சங்கத் தமிழ் இலக்கியங்களை, எளிய தொகுப்பாக வெளியிடப்போவதாகவும் இதற்கு திராவிடக் களஞ்சியம் எனப் பெயர் சூட்டப்போவதாகவும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருக்கிறார்.
இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், ‘’சங்கத் தமிழ் நூல்களுக்கு திராவிடக் களஞ்சியம் எனப் பெயர் சூட்டுவது, தமிழ்மொழி, தமிழினம் இரண்டையும் மறைக்கும் செயல்... இவ்வாறு பெயர் சூட்டுவதைத் தமிழக அரசு கைவிட வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து நம்மிடம் பேசிய அவர், ‘’சங்கத் தமிழ் நூல்கள் எதிலும் 'திராவிட' என்ற சொல்லே கிடையாது. தமிழ், தமிழ்நாடு, தமிழகம் என்ற சொற்களே இருக்கின்றன. வரலாற்று உண்மை இவ்வாறிருக்க, வலிந்து சங்கத் தமிழ் நூல்களுக்கு 'திராவிடக் களஞ்சியம்' என்று தி.மு.க ஆட்சி பெயர் சூட்டுவதற்கு ஏதோ ஓர் உள்நோக்கம் இருக்க வேண்டும். எது எப்படி இருப்பினும், சங்கத் தமிழ் நூல்களைத் 'திராவிடக் களஞ்சியம்' என்று மக்களிடம் அறிமுகப்படுத்துவது தமிழ் மொழி – தமிழினம் இரண்டையும் மறைக்கும் செயலாகும். 'அவன் கையைக் கொண்டு அவன் கண்ணையே குத்து!' என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அண்மைக்காலமாக தமிழ் – தமிழர், தமிழ்நாடு என்ற இயற்கையான சொற்களுக்கு மாற்றாக 'திராவிட' என்ற வடசொல்லைப் புகுத்திவருகிறார். தமிழ்நாட்டு வளர்ச்சியைக் குறிப்பதற்குக்கூட அவர் 'திராவிட மாடல்' என்று பெயர் சூட்டினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கு அண்மையில் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தபோது, ஸ்டாலின் அவர்கள் 'திராவிடச் சிறுத்தை' என்று சிறப்புப் பெயர் சூட்டியதையும் இங்கு நினைவுகொள்ள வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் திருமாவளவன் அவர்களை 'எழுச்சித் தமிழர்' என்று அழைக்கிறார்கள். அதை 'திராவிடச் சிறுத்தை' என்று மாற்றுகிறார் ஸ்டாலின்.
அண்மையில் நடந்த சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் பரப்புரையில் 'திராவிடம்', 'திராவிடர்' என்ற சொற்களை அதிகம் பயன்படுத்தாமல், தமிழர் என்ற சொல்லையே அதிகம் பயன்படுத்தினார் ஸ்டாலின். ஆனால், முதலமைச்சராகப் பதவியேற்றவுடன், “நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்” (I belong to Dravidian Stock) என்று அறிவித்துக்கொண்டார். தமிழர்களிடம் வாக்கு வாங்கும வரை அவர்களின் அசல் இனப்பெயரைச் சொல்லுவது, வாக்கு வாங்கி வெற்றி பெற்றபின் 'திராவிடத்தை'த் திணிப்பது என்ற தந்திரமாகத்தானே இதைப் பார்க்க முடிகிறது.
தமிழ்நாட்டில் விஜயநகர மன்னர்கள் ஆட்சிக்குப் பிறகு வந்த தமிழ் இலக்கியங்களில்தான் 'திராவிட' என்ற சொல் இருக்கிறது. அசலாக 'திராவிட' என்ற சொல்லை உருவாக்கியவர்கள் ஆரியர்கள். தென்னக மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல் 'திராவிட' என்ற சொல்லை சமஸ்கிருத நூல்களான மனுதர்மத்திலிருந்தும், குமாரிலபட்டரின் 'தந்திரவார்த்திகா' நூலிலிருந்தும் எடுத்துக்கொண்டதாகக் கூறியுள்ளார்.

தமிழ் இன உணர்வும், தமிழ்த்தேசியமும் வளர்ந்து வரும் இக்காலத்தில் தமிழ், தமிழினப் பெருமிதங்களை 'திராவிட மாயை'யில் மறைக்கும் செயலை இனிமேலாவது தி.மு.க கைவிட்டால் நல்லது. திராவிட முன்னேற்றக் கழகத்திலுள்ள தமிழறிஞர்களும், இன உணர்ச்சியுள்ள தமிழர்களும் தங்கள் தலைமைக்கு இதையெல்லாம் சுட்டிக்காட்டி, தமிழை திராவிடமாகத் திரிக்கும் வேலையைக் கைவிடச் செய்ய வேண்டும். தமிழர்களின் இந்த வேண்டுகோளைப் புறக்கணித்து, சங்கத் தமிழ் நூல்களைப் பிடிவாதமாகத் 'திராவிடக் களஞ்சியம்' என்ற பெயரில் வெளியிட்டால், அதற்கு எதிராக தமிழர்கள் கருத்தைத் திரட்டி அறவழிப் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.