Published:Updated:

மத்திய அரசை விமர்சிப்பதாக பாடத்திலிருந்து விலக்கப்பட்ட `ஜாமுன் கா பேட்’.. சுவாரஸ்யமான ஒரு கதை!

ஐ.சி.எஸ்.சி பாடத் திட்டத்தின் பத்தாம் வகுப்பு, இந்திப் பாடத்திலிருந்து புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர் கிருஷன் சந்தரின் `ஜாமுன் கா பேட்' என்ற சிறுகதை தேர்வுகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி - சிறுகதை எழுத்தாளர் கிருஷன் சந்தர்
பிரதமர் மோடி - சிறுகதை எழுத்தாளர் கிருஷன் சந்தர்

ஐ.சி.எஸ்.சி பாடத் திட்டத்தின் பத்தாம் வகுப்பு, இந்திப் பாடத்திலிருந்து புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர் கிருஷன் சந்தரின் `ஜாமுன் கா பேட்' என்ற சிறுகதை தேர்வுகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1960-ம் ஆண்டு எழுதப்பட்ட இந்தக் கதை, தற்போதைய அரசின் மீது விமர்சனம் வைப்பதாக அதிகாரிகள் கருதியதால், 2021-ம் ஆண்டுத் தேர்வுகள் வரை, கேள்விகள் கேட்கப்படுவதிலிருந்து விலக்கப்பட்டுள்ளது.

கிருஷன் சந்தர் நினைவாக அரசு வெளியிட்ட அஞ்சல் தலை
கிருஷன் சந்தர் நினைவாக அரசு வெளியிட்ட அஞ்சல் தலை

இந்தி மொழி இலக்கியத்தில் போற்றப்படும் எழுத்தாளர்களுள் கிருஷன் சந்தருக்கு இடம் உண்டு. பல்வேறு நாவல்கள், சிறுகதை ஆகியவற்றை இந்தி, உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதினார் கிருஷன் சந்தர். அப்போதைய பாலிவுட்டில் திரைக்கதையாசிரியராகவும் பணியாற்றினார். 1960-களில், `ஜாமுன் கா பேட்' என்ற தலைப்பில் சிறுகதை ஒன்றை எழுதினார் கிருஷன். இந்தத் தலைப்பின் பொருள் `நாவற் பழ மரம்'. அரசு அதிகாரம், ஊழல், அரசு அலுவல் முறையிலுள்ள சிக்கல், அதிகாரத்தை மத்திய அரசு மையப்படுத்துதல் முதலானவற்றைப் பகடி செய்தது அந்தச் சிறுகதை.

`ஜாமுன் கா பேட்' - கதை என்ன?

பெருமழைக்குப் பிறகு, அரசுக்குச் சொந்தமான கட்டடம் ஒன்றின் முன் வளர்ந்த நாவற்பழ மரத்தின் கீழ் சிக்கிக்கொள்கிறார் பிரபல கவிஞர் ஒருவர். கவிஞரைக் காப்பாற்ற வேண்டுமானால், மரத்தை வெட்ட வேண்டும் என்ற சூழல் உருவாகிறது. மரத்தை வெட்டுவதற்காக, தோட்டக்காரர் பியூனிடம் கேட்கிறார்; பியூன் கிளார்க்கிடம் கேட்கிறார்; கிளார்க் அந்தக் கட்டடத்தின் கண்காணிப்பாளரிடம் கேட்கிறார்.

மரத்தை வெட்டுவதற்கான உத்தரவை வனத்துறையிடம் கேட்க, சிக்கிக்கொண்டிருப்பவர் பிரபல கவிஞர் என்பதால், கலாசாரத் துறையைத் தொடர்புகொள்ளுமாறு கூறப்படுகிறது. கலாசாரத் துறையில், நாவற்பழ மரத்தை நட்டவர் அண்டைநாட்டுப் பிரதமர் எனக்கூறி, இந்த விவகாரத்தை வெளியுறவுத் துறையிடம் தள்ளி விடுகிறது.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

அண்டைநாட்டு உறவுகள் பாதிக்கப்படும் என வெளியுறவுத்துறையால் நிராகரிக்கப்பட்டு, பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்படுகிறது மரம் வெட்டுவதற்கான கோரிக்கை. பிரதமர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தில் இருப்பதால், அவர் வந்த பிறகே முடிவு எடுக்கப்படும் என பிரதமர் அலுவலக அதிகாரிகள் முடிவெடுக்கின்றனர். சுற்றுப் பயணம் முடிந்து நாடு திரும்பும் பிரதமர், ஒரு மனிதரின் உயிரைக் காப்பாற்ற மரத்தை வெட்டுவது தவறில்லை எனக்கூறி உத்தரவிடுகிறார்.

பிரதமர் அலுவலகத்தின் உத்தரவு, அரசுக் கட்டட கண்காணிப்பாளரின் கைகளுக்கு வந்து சேரும்போது, மரத்தின் அடியில் சிக்கிக்கொண்டிருந்த கவிஞர் உயிரற்றுக் கிடந்தார் என முடிகிறது இந்தச் சிறுகதை. இந்தச் சிறுகதை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொருத்தமானது அல்ல."

2015-ம் ஆண்டு முதல், ஐ.சி.எஸ்.சி கல்வித் திட்டத்தின் பத்தாம் வகுப்புக்கான இந்திப் பாடத்தில் இந்தச் சிறுகதை இடம்பெற்று வருகிறது. கடந்த நவம்பர் 4 அன்று, இந்தப் பாடத்தைத் தேர்வுகளிலிருந்து விலக்குவதாகவும், இதிலிருந்து கேள்விகள் கேட்கப்படாது எனவும் ஐ.சி.எஸ்.சி கவுன்சில் சார்பாகச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்தச் சிறுகதை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொருத்தமானது அல்ல.
கெர்ரி அராத்தூன், ஐ.சி.எஸ்.சி-யின் தலைமை நிர்வாகி.
கெர்ரி அராத்தூன்
கெர்ரி அராத்தூன்

ஐ.சி.எஸ்.சி-யின் தலைமை நிர்வாகி கெர்ரி அராத்தூனிடம் `ஜாமுன் கா பேட்' சிறுகதை விலக்கப்பட்டது தொடர்பாகப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ``இந்தச் சிறுகதை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொருத்தமானது அல்ல" எனப் பதிலளித்துள்ளார். மேலும், இந்தப் பாடத்தை நீக்குவதற்கு உத்தரவு அளித்தது யார் என்ற கேள்விக்கு அவர் பதில் தர மறுத்துள்ளார்.

சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி அரசு மாநில சுயாட்சிக்கு எதிராகச் செயல்படுவதாகவும், அதிகாரத்தை மத்தியில் மட்டுமே மையப்படுத்துவதாகவும் தமிழ்நாட்டின் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி முதலானோர் விமர்சித்திருந்தனர். ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், மோடி அரசின் கீழ் மாநில சுயாட்சி கேள்விக்கு உள்ளாக்கப்படுவதாகவும், மாநிலங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் பிரதமர் அலுவலகமே நாட்டின் முக்கிய முடிவுகளை எடுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன்

ஐ.சி.எஸ்.சி கவுன்சிலின் இந்த முடிவுக்கு இந்தி மொழி எழுத்தாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். பத்தாம் வகுப்பு மாணவர்களால் பகடிகளைப் புரிந்துகொள்ள முடியும் எனவும், நாளைய அரசு அதிகாரிகளுக்கு அரசு பற்றிய புரிதல் தேவை எனவும் கூறியுள்ளனர். மேலும், அரசு மீது விமர்சனம் வைப்பதே தவறு எனக் குழந்தைகளுக்குப் புகட்டவும், மத்திய அரசின் அதிகார மையப்படுத்துதல் பற்றிய விமர்சனத்தைத் தவிர்க்கவும் இந்தச் சிறுகதை நீக்கப்பட்டுள்ளதாகவும் கருத்துகள் கூறப்படுகின்றன.

Vikatan