Published:Updated:

மொழிக்காக உயிர்நீத்தவர்களின் ஆன்மாவை அலைக்கழிக்காதீர் அரசியல்வாதிகளே!

1965 ஆம் வருடம் இந்தி திணிப்புக்கு எதிராக திரண்ட பலரும் மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்தார்கள். தமிழ்மொழியைக் காப்பதற்காக 56 ஈகிகள் தங்கள் இன்னுயிரை நீத்து, அந்தப் போராட்டத்தின் வெற்றி நெருப்புக்குத் தங்களது தேக நெய்யை வார்த்தார்கள். அதில் ஒருவர்தான், ஆசிரியர் வீரப்பன்.

 தைலம்மாள்
தைலம்மாள் ( நா.ராஜமுருகன் )

`` `தமிழகத்தில் இந்திமொழியைத் திணிக்கப் பார்க்கிறார்கள்; அதைத் தடுக்க உயிரைப் போக்கிக்கொள்கிறேன்'னு ஆசிரியரா வேலைபார்த்த என் தம்பி, உடம்புல மண்ணெண்ணெயை ஊத்தி, தீயிட்டு தற்கொலை பண்ணிக்கிட்டான். அவன் இறந்து 54 வருஷம் ஆயிட்டு. அவன் போன கொடுமையைத் தாங்கமுடியாம, எங்கம்மாவும், அப்பாவும் கொஞ்சநாள்லேயே இறந்துபோயிட்டாங்க. ஆனா, தினம் தினம் அவன் நெனப்புல நான் வெந்துசாவுறேன்" என்று ஆற்றாமையாகப் பேசுகிறார் தைலம்மாள்.

1965 -ல் தமிழகத்தையே புரட்டிப்போட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், தமிழ்மொழி காக்க தனது இன்னுயிரை நீத்த தியாகி வீரப்பனின் மூத்த சகோதரிதான் இந்த தைலம்மாள்.

Martyrs
Martyrs

1965 ஆம் வருடம் மற்றும் அதற்கு முன்பிருந்தே இந்தித் திணிப்புக்கு எதிராக திரண்ட தமிழர்களும், திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்தார்கள். அந்தப் போராட்டத்தில், தமிழ்மொழியைக் காப்பதற்காக 56 ஈகிகள் தங்கள் இன்னுயிர்களை நீத்து, அந்தப் போராட்டத்தின் வெற்றி நெருப்புக்கு தங்களது தேக நெய்யை வார்த்தார்கள். அதில் ஒருவர்தான், ஆசிரியர் வீரப்பன்.

வீரப்பன் வெண்கல சிலை.
வீரப்பன் வெண்கல சிலை.

தமிழ்மொழிக்கு இந்தித் திணிப்பால் நேர இருந்த ஆபத்தை, தனது உயிரைக் கொடுத்து காத்த வீரப்பனை இழந்த வலியை இன்னமும் அவரது குடும்பம் அனுபவித்துக்கொண்டிருக்கிறது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கும் உடையபட்டிதான் வீரப்பனின் சொந்த ஊர்.

அங்கே வசிக்கும் அவரது மூத்த சகோதரி தைலம்மாளைச் சந்தித்தோம்.

``எங்கப்பா பேரு நல்லப்பன் செட்டியார், அம்மா பேரு பொன்னம்மாள். கூலி வேலை பார்த்தாங்க. சொந்தமா எங்களுக்கு அப்போ நிலம்கூட இல்லை. அவங்களுக்கு நான்தான் மூத்த பிள்ளையா பொறந்தேன். எனக்குப் பிறகு நல்லகருப்பன், அவனுக்குப் பிறகு மூணாவதாக வீரப்பன் பொறந்தான். அதன்பிறகு, கன்னியம்மாள், பழனியப்பன், செல்லம்மாள்னு வரிசையா பிள்ளைகள் பிறந்தாங்க. அவ்வளவு வறுமையிலும் என்னோட தம்பிகள் நல்லகருப்பனும், வீரப்பனும் படிச்சு, அரசு ஆசிரியர்களாக வேலைக்குப் போனாங்க. அதன்பிறகுதான், நாங்க எல்லோரும் நல்ல சாப்பாடு சாப்பிட ஆரம்பிச்சோம். அந்த வருமானத்துல இதே ஊரைச் சேர்ந்த ரெங்கனுக்கு, என்னைத் திருமணம் பண்ணி வெச்சாங்க.

தைலம்மாள்
தைலம்மாள்

நல்லகருப்பனுக்கும் கல்யாணம் பண்ணினாங்க. கடவூர் ஒன்றியத்துல உள்ள தெற்கு அய்யம்பாளையத்துல உள்ள பள்ளிக்கூடத்துல வேலை பார்த்துக்கிட்டு இருந்த வீரப்பனுக்கும், கல்யாணம் பண்ணிவைக்க பொண்ணு பார்த்துக்கிட்டு இருந்தோம். ஆனா, `மத்த மூணுபேருக்கும் கல்யாணம் பண்ணிவைத்து, அவர்கள் நல்ல நிலைமைக்கு வந்ததும் நான் திருமணம் பண்ணிக்கிறேன்'னு மறுத்துட்டான். அவன் எங்கம்மாவைவிட, என்மேலதான் அதிகம் பாசமா இருப்பான். என்னோட அவ்வளவு ஜாலியா பேசுவான். `உனக்குப் பொண்ணு பொறந்தா, அதை வேணும்னா காத்திருந்து கல்யாணம் பண்ணிக்கிறேன்'னு சொல்லுவான். இன்னொருபக்கம், தமிழ்மொழி மீது அவ்வளவு ஈடுபாடா இருப்பான். இந்தி எதிர்ப்புக்கு ஆதரவாக எங்க கூட்டம் நடந்தாலும், லீவுபோட்டு கலந்துக்குவான்.

இந்தச் சூழல்லதான், 11.02.1965 ம் தேதி, எங்க தலையில இடிஇறக்குன அந்தச் செய்தி வந்துச்சு. `தமிழ்மொழியைக் காக்க, பள்ளி வாசலிலேயே உடம்புல மண்ணெண்ணெயை ஊத்திக்கிட்டு, தனது உயிரை வீரப்பன் போக்கிக் கிட்டான்'னு தகவல் வந்ததும், நாங்க ஆடிபோய்ட்டோம். மாட்டுவண்டியில மொத்தக் குடும்பமும் ஏறி தெற்கு அய்யம்பாளையம் போனோம். கூட்டத்துக்கு நடுவே கரிக்கட்டையா கருகி, என் தம்பி செத்துக்கிடக்குறான். நான், எங்கம்மா, தங்கச்சிங்க எல்லாரும் அதிர்ச்சியில மயங்கி சரிஞ்சுட்டோம். அந்தக் கொடுமையைத் தாங்கமுடியாம, அடுத்தடுத்து எங்கம்மாவும், அப்பாவும் இறந்துபோயிட்டாங்க. நான் அவன் போட்டோவை வீட்டுல சாமி படங்களோடு சேர்த்து மாட்டி வச்சுக்கிட்டு, தினம் தினம், 'ஏன் சாமி, என்னை தவிக்கவிட்டுட்டுப் போயிட்ட'னு மருகிட்டு இருக்கேன்.

Veerappan
Veerappan
இன்னைக்கு, வீரப்பனைப் போல உயிர்நீத்தவங்களை வச்சு, அரசியல் கட்சிங்க என்னன்னமோ அரசியல் பண்றாங்க. ஆனா, என் தம்பிக்கு தெற்கு அய்யம்பாளையம் கிராம மக்கள் மணிமண்டபம் அமைக்க முடிவு பண்ணி, அப்படியே கட்டி முடிச்சு, வெண்கலச் சிலையும் அமைச்சு, 2016–ல திறக்க முயற்சி பண்ணினாங்க. ஆனா, அ.தி.மு.க ஆட்சிக்காரங்க அதைத் தடுத்துட்டாங்க. அவனை வச்சு பிழைப்பு நடத்துறாங்க. ஆனா, அவனுக்கு மணிமண்டபம் திறக்க அனுமதி கொடுக்க மட்டும் மனசில்லை.

அவனை இழந்துட்டு நாங்க தவிக்கும் தவிப்பை, வெறும் வார்த்தையில் சொல்லிப் புரியவைக்கமுடியாது தம்பி. என்ன பண்ணியும் அந்த வலியைப் போக்கமுடியலை" என்றார்.

அடுத்து பேசிய, வீரப்பனின் அண்ணன் நல்லகருப்பனின் மகளான மனோன்மணி,

``நான் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையாக இருக்கிறேன். சித்தப்பா வீரப்பன், தமிழ்மொழி மீது தீராத காதல் கொண்டவராக இருந்திருக்கிறார். அண்ணா நடத்திய திராவிட நாடு இதழை தொடர்ந்து வாசித்து வந்த அவர், அதைப் பொக்கிஷம் போல சேமித்து வைத்திருப்பாராம். அப்போதான், 1965- ல் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் வலுத்தது. இதைக் கேள்விப்பட்ட சித்தப்பா வீரப்பன், `தானும் மொழிக்காக ஏதாச்சும் செய்யணும்' என்று முடிவெடுத்திருக்கிறார். முப்பது வயதுகூட அப்போது நெருங்காத அவர், மொழிக்காக தனது உயிரை மாய்த்துக் கொள்வது என்று முடிவுக்கு வந்திருக்கிறார். `அருகில் உள்ள திண்டுக்கல் போய், தீக்குளிப்போம்' என்ற முடிவோடு அங்கு போயிருக்கிறார்.

மனோன்மணி
மனோன்மணி

ஆனால், அங்கு பெட்ரோல் கிடைக்கவில்லை. அதோடு, `அங்கு இறந்தால் தன்னை அடையாளம் தெரியாது' என்று முடிவு செய்த அவர், தெற்குஅய்யமாபாளையத்திலேயே தீக்குளிக்க முடிவெடுத்தார். தன்னோடு பணிபுரிந்த ஆசிரியர் முத்துச்சாமியிடமும், மாணவர்களிடமும், `மறுநாள் பள்ளிக்கு வரவேண்டாம்' என்று சொல்லிவிட்டு, மறுநாள், அதாவது 11.02.1965 அதிகாலையில் வீட்டில் இருந்தே ஐந்து லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் மண்ணெண்ணெயில் நனைக்கப்பட்ட துணிகளை உடம்பு, கை, கால் எனச் சுற்றிக்கொள்ள எடுத்துக்கொண்டு போயிருக்கிறார்.

`நாடு முழுவதற்குமான மொழி, இந்தி!' - அமித் ஷா

பள்ளிக் கரும்பலகையில், `தமிழ் வாழ்க..இந்தி ஒழிக!' என எழுதி வைத்ததோடு, தான் இறப்பது பற்றியும், தமிழ்மொழி மீதான தனது காதல் பற்றியும் அனைவருக்கும் கடிதங்களை தனித்தனியே எழுதி, மேசையில் வைத்துவிட்டு, பள்ளிக்கு முன்பு இருந்த கொடிக்கம்பத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி இருக்கிறார். அதன்பிறகு, பள்ளிக்கு எதிரே வந்து மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றிக்கொண்டு, நெருப்பை வைத்துக்கொண்டுள்ளார். ஒரு சத்தம் இல்லையாம்.

இருந்தாலும், படபடன்னு ஏதோ எரிகிறதே என்று சாவடியில் படுத்திருந்த ஆள்கள் ஓடிவந்து பார்த்து, துணியைப் போட்டு அமத்துவதற்குள் அவர் முழுமையாக எரிந்து கரிக்கட்டையாகிவிட்டாராம். சித்தப்பா வீரப்பனோட தியாகத்துக்குப் பரிசா, எங்க அத்தைகள் செல்லம்மாளுக்கும், கன்னியம்மாளுக்கும் அரசு ஆசிரியை வேலை போட்டுக் கொடுத்தார்களாம்.

அனுமதிக்கு காத்திருக்கும் வீரப்பன் மணிமண்டபம்.
அனுமதிக்கு காத்திருக்கும் வீரப்பன் மணிமண்டபம்.

இதை எல்லாத்தையும் எங்கப்பா சொல்லச் சொல்ல கேட்டு, எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். எங்கப்பாவுக்கு 1961–லயே திருமணம் ஆனாலும், குழந்தை இல்லாம இருந்திருக்கு. 'அண்ணனுக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கணும்'னு வீரப்பன் சித்தப்பாதான் எங்கப்பாவையும், எங்கம்மாவையும் ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா அழைச்சுக்கிட்டுப் போவாராம்; போதாக்குறைக்குக் கோயில், குளம்னும் அழைச்சுட்டுப் போயிருக்கிறார். ஆனால், எங்கப்பா, அம்மாவுக்கு பத்து வருஷம் கழிச்சு நான் பொறந்தப்ப, அதைப்பார்க்க வீரப்பன் சித்தப்பா உயிரோடு இல்லை. தங்கள் உயிரைப் போக்கிக்கிட்டு, 'இந்தி மொழியை தமிழகத்தில் திணிக்கக்கூடாது'னு எங்க சித்தப்பா உள்ளிட்டவங்க உயிரை துறந்து போராடியிருக்காங்க. ஆனா, அதே இந்திமொழியை மறுபடியும் தமிழகத்தில் திணிக்கப்பார்ப்பது அநியாயம்?" என்றார்.

56 ஈகிகளின் ஆன்மாவை அலைக்கழிக்காதீர்கள் அரசியல்வாதிகளே!

ஸ்டாலின் 'வாபஸ்'... அமித் ஷா 'அந்தர்பல்டி'... - இந்தித் திணிப்பு உள்ளரசியல்!