்புகள் வழங்கும் திட்டமும், பெண் குழந்தைகளைக் பாதுகாத்து கல்வி தருவது குறித்த பிரதமரின் திட்டங்களும் நினைவுக்கு வருகின்றன.

பெண்களுக்கு ஆதரவான முத்தலாக் தடைச்சட்டம், ‘குழந்தைகளை காப்போம், குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ போன்ற நடவடிக்கையின் மூலமாக நிகழ்ந்த சமூக மாற்றங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பார்" என்று கூறினார்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

மேலும், அம்பேத்கர் மற்றும் மோடி குறித்து எழுதிய அவர், "அம்பேத்கர், மோடி ஆகிய இரண்டு ஆளுமைகளுக்கு இடையிலான ஆச்சரியமூட்டும் ஒற்றுமைகளை இந்த நூல் மக்களுக்கு எடுத்துரைக்கும் என்று நம்புகிறேன். இருவருமே வறுமையையும், விளிம்புநிலை சமூக அமைப்பையும் அருகில் இருந்து பார்த்து அவற்றை உடைத்தெரிய பாடுபட்டவர்கள். இருவருமே இந்தியாவுக்காக பெரிய கனவுகளைக் கண்டவர்கள். ஆனால் இருவரும் வெறுமனே சிந்திக்கிற வேலையை மட்டும் செய்தவர்கள் அல்ல, செயல்படுவதில் நம்பிக்கை கொண்ட எதார்த்தவாதிகள்.

இந்தப் புத்தகம் அம்பேத்கர் கனவுகளை நிறைவேற்றும் பாதையில் இந்தியா சென்றுகொண்டிருப்பதை மக்களுக்கு எடுத்துக்கூறும். பிரதமர் மோடி கட்டியமைக்கும் தற்சார்பு இந்தியா, விடுதலை போராட்ட வீரர்களுக்கு செலுத்தும் சரியான அஞ்சலியாகும். இந்நூல் நம் மண்ணின் மிகப்பெரிய மைந்தனின் பெருமையை வெளிப்படுத்துகிறது என்பதையும், நம் எதிர்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு, விடுதலைப் போராட்ட வீரர்கள் கனவு கண்டபடி புதிய இந்தியா எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதையும் கூறுகின்றது. இந்தப் புத்தகத்தை இளைய தலைமுறையினர் நிச்சயம் படிக்க வேண்டும்" என்று அதில் தெரிவித்துள்ளார் இளையராஜா.

இளையராஜா எழுதியுள்ள இந்த முன்னுரை தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டுப் பேசுவது ஏற்புடையதல்ல என்பதே சமூக வலைதளங்களில் பலரின் கருத்தாக உள்ளது.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism