Published:Updated:

ஆபத்தில் ஆலங்குளம் சிமென்ட் ஆலை!

ஜெ. அறிவித்த 169 கோடி என்னாச்சு?

பிரீமியம் ஸ்டோரி
ஆபத்தில் ஆலங்குளம் சிமென்ட் ஆலை!

மிழக அரசுக்குச் சொந்தமான ஆலங்குளம் சிமென்ட் ஆலையைக் காப்பாற்ற வேண்டும் என்று கடந்த ஆறு மாதங்களாகத் தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சிமென்ட் ஆலை அமைந்துள்ள சாத்தூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவும் வருவாய்த் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், 'எந்த நிலையிலும் சிமென்ட் ஆலையை தனியாருக்கு தாரை வார்க்க மாட்டோம்’ என்று நம்மிடம்

 (21.1.15 தேதியிட்ட ஜூ.வியில்) சொன்னார். ஆனால் இப்போது, ஆலையை தனியாருக்கு விற்பதற்கான முஸ்தீபுகள் நடப்பதாகக் கொந்தளிக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

ஆலங்குளம் சிமென்ட் ஆலைக்காக வழக்கு தொடர்ந்துள்ள தி.மு.க செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர்

கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது,

''விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் சிமென்ட் ஆலை அமைக்க காமராஜர் முயற்சி எடுத்தார். அதன் தொடர்ச்சியாக, 1969ம் ஆண்டு ஆலங்குளம் சிமென்ட் ஆலை தொடங்கப்பட்டு

197071 ம் ஆண்டு வர்த்தக ரீதியாக உற்பத்தியை தொடங்கியது. இந்தியாவின் முதல் பொதுத் துறை சிமென்ட் தொழிற்சாலை இது. ஆண்டுக்கு 4 லட்சம் டன் சிமென்ட் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 787 பணியாளர்களுக்கு நேரடியாகவும் 5 ஆயிரம் பேருக்கு மேல் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைத்தன. மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வந்த இந்த ஆலையில் 1980ம் ஆண்டு ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்திப் பிரிவு தொடங்கப்பட்டது.

ஆபத்தில் ஆலங்குளம் சிமென்ட் ஆலை!

2011ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், 'ஆலங்குளம் சிமென்ட் ஆலையை நவீனமயமாக்க ரூ.169 கோடி ஒதுக்கப்படும்’ என்று அறிவித்தார். இந்த ஆலையின் உற்பத்தி ஆண்டுக்கு 2 லட்சம் டன்னாக இருக்கிறது என்று 201314ம் ஆண்டு தொழில் துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் பி.தங்கமணி அறிவித்தார். மேலும், 'ஆலங்குளம் சிமென்ட் ஆலையை நவீனமயமாக்க ரூ.195 கோடி ஒதுக்கப்படும்’ என்றும் அமைச்சர் உறுதி அளித்தார். சிமென்ட் ஆலையை நிரந்தரமாக மூடிவிட்டு தனியாருக்கு விற்பனை செய்ய திட்டம் இருப்பதால்தான் ஆலைக்கு அறிவித்த நிதியை ஒதுக்காமல் நிரந்தர மூடுவிழாவுக்கு ஏற்பாடுகள் நடக்கின்றன.

எனவேதான், மதுரை உயர் நீதிமன்றத்தில் ரிட் வழக்கு தொடர்ந்தேன். ஆலையைத் தொடந்து இயங்கச் செய்ய வேண்டும் என்றும் ஆலையை மூடவும் சொத்துகளை தனியாருக்கு விற்கவும் தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தேன். இந்த மனு, நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன்,

வி.எஸ்.ரவி ஆகியோர் முன்னிலையில் மார்ச் 31ம் தேதி விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் புகழேந்தி, 'ஆலங்குளம் சிமென்ட் ஆலை நஷ்டத்தில் இயங்கி வருவதால் மூட முடிவு செய்யப்பட்டது. அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்’ என்று கேட்டார்.

அ.தி.மு.க அரசு நிதி ஒதுக்குவதுபோல கூறிவிட்டு, ஆலையை மூடிவிட்டு விற்பனை செய்ய நடக்கும் உள்வேலைகள் இப்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டன.

ஆபத்தில் ஆலங்குளம் சிமென்ட் ஆலை!

இப்போதைய அ.தி.மு.க அரசு செய்வது போலவே, 1986ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் ஆலங்குளம் சிமென்ட் ஆலையைத் தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சி எடுத்தனர். அது முறியடிக்கப்பட்டது. பின்னர், 1996ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் சுற்றுச்சூழல் பிரச்னையை முன்வைத்து இந்த ஆலையை நவீனப்படுத்த வேண்டும் என்று நான் தொடர்ந்த வழக்கில், அப்போதைய முதல்வரும் தொழில் துறை அமைச்சருமான கலைஞர் ரூ.80 கோடி ஒதுக்கி அந்த ஆலையைப் புதுப்பித்தார்.

ஆலங்குளம் ஆலைக்குச் சொந்தமான 2,228 ஏக்கரில், 150 ஏக்கரில் மட்டுமே சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 100 ஆண்டுகளுக்குத் தேவையான சுண்ணாம்புக் கல் இருப்பு உள்ளது என்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் தனியார் சிமென்ட் ஆலைகள் உற்பத்தியில் சக்கைப் போடு போடுகின்றன. ஆனால், அரசு சிமென்ட் தொழிற்சாலை நஷ்டமாம். ஆலையில் கோளாறு இல்லை. அரசு நிர்வாகத்தில்தான் கோளாறு இருக்கிறது. ஆலங்குளம் சிமென்ட் ஆலை சிறப்பாகச் செயல்பட்டதால்தான் அரியலூரில் தமிழக அரசே சிமென்ட் ஆலையைத் தொடங்கியது. ஆகவே, ஆலங்குளம் சிமென்ட் ஆலை தொழில்நுட்ப வசதிகளை உடனே மேம்படுத்த வேண்டும். மேலும், அங்கு இன்னொரு சிமென்ட் ஆலையை உடனே அரசு தொடங்க வேண்டும்'' என்று விரிவாகச் சொன்னார்.

வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ''வெற்று விளம்பரங்களுக்காகச் சிலர் போராட்டங்களை நடத்துகிறார்கள். தமிழக அரசுக்கு ஆலங்குளம் சிமென்ட் ஆலையை மூடும் எண்ணம் இல்லை. தனியாருக்குத் தாரை வார்க்கும் திட்டமும் இல்லை’ என்று மறுத்தார்.

தொழில் துறை அமைச்சர் தங்கமணி, ''ஆலங்குளம் ஆலை, சிமென்ட் உற்பத்தி மூலம் மார்ச் மாதம் லாபம் ஈட்டியுள்ளது. இந்த ஆலையை நவீனப்படுத்த, மாண்புமிகு அம்மா அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். விரைவில் அந்தப் பணி தொடங்கப்படும். சிமென்ட் ஆலையை மூட எந்தத் திட்டமும் இல்லை. இதுபற்றி வந்துள்ள செய்தியைப் பார்த்து 'ஷாக்’ ஆகிவிட்டேன்' என்று விளக்கம் சொன்னார்.

யார் சொல்வது உண்மை?  

எஸ்.முத்துகிருஷ்ணன்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு