Published:Updated:

இன்னமும் வற்றாத பாரதி வீட்டுக் கிணறு... தற்போது எப்படி இருக்கிறது மகாகவி பிறந்த வீடு?

பாரதியார் பிறந்த வீடு
News
பாரதியார் பிறந்த வீடு

ஆயுதம் ஏந்திய சுதந்திர வீரர்களையும், அகிம்சையை ஏந்திய மகாத்மாவையும் பார்த்தே கிறுக்குப் பிடித்துக் கிடந்த ஆங்கிலேயர்களைத் தலை சுற்றவைத்தது, பேனாவை ஏந்தி பாரதி நிகழ்த்திய பெரும் புரட்சி!

இன்னமும் வற்றாத பாரதி வீட்டுக் கிணறு... தற்போது எப்படி இருக்கிறது மகாகவி பிறந்த வீடு?

ஆயுதம் ஏந்திய சுதந்திர வீரர்களையும், அகிம்சையை ஏந்திய மகாத்மாவையும் பார்த்தே கிறுக்குப் பிடித்துக் கிடந்த ஆங்கிலேயர்களைத் தலை சுற்றவைத்தது, பேனாவை ஏந்தி பாரதி நிகழ்த்திய பெரும் புரட்சி!

Published:Updated:
பாரதியார் பிறந்த வீடு
News
பாரதியார் பிறந்த வீடு
தமிழர்கள் வாழ்வின் எல்லாச் சூழல்களுக்கும் ஏதோ ஒரு வரியை எழுதி வைத்துப் போயிருக்கிறார் பாரதியார். திருவள்ளுவருக்கு அடுத்து தமிழர்கள் அதிகம் கொண்டாடும் ஆளுமை பாரதி. முப்பத்தொன்பது ஆண்டுகளே வாழ்ந்த முண்டாசுக் கவிஞன் பாரதி மறைந்து நூறாவது ஆண்டு கடக்கிறது.

இன்றைய தேதிக்கே கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத ஒரு நிலம்தான் எட்டயபுரம். 140 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இங்குதான் சின்னச்சாமி - லட்சுமி தம்பதிக்கு மகனாகப் பிறக்கிறார் சுப்பையா.

ஐந்து வயதில் அம்மாவை இழக்கிறார். பதினைந்து வயதில் இல்லற வாழ்க்கை திணிக்கப்படுகிறது. மணமான மறு ஆண்டே தந்தையையும் இழக்க, குடும்பத்தை வறுமை சூழ்கிறது.
உதவி வேண்டி எட்டயபுரம் சமஸ்தான மன்னருக்குக் கடிதம் எழுதுகிறார். மன்னரும் பணி தருகிறார். ஆனால் அதிலும் நீடிக்காமல் காசி செல்கிறார். காசி வாசமும் சில காலங்களே. அங்கிருந்தும் திரும்புகிறார். தமிழாசிரியர் பணி, பத்திரிகைகளில் எழுதுவது என மதுரையில் மையம் கொள்கிறார்.

பாரதி
பாரதி
இருபதாண்டு இப்படியே கடந்து போன நிலையில், சுப்பையா எப்படி ‘மகாகவி பாரதி' ஆனார்? மறைந்து நூறாண்டு ஆகியும் நாம் ஏன் அவரை நினைத்துக் கொண்டே இருக்கிறோம்?

பாரதியின் சிந்தனையும் எழுத்தும்தான் அவரை அமர கவிஞர் ஆக்கியிருக்கின்றன. 11 வயதிலேயே கவிதை படைக்கும் வரம் அவருக்கு வாய்த்தது. சமஸ்தானப் புலவர்களால் ‘பாரதி’ என அழைக்கப்பட்டார். பாரதி பல மொழி அறிந்த பண்டிதர். ஆனால், 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று தாய் மொழியைக் கொண்டாடினார்.
பாப்பா பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, காதல் பாட்டு என கற்பனை செய்கிற கவிஞனாக மட்டும் நின்று விடவில்லை பாரதி.

'காணி நிலம் வேண்டும்' என பராசக்தியிடம் வேண்டுதல் வைத்தது அவருடைய சிறிய ஆசை என்றால், பெரிய பெரிய ஆசைகள் நிறையவே இருந்தன.

‘ஜாதிகள் இல்லையடி பாப்பா' என ஜாதிகள் இல்லாத சமூகத்தைத் தேடினார். 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' எனப் பெண் விடுதலை விரும்பினார்.

எட்டயபுரத்தில் பாரதி பிறந்த வீடு இருக்கும் அதே தெருவாசிகள் சிலர், அவரின் வாழ்க்கை குறித்து பேசுகிறார்கள். ‘‘இளம் வயதில் இந்த வீட்டுக்கு எதிரே இருக்கிற சிவன் கோயில், ஊருக்கு வடக்கு ஓரமா இருக்கிற குளக்கரை, அரண்மனைன்னு பல இடங்கள்ல உட்கார்ந்து கவிதைகள் எழுதுவார்னு எங்க முன்னோர்கள் சொல்வாங்க’’ என்கிறார்கள்.

பாரதி நினைவின் நூறாண்டைச் சுமந்தபடி அமைதியாக காட்சியளிக்கிறது எட்டயபுரம். ஊரின் கிழக்குப் பகுதியில் இருக்கிறது, பாரதி பிறந்த வீடு. உள்ளே நுழைந்ததும் பளிச்சென முகம் காட்டும் கிரானைட் தளம் மட்டுமே கால மாற்றத்தின் அடையாளம். மற்றபடி பனை விட்டங்களும், மரத்தூண்களும் பழைமை மாறாமல் காட்சியளிக்கின்றன. புறவாசல் கிணற்றில் இன்றும் தண்ணீர் இருக்கிறது.

மகாகவி பாரதியார்
மகாகவி பாரதியார்

எட்டயபுரத்திலிருந்து கிளம்பிச் சென்ற கவிஞர் பாரதி, சுதந்திரப் போராட்ட வீரர் பாரதி ஆனார். அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருந்த ஆங்கிலேயரின் துப்பாக்கி முனைக்கு அஞ்சாமல் பேனா முனையைக் கூர் தீட்டினார். 26 வயதில் உணர்ச்சிமிகு பாடல்களை இயற்றி ஆங்கிலேயருக்கு போர் அழைப்பு விடுத்தார் பாரதி.

ஆயுதம் ஏந்திய சுதந்திர வீரர்களையும், அகிம்சையை ஏந்திய மகாத்மாவையும் பார்த்தே கிறுக்குப் பிடித்துக் கிடந்த ஆங்கிலேயர்களைத் தலை சுற்ற வைத்தது, பேனாவை ஏந்தி பாரதி நிகழ்த்திய பெரும் புரட்சி.

’விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக்குருவியைப் போல’ என்றார். ‘ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்’ என்று சுகமான கற்பனை செய்தார். விடுதலை தாகத்துடன் அவர் நடத்திய கூட்டங்கள், நிகழ்த்திய சொற்பொழிவுகள், ‘இந்தியா’ இதழில் அவர் எழுதிய கட்டுரைகள், வெளியிட்ட கார்ட்டூன்கள் ஆகியவை ஆங்கிலேயருக்கு ஆத்திரத்தை உண்டாக்கின. பாரதிக்கு பல வழிகளில் தொல்லை கொடுத்தது பிரிட்டிஷ் அரசாங்கம்.

தமிழ்நாட்டை விட்டுப் புதுச்சேரி கிளம்பிப் போனார். அங்கிருந்தபடியே விடுதலை தாகம் குறையாமல் எழுதி வந்தார். ஒருகட்டத்தில் மீண்டும் தாய்மண்ணைப் பார்க்க வேண்டுமென ஆசைப்பட்டது பாரதியின் மனம். புதுச்சேரியிலிருந்து கிளம்புகிறார். வழியில் கடலூர் எல்லையில் கைது செய்து சிறையில் அடைத்தது பிரிட்டிஷ் அரசு.
திலகரின் கொள்கைக்கு ஆதரவு, காந்தியுடனான சந்திப்பு, தமிழ்நாட்டில் வ.உ.சி. சுப்பிரமணிய சிவாவுடனான நட்பு என இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பாரதியின் பங்கைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

எட்டயபுரம், காசி, மதுரை, புதுச்சேரி, மனைவியின் ஊரான கடையம், எனச் சுற்றிய பாரதியின் உயிர் கடைசியில் சென்னை திருவல்லிக்கேணியில் இந்த உலகை விட்டுப் பிரிந்தது.

பாரதி நினைவின் நூற்றாண்டு
பாரதி நினைவின் நூற்றாண்டு

எட்டயபுரத்தில் பாரதி பிறந்த வீட்டைப் புனரமைத்தது அரசாங்கம். அருகே பாரதிக்கு எட்டயபுரம் மன்னர் நன்கொடையாக அளித்த இடத்தில் நினைவு மண்டபமும் கட்டி அழகு பார்த்தது. திருவல்லிக்கேணியிலும் பாரதி வாழ்ந்த வீடு இன்றும் அவரது நினைவைப் பறைசாற்றி நிற்கிறது.

எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீரர் என்கிற இரண்டு முகங்கள் தாண்டி பாரதியிடம் வியக்க இன்னொரு முகமும் இருந்தது. அது தீர்க்கதரிசி பாரதி. அறிவியல் வளர்ச்சி பெறாத நூறாண்டுக்கு முன்பே பாரதத்தின் தொழில் வளர்ச்சி குறித்து கற்பனை செய்தார்.

பாரதி தீர்க்கதரிசி என்பதற்கு எப்போதும் உதாரணமாகச் சொல்லப்படும் வரிகள் இவை..

‘தேடிச் சோறு நிதம்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பம் மிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரைகூடிக் கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதர் போல்
வீழ்வேன் என நினைத்தாயோ?’

ஆம், தான் எப்படி வாழ்ந்து மடிவோம் என்பதும் பாரதிக்கு முன்னரே தெரிந்திருக்கிறது.