Published:Updated:

வாங்கப்படாத புத்தகங்கள்...திறக்கப்படாத திறந்தவெளி அரங்கம்...

சீரழிகிறது அண்ணா நூலகம் !

தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கிடப்பில் போடுவதும் அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க ஆட்சியில் புறக்கணிப்பதும் தொடரும் வரலாறு! அந்தப் பட்டியலில் சென்னை அண்ணா நூலகமும் சேர்ந்திருக்கிறது.

2010-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டதுதான் சென்னை அண்ணா நூலகம். நவீன முறையில் உருவாக்கப்பட்ட இந்த டிஜிட்டல் நூலகத்தை அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், ‘உயர் சிறப்புக் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்படும்’ என்று அறிவித்தார் ஜெயலலிதா. இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்றத்துக்குச் சென்று தடை உத்தரவு பெற்றனர் சிலர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘அண்ணா நூலகத்தில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

‘நீதிமன்றம் உத்தரவிட்டு மூன்று ஆண்டுகளாகியும் எந்த பராமரிப்புப் பணிகளையும் அ.தி.மு.க அரசு மேற்கொள்ளவில்லை.

வாங்கப்படாத புத்தகங்கள்...திறக்கப்படாத திறந்தவெளி அரங்கம்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நூலகம் சீரழிகிறது’ என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கொந்தளித்துள்ளார். தி.மு.க-வின் முன்னாள் சென்னை மேயரும் மாவட்டச் செயலாளருமான மா.சுப்பிரமணியன் தலைமையில் நூலகத்தை சீரமைக்கக்கோரி ஆர்ப்பாட்டமும் நடந்திருக்கிறது. மா.சுப்பிரமணியனிடம் பேசினோம். ‘‘2011-ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு, சென்னைக்கு வந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் விரும்பிச் சென்று பார்த்து ரசித்தது அண்ணா நூலகத்தைத்தான். அப்படிப்பட்ட நூலகத்தை முடக்க ஜெயலலிதா எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால், நீதிமன்றம் அதைத் தடுத்தும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நூலகம் முடங்கி வருகிறது.

நூலகத்தைச் சீரமைக்கவும் மேம்படுத்தவும் பள்ளிக்கல்வித் துறைக்கும் தமிழக அரசுக்கும் பல மனுக்களை நூலக ஊழியர்கள் அனுப்பி உள்ளனர். ஆனால், அரசியல் காரணங்களால் இந்த நூலகத்தை முடக்கி வைத்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில், எந்த ஓர்அதிகாரியும் இந்த நூலகத்துக்கு வந்து ஆய்வு நடத்தியதே இல்லை. ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ, அரசின் கவனிப்போ இல்லாததால் நூலகம் முடக்கப்பட்டு தங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ என்று 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ராஜினாமா செய்துவிட்டனர்.

வாங்கப்படாத புத்தகங்கள்...திறக்கப்படாத திறந்தவெளி அரங்கம்...

போட்டித் தேர்வு எழுதுவோருக்கு என்று பிரத்யேக தளம் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் சிவில் சர்வீஸ், டி.என்.பி.எஸ்.சி., வங்கித் தேர்வு என்று எத்தனையோ போட்டித் தேர்வுகள் நடந்துள்ளன. அவற்றுக்கான புத்தகங்கள் எதுவும் இங்கே வாங்கி வைக்கவில்லை. அதனால் அந்தப் பகுதி அப்படியே முடங்கிக் கிடக்கிறது. பார்வையற்றோருக்கான, ‘பிரெய்லி பிரிவு’ பராமரிப்பு இல்லாமல் பார்வையற்ற நிலையில் உள்ளது.

கொல்கத்தா ராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளையின் நிதி உதவியுடன், குழந்தைகள் பிரிவில் நடந்து வந்த பல  நிகழ்ச்சிகள் நான்கு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளன. நூலக வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி மாணவர்களுக்கான விடுதி, காவலாளிகள் தங்குமிடமாக மாறியுள்ளது. மாடியில் நூல் வெளியீட்டுக்காக அமைக்கப்பட்ட திறந்தவெளி அரங்கம் நுழைவு வாயில், பூட்டியே இருக்கிறது. நூலகத்தின் வரவேற்பு மற்றும் தகவல் மையத்தில் பொறுப்பாகப் பதில் சொல்ல பணியாளர்கள் இல்லை. கணினிகள் இயக்கப்படாததால், ‘ஆன் லைன்’ இணைப்பின்றி டிஜிட்டல் லைப்ரரி திறக்கப்படவில்லை. அண்ணா நூலகத்தை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். நூலக உறுப்பினர் சேர்க்கையை உடனடியாகத் தொடங்க வேண்டும்’’ என்று சொன்னார்.

வாங்கப்படாத புத்தகங்கள்...திறக்கப்படாத திறந்தவெளி அரங்கம்...

பள்ளிக்கல்வித் துறையின் கீழ்தான் நூலகத் துறை செயல்படுகிறது. இதற்கெல்லாம் அந்தத் துறையின் அமைச்சர் கே.சி.வீரமணி என்ன சொல்கிறார்? அவரிடம் பேசினோம்.

‘‘தி.மு.க-வினர் சொல்வதுபோல அண்ணா நூலகத்தை முடக்க சதி எதுவும் நடக்கவில்லை. நூலகம், வழக்கம்போலத்தான் செயல்பட்டு வருகிறது. அரசியல் காழ்ப்பு உணர்ச்சியில்
தி.மு.க-வினர் போராட்டம் நடத்தியுள்ளனர். மற்றபடி அவர்கள் சொல்வதில் உண்மை இல்லை’’ என்றார்.

‘சிறப்பாகச் செயல்படுகிறது என்று சொல்லும் அமைச்சர், அண்ணா நூலகத்துக்கு எப்போது வந்தார்’ என்று தி.மு.க-வினர் கேட்கும் கேள்விக்குப் பதில் எதுவும் இல்லை!

- எஸ்.முத்துகிருஷ்ணன்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்