Published:Updated:

எப்படி இருக்கிறது உயர் நீதிமன்றப் பாதுகாப்பு?

சென்னை செக்கப்

##~##
எப்படி இருக்கிறது உயர் நீதிமன்றப் பாதுகாப்பு?

திறந்தே கிடக்கும் சத்திரம் போன்று எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் கிடந்தது, சென்னை உயர் நீதிமன்றம். இப்போது கண்காணிப்புகள் நிறைந்த பாதுகாப்புக் கோட்டையாக மாறியுள்ளது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அனுமதி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, காவலரின் கையப்பம் பெற்றபிறகு வரிசையாகச் செல்லவேண்டும். முதலில் பேக்கேஜ் ஸ்கேனர் கொண்டு உடைமைகள் சோதிக்கப்படுகிறது. பின்பு வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் கருவி கொண்டு உடல் சோதனை நடைபெறுகிறது. இதன்பிறகே கோர்ட் வளாகத்துக்குள் நுழையமுடியும். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பிறகு நீதிமன்ற வளாகம் எப்படி இருக்கிறது என்பது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்து கேட்டோம்.

விமலா: (உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளர்)

எப்படி இருக்கிறது உயர் நீதிமன்றப் பாதுகாப்பு?

பாதுகாப்பு நடைமுறைக்கு மக்கள் நல்ல வரவேற்பு தருகிறார்கள். காலை 10.30 மணிக்கு வழக்கு இருக்கிறது என்று சொல்லி, 10.20-க்கு அவசரமாக நுழைவதைத் தவிர்த்து  முன்கூட்டியே வருவதற்குப் பழக வேண்டும். கோர்ட்டுக்குள் நுழையும் போது ஏதாவது ஒரு அடையாள அட்டை வைத்து இருந்தால், செக்கிங் ஃபார்மாலிட்டிக்கு வசதியாக இருக்கும்.

வழக்கு சம்பந்தமாக வருபவர்கள், தங்களுடைய வழக்கு எண் பற்றியும் எந்தக் கோர்ட்டில் வழக்கு நடக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டு வருவது நல்லது. சென்னை உயர்நீதி மன்றத்தில் இருக்கும் முக்கிய நுழைவாயிலான எஸ்பிளனேட் கேட், மக்கள் உள்ளே வர பயன்படுத்தப்​படுகிறது. மற்ற நுழைவாயில் களான பார் கவுன்சிலிங் கேட், ஆவின் கேட், நார்த் கேட், சௌத் கேட் மற்றும் லீகல் எய்ட் கேட் போன்ற அனைத்து வழிகளிலும் போலீஸ் பாதுகாப்புடன் மெட்டல் டிடெக்டர் பரிசோதனை நடைபெறுகிறது. காலை 8 மணி தொடங்கி இரவு 8 மணி வரை காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். விரைவில், உயர்நீதிமன்ற வளாகத்தினுள் 16 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. அதனால் ஒரு நல்ல பாதுகாக்கப்பட்ட வளாகத்தில் நுழையும் இனிய சூழலை ஏற்படுத்தி இருக்கிறது, இந்த மாற்றங்கள்.

எப்படி இருக்கிறது உயர் நீதிமன்றப் பாதுகாப்பு?
எப்படி இருக்கிறது உயர் நீதிமன்றப் பாதுகாப்பு?

பிரசன்னா: (தலைவர், பெண் வழக்கறி​ஞர்கள் அசோசியேஷன்)

இப்போது செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு வரவேற்கப்பட வேண்டியது. வழக்கறிஞர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை, அவர்களின் வாகனத்திற்கு பார் கவுன்சிலின் அனுமதிச்சீட்டு தரப்பட்டுள்ளது. பொது மக்கள் வாகனங்களுக்காக தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நுழைவுச் சீட்டு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதனால் பொது மக்கள் தங்கள் பணியை முடித்துக் கொண்டு பாதுகாப்பாக வெளியே செல்லமுடிகிறது. இப்போதும் வாதி, பிரதிவாதிகளோடு சேர்ந்து உறவினர்களும், நண்பர்களும் வந்து விடுகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.

மோகன கிருஷ்ணன்: (சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர்)

எப்படி இருக்கிறது உயர் நீதிமன்றப் பாதுகாப்பு?

டெல்லி குண்டு வெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு, சென்னையில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பலப்படுத்தப்​பட்ட பிறகு, சந்தேகத்திற்குரிய நபர்கள் கோர்ட் வளாகத்தினுள் நுழைவது இல்லை. முன்பெல்லாம் கோர்ட் வளாகத்தில் சிலர் தூங்கிக்கொண்டு இருப்பார்கள், கூட்டம் கூட்டமாக வந்து வேடிக்கை பார்ப்பார்கள். அவை எல்லாம் குறைந்துவிட்டது. அதே​போன்று, பொது மக்கள் இங்கே வண்டிகளை நிறுத்திவிட்டு ஷாப்பிங் செல்வதும் நின்று விட்டது. பக்கத்தில் இருக்கும் பழைய திருவள்ளு​வர் புறநகர் பேருந்து நிலையத்தின் காலி இடத்தையும் பார்க்கிங் வசதிக்காகப் பயன்படுத்திக் கொண்டால் கூடுதல் இட வசதி கிடைக்கும்.

அன்பு: (துணை கமிஷனர், பூக்கடை)

கடந்த ஒரு மாத​மாக சென்னை உயர்நீதி மன்றத்​தில் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்​புடன் பாதுகாப்புப் பணிகள் செவ்வனே நடைபெறுகிறது. பெண்களுக்கெனத் தனி வரிசையும் மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேக வரிசையும் இருப்பதால் மிகவும் எளிதாக பரிசோதனை நடைபெறுகிறது. தலைமை நீதிபதி இக்பால், அவ்வப்போது ஸ்பாட் இன்ஸ்பெக்ஷன் செய்கிறார். பாதுகாப்பு காரணமாக தேவையற்ற ஆட்களும், வெளி வாகனங்கள் வருகையும் வெகுவாக குறைந்துவிட்டது. இந்த வளாகம் இப்போது அமைதிப் பூங்காவாக இருக்கிறது.

இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் வரவேற்பு இருந்தாலும் ஒரு சில குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கிறது. உள்ளே நுழைவதற்கு வழங்கப்படும் என்ட்ரி பாஸ், திரும்ப வாங்கப்பட்டு பதிவு செய்யப்படுவது இல்லை. ஒரு கேஸ் சம்பந்தமாக ஒன்பது பேர் வருகிறார்கள் என்றால் அனைவரது தகவல்களும் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், ஒரே அனுமதி சீட்டில் 9 என்று எழுதிவிட்டு அனைவரும் நுழைகிறார்கள். மேலும் அனுமதிச் சீட்டினை நிரப்புவதற்கான இட வசதி எதுவும் இல்லை என்பதால் மேஜை தேடி அலைகிறார்கள்.

இந்தக் குறைபாடுகளை நீக்க,''டெல்லி, உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் புகைப்​படத்துடன் அனுமதிச் சீட்டு கம்ப்யூட்டர் மூலம் கொடுப்பது போன்ற பாதுகாப்பு ஏற்பாடு இங்கேயும் கையாளப்பட வேண்டும்'' என்கிறார்கள் நீதிமன்ற ஊழியர்கள்.

அடுத்தகட்டமாக அதுவும் நடைமுறைக்கு வரும் என்றே நம்புவோம்!

- ரமா ஆல்பர்ட்

படங்கள்: என்.விவேக், கே.கார்த்திகேயன்