Published:Updated:

சமூக அரசியல் பிரச்னைகளில் படைப்பாளிகளின் பங்களிப்பு போதுமானதாக இருக்கிறதா?

படைப்பாளிகளின் பங்களிப்பு
படைப்பாளிகளின் பங்களிப்பு

அரசாங்கத்தால், ராணுவத்தால், சர்வாதிகாரிகளால், அறமற்றவர்களால் அநீதி இழைக்கப்படுகையில் அந்த காலகட்டத்திலிருந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் தம் படைப்பின் வழியே எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்துள்ளனர்.

புகழ்பெற்ற ஓவியர் பிகாசோவின் ஸ்டூடியோவில் நிகழ்ந்த சம்பவம் இது. பிகாசோவின் புகழ்பெற்ற ஓவியமான கார்னிகாவைப் பார்வையிட்டார் ஒரு ஜெர்மன் ராணுவ அதிகாரி. கார்னிகா ஓவியம் இரண்டாம் உலகப் போரின் துயரங்களைப் பதிவு செய்திருந்த ஓவியம். அதைப்பார்த்த ஜெர்மன் அதிகாரி, "இதை நீதான் வரைந்தாயா?" எனக் கேட்டார். அதற்கு பிகாசோ, "இல்லை, அதை நீங்கள்தான் வரைந்தீர்கள்" என்றார்.

கலைத்துறையில் மட்டுமே சாத்தியப்படுகிற நிகழ்வு இது. சார்லி சாப்ளின் ஹிட்லரின் கொடுமைகளைப் பற்றி இயக்கிய `தி கிரேட் டிக்டேட்டர்' திரைப்படத்தை ஹிட்லர் பார்த்தார் என்பன போன்ற செய்திகளை நாம் கேள்விப்பட்டதுண்டு. சமூக அவலங்களுக்கான காரணங்களை எந்தவித சமரசமுமின்றி குறுக்குவிசாரணை செய்யும் பொறுப்புணர்வு கலைக்கு மட்டுமே வாய்க்கப் பெற்றது.

கார்னிகா ஓவியம்
கார்னிகா ஓவியம்

அரசாங்கத்தால், ராணுவத்தால், சர்வாதிகாரிகளால், அறமற்றவர்களால் அநீதி இழைக்கப்படுகையில் அந்த காலகட்டத்திலிருந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் தம் படைப்பின் வழியே எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்துள்ளனர். எளிய மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைத் தங்கள் படைப்பின் வழியே வெளி உலகத்தின் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். தமிழ் கலை இலக்கியச் சூழலிலும் சமூக அவலங்களை மக்கள் மத்தியில் கொண்டுசேர்த்த படைப்புகள் ஏராளம். காத்திரமான பிரச்னைகளைப் பேசியதற்காக தடை செய்யப்பட்ட நூல்கள், நாடகங்கள் உண்டு. நாவல், சிறுகதை, நாடகங்கள், பாடல்கள், திரைப்படங்கள் எனப் பல வகையில் சமூக அவலங்களை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். மக்களிடையே கொண்டு சேர்த்திருக்கிறார்கள். இந்தி எதிர்ப்பு தொடங்கி, ஸ்டெர்லைட், சி.ஏ.ஏ போராட்டங்கள்வரை பலரும் களத்தில் இறங்கிப் போராடியுள்ளனர்

தற்போது அதிகரித்துவரும் சமூக, அரசியல் பிரச்னைகளில் கலை, இலக்கியவாதிகளின் பங்களிப்பு என்னவாக இருக்கிறது?
அஜயன் பாலா
அஜயன் பாலா

"தொடர்ந்து படைப்பாளிகள் சமூக, அரசியல் பிரச்னைகளின்போது போராடிக்கொண்டும், இயங்கிக்கொண்டும்தான் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. கௌரி லங்கேஷ் கொல்லப்பட்ட சம்பவம் படைப்பாளிகளுக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கிறது. அந்த அச்சுறுத்தலைத் தாண்டி, நடிகர் பிரகாஷ்ராஜ் போன்ற படைப்பாளிகள் அதற்கென போராடி அரசியல் களத்துக்கு வரும்போது மக்கள் அவருக்கு என்ன மாதிரியான வரவேற்பைக் கொடுக்க முன்வந்தார்கள் என்பது கவனிக்க வேண்டியது!" என்கிறார் எழுத்தாளர், திரைக்கதையாசிரியர் அஜயன் பாலா.

`எத்தனை போராட்டங்கள் நடந்தாலும் சிஏஏ திரும்பப் பெறப்படாது!' - அமித் ஷா திட்டவட்டம்

இதுகுறித்து எழுத்தாளர் ஜமாலனிடம் பேசினோம், "இலக்கியவாதி என்பவர்கள் எப்போதும் சமூக, அரசியல் இயக்கங்களில் காத்திரமான பங்களிப்பைச் செலுத்தி வருகிறார்கள். காரணம் இலக்கியவாதிகளினுடைய படைப்புகள் என்பதே சமூகத்தின் பாதிப்பிலிருந்து உருவான ஒன்றுதான். எனவே, அந்தப் பங்கை திருப்பிச் செலுத்தவேண்டிய கட்டாயம் இலக்கியவாதிகளுக்கு உண்டு.

ஜமாலன்
ஜமாலன்

சமீப காலங்களில் பாசிச அமைப்புகள் கலைஞர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறார்கள். இந்தச் சூழலில் கலைஞர்களின் எதிர்வினை என்பது முக்கியமானது. வரலாற்றில் இதற்கு நிறைய உதாரணங்கள் நமக்கு காணக் கிடைக்கின்றன. இதேபோன்ற ஒரு சூழல் நிலவிய ஜெர்மனில், படைப்பாளிகள் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள். சார்லி சாப்ளின் போன்ற கலைஞர்கள் தனது படைப்புகளின் வழியே பாசிசத்தின் முகத்தை அம்பலப்படுத்தினர். பல எழுத்தாளர்கள் இணைந்து பாசிசத்துக்கு எதிராகக் கையெழுத்து இயக்கங்கள் நடத்தினார்கள்.

பல்வேறு கவிதைகள், கட்டுரைகள், கதைகளை எழுதி உலகெங்கிலும் அந்தக் கொடுமைகளைக் கொண்டு சேர்த்தனர். வால்டர் பென்ஜமின் போன்ற அறிஞர்கள் பாசிசத்துக்கு எதிராக போராடி நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள். இந்தியாவில் சமீபத்தில் நிகழ்ந்த கல்புர்கி படுகொலை, கௌரி லங்கேஷ் படுகொலை போன்றவற்றைப் பார்க்கும்போது சமூகத்தில் இலக்கியவாதிகளின் செயல்பாடுகளைக் கண்டு ஆதிக்க சக்தி அச்சத்தில்தான் இருக்கிறது.

வண்ணாரப்பேட்டை போராட்டம்... ராயபுரம் தொகுதியில் செல்வாக்கை இழக்கிறதா அ.தி.மு.க?

இன்றைய சூழலில் பல எழுத்தாளர்களால் களத்தில் இறங்கிப் போராட முடியாவிட்டாலும் தங்களின் படைப்புகளின் வழியாக மக்களுக்கு உத்வேகத்தை அளித்துவருகிறார்கள். தங்களின் சமூகப் பங்களிப்பை கவிதைகளாக, கதைகளாக, கட்டுரைகளாக மக்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டிய கடமையும் பொறுப்புணர்வும் எழுத்தாளர்களுக்கு உள்ளது. சமூகம்தான் படைப்பாளியின் விலைபொருள். அதிலிருந்துதான் படைப்புகள் உருவாகின்றன. எனவே, அந்தச் சமூகத்துக்குப் பிரச்னைகள் எனும்போது படைப்பாளிகள் பங்கேற்க வேண்டியது அவர்களது கடமை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு