Published:Updated:

கருப்பு கருணா மறைவு... கலை, இலக்கிய உலகிற்குப் பேரிழப்பு!

கருப்பு கருணா
கருப்பு கருணா

மாரடைப்பால் உயிரிழந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கருப்பு கருணாவின் உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்படுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த எஸ்.கருணா (எ) கருப்பு கருணா, கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் கலை இலக்கிய அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்தவர். குறும்பட இயக்குநர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர் என பன்முகங்களைக் கொண்ட இவர், பல நாடகங்களை இயக்கி நடித்தவர். 1984-ல் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது மாணவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

கருப்பு கருணாவின் முகநூல் பக்கம்
கருப்பு கருணாவின் முகநூல் பக்கம்

எழுத்தாளர் பவா செல்லத்துரை தெருக்கூத்து கலைஞர்களைப் பற்றி எழுதிய ’ஏழுமலை ஜமா’ என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து 2011-ல் இவர் அதே பெயரில் இயக்கிய குறும்படம் கலை உலகில் பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்தது. கடந்த 25 ஆண்டுகளாக திருவண்ணாமலையில் த.மு.எ.க.சவில் களம் கண்டு வந்த இவர், ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய அளவில் கலை இலக்கிய இரவுகளை நடத்தி வந்தார். கருணா, ’பொடம்கின் கப்பலும் போக்கிரி திருடனும்’ என்ற உலக திரைப்படம் குறித்த விமர்சன நூலை எழுதியிருக்கிறார்.

மலைகள் ஆக்கிரமிப்பு, கிரிவலப் பாதைகளில் காடுகள் அழிப்பு, நித்தியானந்தாவுக்கு எதிரான போராட்டம், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டம் என அனைத்திலும் துணிச்சலாக முன் நின்று நடத்திய கருணா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக மட்டுமே இருந்தவர். முன்னணி திரையுல நட்சத்திரங்கள் அனைவருடனும் நட்பில் இருந்த இவர், எடிட்டர் லெனின் இயக்கி வெளிவராமல் இருக்கும் ’கண்டதைச் சொல்கிறேன்’ என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

கலை இலக்கிய இரவு விழாவில் எடிட்டர் லெனினுடன் கருப்பு கருணா
கலை இலக்கிய இரவு விழாவில் எடிட்டர் லெனினுடன் கருப்பு கருணா

மிகத் திறமையான வீதி நாடகக் கலைஞரான இவர், போபால் விஷவாயுக் கசிவு விபத்து நடைபெற்ற நேரத்தில் இந்தியா முழுவதும் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்பு உணர்வு கலைப்பயணத்தில் முக்கிய பங்காளராக திகழ்ந்தவர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழுமையாக செயல்பட்ட ’அறிவொளி’ எழுத்தறிவு இயக்கத்தில் முதன்மையான நபராக பணியாற்றி பல நாடகக் குழுக்களை உருவாக்கியவர்.

எந்த பிரச்னையாக இருந்தாலும் இடது சாரி அரசியல் பார்வையோடு அணுகும் இவர், யாரையும் விமர்சிக்க தயங்கியதில்லை. பிரதமர் மோடியை நடிகர் சிவாஜி கணேசனுடன் ஒப்பிட்டு விமர்சித்ததுதான் முகநூலில் இவரது கடைசி பதிவு. சர்க்கரை நோய், மூச்சுக் கோளாறு பிரச்னைகளுக்காக அவ்வப்போது சிகிச்சைகள் எடுத்து வந்த இவருக்கு நேற்றிரவும் லேசாக மூச்சுப் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து அதற்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளை எடுத்துக்கொண்டதும் சரியாகியிருக்கிறார்.

எஸ். கருணா
எஸ். கருணா

இன்று காலை 10.30 மணிக்கு குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தபோது மூச்சுத் திணறல் அதிகமாக ஏற்பட்டதால் உடனே திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்திருக்கிறது. ”அப்பாவுக்கு ஏற்கெனவே மூச்சுப் பிரச்னை இருந்தது. இன்னைக்கு காலைல அது அதிகமாகி மாரடைப்பு வந்துடுச்சி. உடனே ஹாஸ்பிட்டல் கூட்டிக்கிட்டுப் போனோம். அங்க சிகிச்சை கொடுத்து செயற்கை சுவாசம் கொடுத்தாங்க. ஆனாலும் அப்பாவுக்கு நினைவு திரும்பல. அப்படியே இறந்துட்டாங்க” என்றார் கருணாவின் மகள் சொர்ணமுகி.

கருணாவின் இறப்புக்கு திரையுலக நடிகர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என அனைத்து தரப்பினரும் நேரிலும், முகநூலிலும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான கே.பாலகிருஷ்ணன், “பன்முக கலை இலக்கியச் செயல்பாட்டாளராக செயல்பட்ட கருணா, த.மு.எ.க.சவின் மாநிலத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். சமூக ஊடகங்களில் முற்போக்கு கருத்துகளைத் தொடர்ந்து எழுதிவந்த தோழர் கருணாவின் மறைவு, தமிழக முற்போக்கு கலை இலக்கியத்திற்கு பேரிழப்பாகும்” என்று தெரிவித்திருக்கிறார்.

`மாரடைப்பால் உயிரிழந்தவர்களிடமிருந்தும் உறுப்பு தானம் பெறலாம்!'- தமிழத்தில் விரைவில் அறிமுகம்

இதற்கிடையில் உயிரிழந்த கருணாவின் உடல் அவரது விருப்பப்படி திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு நாளை காலை 10 மணிக்குத் தானமாக வழங்கப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு