Published:Updated:

`குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு!' -சாகித்ய விருதைத் திரும்பக் கொடுத்த பத்திரிகையாளர்

மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியதை அடுத்து தனக்கு வழங்கப்பட்ட விருதைத் திருப்பி அளிப்பதாக ஷிரின் தால்வி தெரிவித்துள்ளார்.

ஷிரின் தால்வி
ஷிரின் தால்வி

மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஷிரின் தால்வி, தனக்கு மகாராஷ்டிர மாநில அரசால் வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதைத் திரும்பக் கொடுத்துள்ளார்.

மும்பையின் `ஆவாத்நாமா' பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியவர் ஷிரின் தால்வி. கடந்த 2015-ல் பிரெஞ்சு இதழ் சர்ச்சைக்குரிய கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டது. அதைத் தனது ஆவாத்நாமா பத்திரிகையில் வெளியிட்டதற்காக, கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றவர் தால்வி. சிறையிலிருந்து வெளியே வந்தவர், தற்போது தனித்து இயங்கும் பத்திரிகையாளராகச் செயல்பட்டும் எழுதியும் வருகிறார்.

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு
குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு

ஷிரின் தால்வியின் இலக்கியப் பங்களிப்புக்காக மாநில சாகித்ய அகாடமி விருதை 2011-ம் ஆண்டு வழங்கியது மகாராஷ்டிர அரசு. மத்திய அரசு, நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியதை அடுத்து, தனக்கு வழங்கப்பட்ட விருதைத் திருப்பி அளிப்பதாக தால்வி அறிவித்துள்ளார்.

குடியுரிமை மசோதா... எம்.ஜி.ஆர். ஜெயலலிதா கொள்கைக்கு உலை... எடப்பாடி, பன்னீர் கொடுத்த விலை!

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ``நாடாளுமன்ற அவைகளில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து இஸ்லாமிய மக்களிடையே ஒருவித அச்ச உணர்வும் அழுத்தமும் நிலவுகிறது. இத்தகைய சூழலில் அவர்களுடன் நிற்க வேண்டியது ஒரு பத்திரிகையாளராக எனது கடமை" என்று தெரிவித்துள்ளார்.

டெல்லிப் போராட்டம்
டெல்லிப் போராட்டம்

தால்வியைப் போல உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர் யாகூப் யாவர் தனக்களித்த மாநில அரசு விருதைத் திருப்பி அளிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.