Published:Updated:

தமிழ் உச்சரிப்புக்கேற்ற ஆங்கிலப் பெயர் மாற்றம் ஏன் அவசியம்? - விளக்கும் ஆய்வாளர்!

தமிழ் ஊர்ப் பெயர்
தமிழ் ஊர்ப் பெயர்

ஆங்கிலேயர்களால் உச்சரிக்கப்பட முடியாத தமிழ் ஊர்ப் பெயர்களை, அவர்களால் இயன்றவாறு உச்சரித்ததை, மீண்டும் தமிழ் உச்சரிப்பில் மாற்றுவதற்கு, ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டுப் போய் 73 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் உள்ள 1,081 ஊர்ப்பெயர்களை அவற்றின் தமிழ்ப் பெயர்களுக்கேற்ப ஆங்கில உச்சரிப்பில் மாற்றுவதற்கான ஆணையை அரசு இதழில் வெளியிட்டுள்ளது தமிழக அரசு. ஆங்கிலேயர்களால் உச்சரிக்கப்பட முடியாத தமிழ் ஊர்ப் பெயர்களை, அவர்களால் இயன்றவாறு உச்சரித்ததை, மீண்டும் தமிழ் உச்சரிப்பில் மாற்றுவதற்கு, ஆங்கிலேயர்கள் போய் 73 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன.

தமிழக அரசு
தமிழக அரசு

தமிழ் உச்சரிப்பு போலவே, ஆங்கில எழுத்துக்களில் ஊர்ப் பெயர்களில் திருத்தம் செய்யப்போவதாக, கடந்த 2018 -19-ம் ஆண்டு தமிழ் மற்றும் செய்தித்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டதை தற்போது அரசிதழில் ஆணையாக வெளியிட்டு, பெயர் திருத்தங்களை உறுதி செய்துள்ளது தமிழக அரசு.

சமூக ஊடகங்களில் இது திடீரென எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போல பேசப்படுகிறது. ஆனால், இது சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கையின்போதே அறிவிக்கப்பட்டது என்பதை அரசிதழை வாசிப்பவர்களுக்குப் புரியும். இந்த ஆணையின்படி, ட்ரிப்ளிகேன் என இதுவரை ஆங்கிலத்தில் எழுதப்பட்டுவந்த திருவல்லிக்கேணியின் பெயர் 'Thiruvallikkeni' என தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றாற்போல எழுதப்படும். 'Egmore' இனி 'Ezhumboor' என ஆங்கிலத்தில் எழுதப்படும்.

Ezhumboor Railway Station
Ezhumboor Railway Station

'பூ இருந்த அல்லி' என்பதே பூவிருந்தவல்லியாகி ஆங்கிலேயர் உச்சரிப்பில் பூனமல்லி ஆகியது.

ஒத்தைக்கல் மந்து (மந்து என்றால் தோடர் மொழியில் குடியிருப்பு என்று பொருள்) என்பதே ஆங்கிலேயர்கள் உச்சரிப்பில் 'ஊட்டக்காமண்ட்' என்றாகிப் பின்னர் ஊட்டி ஆகியது.

தூத்துக்குடி, டியூட்டிக்கோரின் ஆகி கோவன்புதூர், கோயம்பட்டூர் ஆகியது.

ஆங்கிலேயர்கள் அவர்கள் பங்குக்கு அவர்கள் 'வாய்க்கு வந்தபடி' தமிழ் நாட்டின் ஊர்ப்பெயர்களை மாற்ற, சமஸ்கிருத வடவர்கள் மறைக்காடு எனும் அழகிய தமிழ்ப் பெயரை வேதா (மறை) ரண்யம் (ஆரண்யம் - காடு) என மாற்றினார்கள்.

தமிழில் உயர்வான மதிப்பு மிக்கவற்றுக்கு, மதிப்பு மிக்கவருக்கு 'திரு' என்பதை முன்னிறுத்தி அழைப்பது வழக்கம். திரு எனத் தொடங்கும் பெயர்கள் லட்சங்களைத் தாண்டும். திருவாரூர், திருமகள், திருநெல்வேலி, திருவள்ளுவர், திருமூலர் என. இதில் வியப்பு என்னவென்றால், கேரளாவில் உள்ள திரு அனந்தபுரம் (திருவனந்தபுரம்) தொடங்கி ஆந்திர எல்லையில் திருத்தணி(கை), ஆந்திராவில் திருப்பதி, திருமலை, திருச்சானூர் ஆகியவையும் தமிழ்ப் பெயர்கள்தாம்.

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தமிழ்ப் பெயர்கள் சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலேயர் சொல்லாற்றலுக்கு ஏற்ப மாறிப் போய், இந்த அரசிதழ் (கெசட்) வெளியாகும்வரை பல பத்தாண்டுகள், அவர்களின் உச்சரிப்பாகவே இருந்தன. திருவரங்கம், ஸ்ரீரங்கம் ஆக மாறியது, திருவில்லிப்புதூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆனது. திரு என்பதற்கு மாற்று வடமொழிச் சொல்லாக அவர்கள் பயன்படுத்தியது ஸ்ரீ. ஸ்ரீ என்பது தமிழ் அல்ல.

ஊர்களின் பெயரில் ஆங்கில உச்சரிப்பு மாற்றம்... என்ன சொல்கிறார்கள் படைப்பாளிகள்?

உலக மொழிகளில் காரணப் பெயர்கள் எனும் பெயர் சொன்னாலே போதும் வரலாறே அறிய முடியும் என்றால், அது தமிழில் மட்டுமே இயலும். நெடுஞ்செழியன் என்றால் நெடு நெடுவென உயரமான, செழுமையான எண்ணங்கள் உடையவர் என்று பொருள். தீப்பாஞ்ச அம்மன் என்றால் தீயில் பாய்ந்த கடவுளுக்கு நிகரான பெண் என்று பொருள்.

பிரம்புக்கான மூங்கில் வளம் உள்ள இடம் பிரம்பூர் என்று இருந்தது பெரம்பூர் என்று மருவியது. மாஞ்சோலை என்றால் மாமரங்கள் உள்ள ஊர், முத்தூர் எனில் முத்து வணிகம் நடந்த ஊர் என காரணங்கள், பொருள் பொதிந்தவை தமிழர் பெயர் சூட்டும் வழிமுறைகள்.

அதேபோல தமிழ்ச் சமூகங்களில் பிறப்பு அடிப்படையிலான (இன்று புரிந்து கொள்ளப்படும்) சாதிப்படி நிலைகள் இருந்ததே இல்லை. மரத் தொழில் செய்தவர் தச்சர், அரசின் (இந்தக் கட்டுரையின் அடிப்படையான அரசிதழ் எனும் கெசட் போல) ஆணையை, மக்களிடம் பறை அறைந்து அறிவித்த கெசட்டட் அலுவலருக்குப் பெயர் பறையர். ஆக, திரிக்கப்படாத தமிழ்ப் பெயர்கள் இருந்தால், அதன் உண்மையான பொருள் விளங்கும். இல்லையெனில் குழப்பமே மிஞ்சும்

இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்ப் பெயர்களை, அவற்றின் உச்சரிப்பிலேயே ஆங்கில எழுத்துக்களில் எழுதும் பெரும் நல்ல காரியத்தைச் செய்திருக்கிறது தமிழக அரசு.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டு நிம்மதிப்பெருமூச்சு விடத்தொடங்கியிருக்கிறார்கள் தமிழியல் ஆய்வாளர்கள். அவர்களின் இந்த நிம்மதிப் பெருமூச்சு பற்றி, ஏடகம் அமைப்பின் நிறுவனரும், தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் தமிழ்ப்பண்டிதரும், ஓலைச்சுவடிகள் ஆய்வளாருமான முனைவர் மணிமாறன் அவர்களிடம் கேட்டோம்...

முனைவர் மணிமாறன்
முனைவர் மணிமாறன்

"தமிழ்ப் பெயர்களை ஆங்கிலத்தில் தமிழின் உச்சரிப்புக்கேற்ப எழுதுவது வரவேற்கத்தக்க ஒரு செயல். காரணம், ஊரின் பெயரைத் தமிழ் தெரியாதவர்கூட இனி தமிழின் உச்சரிப்பிலேயே வாசிப்பார்கள், அழைப்பார்கள். அதுமட்டுமல்லாமல், அடுத்த தலைமுறையினருக்கும் தமிழின் உச்சரிப்பு மிகச்சரியாகக் கொண்டு செல்லப்படும். மிக முக்கியமாக, பெயர்கள் திரிந்து போகாமலும், பெயர்களின் பொருள் திரிந்துபோகாமலும் காப்பாற்றப்படும். மேலும், இதை ஒரு அரசு ஆணையாக உருவாக்கி, அரசு இதழிலில் வெளியிட்டுள்ளதால் யாராவது இதை வரும் காலத்தில் மாற்றினால் எதற்கு மாற்றுகிறீர்கள் என்று கேள்வி கேட்க முடியும். எனவே, தமிழக அரசின் இந்த நடவடிக்கை பாராட்டுதலுக்கு உரியது" என்கிறார்.

இதற்கிடையில், தமிழ்ப் பெயர்களை அவற்றின் உச்சரிப்பில் ஆங்கிலத்தில் எழுதினால் மட்டும் போதாது, தமிழ்ப் பெயர்கள் என இப்போது கூறப்படும் பெயர்கள்கூட நிறைய மருவிய பெயர்களாக இருப்பதால், அவற்றையும் இயல்பான தூய தமிழ்ப் பெயர்களாக மாற்ற வேண்டும் என்று குரல்கள் எழும்பத் தொடங்கியிருக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு