Published:Updated:

''இப்படி அல்பாயுசுல போயிட்டானே..''

திருச்சியை உலுக்கிய விபத்து

பிரீமியம் ஸ்டோரி
##~##
''இப்படி அல்பாயுசுல போயிட்டானே..''

ட்டாசு தொழிற்சாலைகள் நிறைந்த சிவகாசி வட்டாரத்தில் வெடி விபத்துகள் ஏற்பட்டு... அவ்வப்போது அதிர்ச்சி கொடுப் பது உண்டு. தற்போது திருச்சி மாவட்டம் லால்குடி பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டு மூன்று பேர் இறந்து போகவே, திகிலில் இருக்கிறார் கள் ஏரியாவாசிகள். 

லால்குடி, உமர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குத்புதீன். கடந்த 40 ஆண்டு காலமாக பட்டாசு தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். தனக்கு சொந்தமான பெரிய திடலில் ஷெட்கள் அமைத்து பட்டாசுகளை தயார் செய்துவந்த அவர், அதே பகுதியிலேயே ஒரு குடோனும் வைத்திருந்தார். பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருட்களை கடந்த 6-ம் தேதி மாலை வேனில் கொண்டு வந்து இறக்கும்போதுதான் விபத்து!

''இப்படி அல்பாயுசுல போயிட்டானே..''

சம்பவ இடத்துக்குச் சென்றோம். விபத்தில் குடோன் முற்றிலும் சிதைந்துபோய்க் கிடக்க... பட்டாசுகளில் எஞ்சியிருந்த காகிதக் குவியலில் நெருப்பு கணகணத்துக் கொண்டிருந்தது. பக்கத்திலேயே எலும்புக் கூடாக, அந்த வேன்.

விபத்தை நேரில் பார்த்த அழகம்மாள், ''இந்த ஏரியா ஆரம்ப காலத்துல தோப்பா இருந்தது. வீடுகளும் கிடையாது. அதனால அந்தக் காலத்துல இருந்தே குத்புதீன் இந்த இடத்துல பட்டாசு தயாரிக்குற தொழில் செஞ்சுகிட்டு இருந்தாரு. யானை வெடி, லட்சுமி வெடி தயாரிப்பார். பொண்ணுங்க, பசங்கன்னு 10 பேர் வேலை செஞ்சாங்க. அன்னிக்கு சாயந்திரம் 4 மணி இருக்கும், வேனை கொண்டுவந்து நிறுத்தி பொருட்களை இறக்கிக்கிட்டு இருந்தாங்க. என்ன நடந்துச்சுன்னு தெரியல. திடீர்னு குடோன் வெடிச்சுச் சிதற, வேன்  தீப்பிடிச்சு எரியுது. அக்கம்பக்கத்து வீடுகள்லேயும் ஓடுகள் பறந்துச்சு. உடம்பு எல்லாம் வெந்த நிலையில நிர்வாணமா குத்புதீன் ஓடி வர்றார். உடனே கட்டிக்க வேட்டி கொடுத்து, அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வெச்சோம். டிரைவர் கண்ணன் அந்த இடத்துலேயே இறந்து போயிட்டார். டிரைவருக்கு உதவியா செந்தில்குமார்ங்கிற பையன் வந்தார். அவருக்கும் பலமான காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் செத்துப் போயிட்டார். வேலை பார்க்குற சங்கர்ங்கிற பையனுக்கும் காயம். ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போன குத்புதீன் செத்துப் போயிட்டாருன்னு கொஞ்ச நேரத்துல தகவல் வந்துச்சு...'' என்று விவரித்தார்.

''இப்படி அல்பாயுசுல போயிட்டானே..''

ஏரியாவைச் சேர்ந்த ஜெகதீசன், ''குத்புதீன் தொழில் ஆரம்பிச்சு நடத்திக்கிட்டு இருந்தப்பதான் இங்க வீடுகள் வர ஆரம்பிச்சது. எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாததால யாரும் எதுவும் சொல்றதில்லை. அக்கம் பக்கத்துல இருக்குற சின்னப் பசங்க யாரையும் கிட்டே விடமாட்டார். ரொம்ப ஜாக்கிரதையாத்தான் இருந்தார். சீஸன் டைம் மூணு மாசம் தான் தொழில் செய்வார். 'சுத்திலும் வீடுங்க வந்துடுச்சு. அதனால இந்த வருஷத்தோட தொழிலை விட்டுடலாம்னு இருக்கேன்’னு சொல்லிக்கிட்டு

''இப்படி அல்பாயுசுல போயிட்டானே..''

இருந்தார். ஏரியாவை பிளாட் போட்டு வெச்சிருந்தார். ஆனா, அவர் எதிர்பார்த்த விலை கிடைக்கலை. அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு...'' என்று வருத்தப்பட்டார்.

''நல்லவேளை. குடோன் வெடிச்சதுல ஏற்பட்ட தீ, அக்கம் பக்கத்துல இருக்குற வீடுகளுக்குப் பரவல. அப்படி நடந் திருந்தா... நினைச்சுப் பார்க்கவே பயமா இருக்குது...'' என்று சிலர் பதறினார்கள்.

இறந்துபோன வேன் டிரைவர் கண்ணனின் தம்பி இளவரசன், ''என் அண்ணன் பி.எஸ்.சி., வரைக்கும் படிச்சிருக்கான். நல்ல வேலை கிடைக்காததால, ஆட்டோ ஓட்டினான். இப்பத்தான் ஏழு மாசத்துக்கு முன்னாடி லோன் வாங்கி 'டாடா ஏஸ்’ வாங்கினான். மூணு வருஷத்துக்கு முன்னாடிதான் சாபிரான்னு ஒரு முஸ்லிம் பொண்ணை லவ் பண்ணி கல்யாணம் கட்டிக்கிட்டான். ரெண்டு வயசுல ஒரு பையன்கூட இருக்கான். நல்லா வாழணும்னு ஆசைப்பட்டவன், இப்படி அல்பாயுசுல போயிட்டானே...'' என்று கதறினார்.

''இப்படி அல்பாயுசுல போயிட்டானே..''

விபத்து நடந்த இடத்தில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த லால்குடி தாசில்தார் பாலாஜியிடம் பேசினோம். ''எல்லா அனுமதியும் முறைப்படி வாங்கித்தான் குத்புதீன் பட்டாசு தொழில் நடத்தி இருக்கிறார். பட்டாசு தயாரிப்புக்கு மூலப்பொருளான கந்தகம் அடங்கிய டிரம்மை இறக்கி வைக்கும்போதுதான் விபத்து நடந்துள்ளது. சம்பவம் நடந்த அன்று நல்ல வெயில். அதனால் கந்தகம் சூடாகியுள்ளது. டிரைவர் டிரம்மை இறக்கி வைக்கும்போது, கைதவறி கீழே விழுந்து வெடித்துள்ளது. கந்தகத் துகள்கள் இருவர் உடம்புலேயும் ஒட்டிக்கிச்சு. அதனால் தீயில், ரொம்பவே பாதிப்பு ஏற்பட்டு இருவரும் இறந்து போயிட்டாங்க...'' என்றார்.

'பட்டாசு தொழிற்சாலைக்கு திருமங்கலம் ரோடு, சிறுதையூர் என்ற முகவரியில் அனுமதி வாங்கிவிட்டு, உமர்நகர் பகுதியில் தொழில் நடத்தி வந்தார் குத்புதீன்’ என்றொரு குற்றச்சாட்டும் ஏரியாவில் உலா வருகிறது. அதுபற்றி தாசில்தாரிடம் கேட்டதற்கு, ''இரண்டுமே ஒரே முகவரிதான். திருமங்கலம் ரோடு, சிறுதையூரில்தான் தற்போது புதிதாக உமர் நகர் உருவாகி இருக்கிறது!'' என்று தெளிவுபடுத்தினார்.

லால்குடி இன்ஸ்பெக்டர் இளஞ்செழியனிடம் பேசியபோது, ''வெடி பொருட்களை கவனக்குறைவாகக் கையாண்டு விபத்து ஏற்படுத்துதல், அதன் காரணமாக ஏற்பட்ட காயம் மற்றும் மரணம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பட்டாசு ஃபேக்டரியின் உரிமையாளரே விபத்தில் இறந்து விட்டதால், வழக்கும் முடிவுக்கு வந்துவிட்டது!'' என்றார்.

தீபாவளி நெருங்கும் நேரம் என்பதால், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், இந்த சம்பவத்தை பாட மாக எடுத்துக்கொண்டு கவனமாக இருக் கட்டும்!

- ஆர்.லோகநாதன்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு