வரலாற்றுக்காலம் தொட்டே உலகம்- முழுவதும் பஞ்சங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இந்தியாவில் வங்கப் பஞ்சம், ராயலசீமாப் பஞ்சம், ஒரிசா பஞ்சம் எனப் பல பஞ்சங்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம், வாசித்திருப்போம். தாதுவருசப் பஞ்சம் தமிழகத்தில் ஏற்பட்ட, கொடிய பஞ்சங்களில் ஒன்று. இன்றும் நமது வீடுகளில் உள்ள நம் கொள்ளுப்பாட்டன், பாட்டிமார்களுடன் உட்கார்ந்து கதை கேட்போம் எனில் அவர்கள் தாது வருசப் பஞ்சத்தைப் பற்றிய பல கதைகளைச் சொல்லக்கூடும். தாது வருசத்துப் பஞ்சம் தமிழக மனங்களில் ஆழப்பதிந்த ஒரு அவலச்சுவை. வாய்வழி மரபுகள், நாட்டாறு வழக்காறுகள் பஞ்சங்களின் நினைவைத் துல்லியமாக உயிர்ப்போடு வைத்திருக்கின்றன.
கல் மற்றும் செப்பேடுகள் நமக்கு 16-ம் நூற்றாண்டுக்கு முன்னர் ஏற்பட்ட பல பஞ்சங்கள் பற்றிய தகவல்களைத் தருகின்றன. முகலாய இந்தியாவில் முஸ்லிம் வரலாற்றாசிரியர்களின் எழுத்துகள், இந்தியாவில் தற்காலிகமாக அந்தப் பஞ்ச காலத்தில் வசித்த வெளிநாட்டினரின் குறிப்புகள் நமக்குக் கூடுதலாகப் பல செய்திகளைத் தருகின்றன.
பெரிய புராணத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை பெய்யாததால் 7-ம் நூற்றாண்டில் பஞ்சம் நிலவியது குறித்த குறிப்புகள் உள்ளன. 1107 முதல் 1148 வரை கொடிய பஞ்சம் ஒரிசாவை 42 வருடங்கள் உலுக்கியது, 1396-ல் தொடங்கிய மராத்தியப் பஞ்சம் 12 ஆண்டுகள் நீடித்தது.
1579 திருநெல்வேலிப் பஞ்சம், 1648-ல் கோவைப் பஞ்சம், 17-ம் நூற்றாண்டில் புதுக்கோட்டை, தஞ்சாவூர்ப் பஞ்சங்கள் எனத் தமிழக நிலப்பரப்பெங்கும் பஞ்சங்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. இதன் தொடர்ச்சியாகவே 1876-ல் நிகழ்ந்த தாது வருடத்துப் பஞ்சம் 1878 வரை நீடித்து சொல்லொணாத் துயரத்தை மக்களுக்குக் கொடுத்துச் சென்றது.
மழை தொடர்ந்து பொய்த்துப்போவதும் அதனால் உழவு நடவடிக்கைகள் மெல்ல மெல்ல அருகி முற்றிலும் இல்லாமல் போவதும், அதன் விளைவாக உணவு தானியங்களின் கையிருப்பு குறைவதும் பின்னர் அது முற்றிலும் இல்லாமல் பசியை நோக்கி மக்கள் தள்ளப்பட்டிருப்பார்கள் என்பதும்தான் பஞ்சங்கள் பற்றிப் பொதுவாக நம் மனங்களில் உள்ள சித்திரம். பஞ்சங்களில் மக்களுடன் அவர்களின் வளர்ப்புப் பிராணிகளும், எல்லா உயிர்களும் தொடங்கி ஒரு உயிரியல் சுழற்சியே ஸ்தம்பித்துப் போகும் அளவிற்குத் தாது வருடத்துப் பஞ்சம் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மதுரையும் அதன் சுற்றிலும் மழையில்லாமல் போனது, பயிர்கள் சாவியானது, ஆடு மாடு என விலங்குகளும் நீரின்றி உணவின்றித் தெருக்களில் தவித்தன, இறந்து குவிந்தன. மதுரை எங்கும் வெப்பக் காற்று வீசியது.


முதலில் தங்கள் வசம் உள்ள பொருள்களைக் கொடுத்து மாற்றுப் பொருள்களை மக்கள் பெற்றனர், அடுத்து நிலைமை இன்னும் மோசமாக மாற தங்கள் வசம் இருந்த பொருள்களை விற்றனர், அதன் பின் உடமைகளை விற்றனர், இதை அடுத்து பசியில் உழன்று பிச்சை எடுத்தனர். கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டன. பிச்சை எடுத்தலுக்கு அடுத்து திருட்டும் வழிப்பறியும் என அடுத்த அடுத்த கட்டங்களுக்குப் பிழைத்து வாழ்தலின் நகர்வுகள் சென்றது. அதே வேளையில் தங்கள் வசம் உள்ள குருணி அரிசியை ஒரு படி ஒரு ரூபாய்க்கு விற்கவும், வீடு, மாடு, மனை, நிலம் ஆகியவற்றைக் குறைந்த விலையில் வாங்கவும் ஒரு கூட்டம் மதுரையில் காத்திருந்தது, மனித மதிப்பீடுகளின் வீழ்ச்சியும் கூச்சமில்லாமல் அரங்கேறியது.
தாது வருடப் பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை கொடுப்பதற்காகவே பல கால்வாய்கள் வெட்டப்பட்டன. அப்படி சென்னையில் வெட்டப்பட்டதுதான் பக்கிங்ஹம் கால்வாய். அரிசி வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில் வந்திறங்கி ஒரு பதக்கு (12.8 கிலோ) அரிசி ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. அரசும் வியாபாரிகளும் பொருள்களை ஊர் விட்டு ஊர் ஏற்றிச் செல்ல கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும் நிலையும் ஏற்பட்டது. துறைமுகங்களிலிருந்து ரயில்கள் மூலம் எல்லா ஊர்களுக்கும் தானியங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. ஆனால் ரயில்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதால் சரக்கு மூடை மூடையாக துறைமுகங்களிலும் ரயில் நிலையங்களிலும் குவிந்து கிடந்தது.
தானியங்களை ஆங்காங்கே மக்கள் திருடத்தொடங்கினார்கள், இந்தச் சூழலில் தன் கண் முன்னே இருக்கும் தானியத்தை ஒருவர் எடுத்துக்கொள்வது திருட்டா என்கிற கேள்வி எழுந்தது. பின்னர் தானியங்களைத் திருடுகிறவர்களுக்கு தண்டனையில்லை என்று உத்தரவுகள் வந்தன, அது அவர்களின் உரிமைதானே?
ஒவ்வொரு பெரும் பஞ்சத்தின் போதும் மிகப்பெரிய இடப்பெயர்வுகள் நடந்துள்ளன. அவசியமான உடைமைகளுடன் கிராமங்களை விட்டு மக்கள் வெளியேறினர், கூட்டம் கூட்டமாக செழிப்பான இடங்கள் நோக்கிப் பயணித்தனர், அந்த நேரம் புழங்கும் செய்திகள், தகவல்களை வைத்துக்கொண்டு தங்களின் திசைகளை அனுமானித்துத் தலைச்சுமைகளுடன் கிளம்பினார்கள்.

பஞ்சம் பிழைக்க இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா எனப் பல நாடுகளுக்குக் கூட்டம் கூட்டமாகக் கப்பல்களில் மதுரைக்காரர்கள் சென்றார்கள். தனுஷ்கோடி, தொண்டி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் எனப் பல துறைமுகங்களில் இருந்து சிறிய படகுகள் முதல் கப்பல்கள் வரை மக்களை அள்ளிக் கொண்டு கிளம்பியது. கப்பல் இயக்கத்தினால் ஏற்படும் குமட்டல் நோய்க்கு பலர் பலியானார்கள், இறந்தவர்களின் உடல்களைக் கடலில் வீசிவிட்டு, எஞ்சியவர்கள் மட்டும் தங்களின் இலக்குகளை வந்தடைந்தார்கள். சென்னை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இலங்கைக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை மட்டும் 3.3 லட்சத்துக்கும் அதிகம் என்று பிரித்தானிய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பஞ்சங்களின்போது 1880-ல் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியில் இந்திய பஞ்ச சட்டம் (Indian Famine Code) இயற்றப்பட்டது. இதன் வழியே ஒரு பஞ்சத்தின் வருகையை முன்னுணர்தல், அதன் அளவை மதிப்பிடுதல், அதனைத் தடுப்பதற்கான தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்தல் என்கிற நிர்வாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன, சென்னைக்கு என்று பஞ்சத்திற்கான கமிஷனர் (Madras Famine Commissioner) நியமிக்கப்பட்டார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் பெரும் சரிவு வெளிப்படையாகவே காணப்பட்டது, மக்கள் லட்சக்கணக்கில் இறந்தார்கள். ஆனால் பசி, பட்டினி மக்களைக் கொன்று குவித்தாலும், கிழக்கிந்திய கம்பெனியின் வரி விதிப்பு மட்டும் நிற்கவில்லை. பஞ்சகாலங்களிலும் வரியைக் கட்டச் சொல்லி அதிகாரிகள் மக்களை வற்புறுத்தினார்கள், மிரட்டினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் 120 ஆண்டுக்கால ஆட்சியில் 34 முறை பஞ்சம் ஏற்பட்டது. வங்காளப் பஞ்ச காலத்தில், அரிசி விலை சுமார் 40 மடங்கு உயர்ந்தது. 19-ம் நூற்றாண்டில் மட்டும் இந்தியா முழுவதும் 9 மாபெரும் பஞ்சங்கள் தோன்றின.

பஞ்சலட்சணத் திருமுகவிலாசம் 1899 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ் நூல். சோதிடர்கள், விலைமாதுக்கள், நகை ஆசாரிகள் ஆகியோரின் போலித்தனத்தையும் பொய் புரட்டையும் இந்த நூல் விரிவாக விளக்குகிறது. மதுரை சுந்தரேசுவரக் கடவுள், பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களின் இன்னல்களைத் தன்னால் தீர்க்க இயலாது என்று கைவிரித்து அவர்களை சிவகங்கை ஜமீந்தார் துரைசிங்கத்திடம் முறையிடுமாறு அனுப்புவதாக இந்த நூல் குறிப்பிடுகிறது.
பிரதாப முதலியார் சரித்திரம் தமிழ் மொழியின் முதல் நாவல் இதனை எழுதியவர் வேதநாயகம் பிள்ளை. 1876-1878 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது தமது சொத்துக்கள் அனைத்தையும் கொடையளித்தார். மாயூரம் நகரசபையின் தலைவராக வேதநாயகம் பிள்ளை பணியாற்றிய 1876 இல் தாது வருடப் பஞ்சத்தின் போது கஞ்சித்தொட்டி திறந்து பொதுமக்களுக்குச் சேவை செய்த அனுபவங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இதைப் போலவே தாது வருடத்தின் கரிப்பு கும்மி நமக்கு இந்தப் பஞ்ச காலத்தின் பெரும் சித்திரத்தை வழங்குகிறது.
1876 -78 வரையிலான சென்னை மாகாணப் பஞ்சத்தில் பல லட்சம் மக்கள் செத்து மடிந்தனர். சோமாலியா போலான காட்சிகள் மதுரை நகரத்தில் இருந்தது என்பதை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. மதுரையில் விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்ந்தது. கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிற்றுடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி இருக்கிறார்கள். பிணங்களைப் புதைக்க, எரிக்க வழியில்லாமல் மக்கள் அவதிப்பட்டார்கள், குவியல் குவியலாக சடலங்கள் மதுரையின் வீதிகளில் குவிகின்றன. அழுகிய உடல்களில் இருந்து கிருமிகள் வெளியேறி புதிய புதிய தொற்றுகளை ஏற்படுத்தியது. குடிதண்ணீர் கிடைக்கவில்லை, கிடைத்த நீரும் பாதுகாப்பாக இல்லை, வாந்தியும் பேதியும் எஞ்சியவர்களையும் கொண்டு சென்றது. ஆடு மாடுகள் இறக்க, அவையே உணவுப்பொருளாயின, மக்கள் சில காலம் இப்படி புலால் உணவுகளை மட்டுமே உண்டு வாழ்ந்தனர். மதுரையின் அன்றாடங்காய்ச்சிகளாக இருந்த அனைவருமே கையேந்தும் நிலைக்கு வந்தார்கள்.
இந்தக் காட்சிகளைப் பார்த்த குஞ்சரத்தம்மாளுக்கு வேதனை தாள முடியவில்லை. தாசி குலத்தைச் சேர்ந்த குஞ்சரத்தம்மாள் மதுரையில் பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த பெண்மணி. தாது வருடம் தொடங்கிய இரண்டாவது வாரத்தில் ஒரு முடிவை எடுத்தார் குஞ்சரத்தம்மாள், மதுரை வடக்கு ஆவணி மூல வீதிக்கு அருகில் உள்ள சந்தில் அவள் வீடு இருந்தது. மதுரையில் பசியால் யாரும் சாகக்கூடாது என்று கஞ்சி காய்ச்சி ஊற்றத் தொடங்கினாள். தினமும் ஒரு வேளை கஞ்சி ஊற்றப்பட்டது. இந்தச் செய்தி மதுரை நகரமெங்கும் பரவியது. இந்தக் கஞ்சிக்காக மக்கள் காலையிலிருந்து வரிசையில் நின்றனர், காத்துக் கிடந்தனர். எலும்பும் தோலுமாகக் குழந்தைகளுடன் வரிசைகள் நீண்டு சென்றன.
மதுரையின் கலெக்டர் தாது வருடத்தின் ஆறாவது வாரத்தில்தான் கஞ்சித்தொட்டியைத் திறக்க முன்வந்தார், நகரில் மூன்று இடங்களில் அரசு கஞ்சித்தொட்டியைத் திறந்தது. குஞ்சரத்தம்மாளின் செயல்தான் மதுரை கலெக்டர் களத்திற்கு வர அழுத்தம் கொடுத்தது.
தாது வருடம் முழுவதும் குஞ்சரத்தின் அடுப்பு எரிந்தபடி இருந்தது. பதிமூன்று மாதங்கள் அடுப்பின் புகை மீனாட்சி அம்மன் கோபுரத்தின் உயரத்தைத் தாண்டி மக்களின் கண்களில் பட்டது. குஞ்சரத்தம்மாள் தனது வாழ்க்கை முழுவதும் சேமித்த சொத்துக்களை உலையிலே போட்டாள். கல் பதித்த தங்க நகைகள், வெள்ளி நகைகள், முத்துக்கள், காசு மாலை, மோதிரம், ஒட்டியாணம், தோடு எல்லாம் கஞ்சியாய் மாறி, தட்டேந்தி நின்ற மக்களுக்குப் பசி போக்கியது.

வடக்காவணி மூலவீதியில் இருந்த குஞ்சரத்தம்மாவின் இரண்டு பெரிய வீடுகளும் விற்கப்பட்டு கஞ்சியாய் மாறியது. தாது வருடத்துப் பஞ்சம் முடிந்து இரண்டாவது மாதத்தில்தான் அவள் அடுப்பு அணைந்தது. அருகில் இருக்கும் ஓட்டு வீட்டில் வசிக்கத் தொடங்கினாள், படுத்த படுக்கையானாள், குஞ்சரத்தைப் பற்றி ஊரெல்லாம் பேசினார்கள். குஞ்சரத்தம்மாளின் இறப்புச் செய்தி மதுரை நகரெங்கும் காட்டுத்தீயாய்ப் பரவியது. குஞ்சரத்தம்மாளின் உடல் அவரது வீட்டிலிருந்து தத்தநேரி சுடுகாட்டை நோக்கிப் புறப்பட்ட போது வடக்கு ஆவணி வீதி முழுவதும் ஜனத்திரள் அலை மோதியது. கோவில் திருவிழாக்களைத் தவிர மதுரையில் இத்தனை பெரிய எண்ணிக்கையில் மனிதர்கள் கூடி இன்றுதான் பார்க்கிறேன் என்று மதுரை கலெக்டர் ஜார்ஜ் பிரக்டர் தனது குறிப்பிலே எழுதினார். ஆடலும் பாடலுமாக வாழ்ந்த குஞ்சரத்தம்மாளுக்கு சலங்கையைப் படையிலிட்டு வணங்கினார்கள் மதுரை மக்கள். மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் பெண் குழந்தைகளுக்கு ஒரு நூற்றாண்டு கடந்தும் குஞ்சரம் என்ற பெயர் வைக்கும் வழக்கம் இன்றும் உள்ளது.

வரலாறு நெடுகிலும் பஞ்சங்கள் இயற்கையால் தொடங்கப்பட்டு அரசுகளால் நிகழ்த்தப்பட்டவையே, எந்த ஒரு பஞ்சமும் இத்தனை ஆண்டுகள் நீடிக்கிறது என்றால் அதற்குப் பின்னால் அரசு இருக்கிறது என்பதைப் பல ஆய்வாளர்கள் துள்ளியமாக நிரூபித்திருக்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் நிகழ்ந்த பல பஞ்சங்களின் போது அவர்களது வரி வருவாயும் குறையவில்லை, ஏற்றுமதியும் குறையவில்லை. உலகம் முழுவதும் உணவு தானியத் தட்டுபாடுகளும்கூட செயற்கையான ஒரு ஏற்பாடே, இந்தியாவிலும் பல நேரங்களில் மக்கள் பட்டினியால் சாகும் போது தானிய மூட்டைகளை வைக்க கிட்டங்கிகளில் இடம் இல்லை என அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தும் செயல்முறைகளை உணவுக் கழகங்கள் அரங்கேற்றிக் கொண்டுதான் இருக்கின்றன.
குஞ்சரத்தம்மாளைப் பற்றி வாசிக்கும் போது எனக்கு அவர் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மதுரையில் வாடியவராகவே காட்சி தருகிறார். தாது வருடத்துப் பஞ்சத்தை வாசிக்கும் போது மக்கள் பட்ட துயர்களைப் பார்க்கும் போது இன்றைய கொரோனா பாதிப்பையும் மக்கள் பட்ட அவதிகளையும் நினைவிலிருந்து தவிர்க்க இயலவில்லை. கொரோனா பாதிப்பால் உங்களைச் சுற்றியவர்கள் உணவின்றித் தவித்த போது நீங்கள் எத்தனை பேரின் பசியைப் போக்கினீர்கள்? அப்படி அடுத்தவர் பசியைப் போக்கியவர்களுக்கு மட்டுமே குஞ்சரத்தம்மாளின் செயலைப் பாராட்டத் தகுதி இருக்கிறது என்று நினைக்கிறேன். குஞ்சரத்தம்மாளுக்கு இயற்கை தாது வருடத்துப் பஞ்சத்தில் பரீட்சை வைத்தது என்றால் அதே இயற்கை நம் தலைமுறையை கொரோனாவின் வடிவில் சோதித்துப் பார்க்கிறது, நீங்கள் பரீட்சையில் பாசா ஃபெயிலா?
நன்றி:
தாது வருசத்து கரிப்பு கும்மி
பஞ்சலட்சணத் திருமுகவிலாசம் - வில்லியப்பர்
Narrative of the Famine In India in 1896-97 - T.W.Holderness
Famines in India - B. M. Bhatia