Published:Updated:

குடிநீர்க் குழாயில் சாக்கடை...

உயிரைப் பறிக்கும் ரயில்வே கேட் !ஆர்.கே.நகர் தொகுதி நேரடி ரிப்போர்ட்

மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது தேர்தல் களம். டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கப்பட... தமிழக அமைச்சர்கள் பிரசாரத்தில் குதித்துவிட்டார்கள். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தத் தொகுதியைக் கவனித்தார்களா என்று அந்தத் தொகுதியை நாம் வலம் வந்தோம்.

குடிநீர்க் குழாயில் சாக்கடை...

‘‘எம்.எல்.ஏ. கூட வரவில்லை!”

சென்னை மாநகரின் முக்கியப் பகுதியான பாரிமுனையில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆர்.கே.நகர். 80 சதவிகிதத்துக்கும் மேலான குடிசை மற்றும் குடிசை மாற்று வாரிய வீடுகள்தான் தொகுதி முழுக்கவே  உள்ளன. காசிமேடு, கொருக்குப்பேட்டை, வ.உ.சி.நகர், எழில் நகர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளை உள்ளடக்கி இருக்கும் இந்த சட்டசபை தொகுதியில் மொத்தம் 2,47,667 வாக்காளர்கள் இருக்கிறார்கள். 

‘‘இன்னைக்கு தெருவுக்குத் தெரு அமைச்சர்கள் வலம் வர ஆரம்பிச்சிருக்காங்க. கடந்த நாலு வருஷமா எங்களை இந்தத் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ கூட பார்க்க வரவில்லை. இப்போது வர்றவங்ககிட்ட இவ்வளவு நாளா எங்க போனீங்கன்னு நேருக்கு நேர் கேட்கத் தயாரா இருக்கோம்!’’ என்று கோபத்துடன் பேசுகிறார்கள் தொகுதிவாசிகள். கொருக்குப்பேட்டை ரயில்வே கேட் பகுதிக்குச் சென்றோம். டிராஃபிக் ஜாமில் திண்டாடிக் கொண்டிருந்தது அந்த ஏரியா.

குடிநீர்க் குழாயில் சாக்கடை...

மூன்று பக்கங்களில் ரயில் தண்டவாளம், ஒரு பக்கம் கூவம் கால்வாய் சூழப்பட்ட பகுதி இது. அங்கிருந்து மற்றொரு பகுதிக்குப் போக வேண்டும் என்றால் ஏதாவது ஒரு ரயில்வே கேட்டைத் தாண்டித்தான் போக வேண்டியுள்ளது. இதனால், அந்தப் பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதை சரிசெய்ய மேம்பாலம் அமைக்கும்படி நீண்டகாலமாகக் கோரிக்கை எழுப்பி வருகிறார்கள். 2000-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியின்போது 30 லட்சம் ரூபாய் செலவில் கொருக்குப்பேட்டை சுரங்கப்பாதை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டது. அதன் பின்னர் வந்த அ.தி.மு.க ஆட்சியில் இந்த இடத்துக்கு சுரங்கப்பாதை அமைப்பதைவிட மேம்பாலம் அமைப்பதே சரி என்று திட்டத்தை மாற்றினர். ஆனால், இதுவரை எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

இருக்கு... ஆனா இல்லை!

காசிமேடு மார்க்கெட் பகுதியில் பல இடங்களில் தெரு விளக்கு எரியாமல் இருட்டாகவே இருந்தது. அன்னை சத்யா நகரில் ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தும் சரிவரச் செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை தொகுதிவாசிகள் பரவலாகச் சொல்கிறார்கள். தண்டையார்பேட்டையில் இருக்கும் அரசு புறநகர் மருத்துவமனைக்கு 22 டாக்டர்கள் தேவை. இங்கு பணியில் இருப்பதோ 8 பேர்தான். ஸ்கேன் மெஷின் இருக்கிறது ஆனால், அதை இயக்குவதற்கு ஆள் இல்லை. எனவே, ஸ்டான்லி செல்ல வேண்டியிருக்கிறது.  108 ஆம்புலன்ஸ் ஒன்று புறநகர் மருத்துவமனையில் இருக்கவேண்டும் ஆனால், அதுவும் ராயபுரம் போய்விடுகிறது. தொற்று நோய்க்காக தொடங்கப்பட்ட காலரா மருத்துவமனை மட்டும்தான் நல்லபடியாக இயங்கி வருகிறது.

குடிநீர்க் குழாயில் சாக்கடை...

தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை!

சந்தியா நகரில் குடி தண்ணீர் பிரச்னை அதிக அளவில் உள்ளது. ‘‘ஒருசில பகுதிகளில்தான் குழாய் தண்ணீர் வருகிறது. மற்றபடி லாரி தண்ணீர்தான் தொகுதி முழுக்கவே விநியோகிக்கப்படுகிறது. அப்படியே குழாய் தண்ணீர் வந்தாலும் அது கறுப்பாகக் கழிவுத் தண்ணீருடன் கலந்து வருகிறது. மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டால் ‘கழிவுநீர் வராத சமயமாகப் பார்த்துப் பிடித்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்கிறார்கள். காசிமேடு பகுதி முழுக்க நிலத்தடி நீர் உப்பாக மாறிவிட்டது. அதனால் லாரி தண்ணீரை நம்பியே நாங்கள் இருக்க வேண்டியுள்ளது.

ஆனால், லாரி உரிமையாளர்களுக்கு மாநகராட்சி தரப்பில் பணப் பட்டுவாடா சரி வர செய்யப்படுவது இல்லையாம். இதனால் சில சமயங்களில் மூன்று நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் வருகிறது. கிடைக்கும் பாத்திரங்களில் எல்லாம் பிடித்து வைத்து உபயோகப்படுத்த வேண்டியுள்ளது’’ என்று வருத்தத்துடன் சொல்கிறார்கள் அந்த ஏரியாவாசிகள். நாகூரான் தோட்டம், பூண்டி தங்கம்மாள் நகர், செரியன் நகர் போன்ற பகுதிகளிலும் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது.

குடிநீர்க் குழாயில் சாக்கடை...

சோப்பு வாங்கினால்தான் சர்க்கரை!

வண்ணாரப்பேட்டைவாசிகள் புலம்பலுடன் சொன்ன விஷயம் ரேஷன்கடை பற்றித்தான்! ‘‘அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு உட்பட எந்தப் பொருளுமே சரியான அளவு வருவது இல்லை. பாதிக்குப் பாதிதான் வருவதாகச் சொல்லி ஊழியர்களே மக்களை அனுப்பிவிடுகின்றனர். எதைக் கேட்டாலும் இல்லை என்றுதான் சொல்கிறார்கள். அப்படியும் ஏதாவது இருந்துவிட்டால் சோப்பு வாங்கினாத்தான் சர்க்கரை போடுவோம் என்று கறார் பண்ணுகிறார்கள். அரிசி, பருப்பு வாங்கவே காசு இல்லை. இதில் அதை எல்லாம் எப்படி வாங்குவது?’’ என்று கேட்கிறார் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இஸ்மாயில்.

 குப்பைக்குள் வாழ்க்கை!

‘‘வ.உ.சி நகர் மார்கெட்டில் மொத்தம் 90 கடைகள் இருக்கின்றன. இவை அனைத்தும் குடிசை மாற்று வாரியத்தால் கொடுக்கப்பட்ட கடைகள். இன்று அந்தக் கடைகள் அனைத்திலும் கற்கள் பெயர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. அதில் கடை போடுபவர்கள் அனைவரும் வழியிலேயே கடை போட்டுள்ளனர். அடிப்படை வசதிகள் இல்லாதது பற்றி பலமுறை புகார் அளித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒவ்வொருமுறை வாக்கு கேட்டு வருபவர்களிடமும் இதனைச் சொல்லும்போது கண்டிப்பாக சரி செய்கிறோம் என்று சொல்வார்கள். ஆனால், இதுவரை யாரும் எங்கள் பிரச்னைகளை தீர்க்கவே இல்லை!’’ என்று புலம்பினார் அங்கே கடை வைத்திருக்கும் பெண்மணி ஒருவர்.

ஆட்டோ டிரைவர் ஒருவரிடம் பேசினோம். ‘‘தொகுதி முழுக்கவே எங்கு பார்த்தாலும் குப்பைகளால் நிரம்பியுள்ளது. முக்கியமாக கொருக்குப்பேட்டை குப்பைக் கிடங்கைச் சுற்றிலும் அவ்வளவு மோசமாக இருக்கிறது. எங்க ஏரியாவுல கொசு ஆளையே தூக்கிட்டுப் போயிடும். கொருக்குப்பேட்டைக்கு பதிலாக கொசுப்பேட்டை என்று சொல்லலாம். பாரதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை ஒட்டியே கூவம் இருக்கிறது. அதனுள்தான் கழிவுகள் அனைத்தும் திறந்துவிடப்படுகின்றன. இதுபற்றி கவுன்சிலர் முதல் மாநகர அதிகாரிகள் வரை எல்லோரிடமும் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை!’’ என்று சொன்னார்.

குடிநீர்க் குழாயில் சாக்கடை...

உயிரைப் பறிக்கும் பாலம்!

பவர் குப்பம், சிங்கார வேலன் நகர், காசிபுரம் ஏ பிளாக், ஒத்தவாடை, திடீர் நகர், எம்.ஜி.ஆர் நகர் ஆகிய பகுதி மக்கள் மீன் பிடித்தொழிலை நம்பித்தான் வாழ்கிறார்கள். ஆனால், அவர்களுக்குக் கழிப்பிட வசதி, ரோடு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள்கூட செய்து கொடுக்கப்படவில்லை. காசிமேடு பகுதியைச் சேர்ந்த தனசேகர் என்கிற மீனவர், ‘‘எங்களுக்குனு அரசு செஞ்சது குடியிருப்பு கட்டிக் கொடுத்தது மட்டும்தான். இப்போது துறைமுகத்துக்குப் போய்வர வசதியாக பாலம் கட்டுறதால எங்க கடைகளை எல்லாம் இடிக்கச் சொல்லியிருக்காங்க. எங்களுக்கு சரியான வாழ்வாதாரத்தை இந்த அரசு ஏற்படுத்திக் கொடுக்கணும். மீன் மார்க்கெட் இல்லாம வெளியில கடை போட்டுக் கஷ்டப்படுறோம். எங்களுக்கு ஒரு வழி காட்டணும்’’ என்றார்.

குடிநீர்க் குழாயில் சாக்கடை...

மீனாம்பாள் நகரைச் சேர்ந்த தீபன், ‘‘கடந்த எட்டு வருடங்களாக மீனாம்பாள் நகர் பாலம் பாதி கட்டப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. இதை எல்லாம் அரசியல் கட்சிகள் கண்டுகொள்வதே இல்லை. விபத்தில் சிக்கியவர்களைக் கொண்டு செல்லும்போது ரயில்வே கேட்டில் நிற்கும் நேரங்களில் பல உயிர்களை இழந்திருக்கிறோம். இப்போது ஜெயலலிதாவே இந்தத் தொகுதியில் நிற்பதால் இதற்கு எல்லாம் ஒரு நடவடிக்கை கிடைக்கும் என்று நம்புகிறோம்’’ என்றார்.
கல்வியில் பின்நோக்கி...

குடிநீர்க் குழாயில் சாக்கடை...

இரண்டரை லட்சம் வாக்காளர்கள் இருக்கும் தொகுதிக்கு ஓர் அரசு கல்லூரி கூட இல்லை. அதனாலேயே கல்வியில் பின்தங்கிய தொகுதியாக இருக்கிறது. மேல்நிலைப் பள்ளிகள் நான்கையும் சேர்த்து மொத்தம் 20 அரசுப் பள்ளிகள் இருக்கின்றன. அதற்குப் போய் வர சரியான பஸ் வசதிகள் இல்லை. கல்வியில் பின்தங்கிய பகுதியாக இருப்பதாலோ, என்னவோ நூலகமும் வேண்டாம் என்று நினைத்துவிட்டார்கள்போல! மொத்தம் இருக்கும் மூன்று நூலகங்களில் கும்மாளம்மன் கோயில் அருகே இருக்கும் நூலகம் திறக்கப்படுவதே இல்லை. மற்ற இரண்டிலும் சரியான பராமரிப்பு இல்லை. கேட்டால் அதற்கு நிதியே வருவது இல்லை என்கின்றனர் அதிகாரிகள்.

அம்மா உணவகமான பொதுக் கழிப்பிடம்!

தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட சமூக நலக்கூடங்களை எல்லாம் அம்மா உணவகங்களாக மாற்றிவிட்டார்கள். ஒரு பொதுக் கழிப்பிடத்தையும் உணவகமாக மாற்றியிருக்கிறார்கள். இப்போது சமூக நலக்கூடங்களே இல்லை. அப்படியே இருந்தாலும் அவை அனைத்தும் ஆளும் கட்சியினரின் கட்டுப்பட்டில்தான் உள்ளன. தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சி.பி.எம் பகுதிச் செயலாளர் லோகநாதனிடம் பேசினோம். “சாலைப் பிரச்னை அனைத்துப் பகுதிகளிலும் உள்ளது. 20 வருடங்களுக்்கு முன் திட்டமிட்ட சாலைகள். அதனால் எல்லா சாலைகளும் குறுகலாகத்தான் இருக்கின்றன. காசிமேடு, நேதாஜி நகர், பாரதி நகர் பகுதி மக்கள் தங்கள் நீண்ட நாள் கோரிக்கையாக வைப்பது தாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா வேண்டும் என்பதுதான். அது இன்னும் கொடுக்கப்படாமலேயே இருக்கிறது. 1980-களில் உலகவங்கி கழிப்பறை கட்டிக்கொள்ள குடும்பத்துக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் கொடுத்தது. அதற்கு இன்றுவரை குடிசை மாற்று வாரியம் தண்ட வட்டி போட்டு 70 ஆயிரம் ஆகியிருப்பதாக நோட்டீஸ் வருகிறது. இந்தத் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும்!’’ என்று கேட்கிறார்.

இப்படி ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி முழுக்கவே ரணகளமாகத் தான் இருக்கிறது. இங்குதான் மொத்த அமைச்சர்களும் வாக்குக் கேட்டு வலம் வரப் போகிறார்கள்!

டெய்ல் பீஸ்: தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு, மீனாம்பாள் நகர், பாரதி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தெருக்களில் கழிவு நீர் சாக்கடை அமைக்கும் பணி, ரோடு போடுவது என்று வேலைகள் தொடங்கியுள்ளனர். இலவசப் பொருட்கள் விநியோகம் செய்ய டோக்கன் கொடுத்துச் சென்றிருக்கிறார்கள்!

- மா.ஆ.மோகன்பிரபாகரன்
படங்கள்: வீ.நாகமணி, தி.குமரகுருபரன்

அடுத்த கட்டுரைக்கு