##~## |
ஆனால், 'இந்தத் திட்டத்தைப் பயன் படுத்தி, தி.மு.க-வினர் பினாமி பெயரில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை அமுக்கி உள்ளதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது’ என ஜெயலலிதா அறிக்கைவிட... அதுபற்றி சட்டசபையிலும் பேசப்பட்டது. இதை அம்பலப்படுத்தியவர் சிவா. ஆண்டிபட்டியைச் சேர்ந்த இவர்தான், இரண்டு ஏக்கர் திட்டத்தில் நடந்த மோசடிகளைக் கள ஆய்வு செய்து, ஆதாரங்களை ஜெயலலிதாவிடம் கொடுத்துள்ளார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சிவாவை சந்தித்தோம். ''என்னுடன் படித்த நண்பர்களுடன் சேர்ந்து ஏற்றுமதி தொழில் செய்யத் திட்டமிட்டோம். இரண்டு ஏக்கர் திட்டத்தில் நிலம்
பெற்றவர்களிடம் மூலிகை பயிரிட, திட்ட அறிக்கை தயாரித்து நபார்ட் வங்கியிடம் நிதி உதவிக்கு நாடினோம். 'நல்ல திட்டம். மானியமாகக் கடன் வழங்குகிறோம்’ என உறுதியளித்தனர். எனவே, தமிழகம் முழுவதும் இலவச நிலம் பெற்றவர்களின் பட்டியலை சேகரித்து, கிராமம் கிராமமாகப் போனோம். அப்போதுதான் எங்களுக்கு இந்த விஷயமே தெரிந்தது. அதாவது, நிலம் பெற்றவர்கள் பலருக்குத் தங்களுக்கு நிலம் வழங்கப்பட்டதே தெரியவில்லை. தமிழகம் முழுவதிலும் 70 சதவிகிதம் இப்படித்தான். காரணம் அரசியல்வாதிகளும், அவர்களுக்கு வேண்டியவர்களும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி விளையாடி இருப்பதுதான்.'' என்று சொல்லி, ஆதாரங்களை நம்மிடம் கொடுத்தார். அதில், அரசியல் பின்புலத்தோடு ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள இடங்களை மட்டும் நாம் ஆய்வு செய்தோம்.
தேனி மாவட்டம் வைகை அணை பின்புறம் 350 ஏக்கர், இரண்டு ஏக்கர் திட்டத்தில் வழங்கப்பட்டது. எண்டப்புலி கிராமத்தைச் சேர்ந்த பயனாளிகளான பஞ்சம்மாள், சந்திராவிடம் பேசியபோது, ''நாங்கள் வைகை அணைக்குப் பின்புறம் உள்ள ஒரு தோட்டத்துக்கு வேலைக்குப் போவோம் (முதலாளிகளின் பெயர்களை சொல்லப் பயந்தனர்!). முதலாளி, 'விவசாயக் கூலிகளுக்கு நலத் திட்டம் கொடுக்கிறாங்க. அதுக்கு உங்க ரேஷன் கார்டு, போட்டோ கொடுங்க. அதிகாரிகளிடம் சொல்லி வாங்கித் தர்றோம்’னு சொன்னாங்க. கொடுத்தோம். அதுக்குப் பின்னால், எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்கள் பேர்ல நிலம் இருப்பது சிவா சொல்லித்தான் தெரியும்.'' என்றனர் அப்பாவியாக.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுக்கா சந்தையூர் பஞ்சாயத்தில் உள்ள ராஜதானிக் கோட்டையை சேர்ந்தவர்கள் சாந்தி, தொந்தியம்மாள், கருப்பையா. இவர்கள் பெயரில் இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலத்தை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமானது என சொல்லப்படும் ஊறுகாய் ஏற்றுமதி நிறுவனம் வளைத்து வைத்துள்ளதாம். பயனாளிகளிடம் பேசியபோது, ''அந்த ஊறுகாய் கம்பெனிக்கும், பாண்டி என்பவருக்கும் நிலத்தை ஆக்கிரமிப்பது தொடர்பாக பிரச்னை. எங்கள் பெயரில் பாண்டி, முதலமைச்சருக்கு பெட்டிஷன் போட்டு இருக்கார்.
போலீஸ்காரங்க அந்த விசாரணைக்குக் கூப்பிட்டப்பதான் எங்க பேர்ல நிலம் இருக்கிறதே தெரியும். அப்புறமா அமைச்சர் ஐ.பெரியசாமியின் தம்பியான அன்பு எங்களை மிரட்டி, 'நிலத்துக்கு பதிலா 15 ஆயிரத்தை வாங்கிட்டு பிரச்னை பண்ணாம இருங்க. இல்லேன்னா வழக்குப் போட்டு உள்ளே தள்ளிருவோம்’னு மிரட்டினார். அவர் சொன்ன மாதிரியே எழுதிக் கொடுத்துட்டுப் பணத்தை வாங்கிட்டு வந்துட்டோம்.'' என்றனர்.
கோவை வடசித்தூரில் மத்திய அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான சி.டி. தொழிற்சாலை, இரண்டு ஏக்கர் என இலவசமாக வழங்கப்பட்ட 63 ஏக்கர் நிலத்தில் கட்டுமானப் பணிகளைச் செய்து வருகிறது. இங்கு நிலம் வழங்குவதற்கு முன்பே, பயனாளிகளுக்கு ஒரு ஏக்கருக்கு

2 லட்சம் வரை பணம் கொடுத்தார்களாம். அதன் பிறகுதான் அவர்கள் பெயரில் நிலமே வழங்கப்பட்டதாம். இங்கு அரசு வெளியிட்டுள்ள பயனாளிகளான ஆறுச்சாமி, பழனிசாமி, சின்னதுரை, தெய்வத்தாய், மயில்சாமி, ராஜாத்தி, அன்னம்மாள் உட்பட்ட இன்னும் பலர் வடசித்தூரிலோ, பக்கத்துக் கிராமத்திலோ இல்லை என்பதுதான் வேடிக்கையான விஷயம்!
திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை பின்புறம் உள்ள சூரியூரில் இலவச நிலம் ரியல் எஸ்டேட்காரர்கள் கைக்கு மாறி, வீடுகளாகி வருகின்றன. அங்கே நிலம் பெற்றவர்களான கருப்பையா, ஆறுமுகம், முத்துப்பிள்ளை ஆகியோர், ''எங்களுக்கு எல்லாம் நிலம் தருவாங்களா?'' என அப்பாவியாகக் கேட்டனர். அவர்களிடம், ''உங்கள் போட்டோ ஒட்டி, உங்களுக்குத் தெரியாமல் நிலம் வழங்கப்பட்டுள்ளது!'' என்றாலும், அதை அவர்கள் நம்பவில்லை!
மீண்டும் சிவாவிடம் பேசினோம். ''இரண்டு ஏக்கர் நிலம் பெற்றவர்கள் பட்டியலை பஞ்சாயத்து அலுவலகத்தில் ஃபிளெக்ஸ் போர்டில் வைத்தால் நிலம்
பெற்றவர்கள் யார் யார் என மக்கள் எளிதாகத் தெரிந்துகொள்வார்கள். அவர்கள் நிலத்தை வேறு யாரும் அபகரித்து இருந்தாலும் தெரிந்துவிடும். மேலும், 'இரண்டு ஏக்கர்’ நிலம் கொடுத்த தகவலை தமிழக அரசு வெப்சைட்டில் வெளியிட்டு உள்ளது. இதில் மதுரை, காஞ்சிபுரத்தில் மட்டும் வெளிட மறுக்கிறார்கள்.'' என்றார்.
இந்த விவகாரங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை சந்தித்துக் கேட்டோம். ''இந்தத் திட்டத்தில் எங்கேயும் முறைகேடு நடக்கவில்லை. அப்படி எந்தப் புகாரும் வரவில்லை. யார் யாருக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளதோ... அவர்களிடமே நிலம் உள்ளது. நீங்கள் குறிப்பிடும் திருச்சி சூரியூர், கோவை வடசித்தூர் கிராமத்தில் வழங்கப்பட்ட நிலத்தில் வீட்டு மனைகளோ, கட்டடங்களோ இல்லை. திண்டுக்கல் மாவட்டம் சந்தையூரில் ஊறுகாய் கம்பெனி நிலத்தை ஆக்கிரமித்ததாகச் சொல்வது தவறான தகவல். அந்த நிலம் பயனாளிகளிடமே உள்ளது. யார் வேண்டுமானலும் போய்ப் பார்த்துக் கொள்ளலாம். ஊறுகாய் கம்பெனிக்கு நிலம் வாங்குவது தொடர்பாக எனது உறவினர்கள் யாரும், யாரையும் மிரட்டவில்லை. தேவை இல்லாமல் எங்கள் குடும்பத்தின் பெயரை இழுத்துள்ளார்கள். அந்த கம்பெனி சென்னையைச் சேர்ந்த மார்வாடி ஒருவருக்கு சொந்தமானது. வைகை அணைக்குப் பின்புறம் உள்ள கிராமங்களில் நிலமற்ற பயனாளிகள் இல்லாததால், நிலமற்ற எண்டப்புலி கிராமத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. பயனாளிகளுக்குத் தெரியாமல் அவர்கள் பெயரில் நிலம் வழங்கப்பட்டதாகச் சொல்வது தவறு. யாரோ அரசுக்கு எதிராகப் பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். இரண்டு ஏக்கர் திட்டப் பயனாளிகள் பெயரை கிராமப் பஞ்சாயத்து அலுவலகங்களில் விளம்பரம் செய்திடும் யோசனையை அரசு பரிசீலிக்கும். இரண்டு ஏக்கரில் முறைகேடு குறித்து என்னிடம் யாரும் புகார் செய்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்று முடித்தார்.
அ.தி.மு.க. இந்தப் பிரச்னையையே வரும் தேர்தல் பிரசாரமாக கையில் எடுத்தால், அதை எதிர்கொள்ள முடியுமா?