Published:Updated:

பூ பூக்கும் சுடுகாடு!

அரங்கூர் அதிசயம்

##~##
பூ பூக்கும் சுடுகாடு!

சுடுகாடு என்றாலே குமட்டும் அளவுக்கு நாற்றம் வரும். ஆனால், அதை ஒரு பூஞ்சோலையாக மாற்றி இருக்கிறார் ஒருவர் என்று தகவல் கிடைக்கவே, விரைந்தோம். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடலூர் மாவட்டம் தொழுதூரில் இருந்து 8-வது கிலோமீட்டரில் உள்ள அரங்கூர் கிராமத்தில் நுழைந்தோம். ஊர்க்காரரான பாலா, ''எங்க ஊர் சுடுகாடு, முன்னே முள்வேலிக் காடா கிடந்துச்சு. அதனால யாருமே அந்தப் பக்கமே எட்டிப்பார்க்க மாட்டோம். ஆனா, அது இப்போ பூங்காவா மாறினதுக்குப் பிறகு, பூப்பறிக்க சின்னப் பசங்கள்ல இருந்து பெண்கள் வரைக்கும் பயப்படாமப் போறாங்க! அதுக்குக் காரணம், பெரியவர் அர்ச்சுனன்தான்!'' என்றவர், சுடுகாட்டுப் பாதையையும் நமக்குக் காட்டினார்.

சுடுகாட்டுக்குள் நுழைந்தோம். 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள், ஏராளமான தென்னை மரங்கள், நாவல், மாதுளை, சப்போட்டா, சீத்தா, பப்பாளி, பலா, தேக்கு, கொளஞ்சி, நெல்லி, எலுமிச்சை என்று வகை வகையான மரங்கள் வரவேற்றன. ஏராளமான பூஞ்செடிகள். செடிகளுக்கு களை எடுத்துக்கொண்டு இருந்த அர்ச்சுனனிடம் பேசி னோம். ''ஊர்ல யாராவது செத்துட்டா ஈமச் சடங்கில் கலந்துகிட்டு சுடுகாடு வரைக்கும் போறது வழக்கம். அப்படி போனப்பதான், முள்ளுக் காடா கிடந்த இந்த இடம் என் மனசை உறுத்திச்சு. இந்த இடத்துக்குள்ள வரவே யோசிப்பாங்க. 'நாம செத்தாலும் இங்கதானே வரணும்? இந்த இடத்தை மாத்திக் காட்டணும்’னு ஒரு நாள் முடிவெடுத்தேன். அதோட, பிணங்களை வரிசைப்படி புதைத்தால் நிறைய புதைக்க முடியும் என்பது தோன்றியது.

பூ பூக்கும் சுடுகாடு!

உடனே, என் பொண்டாட்டி பிள்ளைகளிடம், 'நம்ம ஊர் சுடுகாட்டை மாத்தப் போ றேன். குடும்பத்துக்குப் பணம் கொடுக்க முடியாது. நீங்க எனக்கு சோறு மட்டும் போட்டா போதும்’னு பேசி, சம்மதிக்க வெச்சேன். ஊர்க் காரங்ககிட்டயும் சம்மதம் வாங்கி, நான் சம்பாதிக்கிற பணத்துல மரக்கன்னு வாங்கி நட ஆரம்பிச்சு... சில வருஷத்துல இந்த இடமே தோப்பா

மாறிடுச்சி. ராத்திரி முழுக்க தண்ணி பாய்ச்சுற வேலை இருப்பதால் வீட்டுக்குப் போக முடியாமல், இங்கேயே தங்கிட்டேன். வாழைத் தார்களை அறுவடை செஞ்சு, வித்த பணத்தை ஊர் செலவுக்குப் பயன்படுத்தினாங்க. போன முறை இருந்த கலெக்டர் வந்து இந்த இடத்தைப் பார்த்துட்டு, என்னைப் பாராட்டிட்டுப் போனார். புது கலெக்டரம்மாவும் வந்து பார்த்தாங்க. இந்தப் பூங்காவுக்கு தண்ணி பாய்ச்ச வசதியா குழாய் போட்டு மோட்டார் வசதி செஞ்சு கொடுத்தா இன்னும் நிறைய வேலை செய்யமுடியும்!'' என்று சொன்னார்.

அவரது வேண்டுகோளை திட்டக்குடி எம்.எல்.ஏ. தமிழழகனிடம் தெரிவித்தோம். ''நிச்சயம் செய்கிறேன்...'' என உறுதி அளித்து இருக்கிறார்.

இது தமிழகத்தின் முன்மாதிரிச் சுடுகாடாக மலரட்டும்!

- சி.ஆனந்தகுமார்

படங்கள்: எம்.ராமசாமி