Published:Updated:

கப்பல் ஓட்டியது முதல் மளிகைக் கடை நடத்தியது வரை... 150வது பிறந்த நாள் காணும் வ.உ.சி.யின் வரலாறு!

கப்பல் நிறுவனத்தைத் தொடங்க நினைத்தார் வ.உ.சி. ஆங்கிலேயர்கள் நடத்தி வந்த ‘பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகே‌ஷன்’ என்ற கப்பல் நிறுவனத்துக்குப் போட்டியாக, 1906 அக்டோபர் 16–ல் ‘சுதேசி ஸ்டீம் நேவிகே‌ஷன் கம்பெனி’ பதிவு செய்யப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'தமிழன்' என்ற அடையாளம் நமக்குப் பெருமை தருகிறது. ஆனால், 'தமிழன்' என்ற வார்த்தைக்கே பெருமை தந்தவர் வ.உ.சி.
சுதந்திரப் போராட்டத்தை எந்த வன்முறையும் இல்லாமல் நடத்திய தலைவர்களில் அதிக தண்டனை பெற்றவர் அவர்தான். பிரிட்டிஷ்காரர்களின் தொழிலுக்குப் போட்டியாக சுதேசி தொழில்களை வளர்க்க முயன்றதால் எழுந்த கோபத்தின் விளைவு அது.

சுப்பிரமணிய சிவா, மகாகவி பாரதி, பாலகங்காதர திலகர் என பல முன்னோடிகளோடு தோள்கொடுத்து நின்ற வ.உ.சி, சிறையில் கடுமையான துன்பங்களுக்கு ஆளானார். மாடுகள் கூட இழுப்பதற்கு சிரமப்படும் செக்கை கோவை சிறையில் இழுத்த அவரது வரலாறு, சுதந்திரத்தின் அருமையை உணராத தலைமுறைக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டிய பாடம்.
ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியா வந்து வியாபாரம் செய்தால், அதில் கிடைக்கும் லாபம் அந்த நாட்டுக்குப் போய்விடுகிறது. இதனால் நம் நாட்டில் பணப்புழக்கம் குறைகிறது. அந்நியச் செலாவணியையும் இழக்கிறோம்.

சுதேசி நிறுவனங்களின் தயாரிப்பை வாங்கினால், நம் பணம் வெளியில் போகாது. நம் மண்ணில் உருவான பொருள்களைப் பயன்படுத்துவது நமக்குப் பெருமை தரும் விஷயமும் கூட!
இதை பிரிட்டிஷ் காலத்திலேயே உணர்ந்து, ஆங்கிலேயர்களின் தொழிலை வேரறுக்க முயன்றவர் வ.உ.சிதம்பரனார். ‘கப்பலோட்டிய தமிழர்’ என்று பெருமையுடன் அதனால்தான் அவரை அழைக்கிறோம்.

வ.உ.சி மணிமண்டபம்
வ.உ.சி மணிமண்டபம்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தவர் சிதம்பரம். 2/119 ஏ கதவிலக்கம் கொண்ட வ.உ.சியின் வீடு, நூற்றாண்டு வரலாற்றைச் சுமந்துகொண்டிருக்கிறது. இந்த வீட்டில்தான் உலகநாதன்- பரமாயி அம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார் வண்டானம் உலகநாதன் சிதம்பரம் எனப்படும் வ.உ.சி.
தாத்தா வள்ளியப்பன், அப்பா உலகநாதன் என பரம்பரையாக வழக்கறிஞர்கள். மிகவும் வசதியான குடும்பம். அதற்குச் சான்றாக கருங்கல் சுவர்களும் உயர்ரக மரத்தூண்களும் நிறைந்திருக்கின்றன இந்த வீட்டில். பள்ளிப்படிப்பைத் தூத்துக்குடியிலும் கல்லூரிப்படிப்பை திருநெல்வேலியிலும் முடித்த சிதம்பரனார், ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சாதாரண ஊழியராக சிலகாலம் பணிபுரிந்தார்.

பதின்ம வயது தாண்ட, கனன்று கொண்டிருந்த இந்திய விடுதலைப் போராட்ட அனல் சிதம்பரனாரின் நெஞ்சத்திலும் குடிபுகுந்தது. அரசுப்பணியை உதறிவிட்டு சட்டம் படிக்கச் சென்றார். காங்கிரஸ் மகாசபையின் செயல்பாடுகளும் திலகரின் கொள்கைகளும் ஈர்க்க, 'சுதேசாபிமானம்' என்ற தலைப்பில் முதல் கட்டுரையை எழுதி ஆங்கிலேயருக்கு எதிரான அரசியலைத் தொடங்கினார். வணிகம் செய்யவந்த ஆங்கிலேயரை வெளியேற்ற வேண்டுமெனில் வணிகமும் தெரியவேண்டும், ஆங்கிலமும் தெரியவேண்டும் என ஸ்கெட்சை சரியாகப் போட்டார் வ.உ.சி.

எல்லா தொழில்களையும் தற்சார்பாக இந்தியர்கள் நடத்த வேண்டும் என்ற இலக்கின் துவக்கமாக ஒரு கப்பல் நிறுவனத்தைத் தொடங்க நினைத்தார் வ.உ.சி. ஆங்கிலேயர்கள் நடத்தி வந்த ‘பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகே‌ஷன்’ என்ற கப்பல் நிறுவனத்துக்குப் போட்டியாக, 1906 அக்டோபர் 16–ல் ‘சுதேசி ஸ்டீம் நேவிகே‌ஷன் கம்பெனி’ பதிவு செய்யப்பட்டது. அப்போது சிதம்பரனாருக்கு வயது 34.

இந்த நிறுவனத்துக்கு மும்பையிலிருந்து ஒரு கப்பலை குத்தகைக்கு எடுத்து வந்தார்கள். ஆனால், கப்பல் கொடுத்த மும்பை நிறுவனத்தை வெள்ளையர்கள் மிரட்டிப் பின்வாங்க வைத்தனர். அதன்பின் இலங்கை சென்று கொழும்புவில் வாடகைக் கப்பலை வாங்கி வந்து இயக்கினார். ஆனால், சொந்த கப்பல்கள் இல்லாமல் வணிகத்தைத் தொடர இயலாது என்பதை தெரிந்துகொண்டார்.

வ.உ.சி
வ.உ.சி

பல போராட்டங்களைத் தாண்டி எஸ்.எஸ்.காலியோ என்ற நீராவி இயந்திரம் பொருத்தப்பட்ட கப்பலை வாங்கினார். 1,300 பேர் பயணம் செய்ய முடிகிற கப்பல் அது. கப்பலின் முகப்பில் ‘வந்தே மாதரம்’ என்று எழுதப்பட்ட கொடியைக் கட்டி அதைக் கடலில் பயணம் செய்ய வைத்தார் வ.உ.சி. அதன்பின் பிரான்ஸ் நாட்டிலிருந்து எஸ்.எஸ்.லாவோ என்ற கப்பலை வாங்கினார். இரண்டு கப்பல்களும் தூத்துக்குடிக்கும் கொழும்புவுக்கும் இடையே பயணம் செய்தன. மக்கள் அனைவரும் சுதேசி கப்பலில் பயணிப்பதை மிகவும் விரும்பினர்.

துவக்க விழாவில் வ.உ.சி., ‘‘இந்தக் கப்பல் நிறுவனம் சுதந்திர உணர்வை அனைவருக்கும் ஊட்டும். வெள்ளையனை நாட்டை விட்டு மூட்டை முடிச்சுடன் ஓட வைக்கும்’’ என்றார். சுப்ரமணிய சிவா குறுக்கிட்டு, ‘‘மூட்டை முடிச்சை இங்கே விட்டுச் செல்லட்டும். அவை நம்மிடமிருந்து சுரண்டியவைதான்’’ என்று கர்ஜித்தார்.

சுதேசி கப்பல்களின் பயணத்தால் ஆங்கிலேய கப்பல் நிறுவனம் பாதிக்கப்பட்டது. ஆங்கிலேய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையிலான 5 ரூபாய் பயணக் கட்டணத்தைச் பாதியாகக் குறைத்தனர். வ.உ.சி.யும் அதேபோல குறைத்தார். பின்னர் அதையும் பாதியாகக் குறைத்த வெள்ளையர்கள், கடைசியில் இலவசப் பயணம் என்று அறிவித்தார்கள். பிறகு இலவசப் பயணத்தோடு ‘ஆளுக்கொரு குடையும் இலவசம்’ என்றார்கள். அதோடு சுதேசி கப்பல் நிறுவனத்துக்கு பிரிட்டிஷ் அரசு பல தொந்தரவுகளைக் செய்தது.

‘‘சுதேசிக் கப்பலின் வெற்றி, உங்களின் வெற்றி. நம் நாட்டின் வெற்றி. வெள்ளையனிடம் ஏமாந்து விடாதீர்கள். சுதேசிக் கப்பல் இல்லாவிட்டால் மீண்டும் இஷ்டம் போல கட்டணம் வசூலிக்கத் தயங்க மாட்டார்கள்!’’
வ.உ.சி

இந்த உணர்வை ஊட்டி, கப்பல் கம்பெனியை வ.உ.சி. விடாமல் நடத்தினார். தேசப்பற்று கொண்ட மக்கள், சுதேசிக் கப்பல்களையே ஆதரித்தனர்.

அந்த நேரத்தில், ‘‘இந்தியர்களாகிய நாம் பிரிட்டிஷ் துணி, சர்க்கரை, எனாமல் பாத்திரம் முதலிய பொருள்களை வாங்காமல் புறக்கணித்தால், ஆங்கிலேயர்கள் தாமாகவே இந்தியாவிலிருந்து வெளியேறி விடுவார்கள்’’ என்று ஒரு பொதுக்கூட்டத்தில் வ.உ.சி பேசினார்.

வ.உ.சி சிலை
வ.உ.சி சிலை
பிரிட்டிஷ் அரசின் தடையை மீறி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக வ.உ.சி.யைக் கைது செய்தது போலீஸ். அவர்மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையாக 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறையில் அவருக்கு உடல்நலமில்லாமல் போக, தண்டனை ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. ஆனால் 40 ஆண்டுகளில் ஒரு சிறைக் கைதி அனுபவிக்கும் வலியை விட இரு மடங்கு வலியை அந்த ஆறு ஆண்டுகளில் அவர் அனுபவித்தார்.
வ.உ.சி.யை சிறைக்கு அனுப்பிய பிறகு சுதேசி கப்பல் நிறுவனத்தை மூடுவது வெள்ளையர்களுக்குச் சுலபமாக இருந்தது. பிரிட்டிஷ் கப்பல் மீது சுதேசி கப்பல் மோதியது என்று வழக்கு போட்டனர். வ.உ.சி-க்கு ஏற்பட்ட நிலையைப் பார்த்த மற்றவர்கள் இணைந்து இரண்டு கப்பல்களையும் விற்றுவிட்டனர். இதில் வேதனை என்னவென்றால், எஸ்.எஸ்.காலியா கப்பலை வெள்ளையருக்கே விற்றுவிட்டதுதான். இதை அறிந்து வ.உ.சி மிகுந்த வேதனை அடைந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்: முழுமையான வாழ்க்கை வரலாறு!

தேசபக்தரான சிதம்பரனாரை தேச விரோதியாக சித்தரித்து சிறையில் அடைத்தது பிரிட்டிஷ் அரசு. அவர் தவழ்ந்து நடைபயின்ற வீட்டைப் பூட்டிவிட்டு வெளியேற வேண்டிய நிலை தந்தை உலகநாதன் குடும்பத்துக்கு ஏற்பட்டது.

''வசதியான குடும்பம்... சொத்துப்பத்து நிறைய... வெள்ளைக்காரங்களை அனுசரிச்சுப் போயிருந்தா சீமானாகவே வாழ்ந்திருக்கலாம். ஆனால் நாட்டுக்காக எல்லாவற்றையும் இழக்கத் துணிஞ்சிருச்சு அந்தப்புள்ளை. அதனால குடும்பம் நிறைய சங்கடங்களைச் சந்திச்சதோடு சொத்துக்களை இழந்துட்டு ஊரைவிட்டே கிளம்பிவிட்டது'' என்கிறார்கள் இப்போது 90 வயதைத் தாண்டி வசித்துவரும் ஒட்டப்பிடார வாசிகள்.

சுதேசித் தொழில்களை மீண்டும் நம் மண்ணில் தழைக்கச் செய்ய முயன்ற வ.உ.சி., தன் இறுதிக்காலத்தில் மகிழ்ச்சியாக இல்லை. பிரிட்டிஷ் அரசு அவரின் வழக்கறிஞர் உரிமத்தை ரத்து செய்தது. விடுதலைக்குப் பிறகு அவர் தன் சொந்த மாவட்டமான திருநெல்வேலிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியமே நடுங்கும் அளவுக்கு சுதேசி தொழில்களை உருவாக்கிப் பெயர் பெற்ற அந்த தேசபக்தர், விடுதலை பெற்று சிறையிலிருந்து வெளியே வந்தபோது அவரை வரவேற்க விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்களே போயிருந்தார்கள்.
அவர் வாழ்வில் மோசமான வறுமையும் சோகமும் மட்டுமே மிஞ்சியது. குடும்பத்தைக் காப்பாற்ற சென்னையில் மளிகைக்கடை நடத்தினார், மண்ணெண்ணெய் விற்றார்.

வ.உ.சி
வ.உ.சி
வெள்ளையர்களை எதிர்த்துக் கப்பல் நிறுவனத்தை நடத்திய வ.உ.சி-க்கு இந்த வணிகங்களைச் செய்யத் தெரியவில்லை. இந்த இக்கட்டான சூழலில் வ.உ.சி-க்கு வழக்கறிஞர் உரிமத்தை மீட்டுத் தந்தவர் வெள்ளைக்கார நீதிபதி வாலஸ். அவரின் உதவிக்கு நன்றிக்கடனாகத் தனது மகனுக்கு ‘வாலேஸ்வரன்’ என்று பெயரிட்டார் வ.உ.சி.

மக்கள் அவரைக் கைவிட்டாலும், சுதந்திர தாகத்தை அவர் எப்போதும் கைவிடவில்லை. உடலும் மனமும் தளர்ந்துபோன வ.உ.சி, சுதந்திரமடைவதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பாக 1936-ல் மரணமடைந்தார்.

விடுதலைக்குப் பிறகு, அவர் பிறந்த இந்த வீட்டில் நூலகம் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள் வ.உ.சியின் குடும்பத்தார். அதை ஏற்று வீட்டின் முதல் தளத்தில் ஒட்டப்பிடாரம் கிளை நூலகத்தை அமைத்திருக்கிறது அரசு. மொத்தவீட்டையும் பாதுகாத்துப் பராமரிக்கிறது, தமிழக அரசின் செய்தித்துறை.
மகத்தான போராளி வ.உ.சியின் தியாகத்துக்கு மதிப்பு கொடுப்போம். ‘மேக் இன் இந்தியா’ போன்ற முயற்சிகளை ஆதரிப்போம். சுதேசித் தயாரிப்புகளையே வாங்குவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு