Published:Updated:

ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதைகள்..! #MyVikatan

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தம் உரையில் ஏதேனும் குட்டிக்கதைகள் கூறுவது வழக்கம்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அரசியல் தலைவர்களுக்கு இன்றியமையாதது பேச்சு. அக்கால அரசியல் கூட்டங்களை மாலை நேரப் பல்கலைக்கழகங்கள் என அழைப்பார், அறிஞர் அண்ணா. ஒவ்வோர் அரசியல் ஆளுமைகளும் தொண்டர்களை ஊக்குவிக்கவும், அறிவுரை பகிரும் விதத்திலும் தங்களது உரைகளைத் தயாரிப்பார்கள். அதில் வரலாற்றுக் கதைகள், அறிஞர்களின் மேற்கோள்கள் முதலியவற்றைச் சொல்வது உரைக்குக் கூடுதல் பலத்தைச் சேர்க்கும்.

அந்த வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தம் உரையில் ஏதேனும் குட்டிக்கதைகள் கூறுவது வழக்கம். அன்றைய கூட்டத்திற்குத் தக்கவாறும், பொதுவாக நேர்மறை சிந்தனையளிக்கும் கதைகளின் வாயிலாய்க் கருத்தை உணரவைப்பார். இது ஒரு ஹைலைட்டாக அமையும். இவ்வாறு, அதில் சில கதைகள்...

ஜெயலலிதா
ஜெயலலிதா

#புத்திசாலித்தனமான உழைப்பு

எதிர்க்கட்சியாய் இருந்த போது சொன்ன கதைகள் இவை...

ஒரு ஊரில் இரு மரம் வெட்டுபவர்கள் வாழ்ந்து வந்தனர். இருவரும் கடும் உழைப்பாளிகள். அதில் ஒருவர் காலையிலிருந்து வெட்டியும் குறைவான மரங்களையே வெட்டி இருப்பார். மற்றவர் அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்வார். ஆனால், அவரை விட அதிக மரம் வெட்டியிருப்பார். காரணத்தை அறிந்ததில் அம்மரவெட்டி தொடர்ந்து கோடரிக்கு வேலை கொடுக்காமல் அவ்வப்போது இடையில் கூர் தீட்டியுள்ளது தெரியவந்தது.

நாள் முழுக்க முதலாமவர் வேலை செய்ததால் முனை மழுங்கியது. எனவே, உழைத்தால் மட்டும் போதாது. புத்திசாலித்தனமாய் உழைக்க வேண்டும் என வலியுறுத்தியிருப்பார்.

#ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

பாபர் இந்தியா மீது படையெடுத்ததில் சிந்து நதிக்கரையில் முகாமிட்டிருந்தார். ஒருநாள் இரவு எதிரிலிருந்து இந்திய முகாமைப் பார்த்தார். அனைவரும் தனித்தனியாக ஜாதிவாரியாக தனித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இதைக் கண்டறிந்தவுடன் ``இந்தியாவைப் பிடித்துவிட்டோம்" என முழங்கினாராம். பிரிந்து கிடந்ததை எதிர்த்தரப்பினர் எவ்வாறு பயன்படுத்திக்கொண்டனர் என்பதைக் கூறி நாம் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் எனக் கூறினார்.

#ராஜேந்திரசோழன்

தந்தையைப் போலவே கோயில் ஒன்றைக் கட்ட நினைத்தான் ராஜேந்திர சோழன். ஆனால், தந்தையின் கோயிலை விட பெரியதாக இருக்கக் கூடாது. அவரின் சாதனை முறியடிக்கக் கூடாது என எண்ணினான். மேலும், இன்னொரு செயல் செய்தான். அது சோழ நாட்டின் எல்லையான கங்கை கொண்ட சோழபுரத்தில் கோயில் அமைத்தான். எதிரிகள் எவரேனும் படையெடுத்து வந்து அழித்தால் என் கோயிலுக்கு எதாவது ஆபத்து நேரலாம். ஆனால், என் தந்தையின் கோயிலுக்கு எந்தச் சேதாரமும் ஆகக் கூடாது என்ற தந்தையின் மீது மகனுக்கு இருந்த உயர்ந்த எண்ணத்தைக் கூறினார்.

#இயற்கையைப் பாதுகாப்போம்

ஒரு நாட்டின் மன்னருக்கு வேட்டையாடுவதுதான் பிடித்த செயல். இதைத் தவறென்று உணர வைக்க அமைச்சர் விரும்பினாராம். ஒரு முறை மரத்தில் ஆந்தை பேசிக்கொண்டது. சில நாள்களில் விலங்குகளற்ற வெறும் காடுகளை மன்னர் உருவாக்கப்போகிறார். ஏனெனில், தொடர்ந்து வேட்டையாடுவதன் மூலம் வெறும் காடுதான் வரப்போகிறது எனக் கூறி மன்னர் மனதை மாற்றினாராம். இக்கதை மூலம் நாமும் இயற்கையைச் சுரண்டாது பேணுவோம் என்றார்

#பார்வைகள்

தர்மரையும் துரியோதனனையும் சோதித்தறிய முனிவர் ஒருவர் விரும்பினார். இருவரிடமும் எழுதப்படாத ஒரு தாளைக் கொடுத்து.. துரியோதனனிடம் உனக்குத் தெரிந்த நல்லவர்களின் பெயரை எழுதி வா என்றும், தர்மரிடத்தில் உனக்குத் தெரிந்த தீயவர்களின் பெயரை எழுதி வா என்றும் கூறி அனுப்பினார்.

ஒரு வாரம் கழித்து இருவரும் திரும்பி வந்தனர். ஏடுகளைக் கொடுத்தபோது அதில் எதுவும் எழுதப்படாததைக் கண்டார். தீயவர் யாருமே கிடைக்கவில்லை என்றார் தர்மர். நல்லவர் யாரும் கிடைக்கவில்லை என்றான் துரியோதனன். ஒரே குலத்தில் பிறந்திருந்தாலும் இருவரின் பார்வைகளும் வேறுவேறாக அமைந்தது குறிப்பிடத்தக்கது என்றார்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

#சேமிப்பு

ஒருவரின் சேமிப்பை மட்டும் அகற்றி விட்டால் அவரின் தன்னம்பிக்கையை எளிதில் சிதைத்து விடலாம் என்பது பற்றிய ஒரு கதை. ஒரு ஊரில் ஒரு முதியவர் இருந்தார். அவர் சேமித்து வைத்திருந்த அரிசியை எல்லாம் ஒரு எலி கடித்துத் தின்று கொண்டிருந்தது. அவரும் என்ன செய்வதெனத் தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தார். அப்போது ஊரிலிருந்து வந்த நண்பரிடம் ஒரு ஆலோசனை கேட்டார். 

இவ்வாறு எலியால் நான் மிகவும் சிரமப்படுகிறேன் என்றார். அதற்கு அவர் எலிப் பொந்திலுள்ள அரிசி அனைத்தையும் எடுத்து விட்டார். சிறிது நேரம் கழித்து பொந்திற்கு திரும்பி வந்த எலி தன் சேமிப்பு அனைத்தும் திருடு போனது குறித்து மிகவும் சோர்வுற்றது. பின் செயல்பாடு குறைந்தது. மனிதர்களும் கையில சேமிப்பு இருந்தால்தான் தன்னம்பிக்கையுடன் வாழ முடியும் என்பது குறித்த ஒரு கதை

#பெரியமருது 

ஒருநாள் இரவு கிராமத்தில் குதிரையில் சென்று கொண்டிருந்தார் பெரியமருது. சோர்வு காரணமாக ஒரு ஏழைக் கிழவியின் வீட்டு முன் நின்று தனக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள் அம்மா என்று கேட்டார். அந்தப் பாட்டியும் தன்னிடமிருந்த பழைய சோற்றைக் கொடுத்து பசி ஆற்றினார். பிறகு காலையில் கிளம்பும் முன் ஒரு ஓலையில் சில வரிகளை எழுதி இதை அரண்மனை அதிகாரிகளிடம் சென்று காட்டுங்கள்.. அவர்கள் உங்களுக்கு ஏதாவது செய்வார்கள் என்று கூறிச் சென்றார்.

அவர் சென்ற சிறிது காலத்துக்குப் பிறகு பெரியமருது ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார். தூக்கிலிடப்படுவதற்கு முன் நான் யார் யாருக்கு எது எது மானியமாக்க கொடுத்தேனோ அவற்றையெல்லாம் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று ஆங்கிலேயரிடம் கேட்டுக் கொண்டார். அவர்களும் அவ்வாறு கொடுப்பதாக உறுதி அளித்தார்கள். சில நாள்கள் கழித்து அந்த ஓலையை எடுத்துக்கொண்டு ஏழைக் கிழவி அரண்மனைக்குச் சென்றாள். அவளுக்கு ஒரு இடம் மானியமாக அளிக்கப்படுகிறது. அப்போதுதான் அவளுக்குத் தெரிந்தது தன் வீட்டுக்கு வந்தவர் பெரியமருது என்று. தேசத்துக்காக மட்டுமல்லாமல் தான தர்மங்களுக்காகவும் மருது சகோதரர்கள் இன்றைக்கும் நினைவு கூறப்படுகிறார்கள் எனக் கூறி நிறைவு செய்தார்.

#சமயோசித புத்தி

ஒரு நாள் ஒரு மனிதன் கிணற்றில் விழுந்து விட்டார். உடனே காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்று கத்திக்கொண்டே இருந்தார். அவனைக் காப்பாற்ற பலர் முயன்று தோற்றுக் கொண்டிருந்தனர். கையைக் கொடு என்று எல்லோர் சொல்லியும் அவன் கையை மட்டும் நீட்டவில்லை.

 அப்போது அவ்வழியே வந்த ஒருவர் கிணற்றுக்குள் குனிந்து என் கையைப் பிடித்துக்கொள் என்றார். உடனே அவன் கையைப் பிடித்துக்கொண்டு மேலே வந்துவிட்டான். சுற்றி உள்ள அனைவருக்கும் ஆச்சர்யம்.. ``எப்படி, எதைச் செய்தீர்கள்? என்று நாங்கள் சொல்லி அவன் வரவே இல்லை,, நீங்கள் சொன்னதும் வந்துவிட்டான் என்றதற்கு" அவர் சொன்னாராம் ஒரு கஞ்சன் எதையும் யாருக்கும் கொடுக்க மாட்டான். அடுத்தவருக்குக் கொடுக்க அவனுடைய கைகளை நீளாததைப் புரிந்துகொண்டு.. உன் கையை நீட்டு என்று சொல்லாமல் என் கையைப் பிடித்துக் கொள் என்றேன். உடனே என் கையைப் பிடித்துக்கொண்டு அவன் வெளியே வந்துவிட்டான். இதுதான் சமயோஜித புத்தி என்பது என்று கதையைக் கூறினார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#மண மக்களுக்காக

ஓ ஹென்றி எழுதிய கிறிஸ்துமஸ் கிப்ட் என்ற கதை மிக பிரபலமானது. அதை மண மக்களுக்காகக் கதையைக் கூறினார்.

ஒரு நாள் ஒரு தம்பதியருக்குத் திருமண நாள் வந்தது. ஒருவருக்கொருவர் பரிசு கொடுக்க வேண்டும் என எண்ணினர். ஆனால் யாரிடமும் பணம் இல்லை. கணவன் தன்னிடம் உள்ள கைக்கடிகாரத்தை விற்று மனைவிக்கு அழகிய முடி அலங்காரப் பொருளை வாங்கினான். மனைவியோ தன்னுடைய முடியை வெட்டி விற்று தன்னுடைய கணவரின் கை கடிகாரத்துக்கு நல்ல சங்கிலி ஒன்றை வாங்கினார்.

இருவரும் சந்தித்துப் பரிமாறிக்கொண்ட போது எந்தப் பொருளும் பயனற்றது எனத் தெரியவந்தது. இருப்பினும் அவர்களின் அன்பு பயனுள்ளது. ஆகவே, மணமகளுக்கு என்னாலும் இக்கதையை நினைவூட்ட விரும்புவதாகத்தான் கதையைக் கூறினார்

#மூன்று பேர்

ஒருநாள் இரவு காட்டுவழியில் மூன்று பேர் குதிரையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எங்கிருந்தோ கேட்ட குரல். மூவரும் குதிரையை விட்டுக் கீழே இறங்குங்கள்..

உங்கள் காலின் கீழே சில கற்கள் கிடக்கின்றன.. அவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். அவ்வாறே மூன்று பேரும் கற்களை எடுத்துக்கொண்டார்கள். உடனே அக்குரல் இதற்காக நீங்கள் மகிழ்ச்சி அடையும் போகிறீர்கள் வருந்தவும் போகிறீர்கள் என்று கூறி மறைந்தது.

விடியற்காலை மூன்று பேரும் கற்களைப் பார்க்கும் போது அதிர்ச்சி. ஏனெனில் அவை விலை உயர்ந்த ரத்தினக் கற்கள். இன்னும் கொஞ்சம் எடுத்து இருக்கலாமே என்ற கவலையும், போதும் என்ற நிம்மதியும் இருந்தது அந்த மூன்று பேருக்கு.

#கதைகள்

கதை கூறும் மரபு நம் மரபு. கதைகளின் வழியேதான் பலவற்றை நாம் இன்னும் மனதில் வைத்திருக்கிறோம். கதைகளின் மூலம் அவரவர்களின் கற்பனை விரிகிறது. கதைகளின் வழியே காட்டும் நிகழ்வுகளை நாம் உருவகப்படுத்திக் கொள்கிறோம். அவ்வகையில் நல்லா சிந்திக்கத் தூண்டும் கதைகளைக் கூறிய முன்னாள் முதல்வரை அவரின் பிறந்தநாளில் நினைவுகூர்வோம்.

- மணிகண்ட பிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு